என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "war"

    • 12 நாள் மோதலுக்குப் பிறகு, இஸ்ரேல் - இரான் நாட்டிற்கு இடையே போர் நிறுத்தம் எட்டப்பட்டது.
    • போருக்கு பிறகு முதன் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஈரானிய அரசு தலைவர் தோன்றினார்.

    அணு ஆயுதத்தை ஈரான் தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த மாதம் 13-ந்தேதி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.

    இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

    ஈரானின் போர்டோவில் உள்ள நிலத்தடி அணுசக்தி நிலையம் உள்ள 3 முக்கிய அணு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் இந்த அணு நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இதனையடுத்து 12 நாள் மோதலுக்குப் பிறகு, இஸ்ரேல் - இரான் நாட்டிற்கு இடையே போர் நிறுத்தம் எட்டப்பட்டது.

    இஸ்ரேல் உடனான போருக்கு பிறகு முதன் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஈரானிய அரசு தலைவர் அயதுல்லா கொமேனி தோன்றியுள்ளார்.

    அப்போது, எங்களது தலைவருக்காகவே, நரம்புகளில் ரத்தம் பாய்கிறது என மக்கள் நெகிழ்ச்சி முழக்கம் எழுப்பினர்.

    • இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் ஆய்வு செய்யப்படுகிறது.
    • பாகிஸ்தான் இந்தியா மீது ஏவிய ட்ரோன் விமானங்கள் துருக்கியில் இருந்து வாங்கப்பட்டவை.

    பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடித்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் வெளியுறவுத்துறை விளக்கம் அளித்து வருகிறது.

    வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரோஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர்.

    அப்போது, கர்னல் சோபியா குரோஷி கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. ராணுவத்தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளது.

    இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் ஆய்வு செய்யப்படுகிறது. பாகிஸ்தான் இந்தியா மீது ஏவிய ட்ரோன் விமானங்கள் துருக்கியில் இருந்து வாங்கப்பட்டவை.

    இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ தளவாடங்கள் கடுமையாக சேதமடைந்தன. சுமார் 400 ட்ரோன் விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டது.

    தனது வான் எல்லையை மூடாமல் பயணிகள் விமானங்களை பறக்கவிட்டு அதனை கேடயமாக பாகிஸ்தான் பயன்படுத்துகிறது.

    போர் பதற்றம் உள்ள நிலையிலும் கராச்சி, லாகூர் வான்வெளியில் பயணிகள் வமானங்களை பறக்க அனுமதித்துள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பாதுகாப்புத் துறைக்கு அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் பட்சத்தில் இந்தியாவின் நிதி நிலையில் சிறு பாதிப்பை ஏற்படுத்தும்.
    • நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதம் நிதிப் பற்றாக்குறையை அரசாங்கம் இலக்காகக் கொண்டு உள்ளது.

    அமெரிக்காவின் பிரபல உலகளாவிய பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் எந்த நாட்டுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வு செய்து அறிவித்துள்ளது.

    நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மூடிஸ் நிறுவனம் இது குறித்து கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில், பாகிஸ்தானுக்கு செய்யப்பட்ட ஏற்றுமதியின் பங்கு 0.5 சதவீதத்துக்கும் குறைவானது ஆகும். இந்தியா பாகிஸ்தானுடன் பெரிய அளவிலான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.

    இதன் காரணமாக, போர் பதற்றத்தால் இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இந்தியா பாதுகாப்பாக இருக்கும்.

    அதேநேரத்தில் பாதுகாப்புத் துறைக்கு அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் பட்சத்தில் இந்தியாவின் நிதி நிலையில் சிறு பாதிப்பை ஏற்படுத்தும்.

    2024-25 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதம் நிதிப் பற்றாக்குறையை அரசாங்கம் இலக்காகக் கொண்டு உள்ளது.

    மேலும், 2025 நிதி ஆண்டில் 57.1சதவீதமாக இருந்த கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை 2031 நிதியாண்டில் 50 சதவீதமாகக் குறைப்பதையும், 2027 நிதி ஆண்டில் இருந்து வருடாந்திர கடன் இலக்கு கட்டமைப்பிற்கு மாற்றுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

    மக்களின் வலுவான பொது முதலீடு மற்றும் மீள்தன்மை கொண்ட நுகர்வோர் தேவை ஆகியவை இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்க வைக்கின்றன.

