search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Himachal Pradesh"

    • பாஜகவுக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆறு பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள்
    • இமாச்சல பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து ஜூன் 1-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது

    இமாச்சலப் பிரதேசத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேருக்கும் வரும் இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.

    அண்மையில் இமாச்சல பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் 6 பேர் கட்சி மாறி வாக்களித்ததால் குறைந்த எம்எல்ஏக்களை (25) கொண்ட பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

    இதனால், பாஜகவுக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆறு பேர் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என சபாநாயகர் அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

    சுதிர் ஷர்மா, இந்தர் தத் லக்ஷன்பால், ரவி தாக்கூர், சேதன்யா ஷர்மா ராஜிந்தர் ராணா, தேவிந்தர் குமார் புட்டோ ஆகிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 6 பேர் சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தனர். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வரும் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஜெய்ராம் தாக்கூர் ஆகியோர் முன்னிலையில் 6 பேரும் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

    இமாச்சல பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து ஜூன் 1-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

    இதனிடையே, பாஜகவை ஆதரிப்பதாக கூறி, சுயேட்சை எம்எல்ஏக்கள் ஹோஷியார் சிங், ஆஷிஷ் ஷர்மா, கே.எல். தாக்கூர் ஆகிய மூவரும் ஷிம்லாவில் சட்டப்பேரவை செயலாளர் யஷ்பால் ஷர்மாவை சந்தித்து, ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தனர்.

    இதனால் 9 சட்டப்பேரவை உறுப்பினர்களின் இடங்கள் காலியாக உள்ளது. இதனால் சட்டப்பேரவையின் பலம் தற்போது 68-ல் இருந்து 59 ஆக குறைந்துள்ளது. இதில், ஆளும் காங்கிரஸ் கட்சி சபாநாயகர் உள்பட 34 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளது. பாஜக, 25 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளது. எனவே, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • 111 வேட்பாளர்கள் அடங்கிய 5ம் கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
    • வயநாடு தொகுதியில் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன் போட்டியிடுகிறார்.

    மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் 5ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    111 வேட்பாளர்கள் அடங்கிய 5ம் கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

    இதில், இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து, இன்று பாஜகவில் இணைந்த நவீன் ஜிண்டால் அரியானா குருஷேத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன் போட்டியிடுகிறார். இவர், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராகுல் காந்தியை எதிர்கொள்கிறார்.

    ஒடிசா சம்பல்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் போட்டியிடுகிறார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் மேனகா காந்தி போட்டியிடுகிறார்.

    ஜார்கண்ட் மாநிலம் தும்கா தொகுதியில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அண்ணி சீதா சோரன் போட்டியிடுகிறார்.

    ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராம ராவின் மகளும், அம்மாநில பாஜக தலைவருமான புரந்தேஷ்வரி, ஆந்திராவின் ராஜாமுந்திரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    • 68 இடங்களை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 35 எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு தேவை
    • இமாச்சல பிரதேசத்தில் காலியாகவுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மே 7ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

    அண்மையில் இமாச்சல பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் அனைவரும் வாக்களித்திருந்தால் அக்கட்சியின் வேட்பாளர் அபிஷேக் சிங்வி எளிதாக வெற்றி பெற்றிருப்பார்.

    ஆனால், ஆறு எம்.எல்.ஏ.-க்கள் மாறி வாக்களித்ததால் குறைந்த எம்.எல்.ஏ.-க்களை (25) கொண்ட பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றார். அதனால் பா.ஜனதாவுக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆறு பேர் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

    அம்மாநிலத்தில் காலியாகவுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மே 7ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

    68 இடங்களை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 35 எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு தேவை. காங்கிரஸ் கட்சியிலிருந்து ஆறு எம்.எல்.ஏ.-க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் காங்கிரஸ் பலம் 34 ஆக குறைந்து பெரும்பான்மையை இழந்துள்ளது. பாஜகவில் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

    இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் பாஜகவுக்கு ஆதரவு தருவதாக கூறி, 3 சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.

