என் மலர்
நீங்கள் தேடியது "money cheating"
- அடையாளம் தெரியாத ஒருவர் அந்த சிறுவனின் செல்போன் எண்ணுக்கு அழைத்தார்.
- இதுவரை டிஜிட்டல் கைதுகளால் மக்களை பயமுறுத்திய இந்த குற்றவாளிகள், புதிய முறையில் பணம் பறித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் அறிமுகமானார். அவர்கள் ஒருவருக்கொருவர் வீடியோக்களை பரிமாறிக்கொண்டனர்.
சில நாட்களுக்கு முன்பு, அந்தப் பெண் இன்ஸ்டாகிராமில் "ஐ லவ் யூ" என்று ஒரு செய்தியை அனுப்பினாள். அதற்கு அந்த சிறுவன் "ஐ லவ் யூ டூ" என்று பதிலளித்தான்.
மறுநாள், அடையாளம் தெரியாத ஒருவர் அந்த சிறுவனின் செல்போன் எண்ணுக்கு அழைத்தார். இன்ஸ்டாகிராமில் சந்தித்த பெண்ணிடம் "ஐ லவ் யூ" என்று சொல்வீர்களா? இதை அறிந்ததும் அவரது கணவர் எனக்கு போன் செய்ததாகக் கூறினார்.
அவர்கள் அனைவரும் மைலாவரம் போலீஸ் நிலையத்தில் இருக்கிறார்கள். உடனே அங்கு வர வேண்டும் என மிரட்டினார். இந்த வார்த்தைகளால் பயந்துபோன சிறுவன் அழுது, தான் என்ன சொன்னாலும் செய்வேன் என்று கூறினான். இதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு, அந்த நபர் ஆன்லைன் மூலம் ரூ. 11,000 பறித்துக் கொண்டார்.
சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஒரு புதிய வகை போக்கைப் புகுத்துகிறார்கள். இதுவரை டிஜிட்டல் கைதுகளால் மக்களை பயமுறுத்திய இந்த குற்றவாளிகள், புதிய முறையில் பணம் பறித்து வருகின்றனர். வாலிபர்கள் இதில் சிக்காமல் இருக்க கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- பேராசிரியை பெயரில் சட்ட விரோத பணம் மற்றும் தகவல் பரிமாற்ற மோசடி கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
- பல்வேறு பண மோசடி குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதால், சைபர் கிரைமில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி பெரிய காலாப்பட்டு தனியார் நர்சிங் கல்லுாரியில் பணியாற்றி வரும் பேராசிரியை ஒருவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் டெல்லி தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய அதிகாரி போல் பேசினார்.
அதில், பேராசிரியை பெயரில் சட்ட விரோத பணம் மற்றும் தகவல் பரிமாற்ற மோசடி கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி போலீசார் தொடர்பு கொள்வர் என கூறினார்.
இதையடுத்து, சிறிது நேரத்தில் பேராசிரியையிடம் தொடர்பு கொண்ட மற்றொரு மர்மநபர் டெல்லி போலீஸ் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அதில், பேராசிரியைக்கு மகாராஷ்டிரா முன்னாள் மந்திரி ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் பல்வேறு பண மோசடி குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதால், சைபர் கிரைமில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த வழக்கில் இருந்து விடுவிக்க பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதை நம்பிய பேராசிரியை ரூ.9 லட்சத்து 69 ஆயிரத்து 362-ஐ மர்மநபருக்கு அனுப்பினார்.
அதன் பிறகு சிலரிடம் பேராசிரியை விசாரித்தபோது பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்தார். இதையடுத்து பேராசிரியை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- வேதிகா நடிகை ஆலியா பட்டிடம் நிதி ஆவணங்கள் மற்றும் பணம் கையாள்வது தொடர்பான வேலையை செய்து வந்துள்ளார்.
- ஆலியா பட்டின் தாயார் சோனி ரஸ்தான் போலீசில் புகார் அளித்ததை தெரிந்து கொண்ட வேதிகா தலைமறைவானார்.