    ஆனால், போர் மூளும் அபாயம் ஏற்பட்டால் அது பாகிஸ்தானில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் பாகிஸ்தான் பெரும் பின்னடைவை எதிர் கொள்ளும்.

    தொடர்ச்சியான போர் பதட்ட நிலை பாகிஸ்தானின் வெளிப்புற நிதியுதவியைப் பெறுவதற்கான திறனைக் கட்டுப்படுத்தும். அதன் அந்நியச் செலாவணி இருப்புக்களை பெருமளவில் குறைக்கக்கூடும்.

    இவ்வாறு அந்த நிறுவனம் கூறியுள்ளது.

    • இந்திய கடற்படையுடன் இணைந்து டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை.
    • கடலுக்கு அடியில் மல்டி-இன்ஃப்ளூயன்ஸ் மைன் என்ற ஆயுத சோதனை வெற்றி.

    கடலுக்கு அடியில் போர் திறனை வலுப்படுத்தும் சோதனையை இந்திய கடற்படையுடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகமான (டிஆர்டிஓ) வெற்றிகரமாக சோதனை நடத்தியது.

    கடலுக்கு அடியில் மல்டி-இன்ஃப்ளூயன்ஸ் மைன் என்ற ஆயுத சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக நடத்தியது.

    ஒலி, காந்தி புலங்களை அடையாளம் கண்டறிந்து எதிரி கப்பல்களை முறியடிக்கும் திறன் கொண்டது டிஆர்டிஓ-ன் எம்ஐஜிஎம் தொழில்நுட்பம்.

    • தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்..
    • ஈழப் போரின் போது காணாமல் போனவர்களின் உண்மை நிலவரத்தை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தமிழீழப் போரில் சிங்கள அரசாங்கம், ராணுவத்தால் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் 1.5 லட்சம் ஈழத்தமிழர்கள் இனப்படு கொலை செய்யப்பட்டனர்.

    போரில் படுகொலை செய்ய ப்பட்ட முள்ளிவாய்க்கால் தியாகிகளின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் எதிரில் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் அனுசரிக்கப்பட்டது. அப்போது ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசாங்கம், ராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்கப்பட வேண்டும். தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

    ஈழப் போரின் போது காணாமல் போன சிறுவர், சிறுமியர்கள், பெண்கள், முதியவர்கள், ஆண்கள் உள்ளிட்ட பல்லாயி ரக்கணக்கா னோரின் உண்மை நிலவரத்தை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து ஈழத் தமிழர்கள் உரிமைகளை பெற்றிட துணை நிற்போம் என்று உறுதி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் தலைமை வகித்தார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேவையா, மாநகரத் துணைச் செயலாளர் முத்துக்குமரன், முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்ற தலைவர் போராசிரியர் பாரி, மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா, தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் அருண்சோரி, விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் மாவட்டத் தலைவர் சேவியர், ஆதித்தமிழர் இளைஞர் பேரவை பொறுப்பாளர்கள் பிரேம்குமார் நிவாஸ், சிவா மற்றும் பல்வேறு இயக்க நிர்வாகிகள் கணபதி, சத்யா, வெண்ணிலா , கண்ணன், தங்கராசு, ரெஜினால்டு ரவீந்திரன், செல்வம், மனோகர், தாமரைச்செ ல்வன், கஸ்தூரி, கோதண்ட பாணி, முருகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ரஷியா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல்கள் சென்ற வாரம் தீவிரமடைந்தது.
    • ரஷியாவின் தாக்குதலின் விளைவை, ரஷிய மக்கள் அனுபவிக்கிறார்கள்

    2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை தீவிரமாக எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் போரிட்டு வருகிறது. போர் தொடங்கி 18 மாதங்கள் கடந்து சுமார் 520 நாட்கள் ஆன நிலையில் இரு தரப்பும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளிலும் பலத்த சேதங்களும் உயிர்பலிகளும் தொடர்கிறது.

    இந்நிலையில் ரஷியா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல்கள் சென்ற வாரம் தீவிரமடைந்தது.