    ஆனால் சபாநாயகர் அவர்களின் ராஜினாமாவை ஏற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

    • மக்களவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.

    குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மேற்கு வங்க மாநில டிஜிபி ராஜீவ் குமாரை இடமாற்றம் செய்யும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கூடுதலாக, மிசோரம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பொது நிர்வாகத் துறையின் செயலாளர்களும் தங்கள் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் ஏற்கனவே 3 ஆண்டுகள் பணிபுரிந்த மாவட்டங்கள் மற்றும் சொந்த மாவட்டங்களில் இருந்து இடமாற்றம் செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    மக்களவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

    • மகளிருக்கு மாதம் ₹1,500 வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சுகு அறிவித்துள்ளார்.
    • டெல்லியில் 18 வயது நிரம்பிய பெண்கள் அனைவருக்கும் மாதம் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது

    இமாச்சலப் பிரதேசத்தில் 18 முதல் 60 வயதுடைய மகளிருக்கு மாதம் ₹1,500 வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சுகு அறிவித்துள்ளார்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 10 வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திரா காந்தி பியாரி பெஹ்னா சுக் சம்மன் நிதி யோஜனா என்ற இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ₹ 800 கோடி செலவிடப்படும் என்றும், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இதன் கீழ் பயனடைவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

    இன்றைய தினத்தில், டெல்லியில் 18 வயது நிரம்பிய பெண்கள் அனைவருக்கும் மாதம் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாட்டின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிற மாநிலங்களும் இதனை செயல்படுத்தி வருகின்றன

    • பண்டிகைகளில் நவராத்திரி மிகவும் சிறப்புக்குரியது.
    • ஒன்பது இரவுகள் அம்பாளை வழிபடுவதனை 'நவராத்திரி' என்கிறோம்.

    இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் நவராத்திரி மிகவும் சிறப்புக்குரியது. ஒன்பது இரவுகள் அம்பாளை வழிபடுவதனை 'நவராத்திரி' என்கிறோம். தீமையை அகற்றி நன்மையை பரவச் செய்வதை கருப்பொருளாகக் கொண்டு, இந்தியா முழுவதும் இந்த விழா கொண்டாடப்பட்டாலும், உள்ளூர் பழக்க வழக்கம் மற்றும் மரபுகளின்படி, மாநிலங்களுக்கு மாநிலம் இந்த விழா மாறுபடுகிறது.

    வட மாநிலங்களில் நவராத்திரி விழா துர்க்கை தேவிக்கு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டாலும், தென்னிந்தியாவில் சரஸ்வதி சாமுண்டி உன் ளிட்ட சில தெய்வங்களை இணைத்து கொண்டாடப்படுவது சிறப்புக்குரியது. நவராத்திரியை வெவ்வேறு விதமாக கொண்டாடும் இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள் பற்றி இங்கே...

     தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் துர்க்கை மட்டுமின்றி, சரஸ்வதி, லட்சுமி ஆகிய முப்பெரும் தேவியரின் வழிபாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கை, அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி என்று மூவருக்கும் சமமான வழிபாட்டு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. நவராத்திரியின் 10 நாட்களிலும் வீடு மற்றும் கோவில்கள், பொது இடங்களில் 'கொலு அமைப்பது என்பது விசேஷமானது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறார்கள். அதில் மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த பொருட்களையும், கலைஞர்கள் தங்களின் கலை சார்ந்த பொருட்களையும், ஒவ்வொரு உழைப்பாளர்களும் தங்கள் உழைப்பை முன்னிறுத்தும் பொருட்களையும் சரஸ்வதியின் உருவத்திற்கு முன்பாக வைத்து வணங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 10-ம் நாளில் மகிஷனை வதம் செய்த துர்க்கையின் வெற்றி தினமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

    தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் இந்த விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். மைசூர் தசராவிற்கு அடுத்தபடியாக உலகப்புகழ்பெற்ற திருவிழாவாக இந்த தசரா திருவிழா உள்ளது.

