என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prime Minister Modi"

    • புனிதமான மதுரை மண்ணிற்கு வந்ததை மிகப்பெரிய கவுரவமாக பார்க்கிறேன்.
    • கடந்த 12 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

    மதுரை விமான நிலையத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி வணக்கம் எனக்கூறி தனது உரையை தொடங்கினார்.

    அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

    மதுரையை காக்கும் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரருக்கு தலைவணங்குகிறேன், அனைவருக்கும் அருள் கிடைக்கட்டும்.

    இன்று அடிக்கல் நாட்டப்பட்ட ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களால் வேலைவாய்ப்பு, சிறந்த கட்டுமானங்கள் கிடைக்கும்.

    சந்தைகளை சென்றடையும் விவசாயிகள், சுற்றுலாப்பயணிகள் என அனைவருக்கும் உகந்த சாலைகள் கிடைக்கும்.

    புனிதமான மதுரை மண்ணிற்கு வந்ததை மிகப்பெரிய கவுரவமாக பார்க்கிறேன். 2014ம் ஆண்டு முதல் 4,000 கி.மீக்கு தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளது.

    கடந்த 12 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. தேசிய சாலைகளை மேம்படுத்துவதன் மூலம் ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைத்துறைக்கு மத்திய அரசு அதிக நிதி வழங்கி உள்ளது. தமிழ்நாட்டிற்கான சாலை திட்டங்களில் மத்திய அரசு அதிக முதலீடு செய்துள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறை பல சாதனைகளை புரிந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டதைவிட தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு 9 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் ஆட்சியில் தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.880 கோடி, பாஜக ஆட்சியில் ரூ7600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதால் 1,300 கி.மீக்கு அதிகமாக ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியா இஸ்ரேலுடன் நிற்கிறது என்று மோடி அறிவித்தார்.
    • அவ்வாறு சொன்னதற்காக ஒரு விருதையும் பெற்றுக்கொண்டார்.

    பயங்கரவாதிகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என கூறி அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது இன்று காலை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருகிறது. இதில் சாமானிய மக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    பதிலடியாக இஸ்ரேல் மீதும், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் புரட்சிகர ராணுவ படையினர் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

    ஈரான், இஸ்ரேல் மற்றும் பதற்றம் ஏற்பட்டுள்ள பிற நாடுகளில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக இருக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், " அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் விரோதப் போக்கு மிகவும் கவலையளிக்கிறது.

    மத்திய கிழக்கு முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனின் பாதுகாப்பும் நமது மிக உயர்ந்த முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

    நமது மக்களைப் பாதுகாக்க உடனடி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், "பிரதமர் மோடி தனது இஸ்ரேல் பயணத்தைக் கொண்டாடிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீதான தங்களின் கூட்டுத் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

    கடந்த சில மாதங்களாக அவர்களின் ராணுவக் குவிப்பை வைத்துப் பார்க்கும்போது இது முற்றிலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

    இருப்பினும், பிரதமர் மோடி இஸ்ரேலுக்குச் செல்லத் தீர்மானித்தார், அங்கு அவர் மிக உயர்ந்த அளவிலான தார்மீக  கோழைத்தனத்தைக் காட்டினார்.

    இந்தியா இஸ்ரேலுடன் நிற்கிறது என்று அவர் அறிவித்தார், அவ்வாறு சொன்னதற்காக ஒரு விருதையும் பெற்றுக்கொண்டார்.

    இந்த இஸ்ரேல் பயணம் வெட்கக்கேடானது, பிரதமர் மோடியின் 'நல்ல நண்பர்கள்' இருவரால் தொடங்கப்பட்டுள்ள இந்தப் போரின் பின்னணியில் இது இன்னும் அவமானகரமானது.

    பல வாரங்களாக அதிபர் டிரம்ப், ஈரானுடன் ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.

    அவர் ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு ஒரு ராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளார்.

    இந்திய தேசிய காங்கிரஸ் இந்தத் தாக்குதலைக் கண்டிக்கிறது மற்றும் மோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர உதவுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

    மேற்கு ஆசிய பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் மில்லியன் கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்த மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார்.  

    பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கடந்த பிப்ரவரி 25 இல் இஸ்ரேல் சென்று திரும்பிய 48 மணிநேரத்தில் இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீதான தாக்குதலை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

    • சிறுவயது மாணவர்களுக்கு இத்தகைய உணர்வுப்பூர்வமான விஷயங்களைக் கற்பிப்பது முறையானது அல்ல
    • மத்திய அரசு இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது.