மும்பை:
இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் சொந்தமாக எடர்னல் சன்ஷைன் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார்.
நடிகை ஆலியா பட்டிடம் 2001 முதல் 2004 வரை வேதிகா பிரகாஷ் ஷெட்டி (வயது32) என்பவர் தனி உதவியாளராக பணியாற்றினார்.
இந்த நிலையில் நடிகை ஆலியா பட்டின் தாயாரும், முன்னாள் நடிகையும் இயக்குனருமான சோனி ரஸ்தான், வேதிகா பிரகாஷ் ஷெட்டி ரூ.77 லட்சம் மோசடி செய்ததாக கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி ஜூஹூ போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
குற்றவியல் மற்றும் நம்பிக்கை மோசடி தொடர்பான விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வேதிகா பிரகாஷ் ஷெட்டியின் மீது போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
வேதிகா நடிகை ஆலியா பட்டிடம் நிதி ஆவணங்கள் மற்றும் பணம் கையாள்வது தொடர்பான வேலையை செய்து வந்துள்ளார். போலி பில்களை தயாரித்து, அதை உண்மையானதாக காட்ட நவீன தொழில் நுட்பமுறைகளை பயன்படுத்தி உள்ளார்.
ஆலியா கையெழுத்திட்டப் பிறகு அந்த தொகை வேதிகாவின் நண்பரின் கணக்கிற்கு மாற்றப்பட்டு பிறகு அவரது கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆலியா பட்டின் தாயார் சோனி ரஸ்தான் போலீசில் புகார் அளித்ததை தெரிந்து கொண்ட வேதிகா தலைமறைவானார். ராஜஸ்தான், கர்நாடகா, புனே, பெங்களூரு என தொடர்ந்து இடங்களை மாற்றிக் கொண்டே இருந்தார்.
வேதிகாவை தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார் பெங்களூருவில் பதுங்கி இருந்த அவரை கைது செய்தனர். அவரை மும்பைக்கு அழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மும்பையில் இருந்து தீப்தி ராஜசேகர் என்ற பெயரில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
- டெலிகிராம் லிங்க்குக்குள் தொழிலதிபர் சென்று குறிப்பிட்ட வங்கிக்கணக்குக்கு 12 தவணைகளாக ரூ.19 லட்சத்து 53 ஆயிரத்தை பரிமாற்றம் செய்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மங்கலம் ரோடு பகுதியை சேர்ந்த 50 வயது தொழிலதிபரின் சமூக வலைதள பக்கத்தில் விளம்பரம் வந்துள்ளது. அதில் பங்குசந்தையில் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதை நம்பிய அவர் சம்பந்தப்பட்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அதற்கு மும்பையில் இருந்து தீப்தி ராஜசேகர் என்ற பெயரில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
பின்னர் டெலிகிராம் லிங்க்குக்குள் தொழிலதிபர் சென்று குறிப்பிட்ட வங்கிக்கணக்குக்கு 12 தவணைகளாக ரூ.19 லட்சத்து 53 ஆயிரத்தை பரிமாற்றம் செய்தார். அந்த தொகைக்கு அதிக லாபம் வந்ததாக அவருக்கு காட்டியுள்ளது. ஆனால் பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை.
மேலும் கூடுதல் பணத்தை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்பிறகே, தொழிலதிபர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மத்திய பிரதேசத்தில் இயற்கை பேரிடர்களால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அதிகபட்சமாக ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது.
- சில அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
மத்திய பிரதேச மாநில அரசிடமிருந்து அரசு நிதியுவியை பெறுவதற்காக பாம்பு கடித்து, நீரில் மூழ்கி, மின்னல் தாக்கி இறந்ததாக போலியாக சான்றிதழ் தயாரித்து ரூ.11 கோடியை ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சியோனி, கியோலாரி தாலுகா பகுதியை சேர்ந்தவர் தரம் சச்சின் தஹாயக். மோசடி மன்னனான இவர் பாம்பு கடித்து இறந்தவர்கள், நீரில் மூழ்கி பலியானவர்கள், மின்னல் தாக்கி இறந்ததாக கூறி போலியாக இறப்பு சான்றிதழ் தயாரித்து அரசு நிதி உதவி தொகை ரூ.11.26 கோடியை மோசடி செய்துள்ளார்.
