search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sirkali"

    • செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மயிலாடுதுறைக்கு புறப்பட்டார்.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மேள, தாளத்துடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (மார்ச் 04) காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை எழும்பூரில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மயிலாடுதுறைக்கு புறப்பட்டார்.

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் முதலமைச்சரை அமைச்சர், தி.மு.க. தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு வழியனுப்பி வைத்தனர். மாலை 4.15 மணிக்கு புறப்பட்ட ரெயில் இரவு 8.15 மணிக்கு சீர்காழி சென்றடைந்தது.

    சீர்காழி ரெயில் நிலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மேள, தாளத்துடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரெயில் நிலையத்தில் இருந்து கார் மூலம் திருவெண்காட்டில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றிரவு அங்கேயே தங்குகிறார்.

    நாளை காலை அங்கிருந்து மயிலாடுதுறை சென்று கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். நாளை பிற்பகல் 1 மணிக்கு திருச்சி-சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் மாலை 6.15 மணிக்கு சென்னை திரும்புகிறார்.

    • பொதுமக்கள் யாரும் சென்று விடாதபடி சில அடி தூரத்திற்கு ரிப்பன் கட்டி பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தினர்.
    • மர்ம பொருளை ஆய்வு செய்து அதனை அப்புறப்படுத்திடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாயக்கர் குப்பம் மீனவர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பல்வேறு குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் இந்த கிராம கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. சுமார் 1அடி நீளமும், 6 இன்ச் விட்டமும் கொண்ட வெள்ளை நிற அந்த மர்ம பொருளின் மேலே டேஞ்சர் எனவும், நாட்டச் நோட்டிபை போலீஸ் என எழுதப்பட்டுள்ளது.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் இது குறித்து உடனடியாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கும், பூம்புகார் கடற்கரை போலீசார்க்கும் தகவல் அளித்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற கடலோர பாதுகாப்பு போலீசார் மர்ம பொருளைப் பார்வையிட்டு அதன் அருகே பொதுமக்கள் யாரும் சென்று விடாதபடி சில அடி தூரத்திற்கு ரிப்பன் கட்டி பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தினர். மேலும் அந்த மர்ம பொருளை ஆய்வு செய்து அதனை அப்புறப்படுத்திடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது.

    • குப்பைகளை தரம் பிரித்து வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • வரும் காலத்தில் நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையர் ஹேமலதா, துணை தலைவர் சுப்பராயன், பொறியாளர் குமார், பணிதள மேற்பார்வையாளர் விஜயேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தர் ராஜகணேஷ் மன்ற பொருட்களை வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    ராமு (தி.மு.க.):- கொள்ளிடம் முக்கூட்டு பகுதியில் இருந்து உள்ள கழிவுநீர் கால்வாய் 20 ஆண்டுகளாக தூய்மைப்படுத்தப்படாமல் மண்தூர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என்றார்.

    நாகரத்தினம் செந்தில் (அ.தி.மு.க.):- பால சுப்ரமணியன் நகர் பகுதியில் தெரு மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும், சாலை அமைத்து தர வேண்டும்.பாஸ்கரன்:- குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்படுவதில்லை. தரம் பிரித்து வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயந்தி பாபு:- 14-வது வார்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொது குடிநீர் குழாய் பள்ளமாக அமைக்கப்பட்டுள்ளதால் அதனை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். முபாரக் (தி.மு.க.):- சீர்காழி நகராட்சி மூலம் 24 வார்டுகளுக்கும் சித்தமல்லி கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்து வந்த நிலையில், அங்கு குடிநீர் மோட்டார் பழுதால் கடந்த சில மாதங்களாக நகராட்சி வளாகத்திலேயே ஆழ்குழாய் அமைத்து நிலத்தடிநீர் அதிகளவு உறிஞ்சப்படுவதால் வரும் காலத்தில் நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதற்கு பதில் அளித்து தலைவர் துர்கா ராஜசேகரன் (தி.மு.க.) பேசுகையில்:-

    9-வது வார்டில் உள்ள குளம் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றிக்கு டாக்டர் கலைஞர் நூற்றாண்டு குளம் என பெயர் வைக்க மன்றத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மழைகாலம் தொடங்கி உள்ளதால் குடியிருப்புகளை மழைநீர் சூழாமல் இருக்க வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படும்.

    உறுப்பி னர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிதி நிலைமைக்கு ஏற்ப சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • சீர்காழி பகுதியில் அதிகளவு திருட்டு போகும் மிதிவண்டிகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • தனிப்படை அமைத்து போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி நகரின் பல்வேறு பகுதிகளில் மிதிவண்டிகள் கடந்த சில நாட்களாக அதிக அளவு திருடு போகின்றன. சீர்காழி நகரில் தேர் தெற்கு வீதி உள்ளிட்ட இடங்களில் இரு தினங்களில் மூன்றுக்கு மேற்பட்ட மிதிவண்டிகள் திருடு போயின.

    வீட்டு வாசலில் முன்பு வைத்து பூட்டி வைக்கப்பட்டிருந்த மிதிவண்டிகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வது சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது.

    சீர்காழியில் தற்போது அதிக அளவு பல்வேறு இடங்களில் மிதிவண்டிகள் திருட்டு போவது குறித்து புகார்கள் சீர்காழி காவல் நிலையத்தில் வருகின்றன.

