என் மலர்
நீங்கள் தேடியது "தாமிரபரணி ஆறு"
- பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.
- 2-வதாக ஆற்றில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற வேண்டும்.
நெல்லை:
தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தக்கோரி தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராஜ், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் தாமிரபரணி ஆற்றின் நிலையை விரிவாக ஆய்வு செய்து பொருத்தமான சீரமைப்பு நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்காக ராஜஸ்தானை சேர்ந்த நீர் பாதுகாப்பு நிபுணர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர சிங்கை ஆணையராக நியமித்தனர்.
இந்த நிலையில் அவர் வழக்கு தொடுத்த முத்தாலங்குறிச்சி காமராசுடன் நெல்லைக்கு வந்து தாமிரபரணி ஆற்றில் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை ஆற்று நீர் மாசுபடும் இடங்கள், அதனை சரி செய்ய மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகள், பாதாள சாக்கடைகள் கழிவு நீர் சென்று சேரும் ராமையன்பட்டி பகுதி உள்ளிட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் நகர் பகுதிக்குள் தாமிரபரணி பாய்ந்தோடும் சிந்துபூந்துறை பகுதியில் கழிவுநீர் நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கலக்கும் இடங்களை ஆய்வு செய்தார். அங்கிருந்த பொதுமக்களிடம் பாதிப்புகள் குறித்து விளக்கம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நதியை தூய்மைப்படுத்த வழிமுறைகளை ஆராய ஐகோர்ட்டு எனக்கு பொறுப்பு வழங்கியுள்ளது. நதி மிகுந்த மாசடைந்து இருப்பதை கண்டேன். உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் நடைபெற்றுள்ள சுத்தப்படுத்தும் பணிகளில் ஊழல் ஏற்பட்டு விட்டது. பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.
மேலும் நீதிமன்றத்திற்கு 3 பரிந்துரைகளை செய்ய இருக்கிறேன். முதலாவதாக ஆறு எங்கு உற்பத்தியாகி எந்தெந்த பகுதிகள் வழியாக எங்கு வரை செல்கிறது, அதில் எந்தெந்த இடங்களில் கழிவுநீர் கலக்கிறது, ஆற்றின் திசைகள் மாறுபாடு ஏற்பட்டுள்ளதா? என்பதை டிஜிட்டல் மேப்பிங் செய்ய வேண்டும்.
2-வதாக ஆற்றில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற வேண்டும். பாகுபாடு இன்றி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் தாமிரபரணி ஆறு பாதுகாப்பு திட்டத்திற்கு உடனடியாக ஒரு சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். அவரது கட்டுப்பாட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மக்கள்தொகை மற்றும் தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் மாசு அதிகரிக்கிறது. சுத்தமான நதி நீரில் கழிவுநீரை கலப்பது மிகப்பெரிய தவறு. பாபநாசம் முதல் கடல் வரை வாழும் மக்களிடம் 'நதி அறிவு' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் நதியை தங்கள் ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாக கருதினால் மட்டுமே தூய்மைப்பணிகள் முழுமை பெறும்.
மிகக்குறைந்த மழையுள்ள ராஜஸ்தானில் என்னால் 23 நதிகளை மீட்க முடிந்திருக்கும் போது, நல்ல மழையுள்ள இந்த பகுதியில் தாமிரபரணியை மீட்பது மிகவும் எளிதான காரியம். இதற்கு நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிர்வாகம் என அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
தாமிரபரணி நதி குறித்த எனது முழுமையான ஆய்வறிக்கையை இன்னும் 20 முதல் 30 நாட்களுக்குள் ஐகோர்ட்டில் சமர்ப்பிக்க உள்ளேன். அதன் மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றார்.
அவருடன் உதவியாளர் பாலாஜி, மொழிபெயர்ப்பாளர்கள் வினோத், இளங்கோ, சமூக ஆர்வலர் கிருஷ்ண குமார், நம் தாமிரபரணி நல்லபெருமாள், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு தாமிரபரணி பாதுகாப்பு குறித்து ஆலோசனை செய்தனர்.