அந்த பணத்தை தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். 2018-19 மற்றும் 2021-22-ம் ஆண்டுகளுக்கு இடையில் இந்த மோசடி நடந்துள்ளது.
இதில் ரமேஷ் என்பவர் பாம்பு கடித்து 30 முறை இறந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதேபோல் ராம்குமார் என்பவர் 28 முறை பாம்பு கடித்து இறந்ததாக போலி சான்றிதழ் தயாரித்துள்ளனர். மேலும் நீரில் மூழ்கி இறந்ததாகவும், மின்னல் தாக்கி பலியானதாகவும் போலி சான்றிதழ் தயாரித்து இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் இயற்கை பேரிடர்களால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அதிகபட்சமாக ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்த தொகையை பெறுவதற்காக போலியாக இறப்பு சான்றிதழ் தயாரித்து இந்த மோசடி நடந்துள்ளது. இதற்கு சில அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
கியோலாரி தாலுகா அலுவலகத்தில் பதிவேடுகளை நிதித்துறை சமீபத்தில் ஆய்வு செய்ததில் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதையடுத்து 47 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்று இணை இயக்குனர் ரோகித் கவுசல் தெரிவித்துள்ளார்.
- கைதிகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யும் பணியில் சேலம் சிறை வார்டன் சுப்பிரமணியம் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
- மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கிய கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறை கைதிகள் மூலம் லட்டு, மிக்சர், பிஸ்கெட், பன் உள்ளிட்ட தின்பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சிறை வளாகத்தில் வைத்து, கைதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் சேலம்-ஏற்காடு மெயின் ரோட்டில் சிறை உள்ளதால், மெயின் ரோட்டோரம் சிறைக்கு சொந்தமான ஒரு அறையில் வைத்து பொதுமக்களுக்கும் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. கைதிகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யும் பணியில் சேலம் சிறை வார்டன் சுப்பிரமணியம் (வயது 34) என்பவர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் பொருட்களுக்குரிய பணத்தை சிறை கணக்கில் வரவு வைக்க வேண்டும். ஆனால் அந்த பணம் சிறை கணக்கிற்கு சரியாக வரவில்லை. இதனால் சுப்பிரமணியம் மீது சிறை நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கிய கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பொருட்கள் வாங்கியதற்கு 'ஜி.பே.' மூலம் பணம் அனுப்பி வருகிறோம் என்று கூறினர். இதையடுத்து அந்த 'ஜி.பே.' அக்கவுண்ட் யாருடையது என்று அவர்கள் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த செல்போன் எண் சிறை வார்டன் சுப்பிரமணியத்தின் மாமியாரின் செல்போன் எண் என்பது தெரிந்தது. அதன்படி கடந்த ஒரு ஆண்டாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் அவருடைய மாமியாரின் செல்போன் எண் மூலமாக 'ஜி.பே.' அக்கவுண்டுக்கு சென்றிருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து சிறை வார்டன் சுப்பிரமணியத்திடம் சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பணம் மோசடி செய்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து சேலம் சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத், சிறை வார்டன் சுப்பிரமணியத்தை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பணத்தை இழந்தவர்கள் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க சைபர் கிரைம் போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் மோசடி பேர்வழிகள் நூதன முறையில் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். மோசடிகாரர்கள் விரிக்கும் வலையில் படித்தவர்களும் பணத்தை இழந்து வருகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாக 'ஷாப்பிபை' உள்பட பல்வேறு செயலிகளை பதிவிறக்கம் செய்து முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக ஆன்லைன் மோசடி கும்பல் ஆசை வார்த்தை கூறினர்.