    நேற்று ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார். மேலும், 2 கட்டிடங்கள் சேதமடைந்தன. இதனால் ரஷியாவின் வ்னுகோவோ (Vnukovo) விமான நிலையம் மூடப்பட்டது.

    இத்தாக்குதல்கள் குறித்து தனது மக்களுக்கு ஆற்றிய உரையில் கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது:

    ரஷியாவின் எல்லைக்குள் போர் நுழைந்து விட்டது. ரஷியாவின் அடையாள சின்னங்கள், ராணுவ தளங்கள் இலக்குகளாகும். இது ஒரு தவிர்க்க முடியாத ஆனால், இயற்கையான செயல்முறை. உக்ரைன் வலுப்பெற்று வருகிறது. இருந்தாலும் ரஷிய தீவிரவாதிகள் நமது எரிசக்தி கட்டமைப்பை தாக்கக்கூடும். எனவே நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலின் விளைவை, ரஷிய மக்கள் அனுபவிக்கிறார்கள் என உக்ரைன் விமானப்படை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்த தாக்குதல்கள் நேட்டோ நாடுகளும், அமெரிக்காவும் உக்ரைனுக்கு உதவியதால் நடந்திருக்கின்றன என ரஷியாவின் வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது.

    இதற்கிடையே ரஷியா கைப்பற்றிய கிரிமியாவின் மீது உக்ரைன் நடத்திய 25 டிரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்ததாக ரஷியா அறிவித்துள்ளது.

    • ரஷியாவிற்கு, போரினால் ஏற்படும் செலவினங்களின் அதிகரித்திருக்கிறது
    • ராணுவ தளவாடங்கள், உபகரணங்கள் உற்பத்தி ரஷியாவில் அதிகரித்திருக்கிறது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது.

    இதனை தீவிரமாக எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவத்தின் துணையோடு உக்ரைன் போரிட்டு வருகிறது.

    ரஷிய- உக்ரைன் போர் 525 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் அதிகளவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் போரினால் ஏற்படும் செலவினங்களின் அதிகரிப்பால் ரஷியாவின் 2023-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் உள்ள ராணுவ செலவினங்களுக்கான தொகை இரு மடங்காகியுள்ளது. 2023-க்கான ராணுவ செலவுக்கு ரஷியா சுமார் ரூ.45 ஆயிரம் கோடி ($54 பில்லியன்) திட்டமிட்டிருந்தது. ஆனால் முதல் அரையாண்டிலேயே இதைவிட 12 சதவீதம் அதிகம் செலவிட்டிருக்கிறது.

    போரை தீவிரமாக ரஷியா நடத்தி வந்தால், அதனால் ஏற்படும் அதிகமான ராணுவ செலவின் காரணமாக பட்ஜெட் தொகையில் விழும் துண்டு இன்னும் அதிகமாகலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    போரின் காரணமாக ராணுவ தளவாடங்கள், உபகரணங்கள் தொடர்புடைய உற்பத்திகள் ரஷியாவில் அதிகரித்திருக்கும் வேளையில் ஏற்றுமதி வருவாய் குறைந்திருப்பது மட்டுமல்லாமல் பிற தொழில்களும் போரினால் மிகவும் நலிந்து வருகிறது.

    உலக பொருளாதாரம் மந்தமாக இருக்கும் சூழ்நிலையில் போர் விரைவில் முடிவுக்கு வருவது அனைத்து நாடுகளுக்கும் நல்லது என பொருளாதார வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.

    • பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், சங்கிலி தொடர் போல பல்வேறு நாடுகளையும் ஒருங்கிணைக்கிறது.
    • மீண்டும் ஏற்றுமதி ஆர்டர் பெறுவதில் இழுபறி ஏற்படுமோ என ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    திருப்பூர்:

    இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பல்வேறு நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடை, அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அங்குள்ள பெரிய வர்த்தகர்கள், உலக நாடுகளில் உள்ள சில்லரை வர்த்தகர்களுக்கு, ஆடைகளை விற்கின்றனர்.

    பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், சங்கிலி தொடர் போல பல்வேறு நாடுகளையும் ஒருங்கிணைக்கிறது. இதன்காரணமாக, சங்கிலி தொடரில் ஏதாவது ஒரு இடத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், அதன் தாக்கம், தொடர்புள்ள நாடுகள் அனைத்திலும் எதிரொலிக்கிறது.

