என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணகுடியில் கார் டயர் வெடித்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பெண் பலி
- விபத்தில் காரில் இருந்த 8 மாத கைக்குழந்தை சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தது.
- விபத்து குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணகுடி:
வள்ளியூர் அருகே உள்ள பண்டாரகுளத்தை சேர்ந்தவர் பால்ராஜ். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மரியவசந்தி (வயது52). இவர்கள் 2 பேரும் நேற்றிரவு பண்டாரகுளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பணகுடியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அப்போது முத்துச்சாமி புரம் அருகே நான்கு வழிச்சாலை பாலத்தில் அவர்கள் சென்ற போது அவர்களது பின்னால் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக அந்த காரின் முன்பக்க டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த மரியவசந்தி தூக்கி வீசப்பட்டு பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பால்ராஜிக்கு கால் முறிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த 8 மாத கைக்குழந்தை சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தது. அந்த குழந்தையை தனியார் ஆஸ்பத்திரியிலும், பால்ராஜ் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.