search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐகோர்ட்"

    • போலீசார் ஜாமின் கேட்ட மனுக்கள் தள்ளுபடி ஆகியிருந்தன.
    • போலீஸ்காரர் வெயிலுமுத்துக்கு மதுரை ஐகோர்ட் ஜாமின் வழங்கியது.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர்.

    இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர் வெயிலுமுத்து உள்ளிட்ட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் ஜாமின் கேட்ட மனுக்கள் தள்ளுபடி ஆகின. போலீஸ்காரர் வெயிலுமுத்துக்கு மதுரை ஐகோர்ட் கிளை ஜாமின் வழங்கியது.

    இதற்கிடையே, ஜெயராஜின் மனைவி செல்வராணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி மனுதாக்கல் செய்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் ஒரு சாட்சி மட்டுமே விசாரணை செய்ய வேண்டியுள்ளது. விரைந்து விசாரணை முடிந்துவிடும் என தெரிவித்தார்.

    மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க கோரி மனுதாக்கல் செய்திருந்தோம். இதில் தொடர்ந்து கால அவகாசம் வாங்கி விசாரணையை இழுத்தடித்து வருகின்றனர். எனவே, வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என வாதிட்டார்.

    இதைப் பதிவுசெய்த நீதிபதி, தந்தை-மகன் மரண வழக்கை 3 மாதத்திற்குள் விசாரணை செய்து முடிக்கவேண்டும் என உத்தரவிட்டார்.

    • கடந்த 2010-ம் ஆண்டுக்கு பின் வழங்கப்பட்ட ஓ.பி.சி. சான்றிதழ்களை கொல்கத்தா ஐகோர்ட் ரத்துசெய்தது.
    • ஓ.பி.சி. சான்றிதழ்கள் ரத்து செய்த தீர்ப்பை ஏற்கமாட்டேன் என்றார் மம்தா பானர்ஜி.

    கொல்கத்தா:

    மேற்குவங்காளத்தில் கடந்த 2010-ம் ஆண்டுக்கு பின் வழங்கப்பட்ட ஓ.பி.சி. சான்றிதழ்களை ரத்துசெய்து உத்தரவிட்ட கொல்கத்தா ஐகோர்ட், 1993-ம் ஆண்டு சட்டத்தின்படி ஓ.பி.சி. புதிய பட்டியலை தயாரிக்குமாறு மேற்குவங்காள மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவால் அம்மாநிலத்தில் 5 லட்சம் ஓ.பி.சி. சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பை ஏற்கமாட்டோம் என கூறிய முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ஓ.பி.சி. இடஒதுக்கீடு தொடரும். இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில், நான் நீதித்துறையை மதிக்கிறேன். இந்த உத்தரவை பிறப்பித்தவரின் தீர்ப்பை நான் ஏற்கவில்லை; அதை ஏற்கமாட்டேன். ஓ.பி.சி. இட ஒதுக்கீடு தொடரும். தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டை நாடுவேன். அவர்களுக்கு என்னை தெரியாது. நான் அவர்களின் விருப்பத்துக்கு தலைவணங்குபவள் அல்ல.

    சட்டப்படி ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை அமல்படுத்தினோம். நாங்கள் ஆய்வுகளை நடத்தினோம். பல அறிக்கைகளை சமர்ப்பித்த குழுவின் தலைவராக உபென் பிஸ்வாஸ் இருந்தார். அப்போதும் கூட இந்த விஷயத்தில் கோர்ட்டில் வழக்குகள் இருந்தன. ஆனால் மேல்முறையீடு செய்தவர்கள் அந்த வழக்குகளில் தோல்வி அடைந்தனர் என தெரிவித்தார்.

    • காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு சமீபத்தில் தள்ளுபடி செய்து இருந்தது.
    • இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகும்.

    புதுடெல்லி:

    2014 முதல் 2017 வரையிலான வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு சமீபத்தில் தள்ளுபடி செய்து இருந்தது.

    இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு (2017-18, 2018-19, 2019-20, 2020-21) வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி மற்றொரு மனுவை டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.

    நீதிபதி யஷ்வந்த் சர்மா, புருஷேந்திரகுமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வருமான வரித்துறைக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 மனுக்களையும் இன்று தள்ளுபடி செய்தது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகும்.

    • வாக்குப்பதிவு நாளில் அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அறிவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
    • வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    சென்னை:

    தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், வேலை காரணமாக வாக்குரிமையை யாரும் இழந்து விடக் கூடாது என்பதற்காக, தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

    அதனால் வர இருக்கும் மக்களவை தேர்தலில், வாக்குப்பதிவு நாளில் அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அறிவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

    அதன்படி விடுமுறையை வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக நட வடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், இந்த விடுமுறையை பயன்படுத்தி தொழிலாளர் கள் வாக்களித்தார்களா? என சரிபார்க்க எந்த நடை முறையும் இல்லை.

    அதனால் தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறையை பெற, வாக்களித்ததற்கான சான்றை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தேர்தல் தேதியில் வழங்கப்படும் விடுமுறையை பயன்படுத்தி தொழிலாளர்கள் வாக்களிக்காமல் இருப்பது விடுமுறையின் நோக்கம் நிறைவேற்றப்படாமல் போகிறது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், தேர்தல் நாளில் வாக்களிக்க விரும்பாமல் வேலை செய்ய விரும்பினால் சம்பந்தப்பட்ட தொழிலாளியை தனியார் நிறுவனம் வேலை செய்ய அனுமதிக்குமா? என கேள்வி எழுப்பினர்.

    இதற்கு மனுதாரர் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படாததை அடுத்து, வாக்களிக்க வேலை தடையாக இருக்கக் கூடாது; தொழிலாளர்கள் வாக்களிக்க வேண்டுமென்ற அடிப்படையில் தான் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

    வாக்களிக்க வேண்டும் என எப்படி ஒருவரை கட்டாயப்படுத்த முடியும்? தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறை பெற, வாக்களித்ததற்கான சான்று சமர்ப்பிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது" என்று உத்தர விட்டு நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

    • கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார்.
    • பெண் குழந்தைகள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, மூவாட்டுப்புழா பகுதியை சேர்ந்த ஒருவருடன் 2012-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அந்த பெண்ணை ஆண் குழந்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று திருமணம் நடந்த நாளிலேயே கணவரின் குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர்.

    மேலும் ஆண் குழந்தை பிறக்க கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்று கூறி திருமணம் நடந்த நாளில் இருந்தே அந்த பெண்ணை, கணவரின் தாய் துன்புறுத்தியபடி இருந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கு 2014-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்ததது.

    இதனால் அந்த பெண்ணிடம் கணவரின் குடும்பத்தினர் துன்புறுத்துவது போன்றே நடந்துள்ளனர். ஆனவே ஆண் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்று கூறி தனது மாமியார் துன்புறுத்தியதாக அந்த பெண், கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் அந்த பெண்ணின் மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன், ஆண் குழந்தையை பிரத்யேகமாக பெற்றெடுக்க வேண்டும் என்று ஒரு பெண்ணை கோருவது ஒழுக்கக் கேடானது என்று கருத்து தெரிவித்தார்.

    மேலும் பெண் குழந்தைகள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பெண்கள் தான் பூமிக்கு உயிர் கொடுக்கிறார்கள் என்று கூறிய அவர், சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்மனுக்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    • 202 ஒப்பந்த தொழிலாளர்களை நீக்கி விட்டு, அந்த இடங்களில் புதிய தொழிலாளர்களை நியமிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
    • புதிதாக ஊழியர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் சங்கத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.

    சென்னை:

    ரெயில்வே நிர்வாகத்தால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 202 உதவியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய கோரி தட்சிண ரெயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், கோரிக்கையை நிராகரித்து, கடந்த டிசம்பர் 19-ந்தேதி உத்தரவிட்டது.