- ராஜஸ்தானை சேர்ந்த நீர் பாதுகாப்பு நிபுணர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர சிங் ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
- ராஜஸ்தானில் வறண்ட நீரோடைகளையும் ஆறுகளையும் ராஜேந்திர சிங் மீட்டெடுத்துள்ளார்.
மதுரை:
தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தக் கோரி தூத்துக்குடி சேர்ந்த காமராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.
இந்த உத்தரவுகளை நிறைவேற்றாததால் நெல்லை மாநகராட்சி ஆணையர் ரூபேஷ்குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மதனசுதாகர் உள்பட 12 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு, "தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு ஓராண்டுக்கு ஆண்டுக்கு மேலாகியும் நதியை தூய்மைப்படுத்தும் பணிகள் திருப்தியளிக்கவில்லை. நதியை தூய்மைப்படுத்துவது தொடர்பான உறுதியான திட்டம் குறித்து நீதிமன்றத்தில் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை.
இதனால் தாமிரபரணி ஆற்றின் நிலையை விரிவாக ஆய்வு செய்து பொருத்தமான சீரமைப்பு நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்காக ராஜஸ்தானை சேர்ந்த நீர் பாதுகாப்பு நிபுணர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர சிங் ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
ராஜஸ்தானில் வறண்ட நீரோடைகளையும் ஆறுகளையும் ராஜேந்திர சிங் மீட்டெடுத்துள்ளார். அவருக்கு உள்ள நேரடி அனுபவத்தின் மூலம் அவரால் தாமிரபரணியை தூய்மைப்படுத்த சாத்தியமான மற்றும் செயல்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை முன்வைக்க முடியும் என்று நம்புகிறோம். அவரிடமிருந்து வெளிவரும் பரிந்துரைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு தாமிரபரணி ஆறு அதன் தூய்மையான நிலையை மீண்டும் பெறுவதற்காக முழுமையாகச் செயல்படுத்தப்படும். இப்பணிக்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலாஜி ரங்கராமானுஜத்தின் உதவியை பெற ராஜேந்திர சிங்குக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர்.
- சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை கண்டித்து அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
- தாமிரபரணி ஆற்றை காப்பாற்ற முடியாமல் போனால் அது வெட்கக்கேடு.
நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கும் பகுதியை பா.ம.க. தலைவர் அன்புமணி ஆய்வு செய்தார்.
சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை கண்டித்து அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மக்களுடனான கலந்துரையாடலுக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் நதிக்கரையில் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.
அப்போது அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* தாமிரபரணி ஆற்றில் நாள்தோறும் 200 டன் திடக்கழிவுகள் கலக்கின்றன.
* நீதிபதிகள் நேரில் வந்து ஆய்வு செய்த போதிலும் இன்னும் அதே நிலை தொடர்கிறது.
* தாமிரபரணி ஆற்றை காப்பாற்ற முடியாமல் போனால் அது வெட்கக்கேடு.
* தாமிரபரணியை கூவம் ஆக்கி விடாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆழ்வார்திருநகரி அருகே தென்திருப்பேரையை அடுத்த மாவடிப் பண்ணையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக காரில் வந்துள்ளனர்.
- இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள ஒய்யாங்குடி பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ்.
இவர் கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கிளாடிஸ் ரேபேக்கா (வயது 50). இவர்கள் குடும்பத்துடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகின்றனர்.