    மிதிவண்டிகளை திருடினால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் தற்போது மிதிவண்டி திருட்டில் சிலர் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    திருடப்படும் மிதிவண்டிகளை பிரித்து பழைய இரும்பு கடையில் விற்பனை செய்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனை தனிப்படை அமைத்து போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    சீர்காழி அருகே மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இறால் குட்டைகளை அப்புறப்படுத்தக்கோரி நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
    சீர்காழி:

    சீர்காழியை அடுத்த கீராநல்லூர் கிராமத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இறால் குட்டைகளை அப்புறப்படுத்தக்கோரி நாளை (7-ந்தேதி)முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

    இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் மா.ஈழவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சீர்காழி வட்டம் திருக்கருக்காவூர் ஊராட்சி கீராநல்லூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அரசு அனுமதியின்றி தனியார் ஒருவர் இறால் குட்டை அமைத்து வருகிறார். ஏற்கனவே நிலத்தடிநீர் மட்டம் குறைந்து குடிதண்ணீர் உப்புநீராக மாறியுள்ளதால் பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு சுமார் 2 கி.மீ. தூரம் சென்று குடிநீர் குடங்களில் பிடித்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். 

    இந்த சூழ்நிலையில் இறால் குட்டைகள் அமைப்பதினால் சுமார் 2கி.மீ தூரத்தில் கிடைக்க கூடிய தண்ணீரும் உப்பு நீராக மாறி பொதுமக்களின் வாழ்வாதாரமே கேள்விகுறியாகி விடும். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிப்பதற்கும்,மற்ற தேவைகளுக்கும் குடிநீர் வழங்கவேண்டும் என கடந்த ஆண்டு மார்ச் மாதம் மயிலாடுதுறை சப்-கலெக்டரிடம் மனு அளித்து தீர்விற்காக காத்திருக்கின்றனர்.

    இந்த நிலையில் அனுமதியின்றி இறால் குட்டைகள் அமைக்கப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் நாளை கிராமத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சீர்காழி அருகே விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பம் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கொடி கம்பங்களை மர்ம கும்பல் உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் மருவத்தூர் கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி அப்பகுதியில் டியூப் லைட்டுகளை கட்டி வைத்திருந்தனர். இதை நேற்று இரவு ஒரு மர்ம கும்பல் அடித்து உடைத்துள்ளனர். இந்த சம்பவம் கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் மருவத்தூர் கிராமம் காந்தி நகரில் அமைக்கப்பட்டிருந்த வி.சிறுத்தை கட்சிகளின் கொடிகம்பம் உடைக்கப்பட்டு சேதப்படுத்த பட்டு இருந்தது. இதுபற்றி தகவல் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு பார்வையிட்டனர்.

    இதேபோல் விடுதலை சிறுத்தை கட்சி கொடிகம்பம் சேதப்படுத்த பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கொடிகம்பம் உள்ளது. இதையும் மர்ம கும்பல் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த கம்யூனிஸ்டு கட்சியினரும் பார்வையிட்டனர்.

    இந்த சம்பவங்கள் குறித்து தனித்தனியாக வைத்தீஸ்வரன் கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிங்கார வேலு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கொடி கம்பங்களை சேதப்படுத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சீர்காழி அருகே நேற்று நள்ளிரவில் விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பத்தை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே சட்ட நாதபுரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் உள்ளது. இந்த கொடி கம்பத்தில் கடந்த ஏப்ரல் மாதம் திருமாவளவன் கொடியேற்றி வைத்தார்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை வெட்டி சாய்த்து சேதப்படுத்தினர்.

    கொடி கம்பம் சேதப்படுத்திய தகவல் கிடைத்ததும் கட்சி நிர்வாகிகள் திரண்டனர். தொகுதி பொறுப்பாளர் தாமு இனியவன், செய்தி தொடர்பாளர் தேவா, மாவட்ட துணை செயலாளர் காமராஜ் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்து பார்வையிட்டனர்.

    பின்னர் இந்த சம்பவம் பற்றி சீர்காழி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை சேதப்படுத்திய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சீர்காழியில் அ.தி.மு.க பிரமுகரை தாக்கிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே உள்ள சம்பூராயர் கோடங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை. அ.தி.மு.க பிரமுகர். இவர் நேற்று சம்பூராயர் கோடங்குடியில் இருந்து சீர்காழிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நெம்மேலி அருகே கார் சென்று கொண்டிருந்த போது கையில் உருட்டு கட்டை, கற்ளை வைத்து கொண்டு 3 நபர்கள் காரை வழிமறித்தனர். 

    உடனே அதிர்ச்சியுடன் ராஜதுரை காரை நிறுத்தினார். தொடர்ந்து 3 நபர்களும் கையில் வைத்திருந்த உருட்டு கட்டை மற்றும் கற்கலால் கார் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் ராஜதுரைக்கு காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் 3 பேரை தேடி வருகின்றனர்.

    சீர்காழி அருகே காதல் மனைவியிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த தொழிலாளி குறித்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் மேலவளவுகுடி பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 27). இவர் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செங்கொடி செல்வி (24) என்ற இளம் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. இதையடுத்து கடந்த 18.1.2018 அன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்திற்கு பிறகு அன்பரசன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். உனது பெற்றோரிடம் சென்று புது மோட்டார் சைக்கிள், 10 பவுன் நகை வாங்கி வா என்று கூறி செங்கொடி செல்வியை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார். இதனால் வேதனையடைந்த அவர் இது பற்றி சீர்காழி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசித்ரா மேரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×