என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "America president"

    • அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று தீர்ப்பு அளித்தது.
    • அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்து நீதிபதிகளை கடுமையாக விமர்சித்தார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார்.

    சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன்கீழ் இந்த பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தினார். இதற்கு எதிராக எதிர்க்கட்சி உள்பட பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.

    இதை விசாரித்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு, அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று தீர்ப்பு அளித்தது. பரஸ்பர வரி விதிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இதனால் அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்து நீதிபதிகளை கடுமையாக விமர்சித்தார்.

    இதற்கிடையே பரஸ்பர வரியை கோர்ட்டு ரத்து செய்ததால் அதிபரின் சிறப்பு அதிகாரத்தைப் (சட்டப்பிரிவு 122) பயன்படுத்தி அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது என்று டிரம்ப் அறிவித்தார்.

    பின்னர் அந்த வரியை 15 சதவீதமாக உயர்த்தினார். மேலும், பரஸ்பர வரி விதிப்பை மீண்டும் அமல்படுத்துவதற்கான மாற்று வழிகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக டிரம்ப் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    பல தசாப்தங்களாக அமெரிக்காவைச் சுரண்டி வரும் நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத உலகளாவிய இறக்குமதி வரியை, சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட 15 சதவீத அளவுக்கு உடனடியாக உயர்த்துகிறேன்.

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நேற்று வெளியிட்ட அபத்தமான, மோசமாக எழுதப்பட்ட மற்றும் அசாதாரணமான அமெரிக்க எதிர்ப்பு முடிவை முழுமையாக, விரிவாக மதிப்பாய்வு செய்ததன் அடிப்படையில் எனது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    அடுத்த குறுகிய மாதங்களில் எனது நிர்வாகம் புதிய மற்றும் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட புதிய வரி கட்டணங்களை தீர்மானித்து வெளியிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா அறிவித்தது.

    தற்போது பரஸ்பர வரியை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததால் இந்தியாவிடம் பழைய வரியான 3.5 சதவீதம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் டிரம்ப் அறிவித்த புதிய வரியான 15 சதவீதத்தால் இந்திய பொருட்களுக்கு 18.5 சதவீதம் வரி வசூலிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    • டிரம்ப் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
    • வரி விகிதத்தை 15 சதவீதமாக உயர்த்த உள்ளதாக அதிரடியாக அறிவித்தார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். அமெரிக்கா மீது பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டி இந்த வரி நடவடிக்கையை மேற்கொண்டார்.

    சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன் கீழ் இந்தப் பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தினார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

    இதற்கிடையே, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை எட்டிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரிகளுக்குப் பதிலாக தற்போது புதிய 10 சதவீத வரிகளை எதிர்கொள்வார்கள் என தெரிவித்தார்.

    அதிபர் டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், இந்த வரி விகிதத்தை 15 சதவீதமாக உயர்த்த உள்ளதாக அதிரடியாக அறிவித்தார்.

    இந்தப் புதிய 15 சதவீத வரி விதிப்பானது பிப்ரவரி 24-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், உலக நாடுகள் மீதான ட்ரம்ப்பின் அதீத வரிவிதிப்பை, அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட பல பில்லியன் கோடி டாலர் பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    அதிக வரி விதிப்பால், மக்களுக்கு ஏற்பட்ட விலை உயர்வு சட்டவிரோதமானது என இலினாய்ஸ் ஆளுநர் JB Britzker, கலிபோர்னியா ஆளுநர் Gavin Newsom நியூயார்க் ஆளுநர் Kathey Hochul ஆகியோர் காட்டமாக உள்ளனர்.

    • டிரம்ப், பொதுமேடையில் “கனடா அமெரிக்காவால்தான் உயிர் வாழ்கிறது” என்றார்.
    • கியூபெக் திரும்பிய கார்னி வீடியோ ஒன்றை வெளியிட்டு டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளர்.

    சீனாவுடன் உறவு வைத்துக் கொண்டால் கனடாவுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

    அமெரிக்கா அதிபர் டிரம்ப் கனடாவை தனது நாட்டுடன் இணைக்க தொடர்ந்து அறைகூவல் விடுத்து வருகிறார். இதற்கு கனடா நாட்டு பிரதமர் மார்க் கார்னி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். முன்னாள் பிரதமர் ட்ரூடோ காலத்தில், டிரம்ப் அவரை "பிரதமர்" என அல்லாமல், "கவர்னர் ட்ரூடோ" என்று அழைத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனால் கனடா-அமெரிக்கா இடையேயான உறவு கசக்க தொடங்கியது. இருப்பினும் இதனை புதுப்பிக்கும் முயற்சியில் கனடா சார்பில் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன.

    சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் டிரம்ப், மார்க் கார்னி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது டிரம்ப் அறிவித்த அமைதி வாரியத்தில் இணைய கார்னிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று அமைதி வாரியத்தில் இணைய கார்னி ஒத்துக்கொண்டார்.

    மேலும், அமெரிக்காவுடனான உறவை புதுப்பித்து கொள்ளவும் கார்னி ஒரு வாய்ப்பாக இதனை கருதினார். இருப்பினும் டிரம்ப் அவருடைய கோரிக்கையை நிராகரித்தார். மேலும், டிரம்ப் இது "பெரிய தலைவர்களுக்கான உருவாக்கப்பட்ட மிக உயரிய குழு, இதில் கனடாவுக்கு இடமில்லை" என்று பகிரங்கமாக அறிவித்தார்.

    மேலும், அவர் பொதுமேடையில் "கனடா அமெரிக்காவால்தான் உயிர் வாழ்கிறது" என்றார். இதனால் சுவிட்சர்லாந்தில் இருந்து பெரும் ஏமாற்றத்துடன் கார்னி திரும்பினார்.

    பின்னர் கியூபெக் திரும்பிய அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளர். அதில் அவர் "கனடா அமெரிக்காவால் உயிர் வாழ்வதில்லை. நாங்கள் கனடியர்கள் என்பதால்தான் கனடா செழிக்கிறது." என்றார்.

    பின்னர் அமெரிக்கா-கனடா இடையிலான நீண்டகால உறவைப் பாராட்டிய கார்னி, அதே நேரத்தில், எங்கள் வீட்டின் உரிமையாளர்கள் நாங்களே. இது எங்கள் நாடு; எங்கள் எதிர்காலம்; முடிவு எங்களிடமே உள்ளது. மேலும், நடுத்தர சக்தி நாடுகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், பெரும் சக்திகள் பொருளாதார ஒருங்கிணைப்பை ஆயுதமாகவும், சுங்க வரிகளை அழுத்தம் செலுத்தும் கருவியாகவும், நிதி கட்டமைப்புகளை கட்டாயப்படுத்தும் சாதனமாகவும், விநியோகச் சங்கிலிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் பலவீனங்களாகவும் மாற்றத் தொடங்கியுள்ளன, என்று குற்றம் சாட்டினார்.

    இதற்கு டிரம்ப் கடும் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "என்ன நினைத்துக்கொண்டுள்ளார் என தெரியவில்லை. எங்கள் தயவு இல்லாமல் சீனாவை சார்ந்து இருக்க விரும்புகிறாரா கவர்னர் கார்னி.

    சீனப்பொருட்களை கனடாவில் இறக்குமதி செய்தால் அவர்கள் போகிற போக்கில் உங்களை விழுங்கிவிடுவார்கள். அதனை மீறி நீங்கள் சீனா உடன் உறவு வைத்துக்கொள்ள விருப்பப்பட்டால் உங்கள் மீது 100 சதவீதம் வரிவிதிக்கப்படும்" என்றார்.

    முன்னதாக அமெரிக்காவின் அடுத்தக்கட்ட பாதுகாப்பு அம்சமான தங்க கவசத்தில் இணைய கனடா மறுப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    • காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது.
    • உலக பொருளாதார மாநாட்டில் அமைதிக் குழுவிற்கான வரைவை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ள காசா அமைதிக் குழுவில் இணைய சவுதி அரேபியா முடிவெடுத்துள்ளது.

    இதன்மூலம் சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், துருக்கி, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய எட்டு இஸ்லாமிய நாடுகள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாகச் சேருகின்றன.

    காசாவில் நிரந்தர போர்நிறுத்தத்தை அமல்படுத்துதல், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல் ஆகியவை இந்த குழுவின் நோக்கம். காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே சுவிட்சர்லாந்தின் தாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் அமைதிக் குழுவிற்கான வரைவை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

    • நமது முழு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி அமைப்பையும் அழிக்க யாரும் விரும்பமாட்டார்கள்.
    • சர்வதேச கல்விக் கட்டணத்தை நம்பி உள்ள பல்கலைக்கழகங்களையும் பாதிக்கும்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், குடியேற்றம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இதில் அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கடும் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.