    இந்த 202 ஒப்பந்த தொழிலாளர்களை நீக்கி விட்டு, அந்த இடங்களில் புதிய தொழிலாளர்களை நியமிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

    இந்நிலையில் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என கடந்த டிசம்பர் 20-ந்தேதி உத்தரவிட்டது.

    இதற்கிடையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, அவர்களை பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தட்சிண ரெயில்வே ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு, நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் கும ரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 202 ஊழியர்களுக்கு பதிலாக புதிய ஒப்பந்த ஊழியர்களை நியமித்தால், அது இந்த வழக்கை பயனற்றதாக்கி விடும் என்பதால், புதிதாக ஊழியர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் சங்கத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே நிர்வாகம் தரப்பில், மனுதாரர் சங்க உறுப்பினர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பதில் நியமிக்கப்பட உள்ளவர்களின் தேர்வு நடவடிக்கைகள் 2023-ம் ஆண்டு மார்ச் மாதமே தொடங்கிவிட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற மனுதாரர்கள் கோரிக்கையை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் நிராகரித்துள்ளதால், அவர்களை நீக்கி விட்டு, புதிய ஒப்பந்த ஊழியர்கள் 60 நாட்களுக்கு என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    ரெயில்வே நிர்வாகம் தரப்பில் முன் வைக்கப்பட்ட இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற உத்தரவை ரெயில்வே நிர்வாகம் மீறியுள்ளதாக கூறினர்.

    பின்னர், புதிய ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், மருத்துவமனைகளில் உதவியாளர்கள் பற்றாக்குறை இருந்தால், அந்த இடங்களில், மனுதாரர் சங்க உறுப்பினர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி மறுநியமனம் வழங்கினால், அதன் மூலம் அவர்களுக்கு எந்த உரிமையும் கோர முடியாது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, ரெயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 3-வது வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

    • புகாரின் அடிப்படையில் அவரை விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீசு அனுப்பினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி சுரேஷ்கோபி மீது 35 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ்கோபி. இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மேல்சபை எம்.பி.யான இவர் கடந்த அக்டோபர் மாதம் கோழிக்கோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது ஒரு தனியார் டி.வி. பெண் நிருபரின் தோளில் தொட்டு பேசி உள்ளார். அந்த பெண் நிருபர் விலகிய போதும், மீண்டும் அவரை சுரேஷ் கோபி தொட்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அந்த பெண் நிருபர், கோழிக்கோடு நடக்காவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சுரேஷ்கோபி மீது 35 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தனது செயலுக்கு சுரேஷ் கோபி வருத்தம் தெரிவித்தார்.

    இருப்பினும் புகாரின் அடிப்படையில் அவரை விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீசு அனுப்பினர். அதன்பேரில் சுரேஷ்கோபி, நடக்காவு போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு சுரேஷ்கோபி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த மனுவில் அரசின் அனுமதியை ஐகோர்ட்டு கேட்டுள்ளது.

    • விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
    • போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

    சென்னை:

    புதுச்சேரி முன்னாள் போக்குவரத்து அமைச்சர் கல்யாண சுந்தரம் . இவர் கடந்த 2011-ம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை நடத்திய பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார் இந்த தேர்வில் தனித் தேர்வலராக அவர் பங்கேற்றார். அப்போது இவருக்கு பதில் வேறு ஒருவர் தேர்வை எழுதியதாக கூறப்பட்டது.

    இது குறித்து விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு சிறை தண்டனை வழங்கியது. இதனால் அவர் அமைச்சர் பதவியை இழந்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட கோர்ட்டு அவரை விடுதலை செய்தது. இதை எதிர்த்து விழுப்புரம் போலீசார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று பிறப்பித்தார்.

    போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

    சண்முகசுந்தரம் அமைச்சராக இருந்த போது என்.ஆர்.காங்கிரசில் இருந்தார். தற்போது காலாபட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

    • நாகப்பட்டினம் மாவட்ட கோர்ட்டு, மோசசின் சொத்தில் அவரது தாயாருக்கும் பங்கு உள்ளது என்று தீர்ப்பு அளித்தது.
    • சொத்தில் மனைவிக்கு 3-ல் ஒரு பகுதியில் மீதமுள்ளவை குழந்தைகளுக்கும்தான் தரப்பட வேண்டும்.