ரூ.28 ஆயிரம் முதலீடு செய்தால் 30 நாளில் ரூ.1 லட்சத்து 800 தருவதாகவும் அல்லது தங்கமாக பெற்றுக்கொள்ளலாம் என அதில் கூறப்பட்டு இருந்தது.
இதனை நம்பிய புதுச்சேரியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்தனர். ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு எந்த பணமும் வரவில்லை. இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மோசடி கும்பல் பொதுமக்களை ஏமாற்றி பல கோடி பணத்தை மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து பணத்தை இழந்தவர்கள் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டாக்டர் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்வது தொடர்பாக விவரங்களை கூகுள் மூலம் தேடியுள்ளார்.
- மர்ம நபர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி பிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் பண்டாரு மகந்த். தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்வது தொடர்பாக விவரங்களை கூகுள் மூலம் தேடியுள்ளார்.
இந்தநிலையில் அவரை மர்ம நபர் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார்.
இதை உண்மை என்று நம்பிய அவர் ரூ.32 லட்சத்து 92 ஆயிரத்தை முதலீடு செய் தார். இதன்மூலம் கிடைத்த லாபம் மற்றும் முதலீடு செய்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றார்.
ஆனால் அது முடியவில்லை. அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
மேலும் அவரை மீண்டும் தொடர்பு கொண்ட மர்மநபர் டெல்லி போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறியுள்ளார்.
சிறுமிகள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் பார்த்ததாகவும், இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் தருமாறு மிரட்டியுள்ளார்.
அதை நம்பி அவரும் ரூ.15 லட்சத்து 90 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். அதன்பின்னரே அவர் ஒட்டுமொத்தமாக ரூ.48 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அவர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தனது பெற்றோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.5 லட்சம் முதல் 25 லட்சம் வரை வாங்கினார்.
- ஐதராபாத் ஜுபிலி ஹில்சை சேர்ந்த டாக்டர் ஒருவரிடம் ரூ. 11 லட்சம் கடனாக பெற்று திருப்பி தரவில்லை.
ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமகேந்திரவரத்தை சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா (வயது 33). இவர் பி.டெக் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கடந்த 2014-ம் ஆண்டு ஐதராபாத் வந்தார்.
ஐதராபாத்தில் உள்ள வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இளைஞர்களுக்கு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக போலீசார் வம்சி கிருஷ்ணாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
ஜெயிலில் இருந்து வெளியே வந்த வம்சி கிருஷ்ணா ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ. போட்டோவை தனது வாட்ஸ்அப் டி.பி.யாக வைத்தார்.
பின்னர் திருமண தகவல் வலைதளங்களில் தன்னுடைய தாய் அமெரிக்காவில் டாக்டராக வேலை செய்கிறார். நான் உள்ளூரில் வியாபாரம் செய்து வருகிறேன். 2-வது திருமணம் செய்ய விரும்பும் பெண்கள் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் என பதிவு செய்தார்.
மேலும் தனது தாய் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியிருந்தார். இதனை உண்மை என நம்பி ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வம்சி கிருஷ்ணாவை தொடர்பு கொண்டனர்.
பழக்கம் ஏற்பட்ட பெண்களிடம் தனது நிறுவனத்தில் ஐடி அதிகாரிகள் சோதனை செய்து பணத்தை பறிமுதல் செய்துவிட்டனர். தனது பெற்றோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.5 லட்சம் முதல் 25 லட்சம் வரை வாங்கினார். இதன் மூலம் ரூ.2½ கோடி மோசடி செய்தார்.
வம்சி கிருஷ்ணாவிடம் பணத்தை இழந்த பெண்கள் பணத்தை திருப்பி கேட்ட போது அவர்களது போட்டோவை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வந்துள்ளார்.
ஐதராபாத் ஜுபிலி ஹில்சை சேர்ந்த டாக்டர் ஒருவரிடம் ரூ. 11 லட்சம் கடனாக பெற்று திருப்பி தரவில்லை. இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார்.