    8ஆம் வகுப்பு (CBSE) சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் "நீதித்துறையின் பங்கு" என்ற பாடத்தில், நீதித்துறையில் நிலவும் ஊழல் குறித்த ஒரு புதிய பகுதி சமீபத்தில் சேர்க்கப்பட்டது. இது குறித்து தற்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து விசாரித்தது.

    நீதித்துறையை இழிவுபடுத்தும் எத்தகைய செயலையும் அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் எச்சரித்ததைத் தொடர்ந்து, அந்தப் பாடப்பகுதியை நீக்க மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அந்தப் புத்தகங்கள் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. மேலும் இன்று மத்திய அரசு இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது.

    இந்நிலையில் செவ்வாய்க்கிழமையன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பாக பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. "நீதித்துறை ஊழல் பற்றி 8 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு நாம் என்ன கற்பிக்கிறோம்?" என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இவ்வளவு சிறிய வயது மாணவர்களுக்கு இத்தகைய உணர்வுப்பூர்வமான விஷயங்களைக் கற்பிப்பது முறையானது அல்ல என்பதையும் அவர் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.

    மேலும் இந்தத் தவறுக்குக் காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 


    • கிட்டத்தட்ட ஒன்பது தசாப்தங்களாக நீதி மற்றும் கண்ணியத்திற்காக உறுதியுடன் நின்றார்.
    • அனைத்து தரப்பு மக்களுக்கும் குரல்கொடுத்த அவருடைய முயற்சிகளுக்காக எப்போதும் நினைவு கூரப்படுவார்.

    இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், தியாகச் செம்மல் தோழர் நல்லக்கண்ணு, வயதுமுதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவுகளுக்கு சிகிச்சைப் பெற்றுவந்தநிலையில் இன்று காலமானார். இவரது மறைவு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள், கட்சியினர் என அனைத்து தரப்பு மக்களும் தங்கள் இரங்கல்களை பதிவுசெய்து வருகின்றனர்.

    கட்சியின் தலைமை அலுவகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 

    இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நல்லக்கண்ணுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி,

    "அடிதட்டு மக்கள், தொண்டர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் குரல்கொடுத்த அவருடைய முயற்சிகளுக்காக எப்போதும் நல்லகண்ணு அவர்கள் நினைவு கூரப்படுவார். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களாலும் மதிக்கப்பட்டவர். அதேபோல், அவரது எளிமை மிகவும் குறிப்பிடத்தக்கது. எனது ஆறுதல்கள் எப்போதும் அவரது குடும்பத்தினருடனும், தொண்டர்களுடனும் இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    ராகுல் காந்தி, 

    "தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் வாழ்க்கை நேர்மை, எளிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவரது இந்த வாழ்க்கை ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கானது. 

    கிட்டத்தட்ட ஒன்பது தசாப்தங்களாக (90 ஆண்டுகள்), அவர் நீதி மற்றும் கண்ணியத்திற்காக உறுதியுடன் நின்றார். அவருடைய குடும்பத்தினருக்கும், சகாக்களுக்கும் மற்றும் எண்ணற்ற தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார். 


    • காசாவில் பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இரக்கமற்ற வகையில் இன்னும் தொடர்கின்றன.
    • மோடியின் உரையைப் புறக்கணிக்க இஸ்ரேல் எதிர்க்கட்சி முடிவெடுத்துள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் அழைப்பை ஏற்று, நாளை (பிப்ரவரி 25) முதல் 26 வரை இரண்டு நாள் பயணமாக இஸ்ரேலுக்கு செல்லவுள்ளார்.

    இந்நிலையில் மோடி அரசு பாலஸ்தீன மக்களைக் கைவிட்டுவிட்டதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

    காங்கிரஸ் எம்.பி மற்றும் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், "ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் வெளியேற்றி கட்டாய இடம்பெயர்வு செய்வது தீவிரமடைந்துள்ளது. இது உலகளவில் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

    காசாவில் பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இரக்கமற்ற வகையில் இன்னும் தொடர்கின்றன.

    இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை திட்டமிட்டுள்ளன.