     கேரளா

    பரசுராமரால் உருவாக்கப்பட்டதாக புராணங்கள் சொல்லும் கேரள மாநிலம் 'கடவுளின் தேசம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட 108 பகவதி அம்மன் கோவில்கள் இருக்கின்றன. நவராத்திரி விழாவின் போது இந்த ௧௦௮ கோவில்களும் துர்க்கையின் ஆலயங்களாக பாவித்து, அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இந்தியாவில் கல்வி அறிவு அதிகம் பெற்ற மாநிலமாகத் திகழும் கேரளாவில், தங்களின் கல்வி சார்ந்த பொருட்கள், வீட்டு விலங்குகள், வாகனங்களை வழிபடுவதை மக்கள் விரும்புகிறார்கள்.

    நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறார்கள். அப்போது மாணவர்கள் கரும்பு அல்லது வெல்லம் போன்ற நைவேத்தியங்களுடன், தங்களின் கல்வி சார்ந்த பொருட்களை சரஸ்வதி தேவியின் உருவத்திற்கு முன்பாக வைத்து வணங்குகிறார்கள்.

     ஆந்திரா

    நவராத்திரி பண்டிகையானது 'பதுக்கம்மா பண்டிகை' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த திருமணமான பெண்கள் பலரும். இனிமையான தாம்பத்ய வாழ்க்கை அமைய அன்னை கவுரி தேவியை வழிபடும் நிகழ்வாக இது இருக்கிறது. திருமணமாகாத பெண்கள் தங்கள் மனதிற்கு பிடித்த மண வாழ்க்கை அமைய வேண்டும் என்று இந்த வழிபாட்டில் இணைகிறார்கள். இந்த பண்டிகையின் இறுதிநாள் விழாவில், ராமலீலா நிகழ்வு நடத்தப்படும். அதாவது ராவணனின் உருவ பொம்மை செய்து, அதை நெருப்பு மூட்டி எரியூட்டுவார்கள்.

    இந்த நிகழ்வில் ஆண்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அன்னை கவுரி தேவியின் வழிபாட்டிற்காக உள்ளூரில் உருவாகும் மலர்களைக் கொண்டு மலர் அடுக்குகளை உருவாக்குவார்கள். இது பன்னெடுங்காலமாக நடை பெறும் வழக்கமாகும். திருவிழாவின் இறுதிநாளில் இந்த மலர் அடுக்கானது, ஒரு ஏரி அல்லது ஆற்றில் விடப்படும்.

     குஜராத்

    நவராத்திரி விழாவானது. குஜராத் மாநிலத்தில் ஒரு தனித்துவமான முறையில் கொண்டாடப்படுகிறது. குஜராத் மக்கள், நவராத்திரியின் ஒன்பது நாட்களும், துர்க்கை மற்றும் துர்க்கையின் வெவ்வேறு ஒன்பது அவதாரங்களையும் போற்றும் வகையில் ஒன்பது நாட்கள் விரதம் மேற்கொள்கிறார்கள். நவராத்திரி நாளில் குஜராத் மக்கள் ஆடும் ஒரு வகை நடனம் பிரசித்தி பெற்றதாகும். இந்த நடனத்திற்கு "கர்பா நடனம்" என்று பெயர்.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாள் மாலை வேளையிலும் நோன்பு இருக்கும் பெண்கள், பானைக்குள் ஏற்றிவைக்கப்பட்ட மெழுகுவர்த்தி முன்பாக நின்று தங்கள் பிரார்த்தனைகளை, வேண்டுதல்களை சொல்லி வழிபடுவார்கள். "கார்போ" என்று அழைக்கப்படும் இந்த பானை, வாழ்க்கையின் மூலத்தையும் ஒளி, சக்தியையும் குறிக்கும். 'கார்போ' என்பதே மருவி 'கர்ப என்றானதாக சொல்கிறார்கள்.