பல்வேறு பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் பெங்களூருவில் பதுங்கி இருந்த வம்சி கிருஷ்ணாவை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- அழகிய குரல் வளம் கொண்ட பெண்களை வேலைக்கு சேர்த்து அவர்கள் மூலம் வாடிக்கையாளர்களை இழுத்துள்ளனர்.
- இப்படி பண ஆசை, பெண்களின் கவர்ச்சியான பேச்சுக்கு மயங்கி பலரும் பணம் முதலீடு செய்ய வந்துள்ளனர்.
கன்னியாகுமரி:
ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுவோரும் இருப்பார்கள் என்பது முதியோர் வாக்கு.
குறுகிய காலத்தில் செல்வந்தர் ஆக வேண்டும் என்று விரும்புவோர் அதற்கான வழிகளையே யோசிப்பார்கள். அத்தகையோரை குறிவைத்து மோசடி நபர்கள் பணம் பறிக்கும் செயல்களை அரங்கேற்றி வருகிறார்கள்.
இதுபற்றி சமூக ஊடகங்கள், பத்திரிகைகளில் பலமுறை எச்சரிக்கை செய்தி வந்தாலும் இன்னும் ஏமாறுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். கன்னியாகுமரியில் அப்படி நடந்த ஏமாற்று செயல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கன்னியாகுமரி அருகே வடக்கு குண்டல் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த சில நாட்களாக வெளியூர் நபர்கள் வருகை அதிகமாக இருந்தது. வருபவர்கள் கன்னியாகுமரியை சுற்றி பார்க்க செல்வதற்கு பதில் லாட்ஜூக்கு வருவதும், சிறிது நேரத்தில் திரும்பி செல்வதுமாக இருந்தனர்.
இது அந்த பகுதி மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அவர்கள் இதுபற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். டி.எஸ்.பி.ராஜா தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீரென அந்த லாட்ஜூக்கு சென்றனர்.
போலீசாரை கண்டதும் அந்த கும்பல் லாட்ஜ் அறைகளில் இருந்து தப்பியோடினர். சிலர் அருகில் இருந்த புதருக்குள் புகுந்து மறைந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
ஆண்கள், பெண்கள் என சுமார் 35 பேரை பிடித்த போலீசார் அவர்கள் அனைவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
போலீசாரின் விசாரணையில் தான் அந்த லாட்ஜூக்கு வந்து சென்றவர்கள் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதாவது பணம் கொடுப்பவர் இந்த கும்பலிடம் ஒரு ரூபாய் கொடுத்தால் அடுத்த மாதம் அந்த கும்பல், பணம் கொடுத்தவர்களுக்கு 2 ரூபாயாக திருப்பி கொடுப்பார்கள்.
இப்படி ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஒரே மாதத்தில் ரூ. 2 ஆயிரம் திரும்ப கிடைக்கும். இதுவே ஒரு லட்சம் கொடுத்தால் அடுத்த மாதம் ரூ.2 லட்சம் கிடைக்கும். இப்படி பணத்தை முதலீடு செய்தால் ஒரே வருடத்தில் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்று இந்த கும்பல் கூறியுள்ளது.
இதற்காக இந்த கும்பலை சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் ஏஜெண்டுகளை நியமித்து உள்ளனர். அவர்கள் மூலம் அந்த மாவட்டத்தில் பணம் வைத்திருக்கும் நபர்களை தெரிந்து கொண்டு அவர்களிடம் பணம் இரட்டிப்பு குறித்து பேசி அதனை தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய கூறியுள்ளனர்.
இதற்காக அழகிய குரல் வளம் கொண்ட பெண்களை வேலைக்கு சேர்த்து அவர்கள் மூலம் வாடிக்கையாளர்களை இழுத்துள்ளனர். இப்படி பண ஆசை, பெண்களின் கவர்ச்சியான பேச்சுக்கு மயங்கி பலரும் பணம் முதலீடு செய்ய வந்துள்ளனர்.
