என் மலர்
நீங்கள் தேடியது "case filed"
- மாநகராட்சிக்கு ரூ.1.4 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக போலீசார் மதிப்பிட்டுள்ளனர்.
- 5 நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருச்சி:
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமது அரசியல் பிரவேசத்திற்கு பின் முதல் சுற்று பயணத்தை கடந்த 13ம் தேதி திருச்சியில் இருந்து தொடங்கினார். இதில் கூடிய கூட்டம் திருச்சியை குலுங்க வைப்பதாக அமைந்தது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து பிரசாரம் நடந்த மரக்கடை வரை 8 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் ஐந்து மணி நேரம் ஆனது. இந்த நிலையில் தற்போது விஜய் பிரசாரத்தின் போது, மாநில அரசு மற்றும் தனியார் கடைகளுக்குச் சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தியதாக 5 நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாநகராட்சியின் அரியமங்கலம் இளநிலை பொறியாளர் திவாகர் அளித்த புகாரில், டி.வி.எஸ்.டோல்கேட், மேம்பாலத்திற்கு கீழே அழகுபடுத்தப்பட்ட இடத்தை பாதுகாக்க அமைத்திருந்த துருப்பிடிக்காத எக்கு வேலி, விஜய் பேரணியின் போது தொண்டர்களால் சேதப்படுத்தப்பட்டது.
பிரசார வாகனத்தைப் பின்தொடர்ந்தபோது, ஒரு பிரிவினர் பசுமையான இடத்திற்குள் நுழைந்து துருப்பிடிக்காத எக்கு கைப்பிடிகளை சேதப்படுத்தியதாக கூறப்பட்டிருந்தது. இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.1.4 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக போலீசார் மதிப்பிட்டுள்ளனர்.
மேலும் காந்தி மார்க்கெட் அருகிலுள்ள மரக்கடையில் பிரசாரம் நடைபெற்ற பகுதியிலும், தென்னூரைச் சேர்ந்த வியாபாரி எஸ். ரவிச்சந்திரன் என்பவர், மர தளவாடங்கள் மற்றும் ஒரு சரக்கு வாகனம் உட்பட ரூ.1.3 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை அடையாளம் தெரியாத தமிழக வெற்றிக்கழக உறுப்பினர்களால் சேதப்படுத்தியதாக புகார் அளித்தார்.
புகார்தாரர், தனது கடையின் மேல் நின்று கொண்டு, கீழே இறங்கச் சொன்னபோது, கட்சி உறுப்பினர்கள் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி தன்னைத் திட்டியதாகவும் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாரிகள் இருதரப்பினரையும் விசாரணைக்கு அழைத்தனர்.
- குழந்தையை பறித்துக் கொண்டு அவரை வயிற்றில் எட்டி உதைத்தாக கூறப்படுகிறது.
மதுரை:
மதுரை மாவட்டம் திரு மங்கலத்தை அடுத்த பேரையூர் தாலுகா இ.கோட்டைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகள் அர்ச்சனா (வயது 23). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ராஜீவ்நகரை சேர்ந்த பரத் (25) என்பவருக்கும் கடந்த 25.10.2023-ல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் நகை, பணம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
இந்தநிலையில் திருமணமான 6-வது மாதத்தில் இருந்து மாப்பிள்ளை வீட்டாரின் கோர முகம் வெளிப்பட தொடங்கியது. அதாவது கணவர் பரத், அவரது தம்பி ஆதிதர்மலிங்கம், தாயார் ஈஸ்வரி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து, அர்ச்சனாவிடம் உனது தந்தையிடம் சென்று 100 பவுன் நகை மற்றும் சொத்தில் பங்கு கேட்டு வாங்கி வருமாறு கூறியுள்ளனர். இதற்கு அர்ச்சனா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கர்ப்பிணியாக இருக்கும் மருமகள் என்றும் பாராமல் அவரை அடித்து, உடைத்து பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கி உள்ளனர்.
ஆபாச வார்த்தைகளால் திட்டித்தீர்த்த அவர்களிடம் இனிமேலும் வாழமுடியாது என்று கருதிய அர்ச்சனா, நடந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அவர்கள் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலத்திற்கு சென்று தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி அர்ச்சனா அங்கு சென்று புகார் கொடுத்தார்.