    இந்தநிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆதரவாக டிரம்ப் திடீரென்று கருத்து தெரிவித்து உள்ளார்.

    அவர் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி செய்வதில் வெளிநாட்டு மாணவர்களின் பங்கு முக்கியமானது. உலகம் முழுவதிலுமிருந்து வரும் மாணவர்களில் பாதி பேரை நீக்கிவிட்டு, நமது முழு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி அமைப்பையும் அழிக்க யாரும் விரும்பமாட்டார்கள்.

    நான் அதைச் செய்ய விரும்பவில்லை. சர்வதேச மாணவர்கள் இருப்பது நன்மை பயக்கும் என்று நான் நம்புகிறேன். நான் உலகத்துடன் ஒத்துப்போக விரும்புகிறேன்.

    பல அமெரிக்க பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து செயல்பட வெளிநாட்டு மாணவர்களை நம்பி உள்ளன. சீனா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைவது அமெரிக்காவில் உள்ள பாதி கல்லூரிகளை வணிகத்திலிருந்து வெளியேற்றக்கூடும்.

    வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்க பொரு ளாதாரத்திற்கு டிரில்லியன் கணக்கான டாலர்களை பங்களிக்கிறார்கள். உள்நாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்தை விட 2 மடங்கு அதிகமாக செலுத்துகிறார்கள். நான் அவர்களை விரும்புகிறேன் என்பதைவிட அதை ஒரு வணிகமாகவே பார்க்கிறேன்.

    வெளிநாட்டு மாணவர் சேர்க்கையைக் குறைப்பது சிறிய கல்லூரிகளையும், வரலாற்று ரீதியாக சர்வதேச கல்விக் கட்டணத்தை நம்பி உள்ள பல்கலைக்கழகங்களையும் பாதிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டிரம்ப் இந்தியாவின் கொள்கையை அறிவிப்பது கடந்த 6 நாட்களில் இது 4-வது முறையாகும்.
    • டிரம்பிடமிருந்து ரஷிய எண்ணெய் பற்றிய தகவல்களையும் பெறுகிறோம்.

    பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீபாவளி வாழ்த்துகளை பரிமாறி கொண்டார்.

    இதுகுறித்து நிருபர்களிடம் டிரம்ப் கூறும்போது," ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளதாகவும் மேலும் கொள்முதலை குறைக்கும்" என்றார்.

    ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிக எண்ணெய் வாங்க போவதில்லை என்று டிரம்ப் மீண்டும் கூறியதற்கு காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மோடி மறைப்பதை டிரம்ப் வெளிப்படுத்துகிறார் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி இறுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேசியதை ஒப்புக்கொண்டுள்ளார். டிரம்ப் தனக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்ததாக மட்டுமே கூறினார். ஆனால் மோடி எதை மறைத்தாலும், டிரம்ப் வெளிப்படுத்துகிறார்.

    ரஷியாவிடம் இருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி குறித்து பேசிய தாகவும் இந்த இறக்குமதி நிறுத்தப்படும் என்று அவருக்கு உறுதி அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். டிரம்ப் இந்தியாவின் கொள்கையை அறிவிப்பது கடந்த 6 நாட்களில் இது 4-வது முறையாகும்.

    முதலில் டிரம்ப்பிடம் இருந்து ஆபரேஷன் சிந்தூர் பற்றிய தகவல்களைப் பெற்றோம். இப்போது அவரிடமிருந்து ரஷிய எண்ணெய் பற்றிய தகவல்களையும் பெறுகிறோம். பிரதமர் மோடி எதை மறைக்கிறார்? அவர் எந்த அழுத்தத்தில் இருக்கிறார்? அவர் எதற்கு பயப்படுகிறார்? ஹவ்டி மோடி-நமஸ்தே டிரம்ப் முற்றிலும் கெட்டுப்போனது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தனது அதிகாரத்தை மீறி டிரம்ப் வரிகளை விதித்து உள்ளதாக நீதிமன்றம் கருத்து.
    • டிரம்பின் அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்வதாக நீதிமன்றம் உத்தரவு

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார்.

    அத்துடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார்.

    அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

    இதற்கிடையில், டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள வர்த்தக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனை விசாரித்த நீதிபதிகள், டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அவரின் அதிகார மீறலாகும் என்று விமர்சித்து, அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்வதாக தெரிவித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மனு தாக்கல் செய்தது.

