என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து பலி"

    • கடையநல்லூர் அருகே 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
    • இந்த கோர விபத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர்.

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கோர விபத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர்.

    பஸ்கள் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் விபத்தில் பலியான 6 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

    • இலங்கையில் கேபிள் கார் விபத்தில் 7 புத்த துறவிகள் உயிரிழந்தனர்.
    • காயம் அடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    கொழும்பு:

    இலங்கையில் நிகவெரட்டி அருகே புத்த மடம் ஒன்று அமைந்துள்ளது. இது கொழும்புவில் இருந்து 125 கி.மீ. தொலைவில் உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் தியானம் செய்ய இங்கு வருகை தருவர்.

    இங்கு தரைப்பகுதியில் இருந்து கேபிள் கார் மூலம் துறவிகள் மலையில் இருக்கும் தியான மண்டபங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.

    இந்நிலையில், ஒரு சிறிய கேபிள் கார் பெட்டியில் துறவிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கேபிள் கார் பெட்டியின் கேபிள் அறுந்துவிட்டது. இதனால், கார் வேகமாக கீழே இறங்கி வந்து ஒரு மரத்தில் பலமாக மோதியது. இந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    காயமடைந்த 6 பேரில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கேபிள் கார் அறுந்து 7 துறவிகள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்சி அரியமங்கலத்தில் இருந்து கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள மாசி பெரியண்ணசாமி கோவிலில் சாமி கும்பிட 5 பேர் ஒரு காரில் வந்தனர். பின்னர் அவர்கள் சாமி கும்பிட்டு விட்டு திருச்செங்கோட்டில் உள்ள நண்பர் ஒருவரை பார்க்க வந்தனர்.

    திருச்செங்கோட்டில் நண்பரை பார்த்துவிட்டு மீண்டும் அவர்கள் திருச்சி அரியமங்கலத்துக்கு புறப்பட்டனர். இரவு 8 மணியளவில் கார் திருச்செங்கோடு உஞ்சனை அருகே சென்றது.

    அப்போது காரை ஓட்டிவந்த யுவராஜன் என்பவர் தூங்கி உள்ளார். இதனால் நிலை தடுமாறிய கார் பஸ் நிறுத்தம் அருகே இருந்த தள்ளுவண்டி கடை மீது மோதியது. மேலும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் மற்றும் மொபட் மீதும் மோதி இழுத்து சென்றது.

    பின்னர் இந்த பகுதியில் ரோட்டோரத்தில் இருந்த முருகேசன் என்பவரது வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து கொண்டு கார் வீட்டுக்குள் நுழைந்தது. அப்போது வீட்டுக்கு முன்பு அமர்ந்திருந்த முருகேசன் (67) என்பவர் மீது கார் மோதி நின்றது. இதில் சம்பவ இடத்திலேயே நாற்காலியில் அமர்ந்தபடி முருகேசன் பலியானார்.

    இதுபற்றி தெரிய வந்ததும் அந்த பகுதி பொதுமக்கள் ஓடி வந்தனர். பின்னர் காரில் இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் கார் டிரைவர் யுவராஜன் மற்றும் காரில் பயணித்த சரவணன் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். பின்பக்கம் அமர்ந்திருந்த 3 பேர் காயமின்றி தப்பினர்.

    இதுபற்றி தெரிய வந்ததும் திருச்செங்கோடு ஊரக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான முருகேசன் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருப்பதி:

    கர்நாடக மாநிலம் பாகே பள்ளியை சேர்ந்த 13 பேர் திருப்பதி கோவிலுக்கு வந்தனர். நேற்று மாலை தரிசனம் முடித்து பின்னர் வேனில் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

    அவர்கள் வந்த வேன் இன்று அதிகாலை அன்னமைய்யா மாவட்டம், குரு பல கோட்டா, சென்ன மாரி மிட்டா தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த லாரி வேன் மீது நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் வேன் இரண்டாக பிளந்தது. வேனில் இருந்த மேகர்ஸ் (வயது 17), சரண் (17), ஸ்ரவாணி(28) ஆகியோர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்தில் சிக்கிய வேனை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.

    • மீட்கப்பட்ட 5 பேரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார்.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள வெள்ளாளன்விளையை சேர்ந்தவர் மோசஸ் (வயது 50).இவர் கோவை துடியலூரில் மளிகை கடை நடத்தி வந்தார். இதனால் அங்கு அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் அவர் சொந்த ஊரில் உள்ள கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக காரில் தனது குடும்பத்தினருடன் வந்தார்.

    நேற்று முன்தினம் குற்றாலத்திற்கு சென்று விட்டு நெல்லை மூலைக் கரைப்பட்டி வழியாக வெள்ளாளன் விளைக்கு சென்றனர். காரை மோசஸ் ஓட்டி சென்றார்.

    சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தரைமட்ட கிணற்றுக்குள் கார் பாய்ந்தது.

    அப்போது கிணற்றில் தத்தளித்த மோசஸ் மகன் ஜெர்சோம், ரவி கோவில்பிச்சை மகள் ஜெனிபர் எஸ்தர், செர்சோம் மனைவி சைனி கிருபாகரன் (26) ஆகிய 3 பேரும் மீட்கப்பட்டனர்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு படையினர் சென்றனர். இதற்கிடையே தகவல் அறிந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அங்கு சென்று மீட்பு பணிகளை துரிதப் படுத்தினார்.

    சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றில் இருந்து கார் வெளியே எடுக்கப்பட்டது. காரில் இருந்த மோசஸ், அவரது மனைவி வசந்தா(49), ரவி கோவில்பிச்சை, அவரது மனைவி கெத்சியாள் கிருபா, ஜெர்சோமின் பெண் குழந்தையான ஷாலின் (1½) ஆகிய5 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    மீட்கப்பட்ட 5 பேரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார். மேலும் மீட்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

    உயிரிழந்த 5 பேரின் உடல்கள் நேற்று நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது இறந்தவர்களின் உடல்களுக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர்களது உடல் சொந்த ஊரான வெள்ளாளன் விளைக்கு எடுத்து செல்லப்பட்டது.

    அங்கு ஊர் மக்கள் முன்னிலையில் அங்குள்ள சி.எஸ்.ஐ. கல்லறை தோட்டத்தில் 5 பேர் உடல்களும் அருகருகே கிறிஸ்தவ முறைப்படி பிரார்த்தனை செய்யப்பட்டு அவர்களது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    அப்போது ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி இன்ஸ்பெக்டர் இன்னோசி குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கிணற்றில் பாய்ந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், அன்னமைய்யா மாவட்டம், பீலேரு அடுத்த பாலாமுவாரி பள்ளி அருகே இன்று அதிகாலை கார் ஒன்று வேகமாக வந்து கொண்டு இருந்தது..

    அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கிணற்றில் பாய்ந்தது. இதில் காரில் இருந்த 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரை மீட்டு அதில் இருந்த 3 பேரின் உடல்களை பிேரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையில் இருந்த சிறு குழியால் 2 பேர் பலியான இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார், இவரது மகன் சாரதி (22), தாதகாப்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், இவரது மகள் சாருபிரியா (22) இவர்கள் 2 பேரும் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர்.

    இந்த நிலையில் சாரதி மற்றும் சாருபிரியா ஆகிய 2 பேரும் உடன் பணிபுரியும் நண்பர்கள் சிலருடன் ஏற்காடு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி இன்று அதிகாலை 3 மணியளவில் தாதகாப்பட்டி கேட்டில் இருந்து சாரதி, சாருபிரியா ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் திருவாக்கவுண்டனூர் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது அங்கிருந்த சிறு பள்ளத்தில் தண்ணீர் தேங்கியிருந்ததால் சற்று ஒதுங்கி செல்ல முயன்று மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதில் தலை நசுங்கிய நிலையில் சாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். வயிற்று பகுதியில் காயம் அடைந்த சாருபிரியாவும் சற்று நேரத்தில் பலியானார்.

    பின்னால் வந்தவர்களை காணவில்லையே என்று அவர்களுடன் சென்றவர்கள் திரும்பி வந்து பார்த்த போது விபத்தில் சிக்கி 2 பேரும் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறிய அவர்கள் சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் திரண்ட அவர்களது உறவினர்கள் 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுது புரண்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகமே சோகத்தில் மூழ்கியது.

    இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள். சாலையில் இருந்த சிறு குழியால் 2 பேர் பலியான இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விபத்தின் போது காரை சவுரவ் பிரபாகர் ஓட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.
    • அவர்களின் குடும்பத்தினருடன் துணைத் தூதரகம் தொடர்பில் உள்ளது.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் ஓகியோவில் உள்ள கிளீவ் லேண்ட் பல்கலைக் கழகத்தில் இந்தியாவை சேர்ந்த சவுரவ் பிரபாகர் (வயது 23), மானவ் பட்டேல் (20) படித்து வந்தனர். இவர்கள் உள்பட 3 பேர் காரில், பென்சில்வேனியாவின் டர்ன்பைக் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் விபத்தில் சிக்கியது.

    திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையை விட்டு வெளியேறி ஒரு மரத்தில் மோதிய பின்னர் பாலத்தில் மோதியது. இந்த விபத்தில் சவுரவ் பிரபாகர், மானவ் பட்டேல் ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். காரில் பயணித்த மற்றொருவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்தின் போது காரை சவுரவ் பிரபாகர் ஓட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும் போது, கிளீவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர்களான மானவ் படேல், சவுரவ் பிரபாகர் ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தது குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தோம்.