    கர்பட் என்ற வார்த்தைக்கு "கருப்பை" என்றும் பொருள். பானைக்குள் உள்ள மெழுகுவர்த்தியும், அதன் ஒளியும்கருப்பையில் இருக்கும் உயிரை குறிக்கிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாள் மாலையிலும் ஆண்களும், பெண்களும், துர்க்கா தேவி சிலையை சுற்றி ஆடும் பாரம்பரிய நடனமாக கரிபா நடனம் இருக்கிறது.

     கர்நாடகா

    கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறும் தசரா உலகப் புகழ் பெற்றதாகும். இது ஒரு மாநில விழாவாகும். மைசூர் நகரின் மையத்தில் மிகவும் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் இந்த விழா கொண்டாடப்படுகிறது. கி.பி. 1610-ம் ஆண்டு முதல் அப்போதைய மன்னன் முதலாம் ராஜா உடையார் கடைப்பிடித்த சடங்குகளைப் பின்பற்றியே, இன்றளவும் இந்த மைசூர் தசரா நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் நாள் திருவிழாவான, மகாநவமி அன்று அரச வாள் ஒரு சிம்மாசனத்தில் வைத்து வணங்கப்படும்.

    அதன்பின்னர் யானைகள் மற்றும் குதிரைகள் மூலமாக அந்த வாள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். 10-ம் நாள் தசமி அன்று. யானை மேல் தங்க பல்லக்கில், சாமுண்டீஸ்வரியின் (துர்க்கையின் வடிவம்) உருவத்தை வைத்து, நடனக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் சூழ்ந்துவர பிரமாண்டமான ஊர்வலம் நடைபெறும்.

     இமாச்சலப் பிரதேசம்

    நாட்டின் பிற மாநிலங்களில் நவராத்திரி கொண்டாட்டம் முடியும் பத்தாம் நாளில், இமாச்சலப் பிரதேசத்தில் இந்த விழா தொடங்குகிறது. 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற ராமர், அயோத்தி திரும்பியதை குறிக்கும் வகையில் இந்த கொண்டாட்டம் இருக்கும். பத்தாம் நாளில் `குலு தசரா' என்ற பெயரில் இந்த நிகழ்வை நடத்துகிறார்கள். குலு பள்ளத்தாக்கில் மிகப் பிரபலமான திருவிழா இதுவாகும்.

    இந்த நாளில் குலு பள்ளத்தாக்கு முழுவதும் உள்ள தெருக்கள் வண்ண விளக்குகளால் பிரகாசமாக மின்னும். தெய்வங்களின் சிலைகளை பிரதான மைதானத்திற்கு எடுத்துச்செல்லும் பெரிய ஊர்வலம். அந்த ஊர்வலத்துடன் கலந்த மக்களின் உற்சாகம் மற்றும் ஆடல். பாடல் ஆகியவை இந்த விழாவின் சிறப்பம்சமாகும். பல்வேறு நடனம், கலாசார நிகழ்ச்சிகள் இந்த நாளை அழகாக்கும்.

    இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளூர் தெய்வமான ரகுநாதரின் சிலை, அழகாக வடிவமைக்கப்பட்டு ஒரு தேரில் வைக்கப்படும். அந்த தேரை உள்ளூர் மக்கள் கயிறுகளால் இழுத்து நகரத்தின் பல பகுதிகளிலும் வலம் வருவார்கள்.

    • எஸ்.எஃப்.டி. எனும் அமைப்பு நீண்டகாலமாக திபெத் விடுதலைக்கு போராடுகிறது
    • திபெத்திய குழுந்தைகளை பெற்றோர்களிடம் இருந்து சீனா பிரிக்கிறது

    கிழக்கு ஆசியாவின் மத்தியில் உள்ள நாடு திபெத். 1950-ல் திபெத்தை தன்னுடன் இணைத்து கொண்டு விட்டதாக சீனா அறிவித்தது. ஆனால், அப்போது முதல் அந்நாட்டின் விடுதலைக்காக ஆங்காங்கே அந்நாட்டவர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