    இந்த மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும், இத்தகைய வரிகளை விதிக்க டிரம்ப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.

    இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் பதவிட்டார். அவரது பதிவில், அமெரிக்காவில் பொருட்களின் விலைகள் மிகக் குறைந்துவிட்டன. பணவீக்கம் கிட்டத்தட்ட இல்லை. எரிசக்தி விலைகள் பெரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளன. பெட்ரோல் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

    பல ஆண்டுகளாக நம்மை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட நாடுகளிலிருந்து டிரில்லியன் கணக்கான டாலர்களைக் கொண்டு வரும் அற்புதமான வரிகள் அனைத்தும் அமெரிக்காவை மீண்டும் வலிமையாகவும் மரியாதைக்குரியதாகவும் ஆக்குகின்றன.

    வரிகளும், நாம் ஏற்கனவே பெற்றுள்ள டிரில்லியன் கணக்கான டாலர்களும் இல்லாவிட்டால், நமது நாடு முற்றிலுமாக அழிக்கப்பட்டு, நமது இராணுவ சக்தி உடனடியாக அழிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    • அனைத்து நாடுகளுக்கும் எதிராக வரி விதிப்பை அறிவிப்பை வெளியிட்டார்.
    • அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே, தயாரிக்கப்பட வேண்டும்.

    அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

    அதன்படி அனைத்து நாடுகளுக்கும் எதிராக வரி விதிப்பை அறிவிப்பை வெளியிட்டார். சீனா மட்டும் பதிலடி கொடுக்கும் வகையில் பதில் வரி விதிப்பை வெளியிட்டது. மற்ற நாடுகள் ஆலோசனை நடத்தி வந்தன.

    அதனைத்தொடர்ந்து 90 நாட்களுக்கு வரி விதிப்பை டொனால்டு டிரம்ப் நிறுத்தி வைத்தார். ஒவ்வொரு நாடுகளடன் வரி விதிப்பு குறித்து அமெரிக்கா பேச்சுவார்தை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்காதீர், அப்படி தயாரித்தால் 25% வரி விதிக்க நேரிடும் என ஆப்பிள் நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிரட்டல் விடுத்திருந்தார்.

    இதுகுறித்து மேலும் கூறிய அவர்," இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்காதீர், அப்படி தயாரித்தால் 25% வரி விதிக்க நேரிடும். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்புவதை விரும்பவில்லை.

    அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே, தயாரிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், ஐபோன் நிறுவனத்தை தொடர்ந்து அதன் முக்கிய தொழில் போட்டியாளரான சாம்சங் நிறுவனத்திற்கும் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து டிரம்ப், வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசுகையில், "வரி விதிப்பு ஆப்பிள் நிறுவனத்திற்கு மட்டுமல்ல, சாம்சங் மற்றும் இதுபோன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் எந்த நிறுவனத்திற்கும் பொருந்தும். இல்லையெனில், அது நியாயமாக இருக்காது. அவர்கள் இங்கு தொழிற்சாலை அமைத்தால், வரி இருக்காது. இந்த நடவடிக்கை அமெரிக்காவில் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது" என்று கூறினார்.

    சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களை முக்கியமாக வியட்நாம், இந்தியா, தென் கொரியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்கிறது. இந்த வரி விதிப்பு, குறிப்பாக வியட்நாமில் உற்பத்தி செய்யப்படும் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு 46% வரி விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    • விமானப்படையின் ஜெட் விமானங்கள் இருபுறமும் சூழ பாதுகாப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை பெறுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தான் பொறுப்பேற்ற பிறகு வளைகுடா நாடுகளில் கடந்த 13-ந் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கினார்.

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனி விமானம் மூலம் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு சென்றுள்ளார்.

    அங்கு, சர்வதேச விமான நிலையத்தில் டிரம்பிற்கு அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் நேரில் வரவேற்பு அளித்தார்.

    முன்னதாக அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட் விமானங்கள் இருபுறமும் சூழ பாதுகாப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து அவருக்கு 21 குண்டுகள் முழங்க முப்படை ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதில் இருநாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டது.

    பிறகு நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகியோர் இருதரப்பு அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதனை தொடர்ந்து இரு தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை பெறுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.

    தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து டிரம்ப் நாளை மறுநாள் (சனிக்கிழமை) அமெரிக்கா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
    • அமெரிக்கா மீது கூடுதல் வரிகளை விதிக்க தயாராகி வருகின்றன.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பை அறிவித்தார்.

    அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக வரி விதிப்பதாக கூறி இந்த நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார். இதில் இந்தியா மீது 27 சதவீத வரியை விதித்து உள்ளார்.

    டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்கா மீது கூடுதல் வரிகளை விதிக்க தயாராகி வருகின்றன.

    இந்த நிலையில் டிரம்பின் வரி விதிப்பு அறிவிப்புக்கு பிறகு அமெரிக்க பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல் அடியோடு மாறி வருவதால் அமெரிக்க முதலீட்டாளா்கள் அச்சத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்பட்டனா்.

    இதனால் அந்த நாட்டுப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியடைந்தது. பங்குச் சந்தையின் அனைத்து குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டும் பல லட்சம் கோடியை இழந்தன.

    அமெரிக்காவுக்கு சீனாவும், ஐரோப்பிய ஒன்றியமும் பதிலடி கொடுக்க உள்ளதாக கூறியதையடுத்து 2020-ம் ஆண்டுக்குப் பிறகு (கொரோனா காலம்) அமெரிக்க பங்குச் சந்தைகளில் மிகப் பெரிய சரிவை ஏற்படுத்தி உள்ளது.

    அதேபோல் உலக பங்குச்சந்தைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் பங்குச் சந்தைகள் 2-வது நாளாக சரிந்தன.

    இந்த நிலையில் டிரம்ப் நிருபர்களிடம் அளித்த பேட்டியின் போது பங்குச்சந்தை வீழ்ச்சி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்தபோது, விரைவில் சந்தைகள் ஏற்றம் பெறப்போகின்றன. பங்குகள் ஏற்றம் பெறப்போகின்றன. நாடு ஏற்றம் பெறப்போகிறது.

    இந்த வரி விதிப்பு அறிவிப்பு உலகளவில் சந்தைகளை உலுக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வது போன்ற ஒரு அறுவை சிகிச்சையை செய்து கொண்டிருக்கிறோம். அது மிகவும் நன்றாக நடக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

    வரிகளைத் தவிர்க்க அமெரிக்காவில் தங்கள் தயாரிப்புகளை தயாரிக்க விரும்பும் நிறுவனங்களிடமிருந்து டிரில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு நமது நாட்டிற்கு வரும். ஒரு ஒப்பந்தத்தை முடிக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்று பல நாடுகள் பார்க்க விரும்புகின்றன.

    யாராவது அற்புதமான சலுகையை கொடுக்கத் தயாராக இருந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். அமெரிக்காவை மற்ற நாடுகள் நீண்ட கால மாக பயன்படுத்தி வருகின்றன. அதை நிறுத்த விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதையடுத்து தனது கருத்தை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.
    • அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்றார்.

    கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் சமீபகாலமாக தெரிவித்து வருகிறார்.

    இதற்கிடையே கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதையடுத்து தனது கருத்தை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தி இருந்தார்.

    இந்த நிலையில் டிரம்பின் கருத்துக்கு கனடா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இது குறித்து கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி கூறுகையில், "அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்பின் கருத்துக்கள் கனடாவை ஒரு வலுவான நாடாக மாற்றுவது பற்றிய முழுமையான புரிதல் இல்லாததைக் காட்டுகிறது.

    நமது பொருளாதாரம் வலுவாக உள்ளது. எங்கள் மக்கள் வலிமையானவர்கள். அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்" என்றார்.

    அதே போல் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, "அமெரிக்காவுடன் கனடா இணைவதற்கு வாய்ப்பே இல்லை" என்றார்

    • டொனால்ட் டிரம்ப் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • கேப்பிடல் எனப்படும் பாராளுமன்ற கட்டடத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

    அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்றுள்ளார்.

    அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் ஏமாற்றமடைந்தார்.


    இந்நிலையில், 47வது அதிபராக டிரம்ப் இன்று பதவி ஏற்றார். அதன்படி, கேப்பிடல் எனப்படும் பாராளுமன்ற கட்டடத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

    இதற்காக, டிரம்ப் அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் டி.சி.க்கு நேற்று முன்தினம் சென்றார். பிறகு, புளோரிடாவின் பாம் பீச்சிலிருந்து வாஷிங்டனுக்கு தனி விமானம் மூலம் தனது மனைவி, மகனுடன் புறப்பட்டுச் சென்றார்.

    அதிபர் டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தொழிலதிபர் அம்பான் மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானி உள்பட உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

    ×