சொந்த ஊரான ஒய்யாங்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு லாரன்ஸ் தனது குடும்பத்தினருடன் ஊருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை ஒய்யாங்குடியில் இருந்து லாரன்ஸ், அவரது மனைவி கிளாடிஸ் ரேபேக்கா மற்றும் கிளாடிஸ் ரேபேக்காவின் தங்கையான சென்னை நியூ பெருங்களத்தூரை சேர்ந்த ஸ்டெபி புஷ்பா செல்வின், அவரது கணவர் சரண், சிறுமி அவினா (5) மற்றும் உறவினர்கள் என மொத்தம் 7 பேர் ஆழ்வார்திருநகரி அருகே தென்திருப்பேரையை அடுத்த மாவடிப் பண்ணையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக காரில் வந்துள்ளனர்.
ஆற்றில் குளிப்பதற்காக கிளாடிஸ் இறங்கினார். அவருடன், அவரது தங்கை மகளான அவினாவும் ஆற்றில் இறங்கி குளித்தனர்.
இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இதில் இருவரும் ஆற்று நீரில் மூழ்கினர்.
உடனே கரையில் இருந்த உறவினர்கள் ஆற்றுக்குள் இறங்கி இருவரையும் மீட்க முயற்சித்தனர். ஆனால் இருவரும் கிடைக்கவில்லை. சிறிது நேர தேடலுக்கு பிறகு இருவரையும் ஆற்றுக்குள் இருந்து மீட்டு அருகே உள்ள தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு அழைத்து சென்றனர்.
இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டனர் என்று தெரிவித்தனர். இதைக்கேட்ட அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆழ்வார்திருநகரி போலீசார் பிரேத பரிசோதனைக்காக இருவரது உடல்களையும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+2
- மக்களின் அன்றாட தேவைகள் மற்றும் பிரச்சினை களை எடுத்துக் கூறுவதற்கு கிராம சபை கூட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன
- நெல்லை மாநகராட்சி முழுவதும் 24 மணி நேரமும் குடிநீர் தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நெல்லை:
மக்களின் அன்றாட தேவைகள் மற்றும் பிரச்சினை களை எடுத்துக் கூறுவதற்கு கிராம சபை கூட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பகுதிசபா கூட்டம்
குடியரசு தினம், உழைப்பாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் மார்ச் 22 மற்றும் நவம்பர் 1-ந் தேதிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
கிராம சபை கூட்டம் போல நகர உள்ளாட்சிகளிலும் மக்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்று நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிலும் பகுதி சபாக்களை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஒவ்வொரு உள்ளாட்சி மன்றமும் வார்டு கமிட்டி என்ற குழுவை ஒவ்வொரு வார்டுக்கும் அமைத்து கொள்ள முடியும்.
அந்த வார்டின் கவுன்சிலரையே தலைவராக வார்டு கமிட்டிக்கு நியமிக்க வேண்டும். அது போலவே வார்டில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் பகுதி சபை என்ற 'ஏரியா சபா'வையும் உள்ளாட்சி மன்றம் நிறுவிக்கொள்ளலாம்.
அந்த வார்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள், அந்த ஏரியா சபையின் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்கள்.
கலெக்டர், எம்.எல்.ஏ.
இந்நிலையில் உள்ளாட்சி தினத்தையொட்டி இன்று நகராட்சி மற்றும் மாநகராட்சி களில் முதல்முறையாக பகுதிசபா கூட்டம் நடைபெற்றது.நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 40-வது வார்டு பகுதியான பாளை அன்புநகரில் நடைபெற்ற பகுதிசபா கூட்டத்திற்கு கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். இதில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-
24 மணி நேரமும் தண்ணீர்
நெல்லை மாநகராட்சி முழுவதும் 24 மணி நேரமும் குடிநீர் தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தொலை நோக்கு பார்வையில் நெல்லை மாநகரத்தை தூய்மையான நகரமாக மாற்ற முதல் கட்டமாக 5 வார்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நிலத்தடி நீரை மேம்படுத்து வதற்காக மாநகராட்சி பகுதிகளில் உள்ள 40-க்கும் மேற்பட்ட நீர் நிலைகளை கண்டறிந்து அவற்றை மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கால்வாய் தூர்வாரும் பணி
மாநகரப் பகுதிகளில் உள்ள பாளையங்கால்வாய், கோடகன் கால்வாய், நெல்லை கால்வாய் ஆகியவை தூர்வாரப்பட்டு குடியிருப்புகளில் இருந்து குப்பைகளை கால்வாயில் கொட்டாத வண்ணம் கம்பி வேலிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாநகர பகுதிகளில் பெண்களின் பாதுகாப்புக்காக அனைத்து பகுதிகளிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மாநகரப் பகுதியில் உள்ள வார்டு மக்களின் குறைகளை நேரடியாக ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பாளைக்கு குடிநீர்
பின்னர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
கூட்டத்தில் பொது மக்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குடிதண்ணீர் பிரச்சினையை தீர்க்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் .