இதையடுத்து அதிகாரிகள் இருதரப்பினரையும் விசாரணைக்கு அழைத்தனர். கடந்த 14-ந்தேதி தான் பெற்றெடுத்த குழந்தையுடன் அர்ச்சனா சமூக நலத்துறை அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது அங்கு வந்த அர்ச்சனாவின் கணவர், மனைவியின் கையில் இருந்த குழந்தையை பறித்துக் கொண்டு அவரை வயிற்றில் எட்டி உதைத்தாக கூறப்படுகிறது. மேலும் அவரது தம்பி மற்றும் அர்ச்சனாவின் மாமியாரும் சேர்ந்துகொண்டு தாக்கியுள்ளனர்.
இதனை தடுத்த அர்ச்சனாவின் தந்தை முருகேசனும் கடுமையாக தாக்கப்பட்டார். அப்போது அர்ச்சனா கழுத்தில் இருந்து அறுந்து விழுந்த 1 பவுன் சங்கிலியை கணவர் பரத்தின் தம்பி ஆதிதர்மலிங்கம் அபகரித்துக்கொண்டதாக அர்ச்சனா, மதுரை தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பரத், ஆதிதர்மலிங்கம், ஈஸ்வரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அ.தி.மு.க. தொண்டர்கள் தாக்கியதால் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் துறையூர் மருத்துவமனையில் அனுமதி.
- ஆம்புலன்ஸை அழைத்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களிடையே பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று செல்ல முயன்றது. ஆம்புலன்ஸை சுற்றிவளைத்த அ.தி.மு.க.வினர் அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் பரிசோதித்தனர்.
இதனை தொடர்ந்து ஆம்புலன்சில் நோயாளி இல்லை என்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. தொண்டர்கள் தாக்கியதால் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் துறையூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆம்புலன்ஸை அழைத்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
மேலும், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் வாகனத்தைத் தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆம்புலன்ஸை தடுத்து, ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக நகரச் செயலாளர் பாலு உள்பட 14 பேர் மீது 6 பிரிவுகளில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
- சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருந்து வருபவர் ஐ.பெரியசாமி. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஐ.பெரியசாமி தி.மு.க. துணை பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவராக திகழும் இவர் ஏற்கனவே கூட்டுறவு துறை, வருவாய் துறை பொறுப்புகளையும் அமைச்சரவையில் வகித்து உள்ளார்.
இந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் வீடு மற்றும் சேப்பாக்கம் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் உள்ள அவரது அறை ஆகிய இடங்களுக்கு இன்று காலை 6 மணி அளவில் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 பேர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதே போன்று திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எம்.எல்.ஏ. விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் சில கருத்துக்களை வெளியிட்டார்.
- கபில்சிபல் தாக்கல் செய்த மனுவை, சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
அரியானாவின் அசோகா பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருபவர் அலிகான் முகமது மக்முதா பாத்.
இவர் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் சில கருத்துக்களை வெளியிட்டார்.
அவரது கருத்து இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப் பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி போலீசார் அவரை டெல்லியில் நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில், கைது நடவடிக்கையை எதிர்த்து அரியானா பல்கலைக்ககழக பேராசிரியர் அலிகான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது சார்பில் கபில்சிபல் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. நாளை அல்லது புதன்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.
