search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Professor"

    தனியார் நிறுவனம் ஜீவன் தம்பிக்கு வெளிநாடு செல்வதற்கான ஒரு சுற்றுலா திட்டத்தை கூறியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பல்கலைக்கழக குடியிருப்பை சேர்ந்தவர் ஜீவன் தம்பி வயது (67). இவர் புதுவை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவரிடம் டெல்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஜீவன் தம்பிக்கு வெளிநாடு செல்வதற்கான ஒரு சுற்றுலா திட்டத்தை கூறியுள்ளது.

    இதுதொடர்பாக அவரிடம் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களான கபில் சிங், ஹீனா சவுத்ரி, ராகுல் ஹரோரா ஆகியோர் பேசி வெளிநாடிற்கு சுற்றுலா அழைத்து செல்வதற்கு ஒப்பந்தம் போட்டு ரூ.2. லட்சத்து 35 ஆயிரத்தை பெற்றனர். அதன்பிறகு, அவர்கள் குறித்த காலத்தில் சுற்றுலா அழைத்து செல்லாமல் காலம் கடத்தி வந்தனர். இதனால் பணத்தை திருப்பி அளிக்கு மாறு ஜீவன் தம்பி வற்புறுத்தினார். ஆனால் ஒப்பந்தம் போட்டுள்ளதால் பணத்தை திருப்பி அளிக்க முடியாது என மறுத்துவிட்டனர்.

    இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஜீவன் தம்பி கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கபில் சிங், ஹீனா சவுத்ரி, ராகுல் ஹரோரா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காருக்குள் பேராசிரியர் இறந்து கிடந்தார்.
    • கிழக்கு போலீஸ் நிலையத்தில் சசிகலா புகார் கொடுத்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் கண்ணன்(வயது44). இவர் ஆலங்குளத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்தார். இவரது மனைவி சசிகலா மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்க்கிறார். கண்ணனுக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த சில மாதங்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். சம்வத்தன்று காலை 8 மணிக்கு வேலைக்கு சென்றார். மனைவி 10 மணியளிவில் செல் போனில் அழைத்தபோது உடல்நிலை சரியில்லை எனவும், அதனால் விடுமுறை எடுத்து வீட்டிற்கு வந்து கொண்டிருப்ப தாகவும் கூறி உள்ளார். மாலையில் மனைவி மற்றும் மகன் வீட்டிற்கு வந்தபோது கணவர் வீட்டில் இல்லை.

    ஆனால் செட்டில் கார் நின்றுகொண்டிருந்தது. சந்தேகமடைந்த மனைவி அருகில் சென்று பார்த்தபோது முன்கதவு பூட்டப்படாமல் சாத்தி யிருந்தது. கண்ணன் ஸ்டேரிங்கில் சாய்ந்தபடி கிடந்தார். சாவி ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்தது. ஏ.சி.யும் ஓடிக்கொண்டு இருந்தது. பதட்டமடைந்த மனைவி கணவரை எழுப்பி பார்த்தார். ஆனால் அவர் பேச்சு மூச்சின்றி கிடந்தார்.

    உடனடியாக அவரை ஆம்புலன்சு மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி பரிந்துரைத்தனர். அங்கு கொண்டு சென்றபோது பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் சசிகலா புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • சம்பவம் திருச்சி ரெயில் நிலையத்தில் நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருச்சி:

    புதுக்கோட்டை என்.ஜி.ஓ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் மேனகா (வயது 26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வழக்கறிஞரான இவர், நாளை மறுநாள் நடைபெற உள்ள மாவட்ட நீதிபதிக்கான போட்டி தேர்வுக்கு கோவையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் கல்வி பயின்று வந்தார்.

    நேற்று இரவு கோவையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். ஏ.சி. கோச்சில் டிக்கெட் எடுத்திருந்தார்.

    இந்த ரெயில் நேற்று இரவு 7.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.18 மணிக்கு திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அதை தொடர்ந்து பயணிகள் அங்கு இறங்கினர்.

    அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மேனகாவுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் திருச்சி ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    உடனே கோட்டை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பாலியல் தொல்லை கொடுத்தவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் கருப்பண்ணன் கோவில் காடு பகுதியில் சேர்ந்த சந்திர பிரசாத் (வயது 33) என்பதும், இவர் திருச்சி சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியின் சொந்த ஊர் திருப்பூர் ஆகும். மனைவி குழந்தைகளை பார்த்துவிட்டு மீண்டும் பணி நிமித்தமாக திருச்சிக்கு வந்துள்ளார்.

    பின்னர் மேகனா கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியர் சந்திர பிரசாத்தை திருச்சி ரெயில்வே போலீசார் நள்ளிரவு கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    கைதான சந்திர பிரசாத் போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு கல்லூரிக்கு பேராசிரியராக பணியமர்த்தப்பட்டவர்.

    பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அரசு கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சி ரெயில் நிலையத்தில் நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்த இளம்பெண் மெடிக்கலுக்கு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.
    • சம்பவம் குறித்து, பெற்றோர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் புகார் அளித்தனர்.

    பொள்ளாச்சி,

    காதலுக்கு வயதில்லை. இருவரின் மனமும் ஒத்துப்போனால் யார் வேண்டுமானாலும், எந்த வயதில் வேண்டுமானாலும் காதலிக்கலாம் என்பார்கள். அப்படி 20 வயது மூத்த நபரை காதலித்து கரம்பிடித்துள்ளார் கோவையை சேர்ந்த கல்லூரி பேராசிரியை ஒருவர்.

    கோவை பொள்ளாச்சியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் அங்குள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இது தவிர அந்த பகுதியில் உள்ள மெடிக்கல்லில் பகுதி நேரமாகவும் வேலை பார்த்து வந்தார்.

    அப்போது, இளம்பெண்ணுக்கும், கடையின் உரிமையாளருக்கும் இடையே நட்பாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

    ஆனால் இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவில்லை. இளம்பெண் நீண்ட நேரம் போனில் பேசியதை கேட்டபோதும், வேலை விஷயமாக பேசுவதாக தெரிவித்து வந்தார். கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்த இளம்பெண் தனது தாயிடம் தான் மெடிக்கலுக்கு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர், இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். அவரும் வீட்டிற்கு வந்தார்.

    பின்னர் இளம்பெண்ணின் செல்போனுக்கு அவரது தாய் போன் செய்தார். அப்போது அவர், தான் மருந்தகத்தின் உரிமையாளருடன் வேலை விஷயமாக சென்னைக்கு சென்று கொண்டிருக்கிறேன். வேலை முடிந்தவுடன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து விடுவேன் என தெரிவித்தார்.

    வேலை விஷயமாக செல்வதாக கூறியதால் அவர்களும் விட்டு விட்டனர். 2 நாட்கள் ஆகியும் திரும்பி வராததால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து மீண்டும் தங்களது மகளுக்கு போன் செய்தனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. அவரது போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் பெற்றோர் பதறி போனார்கள்.

    உடனடியாக சம்பவம் குறித்து, பெற்றோர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வந்தனர்.

    இதற்கிடையே மாயமான இளம்பெண் தான் வேலை பார்த்து வந்த மருந்தகத்தின் உரிமையாளரை திருமணம் செய்து கொண்ட தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் சென்னையில் உள்ளனரா அல்லது வேறு எங்காவது தங்கி இருக்கின்றனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேராசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • போலீசார் மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.

    மதுரை

    மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் அருளப்பன்(வயது53). இவர் கல்லூரி காம்பவுண்டு வளாகத்தில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு அருளப்பன் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பீரோவில் இருந்த 8½ பவுன் நகை, ரூ.85 ஆயிரம் ரொக்கம் மற்றும் சில்வர் பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர்.

    இந்த நிலையில் வீடு திரும்பிய அருளப்பன் கதவு உடைக்கப்பட்டு நகை-பணம் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித் தனர். கொள்ளை தொடர் பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.

