search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Police"

    • டெல்லியில் பதுங்கி இருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதியை டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர்.
    • குடியரசு தினம் நெருங்கி வரும் நிலையில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி சிக்கியதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாவித் மட்டூ. ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ள அவர் காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத செயல்களை நடத்தியுள்ளார். அவரை பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர்.

    இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் ஜாவித் மட்டூ பதுங்கி இருப்பதாக டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இந்நிலையில், டெல்லியில் பதுங்கி இருந்த ஜாவித் மட்டூவை டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர். விசாரணையில், அவர் தேசிய புலனாய்வு அமைப்பினரால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி என்பதும் தெரிய வந்தது.

    குடியரசு தினம் நெருங்கி வரும் நிலையில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி சிக்கியதால் தலைநகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    • டிசம்பர் 13 சம்பவம் பெரும் பாதுகாப்பு குறைபாடாக விமர்சிக்கப்பட்டு வருகிறது
    • தேச பாதுகாப்பிற்கான பல முக்கிய அலுவல் கட்டிடங்களை சிஐஎஸ்எஃப் காத்து வருகிறது

    கடந்த டிசம்பர் 13 அன்று மக்களவைக்கு உள்ளே இருவர், பார்வையாளர்கள் அரங்கில் இருந்து அவை மையப்பகுதியில் குதித்து, கோஷங்களை எழுப்பியவாறு, தங்கள் காலணிகளில் மறைத்து வைத்திருந்த வர்ண புகை எழுப்பும் குப்பிகளை வீசி வெடிக்க செய்தனர்.

    அவைக்கு வெளியேயும் இருவர் (1 ஆண், 1 பெண்) இதே போன்று கோஷங்களை எழுப்பி, புகை குப்பிகளை வீசினர்.

    நால்வரையும் கைது செய்த டெல்லி காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

    மத்திய அரசிற்கு பெரும் தலைக்குனிவாகவும், பெரும் பாதுகாப்பு குறைபாடாகவும் கருதப்பட்ட இந்த சம்பவம் அரசியல் கட்சி தலைவர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

    மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து விசாரித்து வந்த நிலையில், பாராளுமன்றத்தின் ஒட்டு மொத்த பாதுகாப்பு பொறுப்பை இனி டெல்லி காவல்துறையிடமிருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் சிஐஎஸ்எஃப் பல மத்திய அரசாங்கங்களின் அலுவலகங்கள், அணு சக்தி மைய வளாகங்கள், விண்வெளி தளங்கள், சிவில் விமான தளங்கள், டெல்லி மெட்ரோ உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது.

    தற்போது உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பாராளுமன்ற பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஒரு ஆய்வை சிஐஎஸ்எஃப் நடத்தி வருகிறது.

    விரைவில் முழு பாதுகாப்பு பொறுப்பும் சிஐஎஸ்எஃப் வசம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. இதன் பாதுகாப்பு வளையத்தில் புதிய மற்றும் பழைய பாராளுமன்ற கட்டிங்களின் மொத்த இடங்களும் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இது குறித்த இறுதி முடிவு வரும் நாட்களில் எடுக்கப்படும்.

    • ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
    • குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் டெல்லிக்கு அழைத்து வரப்படுவதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவராக பதவி வகித்தவர் சுக்தேவ் சிங் கோகமெடி.

    கடந்த 5-ம் தேதி சுக்தேவ் சிங் ஜெய்ப்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் 3 பேர் அவரது வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் சுக்தேவ் சிங் கோகமெடியும், அவருடன் இருந்த நவீன் சிங் ஷெகாவத் என்பவரும் பலியாகினர்.

    துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இச்சம்பவம் அங்கு ராஜபுத்திர சமூகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    சுக்தேவ் சிங் கோகமெடியின் கொலையைக் கண்டித்து ராஜஸ்தான் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் போராட்டம் நடந்தது.

    போராட்டக்காரர்கள் சாலைகளில் திரண்டு டயர்களை எரித்தும், கோஷங்களை எழுப்பியும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்தப் போராட்டத்தால் ராஜஸ்தானில் பதற்றம் நிலவியது.

    இதையடுத்து, சுக்தேவ் சிங் கொலையில் தொடர்புடைய நபர்களை தேடிவந்தனர்.

    இந்நிலையில் சுக்தேவ் சிங் கோகமெடியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரை போலீசார் சண்டிகரில் கைது செய்தனர்.