- விபத்து நடந்த பகுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- உயிரிழந்த நாகராஜ்-ஆனந்தி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குள்ளாய்பாளையம் பகுதியில் பாலப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து நாகராஜ், அவரது மனைவி ஆனந்தி ஆகியோர் உயிரிழந்தனர். மகள் தீக்ஷிதா பலத்த காயமடைந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாலம் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததே இந்த விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்தநிலையில் விபத்து நடந்த இடத்தை கலெக்டர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விபத்துக்கு காரணமான பாலப்பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கணேஷ், சைட் என்ஜினீயர் குணசேகரன், சைட் மேற்பார்வையாளர் கவுதம், ஒப்பந்ததாரர் சிவக்குமார் ஆகியோர் மீது அஜாக்கிரதையாக செயல்படுதல், விபத்தை ஏற்படுத்தி மரணம் ஏற்படுத்துதல், உரிய பாதுகாப்பு தடுப்புகள் ஏற்படுத்தாமல், விபத்து ஏற்பட காரணமாக இருத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே விபத்து நடந்த பகுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் உயிரிழந்த நாகராஜ்-ஆனந்தி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
- மதுரை ஆதீனம் பயணித்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவே முழுக்க முழுக்க விபத்துக்கு காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
- விபத்திற்குள்ளான மற்றொரு காரை ஓட்டி வந்தவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, கவர்னர் ஆர்.என்.ரவி, மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள், தன்னை கொலை செய்ய கார் விபத்து மூலம் சதி நடந்ததாக குற்றம் சாட்டினார்.
மேலும், மாநாட்டில் கலந்து கொள்ள வந்த தன் கார் மீது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் உரசிச் சென்ற நிலையில், இது திட்டமிட்ட சதி, தன்னை கொல்ல விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேரிகார்டை உடைத்துக்கொண்டு வந்தனர். விபத்துக்குப் பிறகு நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இதில் நான் மயக்கமடைந்துவிட்டேன். ஆனால் என் கார் டிரைவர், தொப்பி அணிந்து தாடி வைத்த ஒருநபர் காரில் நம்பர் பிளேட் இல்லாமல் ஓட்டி வந்து மோதியதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் தரவில்லை. ஆண்டவன் சிவபெருமானிடம் புகார் தந்துவிட்டேன். இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கே சலுகைகள் அதிகம். என் புகாரை எடுக்கமாட்டார்கள் என மதுரை ஆதீனம் பகிரங்கமாக குற்றம்சாட்டி பேசி இருந்தார்.
இதையடுத்து, இச்சம்பம் குறித்து விசாரணை நடத்திய கள்ளக்குறிச்சி போலீசார் விளக்கம் அளித்தனர். அதில், மதுரை ஆதீனத்தை கொல்ல சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை என்றும் ஆதீனம் பயணித்த கார் அதிவேகமாக சென்று சாலையைக் கடந்த போது விபத்து நடந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் மதுரை ஆதீனம் பயணித்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவே முழுக்க முழுக்க விபத்துக்கு காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே, மதுரை ஆதீனத்தின் கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுந்சாலையில், மதுரை ஆதீனத்தின் கார் அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. அப்போது சாலையின் எதிர் பகுதியில் வெள்ளை நிறக் கார் மெதுவாக வந்துள்ளது. ஆதீனத்தின் கார் அதிவேகமாக சென்று சாலையைக் கடந்தபோது விபத்து நடந்துள்ளது.
இந்த நிலையில், மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் மீது உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை ஆதீனம் வந்த காரை அதிவேகமாகவும், அலட்சியமாகவும் ஓட்டியதாக அவரது கார் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்திற்குள்ளான மற்றொரு காரை ஓட்டி வந்தவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- கோவிலின் நடைப்பந்தலில் வீடியோ எடுக்க அனுமதி உள்ளது.
- வீடியோ காட்சிகளை தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கிறார்.
கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்திபெற்ற கிருஷ்ணர் கோவில் இருக்கிறது. திருமணம் மற்றும் மத சடங்குகளுக்கு மட்டும் கோவிலின் நடைப்பந்தலில் வீடியோ எடுக்க அனுமதி உள்ளது. மற்ற நிகழ்வுகள் மற்றும் சாதாரண நேரங்களில் அங்கு வீடியோ எடுக்க அனுமதி கிடையாது.
இந்தநிலையில் பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், குருவாயூர் கோவிலுக்கு சென்றிருந்தார்.