    சென்னை:

    கிறிஸ்தவ வாரிசுரிமை சட்டத்தின்படி இறந்த மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு கிடையாது என்று தெளிவுப்படுத்தி சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

    நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பவுலின் இருதய மேரி. இவரது மகன் மோசஸ். இவருக்கும், அக்னஸ் என்கிற கற்பக தேவிக்கும் கடந்த 2004-ல் திருமணம் நடந்தது. கற்பக தேவி கிறிஸ்தவ மதத்திற்கு மாறி மோசசை திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு மோசஸ் இறந்துவிட்டார். அவர், தனது சொத்து குறித்து எந்த உயிலையும் எழுதிவைக்கவில்லை.

    இதையடுத்து, மோசசின் சொத்துகளில் பங்கு கேட்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நாகப்பட்டினம் மாவட்ட கோர்ட்டு, மோசசின் சொத்தில் அவரது தாயாருக்கும் பங்கு உள்ளது என்று தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அக்னஸ் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் சி.முனுசாமி, ''இந்திய வாரிசுரிமை சட்டத்தில், கிறிஸ்தவர்களுக்கான சட்டம் பிரிவு 33 மற்றும் 33-ஏயில் மகன் தனது மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு இறந்துவிட்டால், அவரது சொத்தில் மனைவிக்கு 3-ல் ஒரு பகுதியில் மீதமுள்ளவை குழந்தைகளுக்கும்தான் தரப்பட வேண்டும். தாய்க்கு எந்த பங்கும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது'' என்று வாதிட்டார்.

    மோசசின் தாய் பவுலின் சார்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த ஐகோர்ட்டு உதவும் விதமாக வக்கீல் பி.எஸ்.மித்ரா நேஷாவை நியமித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அவர், ''கிறிஸ்தவ வாரிசுரிமை சட்டம் பிரிவு 42-ன்படி கணவர் இறந்துவிட்டால் அவரின் விதவை மனைவி, குழந்தைகளுக்குத்தான் சொத்தில் பங்கு உண்டு. மனைவியோ, குழந்தைகளோ இல்லாதபட்சத்தில் தந்தைதான் மகனின் சொத்துக்கு வாரிசு ஆவார். தந்தையும் இல்லையென்றால் தாய், சகோதர, சகோதரிகள் வாரிசுகளாவார்கள் என்று விளக்கம் அளித்தார்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தீர்ப்பில், ''இந்த வழக்கில் மகனின் சொத்தில் தாய் பங்கு கேட்பதற்கான கேள்வியே எழவில்லை. கிறிஸ்தவ வாரிசுரிமைச் சட்டத்தின்படி, இறந்தவரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்குத்தான் சொத்தில் பங்கு உள்ளது என்றும், தாய் பங்கு கேட்க முடியாது என்றும் ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு (ஓய்வு பெற்ற நீதிபதி வி.பார்த்திபன்) 2021-ம் ஆண்டே தீர்ப்பு அளித்துள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் நாகை மாவட்ட நீதிபதி, இந்த ஐகோர்ட்டு தீர்ப்பையும், வாரிசுரிமை சட்டத்தையும் கவனிக்காமல் உத்தரவிட்டுள்ளார். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்கிறோம். இந்த ஐகோர்ட்டுக்கு உதவிய வக்கீல் மித்ரா நேஷாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று கூறியுள்ளனர்.

    • ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் பயிற்சி மற்றும் வெகுஜன ஒத்திகைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
    • அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளி சிராயின்கீழ் சர்க்கரா தேவி கோவில். திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த கோவில் வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் ஆயுதப்பயிற்சி உள்ளிட்ட சில நிகழ்வுகள் நடத்துவதாக தெரிகிறது.