    ராஜஸ்தான் போலீசாரின் கூட்டு நடவடிக்கை காரணமாக ரோகித் ரத்தோர், நிதின் பவுஜி உள்பட 3 குற்றவாளிகளை சண்டிகரில் இருந்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, டெல்லிக்கு அழைத்து வரப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • வீடியோ வெளியிட்டு டெல்லி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • வேகமாக சென்ற பைக்கில் வாலிபர் சாகசம் செய்த போது திடீரென நிலைதடுமாறி பின்னால் இருந்த பெண் கீழே விழுகிறார்.

    பைக்கில் சாகசம் செய்வது இளைஞர்களுக்கு பிடித்த விஷயமாகி போனாலும், சில நேரங்களில் அது ஆபத்தாகவும் முடிந்துவிடும். எனவே தான் போலீசார் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், டெல்லி போலீசார் தங்களது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

    அந்த வீடியோவில், ஒரு காதல் ஜோடி பைக்கில் சாகசம் செய்த காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தின. பைக்கில் வேகமாக செல்லும் இளைஞரை பின்னால் இருக்கும் அவரது காதலி கட்டிப்பிடித்து கொண்டிருக்கிறார். அப்போது வேகமாக சென்ற பைக்கில் வாலிபர் சாகசம் செய்த போது திடீரென நிலைதடுமாறி பின்னால் இருந்த பெண் கீழே விழுகிறார். இருவருமே ஹெல்மெட் அணியவில்லை. இந்த காட்சிகள் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட வீடியோவை வைத்து போலீசார் அந்த ஜோடியை அடையாளம் கண்டனர். பின்னர் அவர்கள் மூலமாகவே விழிப்புணர்வு வீடியோவையும் வெளியிட்டனர். அதில், நாங்கள் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்துக்கு உள்ளானோம். எனவே பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள் என அவர்கள் கூறுகின்றனர். இந்த வீடியோவும் வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் டெல்லி போலீசாரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • வீராங்கனைகள் ஹரித்துவார் கங்கை நதியில் தங்கள் பதக்கங்களை வீச முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • மத்திய அரசுக்கு விவசாய சங்கத்தினர் 5 நாட்கள் அவகாசம் அளித்துள்ளனர்.

    புதுடெல்லி :

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் கூறியுள்ள மல்யுத்த வீராங்கனைகள், அவரை கைது செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற அவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். நேற்று முன்தினம் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் ஹரித்துவார் கங்கை நதியில் தங்கள் பதக்கங்களை வீச முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் அவர்களைத் தடுத்து, சமாதானப்படுத்தினார். அதையடுத்து வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவை தற்காலிகமாக கைவிட்டு திரும்பிச் சென்றனர். இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதற்கு மத்திய அரசுக்கு விவசாய சங்கத்தினர் 5 நாட்கள் அவகாசம் அளித்துள்ளனர்.

    இந்நிலையில், மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனை கைது செய்வதற்கு அவருக்கு எதிராக போதுமான சான்றுகளை கண்டுபிடிக்கவில்லை டெல்லி போலீஸ் கூறியதாக தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக டெல்லி போலீசார் நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், 'மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 2 வழக்குகளில் போதுமான சான்றுகளை கண்டுபிடிக்கவில்லை என போலீஸ் கூறியதாக சில டி.வி. சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போலீஸ் அவ்வாறு தெரிவித்ததாக வெளியான செய்தி தவறு. உணர்வுபூர்மான இந்த வழக்கில், மிகுந்த உணர்வோடு விசாரணை நடைபெற்றுவருகிறது' என்று விளக்கம் அளித்துள்ளது.

    இந்நிலையில் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர், 'டெல்லி போலீஸ் தனது விசாரணையை முடிக்கும்வரை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் காத்திருக்க வேண்டும். மல்யுத்தத்தையும், மல்யுத்த வீரர்களாக விரும்புவோரையும் பாதிக்கும் எந்த நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடக்கூடாது' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 'நாங்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஆதரவாகத்தான் உள்ளோம்' என்றும் அவர் கூறியுள்ளார்.

    • ஒரு நபர் துப்பாக்கியுடன் வந்து, சாலையில் வந்துகொண்டிருந்த பைக்கை நிறுத்தி ஏற முயற்சி செய்தார்.
    • கான்ஸ்டபிள் மனோஜ் பாய்ந்து சென்று அந்த நபரை பிடித்து தரையில் தள்ளினார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் சினிமா பாணியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், துப்பாக்கியுடன் மிரட்டிய குற்றவாளியை தைரியமாக எதிர்கொண்டு மடக்கிப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    டெல்லி நிலோதி பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. தலைமைக் காவலர்கள் மனோஜ், தேவேந்தர் ஆகியோர் நேற்று இரவு நிலோதி பகுதியில் உள்ள மச்சி சவுக் அருகே ரோந்து சென்றுள்ளனர். அப்போது ஒரு நபர் துப்பாக்கியுடன் வந்து, சாலையில் வந்துகொண்டிருந்த பைக்கை நிறுத்தி ஏற முயற்சி செய்தார். இதைக் கண்ட போலீசார் அந்த நபர்களை பிடிக்க முயன்றனர்.