அதிக வாடிக்கையாளர்களை இழுத்து வரும் ஏஜெண்டுகளுக்கு நிறுவனத்தினர் சொகுசு கார்களை பரிசாக வழங்கி உள்ளனர். இதற்கு ஆசைப்பட்ட பல ஏஜெண்டுகள், பணம் மோசடிக்கு துணை போய் உள்ளனர்.
போலீஸ் விசாரணையில் தெரியவந்த இந்த தகவல்களை தொடர்ந்து இந்த மோசடிக்கு துணை போனவர்கள் உள்பட அனைவரையும் பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்பிரசாத் உத்தரவிட்டார்.
இதையடுத்து கன்னியாகுமரி லாட்ஜில் கொஞ்சும் குரலில் பேசி வாடிக்கையாளர்களை வளைத்த 2 பெண்கள் மற்றும் பண இரட்டிப்பு மோசடிக்கு மூளையாக செயல்பட்ட மதுரை பேரையூரை சேர்ந்த சுந்தரபாண்டியன், ராஜாமணி உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11 லட்சத்து 4 ஆயிரத்து 810 ரொக்க பணம், 3 சொகுசு கார்கள், 32 செல்போன்கள், 2 லேப் டாப்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த கும்பல் தமிழகத்தில் வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டினார்கள் என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.
- தங்களது நிறுவனத்தில் ரூ.15லட்சம் முதலீடு செய்தால் வாரம் தோறும் ரூ.90 ஆயிரம் பணம் கிடைக்கும் என்று ஆதவன் ஆசை வார்த்தை கூறினார்.
- நம்பிய சுந்தரேசன் ரூ.15லட்சம் பணத்தை செலுத்தினார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட ஆதவன் கூறியபடி பணம் கொடுக்கவில்லை.
போரூர்:
கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன். டாக்டரான இவருக்கு நண்பர் ஒருவர் மூலம் விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வந்த சாலிகிராமத்தை சேர்ந்த ஆதவன் என்பவர் அறிமுகமானார்.
அப்போது தங்களது நிறுவனத்தில் ரூ.15லட்சம் முதலீடு செய்தால் வாரம் தோறும் ரூ.90 ஆயிரம் பணம் கிடைக்கும் என்று ஆதவன் ஆசை வார்த்தை கூறினார்.
இதை நம்பிய சுந்தரேசன் ரூ.15லட்சம் பணத்தை செலுத்தினார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட ஆதவன் கூறியபடி பணம் கொடுக்கவில்லை.
இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த டாக்டர் சுந்தரேசன் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட ஆதவன், மேலாளர் சுபாஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் மேலாளர் சுபாசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. ஆதவனை போலீசார் தேடி வருகிறார்கள்.
- வங்கி மேலாளர் பேசுவது போல் நடித்து கூலித்தொழிலாளியிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
- மேட்டுப்பாளையம் போலீசில் கூலித்தொழிலாளி அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை குரும்பாபேட் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 44). கூலித்தொழிலாளி. இவரது செல்போன் எண்ணுக்கு தேசிய மாயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து மானேஜர் பேசுவதாக ஒருவர் கூறினார்.
அவர், ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டதாகவும், அதை புதுப்பிக்க அண்ணாதுரை செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. வரும். அதை தெரிவிக்கும் படியும் கூறியுள்ளார்.
அதை நம்பி அண்ணாதுரை அவரது செல்போன் எண்ணுக்கு பலமுறை வந்த ஓ.டி.பி.யை அந்த நபரிடம் கூறினார்.
அடுத்தடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்து மொத்தம் ரூ.96 ஆயிரத்து 250 எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணாதுரை, தனது வங்கிகணக்கில் இருந்து மோசடியாக பணம் எடுத்ததை அறிந்தார்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் அண்ணாதுரை அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