    ஆயினும்கூட, பிரதமர் நாளை இஸ்ரேலுக்குச் செல்கிறார். இதில் அதானி தொடர்பும் உள்ளது. அங்கு, கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அவரது உற்ற நண்பர் நேதன்யாகுவை சந்திக்க உள்ளார்.

    இஸ்ரேலில் நீதித்துறையின் சுதந்திரத்தை நேதன்யாகு எவ்வாறு அழித்து வருகிறார் என்பதை எதிர்த்து இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடியின் உரையைப் புறக்கணிக்க இஸ்ரேல் எதிர்க்கட்சி முடிவெடுத்துள்ளது.

    பாலஸ்தீனியர்களின் நலன் குறித்து மோடி அரசாங்கம் இழிவான வகையில் பாசாங்குத்தனமான அறிக்கைகளை வெளியிடுகிறது.

    உண்மை என்னவென்றால், மோடி அரசாங்கம் அவர்களைக் கைவிட்டுவிட்டது. நவம்பர் 18, 1988 அன்று பாலஸ்தீனத்தை அங்கீகரித்த ஆரம்பகால நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை மோடி அரசு மறந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார். 

    காசாவின் மேற்கு கரையை முழுவதும் ஆக்கிரமிக்க அண்மையில் இஸ்ரேல் அமைச்சகம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. 

    • இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டார்.
    • அந்த ரகசிய ஒப்பந்தமே நாட்டிற்குப் பெரிய அவமானம்.

    டெல்லி பாரத் மண்டபத்தில் கடந்த 16 முதல் 20 ஆம் தேதி வரை ஏஐ தாக்க உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் உலக தொழில்நுட்ப மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் 20 ஆம் தேதியன்று காங்கிரஸ் இளைஞரணியினர் நுழைந்து தங்கள் மேலாடையை கழற்றி, இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்கள் அங்கிருந்து வெளியேயற்றப்பட்டு கைது செய்யப்பட்டனர். இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் இன்று கைது செய்யப்பட்டார். 

    நேற்று முன் தினம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்வொன்றில் பேசிய பிரதமர் மோடி, இந்த சம்பவம் காங்கிரசின் தரம் தாழ்ந்த அரசியல் என்றும், அவர்களின் நிர்வாணம் ஏற்கனவே மக்களுக்கு தெரியும் என்பதால் அதை அவர்கள் காட்ட தேவையில்லை என்றும் விமர்சித்திருந்தார்.

    இந்நிலையில் நிர்வாண அரசியல் என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

    அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "நரேந்திர மோடி அவர்களே, அஹிம்சை வழியிலான அமைதிப் போராட்டம் ஜனநாயகத்தின் அடிப்படை. எங்கள் தொண்டர்கள் சட்டையைக் கழற்றிப் போராடுவது வெட்கக்கேடு என நீங்கள் கூறுகிறீர்கள்.

    ஆனால், பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் உங்கள் பெயர், உங்கள் நண்பரின் பெயர் மற்றும் உங்கள் மத்திய அமைச்சரின் பெயர் இடம்பெற்றிருப்பதை விட வெட்கக்கேடானது வேறு எதுவும் இருக்க முடியுமா?.

    அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் மூலம் நீங்கள் நாட்டை விற்றுவிட்டீர்கள். அந்த ரகசிய ஒப்பந்தமே நாட்டிற்குப் பெரிய அவமானம்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும், ஜனநாயகத்தில் போராடும் உரிமையை அவமதிக்க வேண்டாம், காந்தி மற்றும் பகத் சிங் காட்டிய போராட்ட வழியையே தொண்டர்கள் பின்பற்றுவதாகவும், இதற்காக இளைஞர் காங்கிரஸ் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களை அரசு துன்புறுத்துவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார்.

    சிறுமிகள் மற்றும் பெண்களை கடத்தி செல்வந்தர்களுக்கு போகப்பொருளாக்கும் உலகளாவிய பாலியல் நெட்வொர்க்கை நடத்தி வந்த மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன், சேமித்து வைத்திருந்த ஆவணங்களின் ஒரு பகுதி அண்மையில் வெளியாகி இருந்தன.

    இதில் பிரதமர் மோடி 2017 இல் இஸ்ரேல் பயணம் மேற்கொண்டபோது அமெரிக்க அதிபருக்கு தேவையானதை செய்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    அதேபோல மத்திய அமைச்சர் ஹர்திக் சிங் புரி மற்றும் தொழிலதிபர் அனில் அம்பானி ஆகியோர் எப்ஸ்டீன் உடன் நடத்திய உரையாடல்களும் வெளியான கோப்புகளில் இடம்பெற்றிருந்தன.