இதற்காக தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் இருந்து குடித்தண்ணீர் கொண்டு வரும் திட்டம் மாவட்ட நிர்வாகம், மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த திட்டம் வந்தால் பாளையங்கோட்டை பகுதியில் பல வார்டுகள் பயன்பெறும்.
ரூ. 512 கோடியில் பாதாளசாக்கடை திட்டம் பகுதி- 3 விரைவில் வருகிறது. மக்களின் அடிப்படை பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்படும் என தெரிவித்தார்.
மேயர், துணை மேயர்
அதேபோல் பழைய பேட்டையில் நடைபெற்ற பகுதிசபா கூட்டத்தில் மேயர் சரவணன், துணைமேயர் ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அனைத்து வார்டு பகுதியிலும் நடைபெற்ற பகுதிசபா கூட்டத்தில் அப்பகுதியின் குறைகள் எடுத்துரைக்கப்பட்டு அதனை தீர்க்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- மூதாட்டி ஒருவர் ஆற்றின் கரையில் இருந்த சுவற்றில் ஏறி எந்தவித பயமும் இன்றி ஆற்றுக்குள் டைவ் அடிப்பது போன்று காட்சிகள் பதிவாகி உள்ளது.
- நெல்லை பெண்களின் இந்த துணிச்சல் தேசிய அளவில் வைரலாகி வருகிறது.
கல்லிடைக்குறிச்சி:
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் வற்றாத ஜீவநீதியான தாமிரபரணி ஆறு பாரம்பரிய ஆற்றங்கரை நாகரீகத்தை கொண்டது.
இந்த ஆற்றில் நெல்லை மக்கள் நாள்தோறும் குளித்து மகிழ்வது வழக்கம், இந்த நிலையில் கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் வயதான பெண்கள் சேலை அணிந்தபடி 'டைவ்' அடித்து ஆனந்தமுடன் குளித்து மகிழும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மூதாட்டி ஒருவர் ஆற்றின் கரையில் இருந்த சுவற்றில் ஏறி எந்தவித பயமும் இன்றி ஆற்றுக்குள் டைவ் அடிப்பது போன்று காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை தற்போது மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரியா சாகு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் புடவை அணிந்த இந்த வயதான பெண்கள் சிரமமின்றி குதிப்பதை பார்த்து வியந்தேன் என பெருமையோடு அவர் பதிவிட்டுள்ளார். நெல்லை பெண்களின் இந்த துணிச்சல் தேசிய அளவில் வைரலாகி வருகிறது.
- மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- அணையில் இருந்து 407.25 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இன்று காலை வரை அதிகபட்சமாக அம்பையில் 49 மில்லி மீட்டரும், கருப்பா நதி பகுதியில் 35 மில்லி மீட்டரும், ஆய்க்குடியில் 32 மில்லி மீட்டரும், கடம்பூரில் 40 மில்லி மீட்டரும் மழை பதிவானது.