அப்போது அவர் கோவிலின் நடைப்பந்தல் (பாதை) மற்றும் தீபஸ்தம்பம் (விளக்கு கம்பம்) முன்பு வீடியோ எடுத்திருக்கிறார். அந்த வீடியோ காட்சிகளை தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்து கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் ஊடகக்குழு உறுப்பினர் அனூப் என்பவர் குருவாயூர் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
ஐகோர்ட்டு உத்தரவை மீறி கோவில் வளாகத்தில் வீடியோ எடுக்கப்பட்டிருப்பதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த புகாரின் அடிப்படையில் ராஜீவ் சந்திரசேகர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
- ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையங்களில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், போதைப் பொருள் தடுப்பு போலீசார் நடவடிக்கை.
பிரபல தனியார் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனியார் நிறுவன இயக்குனர்கள் மீது ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையங்களில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் மூலம் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், போதைப் பொருள் தடுப்பு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- கடந்த 10 ஆண்டில் மொத்தம் 193 அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
- இந்த 193 பேரில் 2 பேர் மீது மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
கேரளாவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. ரஹீம் பாராளுமன்றத்தில் அமலாக்கத்துறை பற்றி கேள்வி எழுப்பினார்.
அதில், கடந்த பத்து ஆண்டுகளில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு? சமீப ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக வழக்குகள் அதிகரித்துள்ளனவா என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பாக இணை மந்திரி பங்கஜ் சௌத்ரி அளித்துள்ள பதிலில் கூறியதாவது:
கடந்த 2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக 193 அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த 193 நபர்களில் மொத்தமாக 2 பேர் மீது மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.
இதில் 01.04.2016 முதல் 31.03.2017 மற்றும் 01.04.2019 முதல் 31.03.2020 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே தலா ஒரு நபர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறப்பட்டுள்ளது. மற்ற வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
மேலும், அமலாக்கத்துறை விசாரணைகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்த அரசாங்கம் ஏதேனும் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதா என்ற கேள்விக்கு போதிய தகவல்கள் இல்லை என பதில் அளித்துள்ளார்.
- டாஸ்மாக் ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக தமிழக பா.ஜ.க. அறிவித்திருந்தது.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.
நாகர்கோவில்:
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் குடோன் மற்றும் பல்வேறு மதுபான தொழிற்சாலைகளில் அமலாக்கத்துறை கடந்த 6-ந்தேதி சோதனை நடத்தியது. சோதனையில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதையடுத்து டாஸ்மாக் ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக தமிழக பா.ஜ.க. அறிவித்திருந்தது.
அதன்படி போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தர்ராஜன், எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார் தலைமையில் பாரதிய ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் முத்துராமன், முன்னாள் தலைவர் கணேசன், மாநில மகளிர் அணி செயலாளர் மீனாதேவ், மேற்கு மாநகர தலைவர் சதீஷ் உள்பட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் இரவு விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கோபகுமார், முத்துராமன், கணேசன், சதீஷ், மீனாதேவ் உள்பட 160 பேர் மீது நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பு மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் உள்பட 140 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- வளன் அரசு செல்போனில் விக்னேஷ்வரனிடம் கேட்ட போது, அவர் வளன் அரசை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
- வளன் அரசு சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்-ராஜபாளையம் சாலையில் தனியாருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் விற்பனையகம் மற்றும் சர்வீஸ் நிலையம் உள்ளது.
இதன் உரிமையாளரான வளன்அரசு(வயது 51) கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரையிலான கணக்கு வழக்குகளை ஆய்வு செய்தார். அப்போது ரூ.84 லட்சம் மோசடி நடந்திருப்பதாகவும், அதனை அவர் கண்டுபிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் நடத்திய விசாரணையில், கடந்த 10 வருடங்களாக நிறுவனத்தில் பணியாற்றி வந்த ராஜபாளையத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் மற்றும் அங்கு பணிபுரியும் ராஜபாளையத்தை சேர்ந்த முனிராஜ், காசாளராக பணிபுரியும் சோலைச்சேரியை சேர்ந்த இனியவன் மற்றும் கழுகுமலையை சேர்ந்த ஆறுமுகம் சண்முகவேல் ஆகியோர் கூட்டாக இணைந்து இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வளன் அரசு செல்போனில் விக்னேஷ்வரனிடம் கேட்ட போது, அவர் வளன் அரசை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வளன் அரசு சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் 4 பேர் மீதும் கொலை மிரட்டல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