    இந்த கடினமான நேரத்தில் அவர்களின் குடும்பத்தினருடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. அவர்களின் குடும்பத்தினருடன் துணைத் தூதரகம் தொடர்பில் உள்ளது. அவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க உறுதியளித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

    • விபத்தில் கார் முழுவதும் நொறுங்கியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அன்னமைய்யா மாவட்டம், மதனப்பள்ளியை சேர்ந்தவர்கள் சலபதி (வயது 74), ஜெயச்சந்திரா (72 ), நாகேந்திரா (65). 3 பேரும் உடன் பிறந்த சகோதரர்கள்.

    சலபதி, ஜெயச்சந்திரா ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர்களாக வேலை செய்து ஓய்வு பெற்றவர்கள். நாகேந்திரா கல்லூரி விரிவுரையாளராக வேலை செய்து ஓய்வு பெற்றவர்.

    அனந்தபூரில் உள்ள உறவினர் வீட்டு இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக நெல்லூரை சேர்ந்த வேணுகோபால் என்பவருடன் நேற்று முன்தினம் காரில் சென்றனர்.

    இறுதி சடங்கு முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு காரில் வந்து கொண்டு இருந்தனர். ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், நல்ல செருவு அடுத்த பெத்தயலம்பள்ளி அருகே கார் வந்தபோது வளைவில் நின்று கொண்டு இருந்த மினி லாரி மீது கார் மோதியது.

    இந்த விபத்தில் கார் முழுவதும் நொறுங்கியது. காரில் இருந்த சலபதி, ஜெயச்சந்திரா, நாகேந்திரா ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கதிரி போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த வேணுகோபாலை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் விபத்தில் பலியான சம்பவம் அவர்களது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தகவல் அறிந்த போலீசார் மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பர்கூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே உள்ள குருவிநாயனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அமாவாசை. இவரது மகன் சக்தி (வயது14).

    இவர் மேல் கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மகாராஜா கடை அருகே உள்ள கொத்தூர் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் பேரரசு (20). இவர் குருவிநாயன பள்ளியில் பாட்டி வீட்டில் இருந்து கொண்டு கட்டிட மேஸ்திரி வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் மாதவன் (15), இவர்கள் மூன்று பேரும் உறவினர்கள் ஆவார்கள்.

    இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் நேற்று இரவு குருவிநாயனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி விட்டு வீட்டிற்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை பேரரசு ஓட்டினார். சக்தி, மாதவன் பின்னால் அமர்ந்து சென்றனர்.

    அப்போது கிருஷ்ண கிரி-குப்பம் சாலையில் குருவி நாயனப்பள்ளி மசூதி அருகே வந்த போது கர்நாடக மாநிலம், குல்பர் காவில் இருந்து மக்காச் சோளம் ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்ற பிக்கப் வேன் எதிர்பாரா தவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த பேரரசு, சக்தி, மாதவன், 3 பேரும் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார் மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிக்கப் வாகன ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

    • இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    • தலையில் பலத்த காயம் அடைந்த ஷ்ரேயாஸ் பரிதாபமாக இறந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு பேகூர் சாலையின் விஸ்வபிரியநகரை சேர்ந்தவர் சிவானந்தா பாட்டீல். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் ஷ்ரேயாஸ் பாட்டீல் (வயது 19). பி.காம் மாணவர். இவர் இன்று அதிகாலை 3.45 மணியளவில், அக்ஷய் நகரை சேர்ந்த நண்பர் கே. சேத்தனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிள் ரிச்மண்ட் சர்க்கிள் ரெசிடென்சி சாலையை நோக்கி செல்லும் மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச் சுவரில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதியது. இதில் இருவரும் 25 அடியரத்தில் இருந்து பாலத்தின் கீழே உள்ள சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

    இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தலையில் பலத்த காயம் அடைந்த ஷ்ரேயாஸ் பரிதாபமாக இறந்தார். சேத்தனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

    • சிகிச்சை பலன் இன்றி சிறுமி பவினா பரிதாபமாக உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள எடையூரை சேர்ந்தவர் மோகன்ராஜ் . இவரது மகள் பவினா (வயது 8 ). இவர் விருத்தாச்சலம் புதுப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று விளங்காட்டூர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டின் முன்பு கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் திடீரென்று கற்கள் சரிந்து கீழே விழுந்ததில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த பவினா தலையில் விழுந்தது. இதில் சிறுமி பவினாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி சிறுமி பவினா இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து விருத்தாச்சலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×