    பைக்கில் வந்த நபர் தப்பிச் செல்ல, துப்பாக்கி வைத்திருந்த நபர், கான்ஸ்டபிள் மனோஜை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டினான். ஆனால் கான்ஸ்டபிள் மனோஜ் ஒரு செங்கல்லை எடுத்து வீசி தாக்கினார். அத்துடன் பாய்ந்து சென்று அந்த நபரை பிடித்து தரையில் தள்ளினார். உடனே அருகில் இருந்தவர்களும் ஓடிவந்து அந்த நபரை சுற்றி வளைத்து அடித்து உதைத்தனர். பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டார். பைக்கில் தப்பிச் செல்ல முயன்ற நபரை மற்றொரு கான்ஸ்டபிள் தேவேந்தர் பிடித்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • காஷ்மீரில் பேசிய ராகுல் காந்தி பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என்றார்.
    • இதுகுறித்து டெல்லி போலீசார் ராகுல் காந்திக்கு நோட்டீசு அனுப்பி உள்ளனர்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஸ்ரீநகரில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது ராகுல் காந்தி, பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று கேள்விப்பட்டேன் என குறிப்பிட்டார்.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் வாக்குமூலம் குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு டெல்லி போலீசார் நோட்டீசு அனுப்பியுள்ளனர்.

    மேலும், பாதிக்கப்பட்டதாக கூறி உங்களைச் சந்தித்த பெண்கள் குறித்த விவரங்களைக் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என போலீசார் நோட்டீசில் குறிப்பிட்டுள்ளனர்.

    அனில் அம்பானி வழக்கு தொடர்பாக இணையதளத்தில் தவறான தகவலை பதிவிட்ட சுப்ரீம் கோர்ட் அதிகாரிகள் 2 பேரை பணிநீக்கம் செய்து, அவர்களை கைது செய்ய தலைமை நீதிபதி உத்தரவிட்டார். #AnilAmbani #SupremeCourt
    புதுடெல்லி:

    ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் தலைவர் அனில் அம்பானிக்கு எதிராக எரிக்சன் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த கோர்ட் அவமதிப்பு வழக்கு, கடந்த ஜனவரி 7-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அனில் அம்பானி, கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

    ஆனால், நீதிபதி உத்தரவை குறிப்பெடுத்து சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் பதிவு செய்யும் அதிகாரிகள் 2 பேர், அனில் அம்பானி ஆஜராக தேவையில்லை என்று நீதிபதி உத்தரவிட்டதாக தவறான தகவலை இணையதளத்தில் பதிவிட்டனர். இத்தகவலை எரிக்சன் நிறுவன வக்கீல், நீதிபதி நாரிமன் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதுபற்றி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் நீதிபதி நாரிமன் புகார் செய்தார்.

    அதையடுத்து, தலைமை நீதிபதி உத்தரவுப்படி, மணவ், தபன் என்ற 2 அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. #AnilAmbani #SupremeCourt
    இந்திய தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஹேக்கிங் செய்ய முடியும் என்று லண்டனில் நடைபெற்ற செய்முறை விளக்கம் தொடர்பாக டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகாரளித்துள்ளது. #ECI #DelhiPolice #SyedShuja
    புதுடெல்லி:

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து, பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைத்து விட்டதாக பிரபல மின்னணு தொழில்நுட்ப நிபுணரான சையத் சுஜா என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    உத்தரபிரதேசம், குஜராத், டெல்லி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களிலும் இந்த தில்லுமுல்லு தொடர்ந்ததாகவும் தெரிவித்தார்.

    2009-2014 ஆண்டுகளுக்கிடையில் ‘இ.சி.ஐ.எல்.’ எனப்படும் இந்திய மின்னணு கழகத்தில் (எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா) பணியாற்றியவர் சையத் சுஜா.

    வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான நான்  இந்த மோசடியை அம்பலப்படுத்தியதால் என்மீது தாக்குதல் நடத்தி பா.ஜ.கவினர் கொல்ல முயன்றனர் என்னும் ஒரு ‘பகீர்’ தகவலை சையத் சுஜா வெளியிட்டுள்ளார்.