    கொரோனா தொற்றுபரவலால் பாதிக்கப்பட்ட பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், அடுத்துவந்த ஆண்டில் மீண்டும் சூடுபிடித்தது. இருப்பினும், ரஷ்யா - உக்ரைன் நாடுகளிடையே துவங்கிய போரால், திருப்பூருக்கு புதிய ஏற்றுமதி ஆர்டர் கிடைப்பது அரிதாக மாறியுள்ளது.

    புதிய வளர்ச்சி இல்லாவிட்டாலும், வழக்கமான ஆர்டர்களை பெற முடியாமல், ஏற்றுமதியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடரும் போராட்டத்தால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகமும்,நூற்பாலைகள் மற்றும் தொடர்புடைய 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    எப்படியும் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையுடன் நாட்களை கடத்திக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே துவங்கிய போர் திருப்பூர் ஏற்றுமதியாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    இஸ்ரேல் போர் சூழல் காரணமாக நேரடி பாதிப்பு திருப்பூருக்கு இருக்காது. இருப்பினும் சங்கிலிதொடராக உள்ள வர்த்தக தொடர்புகள் பாதிக்கும். இதன்காரணமாக, மீண்டும் ஏற்றுமதி ஆர்டர் பெறுவதில் இழுபறி ஏற்படுமோ என ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை, காசாவில் மனிதநேய உதவிகளை செய்து வருகிறது.
    • 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது உயிர்வாழ்விற்காக சார்ந்து உள்ளனர்.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதில் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.

    இதையடுத்து ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இதில் 26 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மூன்று மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து கொண்டிருக்கிறது.

    இதற்கிடையே இஸ்ரேல் மீதான அக்டோபர் 7-ந்தேதி தாக்குதலில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமையை சேர்ந்த ஊழியர்கள் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு தெரிவித்தது.

    ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை, காசாவில மனிதநேய உதவிகளை செய்து வருகிறது. இதில் 13 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனியர்கள். இந்த முகமை மீதான குற்றச்சாட்டையடுத்து சில ஊழியர்களை ஐ.நா. பணிநீக்கம் செய்தது.

    இந்நிலையில் ஐ.நா. வின் பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா, இங்கிலாந்து அறிவித்தன. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறும்போது, "இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் அமைப்பு ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப் படும் குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கிறது. அந்த அமைப்புக்கு நிதிஉதவி அளிப்பது நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று தெரிவித்தது. இதே கருத்தை இங்கிலாந்தும் தெரிவித்து உள்ளது.

    இதற்கிடையே ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு நிதிஉதவியை நிறுத்துவதாக மேலும் 7 நாடுகள் அறிவித்தது. கனடா, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர் லாந்து, பின்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் நிதிஉதவி அளிப்பதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. நிதிஉதவியை நிறுத்தியதற்கு பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமை தலைவர் பிலிப் லாசரினி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, "நிதிஉதவியை நிறுத்துவதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த அமைப்பு காசாவில் முதன்மையான மனிதாபிமான நிறுவனமாகும். அதில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது உயிர்வாழ்விற்காக சார்ந்து உள்ளனர். போருக்கு மத்தியில் இதுபோன்ற முடிவுகள் ஏற்கனவே தலைவிரித்தாடும் பஞ்சத்தை அதிகரிக்க செய்யும். காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு மேலும் ஒரு கூட்டுத் தண்டனையை கொடுக்காதீர்கள்" என்றார்.

    • வடகொரியாவில் ராணுவ பல்கலைக்கழகத்தை அதிபர் கிம் ஜாங் உன் ஆய்வு செய்தார்.
    • அதன்பின் பேசிய அதிபர்,போருக்கு தயாராகுமாறு கூறியது கொரிய தீப கற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பியாங்யாங்:

    வட கொரிய அதிபராக பதவி வகித்து வருபவர் கிம் ஜாங் உன். தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் மோதி வரும் இவர், உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே, அமெரிக்காவும் தென் கொரியாவும் ராணுவ பயிற்சிகளை அதிகளவில் மேற்கொண்டு வருவதால் கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது என வடகொரியா கூறியிருந்தது.