    தற்போது இந்தியாவில் ஜி20 உறுப்பினர் நாடுகள் கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு, தலைநகர் புது டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பல உறுப்பினர் நாடுகளின் தலைவர்களும் டெல்லி வந்து இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், உலக தலைவர்களுக்கு தங்கள் விடுதலை போராட்டம் குறித்து அறிவிக்கும் விதமாக எஸ்.எஃப்.டி. எனும் சுதந்திர திபெத்திற்கான மாணவர்கள் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள தர்மசாலா நகரத்திற்கு வெளியே மெக்லியாட் காஞ்ச் எனும் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த அமைப்பின் இயக்குனர் டென்சின் பசாங்க், "எங்கள் கலாசாரத்தையும், அடையாளங்களையும் அழிக்கும் விதமாக சீனா தொடர் முயற்சிகளில் ஈடுபடுகிறது. எங்கள் கல்வி அமைப்புகளின் மீது மறைமுக தாக்குதல் நடத்தி வருகிறது. சிறிய 4-வயது குழந்தைகளை கூட பெற்றோர்களிடம் இருந்து பிரித்து சீனாவின் உறைவிடப் பள்ளிகளில் வலுக்கட்டாயமாக சேர்க்கிறது. இதனால் அக்குழந்தைகளுக்கு நாளடைவில் எங்கள் மொழி, கலாச்சாரம், வாழ்க்கைமுறை ஆகியவையுடன் அறவே தொடர்பில்லாமல் போகிறது," என்று தெரிவித்தார்.

    இதே அமைப்பின் பிரச்சார இயக்குனர் டென்சின் லெக்தென், "ஜி20 தலைவர்கள் இது குறித்து பேச வேண்டும். குறிப்பாக, காலனி ஆதிக்க மனப்பான்மையுடன் சீனாவின் பள்ளிகளில் திபெத்திய குழந்தைகள் கட்டாயமாக சேர்க்கப்படுவதையும், திபெத் முழுவதும் சீனா செய்து வரும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்தும் உலக தலைவர்கள் பேச வேண்டும்," என்று கூறினார்.

    • விலங்குகளை கொன்று இரையாக்குவது சுற்றுச்சூழலை பாதிப்பதில் தொடர்பு கொண்டிருக்கிறது.
    • நிலச்சரிவு, மேக வெடிப்பு போன்ற சம்பவங்களை நாம் மீண்டும், மீண்டும் எதிர்கொண்டு வருகிறோம்.

    இறைச்சிக்காக உயிரினங்களை கொலை செய்வதால் தான் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் மேக வெடிப்பு போன்ற இயற்கை பேரிடர் சம்பவங்கள் ஏற்படுகின்றன என்று ஐ.ஐ.டி. மண்டி இயக்குனர் லக்ஷமிதார் பெஹெரா பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    உணவுக்காக விலங்குகளை கொல்லும் போது, சுற்றுச்சூழலில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை மக்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்து உள்ளார். யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டதும் வைரல் ஆக துவங்கி விட்டது.

     

    "அப்பாவி விலங்குகளை கொன்று இரையாக்குவது சுற்றுச்சூழலை பாதிப்பதில் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. இது ஏற்கனவே தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. நிலச்சரிவு, மேக வெடிப்பு போன்ற சம்பவங்களை நாம் மீண்டும், மீண்டும் எதிர்கொண்டு வருகிறோம். இவை அனைத்திற்கும் காரணம் விலங்குகளை கொடுமைப்படுத்துவது தான்."

    "நல்ல மனிதர்களாக இருக்க என்ன செய்ய வேண்டும்? இறைச்சி போன்ற உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். ஆமாவா, இல்லையா?" என்று அவர் மாணவர்களிடையே பேசும் போது கேள்வியாக எழுப்பியுள்ளார்.

    • மாநிலத்திற்கு சுமார் 10,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    • மாநிலத்தின் பேரிடர் நிவாரண நிதிக்கு தாராளமாக பங்களிக்க வேண்டும்.

