நாமக்கல் அருகே விபத்து- கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற தன்யாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் அருகே விபத்து- கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ராசி குமரிபாளையம் காந்தமலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் (29). இவரது மனைவி தன்யா (25), இவரது மாமியார் கோகிலா (45). இவர்கள் 3 பேரும் நேற்றிரவு மோகனூரில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

இதேபோல் அணியாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே உள்ள பிள்ள விடுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (19), கள்ளக்குறிச்சி மாவட்டம் கொசப்பாடி பகுதியை சேர்ந்த இளவரசன் (18) ஆகிய 2 பேர் படித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நாமக்கல்-மோகனூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை பாலகிருஷ்ணன் ஓட்டி வந்தார். அவருக்கு பின்னால் இளவரசன் அமர்ந்திருந்தார்.

இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நாமக்கல்-மோகனூர் சாலையில் எதிர் எதிரே சென்றபோது நேருக்கு நேர் மோதி விபத்தானது. இதில் நவீன், தன்யா, கோகிலா ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தனர். இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தன்யாவை சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், நவீனை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், கோகிலாவை அங்கிருந்து மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

அதேபோல் இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் பாலகிருஷ்ணன், இளவரசன் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாலகிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இளவரசனை சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற தன்யாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நவீன் மற்றும் அவரது மாமியார் கோகிலா ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com