search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "United States"

    • கப்பலில் பணியாற்றிய இந்திய குழுவினர் உடனடியாக தகவல் தெரிவித்து உதவியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது
    • கப்பலில் பணியாற்றிய இந்திய குழுவினருக்கு எங்களது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.

    அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் படாப்ஸ்கோ நதியின் குறுக்கே உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது நேற்று அதிகாலை சரக்கு கப்பல் ஒன்று பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பாலம் உடைந்து தண்ணீரில் விழுந்தது. விபத்து நடந்த சமயத்தில் பாலத்தின் மீது சென்ற வாகனங்கள், பாலம் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் உள்ளிட்டோர் நீரில் மூழ்கினர்.

    இந்தவிபத்தில் 6 பேர் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.நீரில் மூழ்கிய 6 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.




    மேலும், பாலத்தின் மீது மோதிய கப்பல் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது. சரக்கு கப்பலில் 22 இந்திய மாலுமிகள் பணியாற்றினர். சரக்கு கப்பல் பாலத்தின் மீது மோத உள்ளது குறித்து கப்பல் மாலுமிகள் முன்னதாக தகவல் தெரிவித்ததால் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது.மேலும் பெரிய அளவிலான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது.

    அந்த கப்பலில் 4 ஆயிரத்து 679 கண்டெய்னர்கள் இருந்து உள்ளது. இலங்கையை நோக்கி அந்த கப்பல் சென்று கொண்டு இருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.

    இந்த விபத்திற்கு இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்து உள்ளது. இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்து உள்ளது.



    இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது :-

    கப்பல் கட்டுப்பாட்டை இழந்தது குறித்து போக்குவரத்து ஊழியர்களுக்கு கப்பல் பணியாளர்கள் முன்னரே எச்சரித்தனர். இதன் மூலம் பால்டிமோர் பாலத்தில் போக்குவரத்து மூடப்பட்டு பெரும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டு உள்ளது.

    போக்குவரத்து அதிகாரிகளுக்கு கப்பலில் பணியாற்றிய இந்தியகுழுவினர் உடனடியாக தகவல் தெரிவித்து உதவியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளது. எனவே கப்பலில் பணியாற்றிய இந்திய குழுவினருக்கு எங்களது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு ஜோபைடன் கூறி உள்ளார்.

    • ஜனநாயக முறையிலான ஆட்சி மாற்றத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.
    • புதிய அரசு விரைந்து செயல்பட்டு கடன் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.

    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே விலகிய நிலையில், அனைத்துக்கட்சிகளும் இணைந்து புதிய ஆட்சியை அமைக்கும் பணிகளில் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இலங்கையுடன்அமெரிக்கா துணை நிற்பதாக அந்நாட்டிற்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடந்து வரும் அரசியல் முன்னேற்றங்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    இலங்கையின் வரலாற்றில் பலவீனமான இந்த தருணத்தில் அனைத்து தரப்பினரும் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றார். அமைதியான மற்றும் ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இலங்கையில் அரசியலமைப்பு ரீதியாக தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசு விரைந்து செயல்பட்டு கடன் நெருக்கடிக்கு தீர்வு காண்பதுடன், நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் கூடிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்க தூதர் குறிப்பிட்டுள்ளார்.

    அமெரிக்க மாகாணமான அலபாமாவில் கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் மசோதா நிறைவேறியது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் 1973-ம் ஆண்டுக்கு முன்னர் பெண்கள் தங்களின் கருவை கலைப்பது சட்டவிரோத செயலாக பார்க்கப்பட்டது. இதை எதிர்த்து பெண் உரிமை ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 1973-ம் ஆண்டு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு, கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.

    அதன்படி அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப், கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என பிரசாரம் செய்தார்.

    இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. எனினும் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனார். அதனை தொடர்ந்து குடியரசு கட்சியினர் கவர்னர்களாக இருக்கும் மாகாணங்களில் கருக்கலைப்புக்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.

    கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவின் 16 மாகாணங்களில் கருக்கலைப்புக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அந்த வகையில் அலபாமா மாகாணத்தில் கருக்கலைப்புக்கு முழுமையாக தடைவிதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

    கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கருக்கலைப்புக்கு தடைவிதிக் கும் சட்ட மசோதா அலபாமா மாகாண சட்டசபையில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா கீழ்சபையில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டபோது மசோதாவுக்கு ஆதரவாக 74 ஓட்டுகளும், எதிராக 3 ஓட்டுகளும் விழுந்தன.