    இந்நிலையில் சிராயின்கீழ் பகுதியை சேர்ந்த வியாசன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் சர்க்கராதேவி கோவில் வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் பயிற்சி மற்றும் வெகுஜன ஒத்திகைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் பயிற்சியால் பக்தர்கள் சிரமப்படுவதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவ டிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தனர்.

    அந்த மனு கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சர்க்கரா தேவி கோவில் வளாகத்தில் ஆயுதப்பயிற்சி மற்றும் வெகுஜன ஒத்திகைகள் எதுவும் நடத்தக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டனர்.

    • மனுவை விசாரித்த நீதிபதிகள் மது விற்பனை நேரத்தை அரசு குறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
    • நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ரமேஷ் மீண்டும் கோர்ட்டில் முறையிட்டார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை செயல்படுகிறது.

    இந்த மது விற்பனை நேரத்தை குறைக்க கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், 'மதுபான விற்பனை நேரத்தை மதியம் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை குறைக்க வேண்டும் என்றும் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் மது வாங்குவோருக்கு உரிய அடையாள அட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மது விற்பனை நேரத்தை அரசு குறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனாலும் இது நடைமுறைக்கு இன்னும் வரவில்ல.

    இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ரமேஷ் மீண்டும் கோர்ட்டில் முறையிட்டார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் உள்ளதா? என்பதை உதவி சொலி சிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன் தலைமையிலான குழுவினர் டாஸ்மாக் கடைகளில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவுகளை பிறப்பித்தனர்.

    இதுபற்றி அக்டோபர் 23-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தும் வகையில், மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைக்க அரசு ஆலோசித்து வருகிறது. அனேகமாக மதியம் 2 மணியில் இருந்து 10 மணி வரை கடை திறக்கும் நேரத்தை மாற்றி அமைக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான சாதக, பாதகங்களை அரசு விரிவாக ஆலோசித்து வருகிறது.

    • கோர்ட்டு சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிறிய அவசர விளக்கு வெளிச்சத்தில் நீதிபதி வழக்குகளை விசாரித்தார்.
    • என்.எல்.சி., போராட்டம் தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டபோதும், இதுபோலத் தான் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.தண்டபாணி இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். காலை 11.35 மணிக்கு மின்சார வினியோகம் அவரது கோர்ட்டு அறையில் திடீரென தடைப்பட்டது. இதனால் கோர்ட்டு அறை இருளில் மூழ்கியது. இதனால் கோர்ட்டு அறையின் கதவு திறந்து வைக்கப்பட்டது.

    மின்சாரம் இல்லாததால் ஏ.சி.யும் வேலை செய்யவில்லை.கோர்ட்டு சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிறிய அவசர விளக்கு வெளிச்சத்தில் நீதிபதி வழக்குகளை விசாரித்தார்.

    நீண்ட நேரம் மின்சாரம் வராததால் ஒரு கட்டத்தில், என் கோர்ட்டில் மட்டும்தான் மின்சாரம் இல்லையா? வேறு கோர்ட்டுகளில் உள்ளதா? வெளிநாட்டு சதி எதுவும் உள்ளதா? என்று நீதிபதி கிண்டலாக கேள்வியும் எழுப்பினார். கோர்ட்டு அதிகாரியும், வக்கீல்களும், "பல கோர்ட்டுகளில் மின்தடை ஏற்பட்டது. பின்னர், மின்சாரம் வந்துவிட்டது. ஆனால் உங்கள் கோர்ட்டில் மட்டும் மின்சாரம் தடைபட்டுள்ளது என்றனர்.

    இதை கேட்டு சிரித்துக்கொண்டு வியர்வையுடன் வழக்கை விசாரிக்க தொடங்கினார். சுமார் 12 மணியளவில் மின் வினியோகம் வழங்கப்பட்டது.

    ஏற்கனவே, என்.எல்.சி., போராட்டம் தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டபோதும், இதுபோலத் தான் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால், பல மணி நேரம், இருளில் வழக்கை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

    ×