என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவில் 2 இந்திய மாணவர்கள் கார் விபத்தில் பலி
    X

    அமெரிக்காவில் 2 இந்திய மாணவர்கள் கார் விபத்தில் பலி

    • விபத்தின் போது காரை சவுரவ் பிரபாகர் ஓட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.
    • அவர்களின் குடும்பத்தினருடன் துணைத் தூதரகம் தொடர்பில் உள்ளது.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் ஓகியோவில் உள்ள கிளீவ் லேண்ட் பல்கலைக் கழகத்தில் இந்தியாவை சேர்ந்த சவுரவ் பிரபாகர் (வயது 23), மானவ் பட்டேல் (20) படித்து வந்தனர். இவர்கள் உள்பட 3 பேர் காரில், பென்சில்வேனியாவின் டர்ன்பைக் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் விபத்தில் சிக்கியது.

    திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையை விட்டு வெளியேறி ஒரு மரத்தில் மோதிய பின்னர் பாலத்தில் மோதியது. இந்த விபத்தில் சவுரவ் பிரபாகர், மானவ் பட்டேல் ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். காரில் பயணித்த மற்றொருவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்தின் போது காரை சவுரவ் பிரபாகர் ஓட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும் போது, கிளீவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர்களான மானவ் படேல், சவுரவ் பிரபாகர் ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தது குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தோம்.

    இந்த கடினமான நேரத்தில் அவர்களின் குடும்பத்தினருடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. அவர்களின் குடும்பத்தினருடன் துணைத் தூதரகம் தொடர்பில் உள்ளது. அவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க உறுதியளித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

    Next Story
    ×