    எனவே பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் கீழ்சபையில் அந்த மசோதா நிறைவேறியது. அதனை தொடர்ந்து, இந்த மசோதா நேற்று முன்தினம் மேல்சபையில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அங்கு மசோதாவுக்கு ஆதரவாக 25 ஓட்டுகளும், எதிராக 6 ஓட்டுகளும் விழுந்தன.

    இதன் மூலம், கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் மசோதா மேல்சபையிலும் வெற்றிகரமாக நிறைவேறியது. இதையடுத்து, இந்த மசோதா குடியரசு கட்சியை சேர்ந்த அலபாமா மாகாணத்தின் பெண் கவர்னரான கெய் இவேவின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

    அவர், இந்த மசோதாவில் கையெழுத்திடுவது அல்லது நிராகரிப்பது குறித்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும் அவர் கருக்கலைப்பை கடுமையாக எதிர்ப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மசோதா கையெழுத்தாகி சட்டமானால், கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஆபத்து நேரிட்டாலோ அல்லது பாலியல் பலாத்காரத்தின் மூலம் கர்ப்பமடைந்தாலோ, தவறான உறவின் மூலம் கருத்தரித்தாலோ மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும்.

    மேற்கூறிய காரணங்கள் தவிர வேறு எதற்காக கருக் கலைப்பு செய்தாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகும். கருக்கலைப்பு செய்யும் டாக்டருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அதே சமயம் கருக்கலைப்பில் ஈடுபடும் பெண் குற்றவாளியாக கருதப்படமாட்டார்.

    கருக்கலைப்புக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பது பெண் உரிமை ஆர்வலர்கள் மற்றும் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    அமெரிக்காவில் தேவாலயம் அருகே மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். #Baltimore #GunFire
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரில் தேவாலயம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த தேவாலயத்துக்கு அருகே திறந்தவெளி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், கலந்துகொண்ட மக்கள் பலர் உணவை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கிருந்த அனைவரையும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.

    இதனால் பீதியடைந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து போலீசார், படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  #Baltimore #GunFire 
    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பரிதாபமாக பலியானார்.#CaliforniaShooting
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள போவே நகரில் யூதமத கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இந்த தாக்குதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்தார்.  மேலும் காயமடைந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இளம்பெண் ஒருவரும் மற்றும் 2 ஆண்களும் அடங்குவர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர் ஜான் எர்னஸ்ட் (19) என தெரிய வந்துள்ளது.

    கடந்த 6 மாதத்துக்கு முன் பிட்ஸ்பர்க் நகரில் இதேபோல் யூதமத கோவிலில் நடந்த தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். #CaliforniaShooting
    அமெரிக்காவை தாக்கிய சூறாவளியில் 2 சிறுவர்கள் உள்பட 8 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #StrongStorms #UnitedStates
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள டெக்சாஸ், அலபாமா, மிச்சிபிசி ஆகிய மாகாணங்களை பலத்த சூறாவளி தாக்கியது. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சூழன்றடித்தது.

    இதில் மேற்கூறிய 3 மாகாணங்களில் உள்ள பல்வேறு நகரங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின. குறிப்பாக டெக்சாஸ் மாகாணத்தின் ஏஞ்சலினா கவுண்டி, அல்டோ, மிச்சிபிசியின் மெனாரே மற்றும் அலபாமாவின் பர்மிங்காம் ஆகிய நகரங்கள் சின்னாபின்னமாகின.

    சூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பந்தாடப்பட்டன. பல இடங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன.



    நெடுஞ்சாலைகளில் இருந்த அறிவிப்பு பலகைகள் மற்றும் விளம்பர பலகைகள் நொறுங்கிவிழுந்தன. மேலும் பல பகுதிகளில் சாலைகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சூறாவளி காற்றில் சிக்கி மின்கம்பங்கள் சரிந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் 3 மாகாணங்களிலும் சுமார் 1 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன.

    சூறாவளியை தொடர்ந்து ஒரு சில இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கின்றன. இதனால் மக்கள் வீடுகளை இழந்து, பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    சூறாவளி மற்றும் அதுதொடர்பான விபத்துகளில் 2 சிறுவர்கள் உள்பட 8 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    அவர்கள் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.

    இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முழுவீச்சில் மீட்புபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையில் மிச்சிபிசி மாகாண கவர்னர் பில் பிரயாந்த் அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.   #StrongStorms #UnitedStates
    வெனிசுலா விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்துங்கள் என்று அமெரிக்காவுக்கு ரஷியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. #VenezuelaCrisis #VenezuelaBorderClashes #JuanGuaido

    மாஸ்கோ:

    வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் கெய்டோ போட்டி அரசாங்கம் நடத்துகிறார். தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துள்ளார். அவருக்கு அமெரிக்கா உள்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.

    அதேநேரத்தில் அதிபர் மதுரோவுக்கு ரஷியா மற்றும் சீனாவும் ஆதரவு அளித்துள்ளன. இதற்கிடையே ரஷியாவின் 2 ராணுவ விமானங்கள் கராகஸ் விமானநிலையத்துக்கு வெளியே ராணுவ வீரர்கள் மற்றும் ஆயுத தள வாடங்களுடன் ஒருவாரத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உடனே ரஷிய படைகள் வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தினார். அதற்கு ரஷியா-வெனிசுலா இடையே ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் உள்ளது.

     


    வெனிசுலாவுக்கு ரஷியா ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது ரஷியா ‘எஸ்-300’ என்ற ஏவுகணையை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதனால் இங்கு விமான ராணுவங்களும், வீரர்களும் முகாமிட்டுள்ளதாக தெரிவித்தது.

    இந்தநிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்பால் ரஷியாவுக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், வெனிசுலாவில் இருந்து வெளிநாட்டு படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷியா வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளர் மரியா ‌ஷகாரோவா வெளியிட்டுள்ள அறிக்கையில் வெனிசுலாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையும், மிரட்டுவதையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும். பொருளாதார பிரச்சினையை ஏற்படுத்தி உள்நாட்டு போர் உருவாக்குவதையும் நிறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. #VenezuelaCrisis #VenezuelaBorderClashes #JuanGuaido

    அமெரிக்காவின் கடும் பனிப்பொழிவில் சிக்கிய ரெயில் ஒன்று, 2 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது. #Americasnowfall #Trainstuckinsnow
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவின் சியாட்டில்- லாஸ் ஏஞ்சல்ஸ் வழித்தடத்தில் பயணிகள் ரெயில் கடந்த ஞாயிறு அன்று  சென்றுக்கொண்டிருந்தது. அப்போது பனிப்பொழிவு மிக அதிகமாக காணப்பட்டது. ரெயில் பாதையில் மரக்கிளைகள் விழுந்து கிடந்துள்ளன. இதனையடுத்து ரெயில் சட்டென நின்றது. இதில் ரெயிலின் எஞ்சின் முற்றிலும் பழுதானது.

    பயணிகள் அனைவரும் ரெயில் திடீரென நின்றதை  உணர்ந்து பதற்றம் அடைந்தனர். ரெயில்வே துறையினருக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சிக்கிய ரெயில் எஞ்சின், ரெயில்வே ஊழியர்களால் அன்று இரவு பழுது பார்க்கப்பட்டது. ரெயிலை உடனடியாக இயக்க முடியவில்லை.



    இருப்பினும் ஊழியர்கள் விடாது 36 மணி நேரம் நிதானத்துடனும், மிகுந்த கடமை உணர்வுடனும்  போராடி எஞ்சின் கோளாறை சரி செய்தனர்.  இதன் மூலம் ரெயில் நேற்று காலை மீண்டும் இயங்க துவங்கியது.

    ரெயில் தண்டவாளத்தை விட்டு நகர முடியாமல் நின்றபோது, தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டதால் ரெயிலில் பயணம் செய்த 182 பயணிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிகழ்வினை பயணிகள் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.  #Americasnowfall  #Trainstuckinsnow 
    அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். #USWomanarrested
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலம் பிரிஸ்டால் நகரைச் சேர்ந்தவர் ஜோ விட்னி அவுட்லண்ட்(55). இவரது தாய் ரோஸ்மேரி(78). ஜோ விட்னியின் வீடு நீண்ட நாட்களாக பூட்டிக் கிடந்துள்ளது. சம்பவத்தன்று விட்னியின் உறவினர் ஒருவர், அவரது வீட்டு சன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார். அப்போது,  விட்னியின் தாயின் சடலம், போர்வைகளால் சுருட்டி வைக்கப்பட்டு கிடந்ததை அறிந்தார்.

    இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். அங்கு விட்னியின் தாயாரின் உடல் 54 போர்வைகள் கொண்டு சுருட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை  நடத்தினர்.

    அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, கடிதம் ஒன்றை போலீசார் கண்டறிந்தனர். இதில் ரோஸ்மேரி கடந்த ஆண்டு டிசம்பர் 29 அன்று உயிரிழந்ததாக எழுதப்பட்டிருந்தது. இடைப்பட்ட நாட்களில்  உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என யாரையும் விட்னி வீட்டிற்குள் வர அனுமதிக்கவில்லை. சடலத்தில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தை மறைக்க, 66 விதமான ரூம் ஃப்ரஷ்னர்களை பயன்படுத்தியுள்ளார்.

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டிற்கு சென்றபோது, அவரது வீட்டில் இருந்த செல்போன் எண்களை தொடர்பு கொள்ள இயலவில்லை.

    அவரது தாயின் மரணத்திற்கு பிறகு ஜோ விட்னி உறவினர் வீட்டிலேயே தங்கியுள்ளார். இதையடுத்து கடந்த செவ்வாயன்று அவர் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டிற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். ஆனால் விட்னி தரப்பில் வாதாட வக்கில் யாரும் இல்லை.

    இதன் பின்னர் போலீசாரின் விசாரணையில் இருந்த அவரை விடுவித்து, மீண்டும் பிப்ரவரி 28ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும்  என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    தாயின் இறப்பினை வெளியில் சொன்னால் போலீசார் கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் யாரிடமும் கூறவில்லை என விசாரணையின்போது விட்னி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  #USWomanarrested



     



     
    அமெரிக்காவின் நப்ராச்கா பகுதியில் உள்ள மோனோவி எனும் சிறிய நகரத்தில் ஒருவர் மட்டுமே வசித்து வருகிறார். #UStownpopulationofone
    வாஷிங்டன்:

    உலகில் பல்வேறு நாடுகளிலும் மக்கள் தொகை அதிகரித்து காணப்படுகிறது. அமெரிக்காவில் அங்குள்ள மக்கள் அல்லாமல் பிற நாட்டினரும் குடியேறியுள்ளனர். மக்கள் அதிகம் வசிக்கும் நாடான அமெரிக்காவில் நப்ராச்கா பகுதியில் மோனோவி எனும் சிறிய நகரம் உள்ளது. இப்பகுதியில் எல்சி எய்லர்(84) எனும் மூதாட்டி மட்டுமே தனியாக வாழ்ந்து வருகிறார்.

    இது குறித்து எல்சி எய்லர் கூறியதாவது:-

    இப்பகுதியில் நான் மட்டுமே வசிக்கிறேன். இங்கு இருந்தவர்கள் அனைவரும் இடம் பெயர்ந்து சென்று விட்டனர். எனது பெற்றோர் இந்த நகரத்தை தாண்டி உள்ள விவசாய நிலப்பகுதியில் பணிகளை மேற்கொள்ள சென்றனர். எனக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    இருவரும் நான் இங்கு இருப்பதையே விரும்புகிறேன் என்பதை உணர்ந்தனர். மேலும் 1971 முதல் காபி, டீ போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறேன். இந்த கடையை திறந்த போது , இப்பகுதியில் இருந்த தபால் நிலையமும், சிறிய மளிகை கடையும் மூடப்பட்டது. இந்தப்பகுதியில் உள்ள சாலையின் வழியே செல்லும் பல டிரக்குகள், வியாபாரிகள், தற்போது வாடிக்கையாளர்களாக மாறி உள்ளனர்.

    மேலும் இப்பகுதி இயற்கையுடன் கூடிய அமைதியுடன் இருப்பதால் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். இதனால் இது தற்போது ஹப் போலாகி விட்டது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    இதுமட்டுமின்றி கூடுதல் பொறுப்பாக எந்தவித போட்டியுமின்றி இந்த பகுதியின் மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். எனக்கு 84 வயதாகிறது. இந்நிலையில் என்னை பார்ப்பதற்காகவே சிலர் வருகின்றனர். தனிமையில் இருந்தாலும், நான் எவ்வித மன வருத்தமும் இன்றி இங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என கூறினார்.  