இதே போல் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, நாங்குநேரி, கடனாநதி பகுதி, ராமநதி பகுதி குண்டாறு பகுதி, கொடு முடியாறு பகுதி, அடவி நயினார் அணைக்கட்டு, சங்கரன்கோவில், சிவகிரி, தூத்துக்குடி, கயத்தாறு, கழுகுமலை, ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் வைப்பாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
ஏற்கனவே பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தாமிர பரணி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப் படுகிறது.
இந்நிலையில் முக்கூடல், அரியநாயகிபுரம் அணைக்கட்டை கடந்து தாமிரபரணி ஆற்றில் விநாடிக்கு 5,400 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவை குண்டம் அணை கட்டு பகுதிகள் கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிர பரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் நெல்லை மாவட்ட தாமிரபரணி பகுதிகளை கடந்து தண்ணீர் செல்வதால் நெல்லை மாவட்டத்திலும் தாமிர பரணி ஆற்றுக்கு செல்வோர் கவனமாக இருக்குமாறும், முடிந்த அளவு கரையோரம் செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக 143 அடி கொள்ளளவு கொண்ட பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 120.70 அடியாக உள்ளது. அணைக்கு 870.509 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 407.25 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதே போல் மணி முத்தாறு அணையின் நீர்மட்டம் 86.30 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 133.89 கன அடியாகவும் உள்ளது. இதே போல் தென்காசி மாவட்ட அணைகளை பொறுத்த வரையில் குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36.10 அடியை நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. அடவி நயினார் அணை நீர்மட்டம் 113.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 69.88 அடியாகவும், ராமநதி அணை 82 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 2 அடியே உள்ளது. கடனா நதி அணை 81.40 அடியாக உள்ளது.
- ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால், தாமிரபரணியில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தென்இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் எதிரொலியால், தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கனமழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு சுமார் 15000 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
மேலும், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால், தாமிரபரணியில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி கரையோர கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள், ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லவோ கூடாது என நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் தற்போது 87.8 அடியாக உள்ளது.
- தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- சென்னை-குருவாயூர், திருச்சி-திருவனந்தபுரம், நாகர்கோவில்-கோவை ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருதால் ஒருசில இடங்களில் ரெயில்களை இயக்க முடியாத அளவிற்கு தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் தென் மாவட்ட பகுதிகளில் இருந்து ரெயில்கள் சென்னைக்கு இயக்க முடியவில்லை.
இதே போல சென்னையில் இருந்து மதுரைக்கு மேல் ரெயில்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
எழும்பூரில் இருந்து இன்று காலை 9.40 மணிக்கு கொல்லம் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பகல் 3 மணிக்கு நெல்லைக்கு புறப்படக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து எழும்பூருக்கு புறப்பட முடியாத நிலை இருந்ததால் ரத்து செய்யப்பட்டன.
அதே போல மாலை 4.05 மணிக்கு புறப்படக்கூடிய திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்தாகிறது. இந்த ரெயில் திருச்செந்தூரில் இருந்து எழும்பூருக்கு வரவில்லை. அதனால் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- தாமிரபரணி கரையோரம் வசித்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
- நெல்லையில் இருந்து நாகர்கோவில், சாத்தான்குளம், ராதாபுரம், திசையன்விளை, கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட தொடங்கின.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் சுமார் 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த அதி கனமழையின் காரணமாக மாநகர பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. கிட்டத்தட்ட ஒரு தீவு போல் மாநகர பகுதி முழுவதும் காட்சியளித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை தொடங்கி நேற்று மதியம் வரையிலும் பெய்த மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடியது. ஒருகட்டத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கும் வெள்ள நீர் புகுந்தது. மாநகர பகுதியில் உள்ள சுலோச்சன முதலியார் பாலம் உள்ளிட்டவற்றை தொட்டபடி வெள்ளம் சென்றன.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் சற்று வெள்ளம் குறைந்து செல்வதை காணலாம்.