    • சத்திய நாராயணனுக்கு மீண்டும் பேராசிரியர் பணி வழங்கப்படவில்லை.
    • சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

    புதுச்சேரி:

    புதுவை பூர்ணாங்குப்பம் திரவுபதி அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சத்ய நாராயணன் (வயது 49).

    இவர் புதுவை லாஸ் பேட்டையில் இயங்கும் சமுதாய கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவரது ஒப்பந்த பணி காலம் முடிந்த நிலையில் மீண்டும் தனக்கு பணி வழங்க வேண்டும் என புதுவை பல்கலைக்கழக பதிவாளர் ரஜினீஸ்புதாணி யிடம் கேட்டார். சத்திய நாராயணனுக்கு மீண்டும் பேராசிரியர் பணி வழங்கப் படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சத்திய நாராயணன் பதிவாளரிடம் வாக்கு வாத்தில் ஈடுபட்டு அங்கிருந்த பூச்செடிகளை உடைத்துள்ளார்.

    மேலும் பதிவாளருக்கு பேராசிரியர் சத்திய நாராயணன் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் ரஜினீஸ்புதாணி கொடுத்த புகாரின் பேரில் காலா ப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

    • சிண்டிகேட் கூட்டத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்து இதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
    • முறைகேட்டில் ஈடுபட்ட 8 ஆசிரியர்களும் கடந்த ஜனவரி மாதமே பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    சென்னை:

    பல்கலைக்கழக தேர்வில் அதிக மதிப்பெண் வழங்குவதாக கூறி மாணவர்களிடம் பணம் வசூலித்து முறை கேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் 8 பேராசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்து இதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த 8 பேரில் மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட மண்டல மையங்களில் உள்ள ஆசிரியர்கள், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோர் அடங்குவர்.

    மேலும் மூத்த பேராசிரியர்கள் 3 பேர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஓய்வு பெறும்போது பேராசிரியர்களாக மட்டுமே ஓய்வு பெறுவார்கள்.

    முறைகேட்டில் ஈடுபட்ட 8 ஆசிரியர்களும் கடந்த ஜனவரி மாதமே பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. தற்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • 2013, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
    • இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.

    சென்னை :

    பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் அறிவிப்புக்குரிய தகுதியை பல்வேறு வகையில் பெறவில்லை எனக்கூறி, 152 பேருக்கும் அறக்கட்டளையை நிர்வகித்த ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் நோட்டீஸ் பிறப்பித்தார்.

    மேலும், உதவி பேராசிரியர்கள் தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இந்த நியமனங்கள் தொடர்பாக சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் ஆர்.பிரேமலதா, எஸ்.சாந்தி உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் வக்கீல் ரவிச்சந்தர், சென்னை பல்கலைக்கழகம் சார்பில் வக்கீல் எம்.பழனிமுத்து, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் சந்திரசேகர், எதிர்மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் திலகவதி, வக்கீல்கள் எம்.ரவி, ஜி.சங்கரன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.

    இதையடுத்து, 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேராசிரியர்களின் கல்வித்தகுதியை ஆராய வேண்டும். இவர்களின் கல்விச் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என்று அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.

    இதன்படி, கல்லூரிக் கல்வி இயக்குனர், 254 உதவிப் பேராசிரியர்களின் கல்வித்தகுதியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ஆசிரியர் பணி அனுபவத்துக்காக வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்பட்டு இருந்தது.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், ''தேர்வு நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான சென்னை, காஞ்சீபுரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த 254 உதவி பேராசிரியர்களின் நியமனமும் செல்லாது. உதவிப் பேராசிரியர் நியமனங்களுக்கு அகில இந்திய அளவில் விண்ணப்பங்களை வரவேற்கவில்லை. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, இந்த பதவிக்கான தேர்வும், அதை தொடர்ந்த நடந்த நியமனமும் செல்லாது" என்று கூறியுள்ளார்.

    • தனியார் மருத்துவ கல்லூரி பேராசிரியரிடம் கிரெடிட் கார்டு மூலம் ரூ.1லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • இவர் அங்குள்ள விடுதியிலேயே தங்கி பணி செய்து வருகிறார்.