    தான் எப்ஸ்டீனை அரசுப் பிரதிநிதிகளுடன் பணி நிமித்தமாக 3-4 முறை மட்டுமே சந்தித்தாக ஹர்திக் சிங் புரி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்ததும் குறிப்பிடத்தக்கது. 

    • மும்பையில் தரையிறங்கும் அவர், அங்கு இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களை சந்திப்பார்.
    • மார்க் கார்னி பிரதமராக இந்தியா வரும் முதல் பயணம் இது.

    கனடா பிரதமர் மார்க் கார்னி பிப்ரவரி 26 முதல் மார்ச் 7 வரை இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    முதற்கட்டமாக பிப்ரவரி 26 அன்று அவர் இந்தியா வருகை தர உள்ளார். அன்றைய தினம் முதலில் மும்பையில் தரையிறங்கும் அவர், அங்கு இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களைச் சந்தித்து முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்துவார்.

    அங்கிருந்து டெல்லி செல்லும் அவர், பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    மார்க் கார்னி பிரதமராக இந்தியா வரும் முதல் பயணம் இது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சமீபகாலமாக நிலவிய கசப்பான சூழலைச் சரிசெய்து, உறவை மீண்டும் வலுப்படுத்துவதே இந்த வருகையின் முக்கிய நோக்கமாகும்.

    பொருளாதார உறவு, எரிசக்தி மற்றும் யுரேனியம் விநியோகம், செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்பு பற்றி அவர்கள் விவாதிப்பார்கள் என கூறப்படுகிறது.

    இந்தியப் பயணத்திற்குப் பிறகு, மார்க் கார்னி ஆஸ்திரேலியா சென்று அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பனீஸைச் சந்திக்கவுள்ளார்.  

    • இரண்டு உலகத் தலைவர்களுக்கு இடையிலான சக்திவாய்ந்த கூட்டணி
    • இது பிரதமர் மோடியின் இரண்டாவது இஸ்ரேல் பயணம் ஆகும்.

    பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் அழைப்பை ஏற்று, பிப்ரவரி 25 முதல் 26 வரை இரண்டு நாள் பயணமாக இஸ்ரேலுக்கு செல்லவுள்ளார்.

    இந்நிலையில் இந்த பயணம் குறித்து இரு தலைவர்களும் எக்ஸ் தளத்தில் இன்று தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

    பிரதமர் மோடியின் வருகையை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணம் என்றும், இந்தியா-இஸ்ரேல் உறவை இரண்டு உலகத் தலைவர்களுக்கு இடையிலான சக்திவாய்ந்த கூட்டணி என்றும் நேதன்யாகு தனது பதிவில் வர்ணித்துள்ளார்.

    பிரதமர் மோடி தனது பதிவில், "   நன்றி, நண்பர், பிரதமர் நேதன்யாகு. இந்தியா-இஸ்ரேல் இடையிலான பிணைப்பு, நம்பிக்கை, புத்தாக்கம் மற்றும் அமைதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

    இந்த நீண்டகால நட்பை இந்தியா மிகவும் மதிக்கிறது. வரவிருக்கும் சந்திப்பின் போது நமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த விவாதங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஜெருசலேமில் உங்களைப் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

    இது பிரதமர் மோடியின் இரண்டாவது இஸ்ரேல் பயணம் ஆகும். இதற்கு முன்பு ஜூலை 2017-ல் அவர் இஸ்ரேலுக்குச் சென்றார். இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமர் மோடியே ஆவார்.

    உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் மறைந்த பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் உடைய வெளியான கோப்புகளில், பிரதமர் மோடியின் 2017 இஸ்ரேல் பயணம் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.   

    • இந்தியாவின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் காங்கிரஸ் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறது.
    • போராட்டத்தைக் கண்டித்து உண்மையை ஆதரித்து நின்றதற்காக இந்தியா கூட்டணி காட்சிகளுக்கு நன்றி.

