என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சேலத்தில் இன்று அதிகாலை விபத்து- ஐ.டி. நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி
    X

    சேலத்தில் இன்று அதிகாலை விபத்து- ஐ.டி. நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி

    • சாலையில் இருந்த சிறு குழியால் 2 பேர் பலியான இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார், இவரது மகன் சாரதி (22), தாதகாப்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், இவரது மகள் சாருபிரியா (22) இவர்கள் 2 பேரும் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர்.

    இந்த நிலையில் சாரதி மற்றும் சாருபிரியா ஆகிய 2 பேரும் உடன் பணிபுரியும் நண்பர்கள் சிலருடன் ஏற்காடு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி இன்று அதிகாலை 3 மணியளவில் தாதகாப்பட்டி கேட்டில் இருந்து சாரதி, சாருபிரியா ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் திருவாக்கவுண்டனூர் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது அங்கிருந்த சிறு பள்ளத்தில் தண்ணீர் தேங்கியிருந்ததால் சற்று ஒதுங்கி செல்ல முயன்று மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதில் தலை நசுங்கிய நிலையில் சாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். வயிற்று பகுதியில் காயம் அடைந்த சாருபிரியாவும் சற்று நேரத்தில் பலியானார்.

    பின்னால் வந்தவர்களை காணவில்லையே என்று அவர்களுடன் சென்றவர்கள் திரும்பி வந்து பார்த்த போது விபத்தில் சிக்கி 2 பேரும் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறிய அவர்கள் சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் திரண்ட அவர்களது உறவினர்கள் 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுது புரண்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகமே சோகத்தில் மூழ்கியது.

    இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள். சாலையில் இருந்த சிறு குழியால் 2 பேர் பலியான இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×