    இவ்வாறு அவர் கூறினார். #UStownpopulationofone  

    விசா முறைகேட்டால் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த 30 மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். #IndianStudentsdetention #Indiaissuesdemarcheto #demarchetoUSEmbassy
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்வதற்கு ‘எப் 1’ விசா வழங்கப்படுகிறது. இப்படி ‘எப் 1’ விசா பெறும் மாணவர்கள், படிப்பு முடிந்ததும் அமெரிக்காவிலேயே பணிபுரிவதற்காக பணி விசாவுக்காக காத்திருப்பது உண்டு. அந்த வகையில் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள பார்மிங்டன் பல்கலைக்கழகத்தில் பல மாணவர்கள் பதிவு செய்துகொண்டுள்ளனர்.

    ஆனால் இந்த பார்மிங்டன் பல்கலைக்கழகம், விசா மோசடிகளையும், குடியேற்ற விதி மீறல்களையும் கண்டறிவதற்காக உள்நாட்டு பாதுகாப்புத்துறையால் போலியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரகசிய நடவடிக்கை குறித்து அறியாமல், இந்தியர்கள் 8 பேர், வெளிநாட்டு மாணவர்கள் 600 பேரை அமெரிக்காவிலேயே தங்கவைப்பதற்காக பார்மிங்டன் பல்கலைக்கழகத்தை அணுகினர்.

    இதையடுத்து, அவர்கள் விசா முறைகேட்டில் ஈடுபட்டதாக 8 பேரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக விண்ணப்பித்த 130 மாணவர்களையும் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர். மற்ற 129 பேரும் இந்தியர்கள் ஆவார்கள்.

    அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்திய மாணவர்கள் 129 பேரையும் உடனடியாக விடுவிக்கும்படி கோரிக்கை விடுவித்தனர். இதற்கிடையே இந்த விசா முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட 129 இந்திய மாணவர்களும், தெரிந்தே தவறு செய்ததாக அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால், மாணவர்கள் தரப்பில் வாதாடும் வக்கீல்களோ, போலி பல்கலைக்கழகம் என தெரியாமல் மாணவர்கள் சேர்ந்துவிட்டதாகவும், தவறுகளை கண்டறிவது என்ற பெயரில் அதிகாரிகள் மோசமான ஒரு முறையை பின்பற்றியிருப்பதாகவும் கூறி வந்தனர்.

    இந்நிலையில் தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த  30 மாணவர்கள் எவ்வித நடவடிக்கையும் இன்றி அமெரிக்காவிலிருந்து திரும்பியுள்ளனர். #IndianStudentsdetention #Indiaissuesdemarcheto #demarchetoUSEmbassy

    அமெரிக்காவில் வீட்டில் வளர்ந்த பூனை, பனிப்பொழிவினால் முழுவதும் உறைந்தபோதும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது. #USSnowstorm
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்பொழிவுடன் குளிர் காற்று வீசுகிறது. துருவ சுழல் எனப்படும் கடுங்குளிர் காரணமாக, நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    கடுங்குளிரினால் சிகாகோவில் ஓடும் ஆறு ஒன்று முற்றிலும் பனிக்கட்டியாக மாறி இருக்கிறது. பனியின் தாக்கத்தால் பல மாநிலங்களில் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள், வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் மையப்பகுதிகளில், உயிரை உறையவைக்கும் கடுங்குளிருக்கு பலர் பலியாகியுள்ளனர்.

    குளிரின் தாக்கத்தை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் எடுத்து வலைத்தளங்களில் பலரும் வெளியிட்டு வருகின்றனர். அவ்வகையில், பனிப்பொழிவின் தாக்கத்தால் உறைந்துபோன பூனை, அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த தகவல் வெளியாகி உள்ளது.

    அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் ஃபிளஃபி எனும் பெயருடைய பெண் பூனை ஒன்று வளர்ந்து வந்துள்ளது. இது கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளது. இதனை அந்த வீட்டார் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

    பின்னர், அந்த பூனை வீட்டின் அருகில் இருந்த சாலையின் ஓரம் பனியினால் முழுவதுமாக மூடப்பட்டு, உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டது. உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு பூனையின் உடலில் இருந்த பனிக்கட்டிகள் அகற்றப்பட்டு, உடல் உஷ்ணத்தை அதிகரித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் பூனையின் உயிர் காப்பாற்றப்பட்டது.

    பொதுவாக பூனையின் சாதாரண உடல் வெப்பநிலை 101 டிகிரி ஆகும். ஆனால் இந்த பூனை -90 டிகிரி அளவிலான வெப்பநிலையில் உயிருடன் இருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. #USSnowstorm
    ×