    இந்த தில்லுமுல்லு தொடர்பாக விரிவாக ஆராய்ந்து கட்டுரை எழுத முயன்றதால்தான் கர்நாடக மாநிலத்தில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தை தெரிந்து வைத்திருந்த மத்திய மந்திரி கோபிநாத் முன்டேவும் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரு கட்சி வேட்பாளருக்கு விழும் வாக்குகளை வேறொருவருக்கு விழுந்ததுபோல் பதிவாகச் செய்வது எப்படி? என்று இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி லண்டனில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் செயல்முறை விளக்கத்தையும் சையத் சுஜா நேற்று செய்து காட்டினார்.

    இந்த செயல்முறை விளக்கத்தின்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் கபில் சிபல் அருகில் இருந்ததால் இந்த விவகாரம் தற்போது இந்திய அரசியல் அரங்கில் சூடுபிடித்துள்ளது.

    இந்நிலையில், இந்திய தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்று லண்டனில் நடைபெற்ற செய்முறை விளக்கம் தொடர்பாக டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் இன்று புகாரளித்துள்ளது.

    இந்த புகாரின்மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சரியான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த புகார் மனுவில் தேர்தல் கமிஷன் வலியுறுத்தியுள்ளது. #ECI #DelhiPolice #SyedShuja

    தென்னிந்தியாவில் சமூகம் சார்ந்த மத அமைப்பின் தலைவர்களை கொல்ல சதி செய்ததாக, டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #DelhiPolice #PlottersHeld
    புதுடெல்லி:

    குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் செய்யப்பட்டு வரும் நிலையில், அசம்பாவித சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தின விழாக்கள் மற்றும் அணிவகுப்பு நடைபெறும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் வகையில், தென்னிந்தியாவில் சமூகம் சார்ந்த மத அமைப்புகளின் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த ஒரு கும்பல் சதி செய்திருப்பதாக டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு படை போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்களில் ஒருவன் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த வாலி முகமது என்பது தெரியவந்தது. மற்றவர்கள் டெல்லி மதாங்கிர் பகுதியைச் சேர்ந்த ஷேக் ரியாஜுதீன், கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த முத்தாசிம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    இவர்கள் மூவரும் சேர்ந்து தென்னிந்தியாவில் உள்ள ஒரு சமூகம் சார்ந்த மத அமைப்பின் தலைவர்களை கொல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #DelhiPolice #PlottersHeld 
    கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரணத்துக்கு டெல்லி போலீசார் ஒரு கோடி ரூபாய் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #DelhiPolice
    புதுடெல்லி:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.

    மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 350க்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.



    இந்நிலையில், கேரளா வெள்ள நிவாரணத்துக்கு டெல்லி போலீசார் ஒரு கோடி ரூபாய் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், கேரளா மாநிலத்தின் வெள்ள பாதிப்புக்கு டெல்லி போலீசார் ஒரு கோடி ரூபாய் அளிக்க உள்ளோம். டெல்லி போலீசில் பணிபுரிந்து வரும் ஊழியர்களிடம் இருந்து இந்த தொகை பெறப்பட்டு பிரதம மந்திரி நிவாரண நிதியில் இந்த தொகை சேர்க்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #DelhiPolice
    பிரபல எலக்ட்ரானிக் நிறுவனமான வீடியோகான் நிறுவனத்தின் அதிபர் வேணுகோபால் தூத் மீது பங்கு மோசடி வழக்கில் டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். #Vediocon #DelhiPolice
    பிரபல எலெக்ட்ரானிக் பொருட்கள் நிறுவனமான வீடியோகானின் அதிபராக வேணுகோபால் தூத் இருந்து வருகிறார். இவர் திருபாதி செராமிக்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தின் சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான பங்குகளை சமீபத்தில் இந்த நிறுவனம் விற்பனை செய்தது. ஆனால், அவை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட பங்குகள் என்பதும், மறுவிற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டதும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக புகாரின் அடிப்படையில், டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் குற்றவாளியாக வேணுகோபால் சேர்க்கப்பட்டிருந்தார்.  இரண்டு ஆண்டுகளாக இதன் விசாரணை நடந்து வந்த நிலையில் இப்போது இந்த வழக்கு மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு விசாரணை முடிந்து அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    மேலும், வீடியோகான் நிறுவன அதிபர் வேணுகோபால் தூத்,  ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியுடன் இணைந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றசாட்டை சி.பி.ஐ., அமலாக்க பிரிவு, மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. #Vediocon #DelhiPolice
    ×