    இமாச்சலப் பிரதேசத்தில் சமீபகாலமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்தது. இதனை சமாளிக்க ராஜஸ்தான் ரூ.15 கோடி வழங்கியுள்ளதாக இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.

    சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.11 கோடி நிதியுதவி அறிவித்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "நிதி உதவி வழங்கியதற்காக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், இமாச்சல் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். பேரிடர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த உதவி பெரும் உதவியாக இருக்கும்" என்றார்.

    மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான உதவிகளை வழங்குவதற்கு பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும் மாநிலத்தின் பேரிடர் நிவாரண நிதிக்கு தாராளமாக பங்களிக்க வேண்டும் என்றும் சுகு கேட்டுக் கொண்டார்.

    இமாச்சல் பேரிழப்பில், மாநிலத்திற்கு சுமார் 10,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இமாசலில் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய்மழை கொட்டி வருகிறது.
    • இமாச்சல் முழுவதையும் இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    சிம்லா:

    தென்மேற்கு பருவமழையால் இமாச்சல பிரதேசம் அதிகபட்ச மழைப்பொழிவை பெற்றுள்ளது. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு மோசமான பாதிப்புகளையும் எதிர்கொண்டு உள்ளது.

    அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய்மழை கொட்டி வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் இயல்பைவிட 157 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது.

    மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் அழிந்துள்ளது. அத்துடன் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இமாச்சல பிரதேசம் முழுவதையும் இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தொடர்ந்து மீட்பு பணிகள், தேடுதல் வேட்டை மற்றும் நிவாரண உதவிகள் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன.
    • முன்னதாக கனமழை காரணமாக இரண்டு தனித்தனி சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்தனர்.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏழு பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் அதிவிரைவாக மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அம்மாநில முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

    "மண்டி மாவட்டத்தின் சம்பல், பன்டோ பகுதிகளில் எடுக்கப்பட்ட வீடியோ. இந்த பகுதிகளில் இதுவரை ஏழு பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள், தேடுதல் வேட்டை மற்றும் நிவாரண உதவிகள் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன," என்று முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுக்கு டுவீட் செய்துள்ளார்.

    முன்னதாக கனமழை காரணமாக இரண்டு தனித்தனி சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்தனர். நேற்றிரிவு ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக ஏழு பேரும், சிவன் கோவில் அருகே நடைபெற்ற நிலச்சரிவில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருக்கிறார்.

    • சிம்லாவில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடந்தது.
    • கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.

    மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜனதாவுக்கு 25 இடங்கள் கிடைத்தன.

    இமாச்சல முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுகு கடந்த மாதம் 11ம் தேதி பதவியேற்றார். அவருடன் முகேஷ் அக்னி கோத்ரி துணை முதலமைச்சராக பதவியேற்றார்.

    இந்தநிலையில் இமாச்சல பிரதேச அமைச்சரவை இன்று விஸ்தரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.

    அதன்படி சிம்லாவில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடந்தது. 7 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    3 முறை எம்.எல்.ஏ.வான தானிராம் சண்டில், ஹர்ஷ்வர்தன் சவுகான், முன்னாள் துணை சபாநாயகர் ஜகத்சிங் நெகி ரோகித் தாகூர், விக்ரமாதித்யசிங் 3 முறை எம்.எல்.ஏ.வான அணிருதா சிங் சந்தர் குமார் ஆகிய 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    இதில் விக்ரமாத்திய சிங் முன்னாள் முதலமைச்சர் வீர்பத்ரசிங்கின் மகன் ஆவார். இதன் மூலம் இமாச்சலபிரதேச அமைச்சரவை எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

    முதலமைச்சருடன் சேர்த்து 12 பேர் அமைச்சராகலாம். இதனால் 3 பேர் இன்னும் அமைச்சரவையில் இடம் பெறலாம்.

    ×