    இந்நிலையில், வடகொரியாவின் ராணுவ பல்கலைக்கழகத்தை கிம் ஜாங் உன் ஆய்வுசெய்தார். அதன்பின் அவர் பேசியதாவது:

    வடகொரியாவை சுற்றி நிலைத்தன்மையற்ற அரசியல் சூழல் உள்ளது. எனவே, கடந்த காலத்தைக் காட்டிலும் இப்போது போருக்கு ஆயத்தமாக வேண்டியுள்ளது என தெரிவித்தார்.

    • உக்கரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் இரண்டு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
    • சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின், அந்நாட்டு அதிபர் ஜீ ஜிங் பிங்கை சந்தித்து பேசி, போரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது பற்றியும், இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் இரண்டு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் ரஷ்யா எந்த சமரசமுமின்றி தொடர்ந்து போரை முன்னெடுத்து வருகிறது. உக்ரைனும், மேற்கு நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் சீன அதிபர் ஜீ ஜிங் பிங்கை சந்திக்க சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின், அங்கு உரையாற்றுகையில், ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உக்ரைன் சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்தார்.

    மேலும் ரஷ்ய படை திட்டமிட்டபடி உக்ரைனுக்குள் தொடந்து முன்னேறி வருவதாகவும், கார்கிவை கைப்பற்றுவது தங்களின் நோக்கமில்லை என்றும் தெரிவித்தார். அதற்கு பதிலாக இரண்டு நாடுகளுக்கும் பொதுவானதொரு இடைப்பட்ட பாதுகாப்பு பகுதியை ( BUFFER ZONE) உருவாக்குவதே தங்களின் திட்டமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

    மேற்கு நாடுகளின் ஒன்றிணைந்த நேட்டோ நாடுகளில் உக்ரைன் சேரும் பட்சத்தில் உக்ரைன் வழியாக எளிதில் ரஷ்யாவுக்குள் நேட்டோ படைகள் வந்துவிடும் என்ற அச்சுறுத்தல் இருப்பதாலேயே இந்த போர் நடந்து வருகிறது. எனவே இரண்டு நாடுகளுக்குமாக BUFFER ZONE உருவாகும் பட்ச்சத்தில் இந்த அச்சுறுத்தல் விலகும் என்பதாலேயே ரஷ்யா இந்த போரை அதை நோக்கி கொண்டு செல்வதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

    முன்னதாக சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின், அந்நாட்டு அதிபர் ஜீ ஜிங் பிங்கை சந்தித்து பேசி, போரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது பற்றியும், இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

    • அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது.
    • கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே பாலஸ்தீனம் ஒரு நாடாக செயல்படுவதற்கான தகுதி பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்திருந்தது.

    பாலஸ்தீனத்தின் காசா, ராபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் கடந்த 9 மாதங்களாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 35,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.இதில் பெருமாபாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். ஐரோப்பிய நாடுகள் பலவும் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளிப்பதே பாலஸ்தீன்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வாகும் என்ற முடிவை முன்மொழிந்துள்ளது.

     

    இந்நிலையில் அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் இதுகுறித்து கூறியதாவது, ஸ்பெயின் மற்றும் நார்வேவுடன் ஒருங்கிணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது அயர்லாந்துக்கும், பாலஸ்தீனுக்கும் வரலாற்று சிறப்பு மிகுந்த நாளாகும். இஸ்ரேல் பாலஸ்தீன மோதலை தீர்க்க பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிப்பதே தீர்வாகும் என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த 2018 முதல் ஸ்பெயின் பிரதமராக உள்ள சோசியலிஸ்ட் கட்சித் தலைவர் பெட்ரா சான்செஸ் இன்று ஸ்பெயின் பாராளுமன்றத்தில், மே 28 ஆம் தேதி முதல் பாலஸ்தீனத்தை தனி நாடாக ஸ்பெயின் அங்கீகரிக்கும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.

     

    3 நாடுகளின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல் அரசு, அந்த நாடுகளில் உள்ள தங்களது வெளியுறவுத் தூதர்களை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே பாலஸ்தீனம் ஒரு நாடாக செயல்படுவதற்கான தகுதி பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×