search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற பாதுகாப்பு பொறுப்பை இழக்கிறதா டெல்லி காவல்துறை?
    X

    பாராளுமன்ற பாதுகாப்பு பொறுப்பை இழக்கிறதா டெல்லி காவல்துறை?

    • டிசம்பர் 13 சம்பவம் பெரும் பாதுகாப்பு குறைபாடாக விமர்சிக்கப்பட்டு வருகிறது
    • தேச பாதுகாப்பிற்கான பல முக்கிய அலுவல் கட்டிடங்களை சிஐஎஸ்எஃப் காத்து வருகிறது

    கடந்த டிசம்பர் 13 அன்று மக்களவைக்கு உள்ளே இருவர், பார்வையாளர்கள் அரங்கில் இருந்து அவை மையப்பகுதியில் குதித்து, கோஷங்களை எழுப்பியவாறு, தங்கள் காலணிகளில் மறைத்து வைத்திருந்த வர்ண புகை எழுப்பும் குப்பிகளை வீசி வெடிக்க செய்தனர்.

    அவைக்கு வெளியேயும் இருவர் (1 ஆண், 1 பெண்) இதே போன்று கோஷங்களை எழுப்பி, புகை குப்பிகளை வீசினர்.

    நால்வரையும் கைது செய்த டெல்லி காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

    மத்திய அரசிற்கு பெரும் தலைக்குனிவாகவும், பெரும் பாதுகாப்பு குறைபாடாகவும் கருதப்பட்ட இந்த சம்பவம் அரசியல் கட்சி தலைவர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

    மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து விசாரித்து வந்த நிலையில், பாராளுமன்றத்தின் ஒட்டு மொத்த பாதுகாப்பு பொறுப்பை இனி டெல்லி காவல்துறையிடமிருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் சிஐஎஸ்எஃப் பல மத்திய அரசாங்கங்களின் அலுவலகங்கள், அணு சக்தி மைய வளாகங்கள், விண்வெளி தளங்கள், சிவில் விமான தளங்கள், டெல்லி மெட்ரோ உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது.

    தற்போது உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பாராளுமன்ற பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஒரு ஆய்வை சிஐஎஸ்எஃப் நடத்தி வருகிறது.

    விரைவில் முழு பாதுகாப்பு பொறுப்பும் சிஐஎஸ்எஃப் வசம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. இதன் பாதுகாப்பு வளையத்தில் புதிய மற்றும் பழைய பாராளுமன்ற கட்டிங்களின் மொத்த இடங்களும் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இது குறித்த இறுதி முடிவு வரும் நாட்களில் எடுக்கப்படும்.

    Next Story
    ×