    டெல்லியில் கடந்த 16 முதல் 20 ஆம் தேதி வரை பாரத் மண்டபத்தில் வைத்து ஏஐ தாக்க உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் உலக அரசியல் மற்றும் தொழில்நுட்ப தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

    கடந்த 20 ஆம் தேதி மாநாட்டு அரங்கிற்குள் இளைஞர் காங்கிரசார் சிலர் புகுந்து தங்கள் மேலாடைகளை கழற்றி அமெரிக்க - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த ஹாலுக்குள் புகுந்த நான்கு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், திடீரென தங்கள் சட்டைகளைக் கழற்றி எறிந்துவிட்டு, பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்களை காட்டி கோஷமிட்டனர்.

    பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, அவர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் இது நாட்டின் இளைஞர்களின் அதிருப்தியின் வெளிப்பாடு என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.

    இந்நிலையில் நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் நமோ பாரத் ரயில் மற்றும் மீரட் மெட்ரோ ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி உரையாற்றியபோது இந்த சம்பவத்தை கண்டித்தார்.

    அவர் கூறியதாவது, "டெல்லியில் நடந்த சர்வதேச ஏஐ மாநாட்டை காங்கிரஸ் தனது தரம் தாழ்ந்த மற்றும் நிர்வாண அரசியலுக்கு ஒரு களமாகப் பயன்படுத்தியுள்ளது.

    வெளிநாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் சட்டையை கழற்றிப் போராட்டம் நடத்தியதன் மூலம் காங்கிரஸ்  கொள்கை ரீதியான திவாலானது உறுதி ஆகி உள்ளது.

    வளர்ந்த நாடாக மாறுவதற்கு இந்தியா கடுமையாக உழைத்து வரும் வேளையில், இந்தியாவின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் காங்கிரஸ் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறது.

    இது தனிப்பட்ட முறையில் எனக்கு எதிரான போராட்டம் அல்ல, மாறாக நாட்டின் கௌரவத்திற்கு எதிரானது

    காங்கிரஸ் தலைவர்களே, உங்கள் நிர்வாணத்தை நாடு ஏற்கனவே நன்கு அறியும். இப்போது மீண்டும் சட்டையைக் கழற்றி அதை நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன?" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், காங்கிரஸின் இத்தகைய அநாகரீகமான போராட்டத்தைக் கண்டித்து உண்மையை ஆதரித்து நின்றதற்காக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், திமுக, மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்டவற்றுக்கு நன்றி என்றும் மோடி குறிப்பிட்டார்.  

    • அமெரிக்காவுக்கு பெரும் சலுகைகளை வாரி வழங்கும் ஒரு வர்த்தக ஒப்பந்த பொறியில் விழ அவசரப்பட்டது ஏன்?
    • பல அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு பூஜ்ஜிய வரிகள்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகார வரம்பை மீறி பல்வேரு நாடுகள் மீது விதித்தவரிகள் செல்லாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பளித்தது. இதனால் இந்தியா - அமெரிக்கா இடையே அண்மையில் ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தம் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

    இந்நிலையில் அவசர கதியில் அமெரிக்காவுடன் இந்தியா ஏன் ஒப்பந்தம் செய்தது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திறனற்ற வெளியுறவு கொள்கையா அல்லது சரணடைதலா? மோடி அரசு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் வரிகள் தொடர்பான தீர்ப்புக்காக காத்திருக்காமல், அமெரிக்காவுக்கு பெரும் சலுகைகளை வாரி வழங்கும் ஒரு வர்த்தக ஒப்பந்த பொறியில் விழ அவசரப்பட்டது ஏன்?

    இந்தியாவிற்கான பல அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு பூஜ்ஜிய வரிகள், கிட்டத்தட்ட அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவின் விவசாயத்தைத் திறந்து விடுதல், 500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்யும் திட்டம், நமது எரிசக்தி பாதுகாப்பைப் பாதிக்கும் ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கான உறுதிப்பாடு மற்றும் டிஜிட்டல் துறையில் பல வரிச் சலுகைகள் பற்றி அமெரிக்க - இந்திய வர்த்த ஒப்பந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மோடி ஜி இந்தியர்கள் முன் நின்று உண்மையைச் சொல்ல வேண்டும். இந்தியாவின் தேசிய நலன் மற்றும் சுயாட்சியை சமரசம் செய்ய உங்களுக்கு என்ன அல்லது யார் அழுத்தம் கொடுத்தார்கள்? அது எப்ஸ்டீன் கோப்புகளா?