இதன்காரணமாக தாமிரபரணி கரையோரம் வசித்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த வெள்ளம் காரணமாக மாநகர பகுதிக்குள் முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தென்காசி, நாகர்கோவில், மதுரை, பாபநாசம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் இருந்தும் மாநகர பகுதிக்குள் வரும் சாலைகள் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று மதியத்திற்கு பிறகு மழை குறைந்ததால் வெள்ளம் மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. இன்று காலையில் மாநகரில் பிரதான நெடுஞ்சாலைகளில் வெள்ளம் வடிந்தது.
நாகர்கோவிலில் இருந்து வரும்போது டக்கரம்மாள்புரம், கே.டி.சி.நகர் பகுதி, மதுரையில் இருந்து வரும்போது தாழையூத்து பகுதி, தச்சநல்லூர் வழியாக சங்கரன்கோவில் சாலை, தென்காசியில் இருந்து வரும்போது பழையபேட்டை, கண்டியப்பேரி, வழுக்கோடை, தொண்டர் சன்னதி, ஆர்ச், ஸ்ரீபுரம் சாலை, சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், வண்ணார்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு பைபாஸ் சாலைகளில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் அனைத்தும் முற்றிலுமாக வடிந்தது.
அதேநேரத்தில் சந்திப்பு பஸ் நிலையத்தில் நேற்று சுமார் 7 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி கிடந்தது. மழை வெள்ளம் செல்வதற்கு வழியில்லாமல் இருந்த காரணத்தினால் ரெயில் நிலையம் செல்லும் சாலை, மதுரை சாலை, ராஜாபில்டிங் சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் மூழ்கின. சந்திப்பு பஸ் நிலையத்தில் முதல் தளத்தை தொடும் வகையில் மழை வெள்ளம் தேங்கி கிடந்தது. இந்த வெள்ளமானது இன்று அதிகாலை 5 மணிக்கு 4 உயரத்திற்கு குறைந்தது. தொடர்ந்து காலை 9.30 மணி அளவில் முற்றிலுமாக தணிந்தது.
சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடைமேடைகள் முற்றிலுமாக மூழ்கிவிட்டதால் இன்று 2-வது நாளாக ரெயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை. சந்திப்பு பகுதியை ஒட்டி அமைந்துள்ள சிந்துபூந்துறை, மீனாட்சிபுரம், சி.என்.கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று படகு மூலமாக பொதுமக்கள் மீட்கப்பட்டனர். சில இடங்களில் மாடிகளில் இருந்த மக்களுக்கு படகு மூலம் உணவு வழங்கப்பட்ட நிலையில் இன்று அந்த பகுதிகளிலும் முற்றிலுமாக வெள்ளம் வடிந்துவிட்டது. ஆனால் டவுனை பொறுத்தவரை வெள்ளம் வடியவில்லை. டவுனில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட குறுகலான தெருக்களில் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்த நிலையில் அவை வெளியேறாமல் தொடர்ந்து தேங்கி கிடக்கிறது. டவுன் காட்சி மண்டபம் பகுதி, அங்கிருந்து சந்தி பிள்ளையார் கோவில் செல்லும் சாலைகளில் இடுப்பு அளவுக்கு மழைநீர் தேங்கி கிடக்கிறது.
பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் அதாவது பாளை பஸ் நிலையம், வ.உ.சி. மைதானம், ஆயுதப்படை சாலை, ஐகிரவுண்டு சாலை, அன்பு நகர், பெருமாள்புரம், பொதிகை நகர், ஆர்.டி.ஓ. அலுவலகம் சாலை, ரக்மத் நகர் 60 அடி சாலை, தியாகராஜநகர், மாருதி நகர், டி.வி.எஸ் நகர், சீனிவாச நகர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நேற்று தேங்கிய வெள்ளம் முற்றிலுமாக வடிந்ததை பார்க்க முடிந்தது.