    புதுச்சேரி:

    தனியார் மருத்துவ கல்லூரி பேராசிரியரிடம் கிரெடிட் கார்டு மூலம் ரூ.1லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருபுவனை அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் டாக்டர் பாரத்(வயது26). இவர் அங்குள்ள விடுதியிலேயே தங்கி பணி செய்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் தான் வைத்திருந்த தனியார் வங்கி கிரெடிட் கார்டு மூலம் ரூ.1500-க்கு பொருட்கள் வாங்கினார். ஆனால் அதன் பின்னர் அவரது செல்போனில் ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது.

    இதனை பார்த்து டாக்டர் பாரத் அதிர்ச்சியடைந்தார். அப்போது இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    தற்போது அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என போலீஸ் தலைமையகம் அறிவித்ததின் பேரில் டாக்டர் பாரத் இதுபற்றி திருபுவனை போலீசில் புகார் செய்தார்.

    இப்புகாரை ஏற்று திருபுவனை போலீசார் முதன்முறையாக சைபர் கிரைம் வழக்காக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மருதமலை செல்லும் வழியில் பாரதியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
    • கல்லூரி பேராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வடவள்ளி 

    கோவை மருதமலை செல்லும் வழியில் பாரதியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் வேலை பார்த்து வரும் பேராசிரியர்கள் ஒன்றிணைந்து ஆசிரியர் சங்கம் ஒன்றும் வைத்துள்ளனர். இந்த நிலையில் கல்லூரி பேராசிரியர்கள் இன்று காலை திடீரென பல்கலைக்கழகத்தின் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    தகவல் அறிந்ததும் துணைவேந்தர் காளிராஜ், பதிவாளர் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் நேரில் வந்து பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தனர்.அதனை ஏற்று பேராசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த கல்லூரிக்கு சென்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் மீண்டும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர்திடீரென பேராசிரியை கத்தியால் குத்தியதுடன் கழுத்தில் கிடந்த 7 1/2 பவுன் நகையை பறித்துக் கொண்டு வேகமாக தப்பினர்.
    • திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காங்கயம் ரோடு பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா தேவி (வயது 40). தனியார் கல்லூரி பேராசிரியை. அதிகாலை காங்கயம் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.

    அப்போது தனியார் பள்ளி அருகே சென்றபோது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர்திடீரென பேராசிரியை கத்தியால் குத்தியதுடன் அவரை மிரட்டி கழுத்தில் கிடந்த 7 1/2 பவுன் நகையை பறித்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து தப்பினர். காயம் அடைந்த பேராசிரியை சத்தம் போட்டார். உடனே அப்பகுதி மக்கள் மஞ்சுளாதேவியை மீட்டு திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இது தொடர்பாக மஞ்சுளாதேவி அளித்த புகாரின் பேரில், திருப்பூர் நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    சேலத்தில் நடைபெற உள்ள உதவி பேராசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
    சேலம்:

    இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதியைப் பெற நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

    இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறவும் நெட் தேர்வு அவசியம். இந்தத் தேர்வுகள் இந்திய அரசின்  தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.

    மொத்தம் 82 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. கணினி மூலமாக இந்தத் தேர்வு காலை, மாலை என 2 ஷிப்டுகளாக நடைபெறும். சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வு காகாபாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியில் நடைபெறுவது வழக்கம்.

     
    இந்த நிலையில், டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022-ம் ஆண்டுக்கான யுஜிசி நெட் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ேதர்வுக்கு  விண்ணப்பிப்பதற்கான  கடைசி நாள் இந்த மாதம்  20-ம் தேதி என அறிவித்து இருந்தது.

     இதனால் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
     
    இந்த நிலையில்  யூ.ஜி.சி. நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற 30-ந்தேதி வரை என   நீட்டித்து உள்ளது.  இந்த  தகவலை   யூ.ஜி.சி. சேர்மன் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.
    ×