    மத்திய அரசு, அதன் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து 140 கோடி இந்தியர்களின் சுயமரியாதையையும் நமது விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகங்கள் மற்றும் வர்த்தகர்களின் நலனையும் பாதுகாக்கும் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தை வழங்குமா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.    

    • கடும் குளிரிலும், பாலைவனத்தின் கடும் வெப்பத்திலும் தடையின்றி இயங்கும் திறன் இதற்கு உண்டு.
    • H125 சிவில் ஹெலிகாப்டருடன் சேர்த்து, இதன் ராணுவ வடிவமான H125M ரகமும் இங்குத் தயாரிக்கப்படும்.

    டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மூன்று நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார்.

    முதற்கட்டமாக மும்பை வந்திறங்கிய மேக்ரானை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். மும்பையில் உள்ள லோக் பவனில் மோடியும், மேக்ரானும் இருநாட்டு உறவு குறித்து விவாதித்தனர்.

    முன்னதாக, கர்நாடகாவின் வேமகலில், டாடா நிறுவனம், ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் H125 ஹெலிகாப்டர்களை தயாரிப்பதற்கான அசெம்பிளி லைனை மோடியும், மேக்ரானும் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தனர்.

    இந்த நிகழ்வில் பேசிய மோடி, இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான உறவுகள் சிறப்பு வாய்ந்தவை. உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி வரை பறக்கும் திறன் கொண்ட உலகின் ஒரே ஹெலிகாப்டரை இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து இந்தியாவில் தயாரிக்கவுள்ளன என்பதை நாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்" என்றார்.

    H125 ஹெலிகாப்டர்:

    நேற்று தொடங்கப்பட்ட ஆலையின் அசெம்பிளி லைனில் தயாரிக்கப்பட்ட முதல் ஹெலிகாப்டர் 2027 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆரம்பத்தில் ஆண்டுக்கு 10 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும், இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 500 ஹெலிகாப்டர்களைத் தயாரிப்பதே இலக்காகும்.

    H125 ஹெலிகாப்டர், ஒரு விமானி மற்றும் 6 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.

    இது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் பறக்கும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் சுமார் 662 கி.மீ பயணிக்க முடியும்.

    இமயமலையின் கடும் குளிரிலும், ராஜஸ்தான் பாலைவனத்தின் கடும் வெப்பத்திலும் தடையின்றி இயங்கும் திறன் இதற்கு உண்டு.

    மீட்புப் பணிகள், மருத்துவ அவசரநிலைகள், தீயணைப்பு மற்றும் சுற்றுலா எனப் பல்வேறு துறைகளில் இது பயன்படுத்தப்படும்.

    H125 சிவில் ஹெலிகாப்டருடன் சேர்த்து, இதன் ராணுவ வடிவமான H125M ரகமும் இங்குத் தயாரிக்கப்படும்.

    H125M ரக ஹெலிகாட்பரில் ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிகளைப் பொருத்த முடியும்.

    எதிரிகளின் ரேடார் கண்களில் சிக்காமல் இருக்க, தரையோடு தரையாக மிகத் தாழ்வாகப் பறக்கும் திறன் கொண்டது.

    இந்திய எல்லைகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    தற்போது பிரான்ஸ், பிரேசில், கத்தார், இந்தோனேசியா உட்பட சுமார் 35க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவத்தில் 400க்கும் மேற்பட்ட H125 ரக ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன.

    • மாநாட்டில் உள்ள கண்காட்சியையும் மோடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
    • அதிபர் மேக்ரான், சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

    டெல்லி பாரத் மண்டபத்தில் ஐந்து நாள் சர்வதேச செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாடு இன்று தொடங்கியது. அனைவரின் நலன், அனைவரின் மகிழ்ச்சி என்பது இந்த மாநாட்டின் கருப்பொருள் ஆகும்.

    சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்அப் நிறுவனங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இதில் பங்கேற்கும்.

    விழாவை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைத்தார். மாநாட்டில் உள்ள கண்காட்சியையும் மோடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    கண்காட்சியில் ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்பட 10க்கும் மேற்பட்ட வெளிநாடுகளின் அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. இதில் ஏஐ குறித்த நேரடி செயல் விளக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த கண்காட்சி மற்றும் உச்சி மாநாட்டிற்காக 70 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 10 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த கண்காட்சியில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.

    இந்த மாநாட்டில் வரும் 19ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் உள்பட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்கின்றனர்.   

    ×