இன்று வெள்ளம் வடிந்த நிலையில் 2 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் போக்குவரத்து மெல்ல மெல்ல ஓட தொடங்கி உள்ளது. மாநகர பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் மற்றும் அரசு பஸ்கள் ஒரு சில ஓட தொடங்கியது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடையம் செல்லும் பஸ்கள் சேரன்மகாதேவி, சங்கன்திரடு, முக்கூடல், பொட்டல்புதூர் வழியாக கடையம் செல்லும் வகையில் இயக்கப்பட்டது. பாபநாசம் செல்லும் பஸ்கள் வழக்கமாக செல்லும் வழித்தடமான சேரன்மகாதேவி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் வழியாக செல்கின்றன.
நெல்லையில் இருந்து நாகர்கோவில், சாத்தான்குளம், ராதாபுரம், திசையன்விளை, கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட தொடங்கின. மேலும் மதுரை, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் வெள்ளம் அதிக அளவு செல்வதாலும், அந்த பாலம் சற்று பலமிழந்து காணப்படுவதாலும் இரு புறங்களிலும் பேரிகார்டுகள் வைத்து சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் பஸ்கள் 4 வழிச்சாலை வழியாகவோ அல்லது சந்திப்பு, டவுன் ஆர்ச், நயினார்குளம் மார்க்கெட் வழியாக தச்சநல்லூர் சென்று அங்கிருந்து தாழையூத்து வழியாக நான்கு வழிச்சாலையில் செல்கிறது. தென்காசிக்கு இன்னும் பஸ் சேவை தொடங்கப்படவில்லை.
நெல்லை புதிய பஸ் நிலையத்தின் எதிரே உள்ள எஸ்.டி.சி கல்லூரி சாலை, பஸ் நிலையம் பின்புறம் உள்ள சேவியர் காலனியில் நீர் முற்றிலுமாக வடிந்துள்ளது. வடக்குப் புறவழிச்சாலை வாகனங்கள் செல்லும் வகையில் ஏதுவாக உள்ளன. ஆனால் இந்த சாலை வழியாக சங்கரன்கோவில் பஸ்கள் இவ்வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை. சந்திப்பு செல்லும் பஸ்கள் வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. உழவர் சந்தைகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. ஒரு சில பகுதிகளில் மட்டும் மின்சாரம் இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை மாநகர் மற்றும் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. குறிப்பாக ஒரு ஆண்டு முழுவதும் காயல்பட்டினத்தில் 95 சென்டிமீட்டர் மழை மட்டுமே பெய்யும் நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 93 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
தூத்துக்குடி மாநகரில் வழக்கமான மழையின்போது பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நிலையில், கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் மாநகர பகுதி முழுவதும் தீவாக மாறி உள்ளது. வீடுகளில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு படகு மூலமாகவும், ஹெலிகாப்டர் மூலமாகவும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு மழைநீர் வடிந்து இயல்பு நிலை திரும்ப ஒரு வாரம் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.
மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் தாமிரபரணி ஆற்றில் வந்த வெள்ளத்தின் காரணமாக தீவுபோல் மாறியது. ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், கருங்குளம், ஆழ்வார்தோப்பு, முத்தாலங்குறிச்சி, வல்லநாடு அருகே வசவப்பபுரம், அகரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தது. அந்த பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மின்சார இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. மேலும் நெட்வொர்க் மற்றும் இணைய சேவை பாதிப்பின் காரணமாக செல்போனில் தொடர்பு கொள்ள முடியாத நிலை நிலவி வருகிறது.
- வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டது.
- சுவர் மற்றும் தரை கற்களும் சேதம் அடைந்து காணப்படுகிறது.
தென்காசி:
கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்திருக்கும் குற்றால அருவிகளில் நேற்று முன்தினம் முதல் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று முழுவதும் குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட நிலையில் நேற்று இரவு முதல் மழையின் தாக்கம் குறைந்ததால் தற்போது குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.
மெயின் அருவி பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கினால் மெயின் அருவி மேல் பகுதியில் இருந்து மரத்துண்டுகள், பாறைகள் மற்றும் மண் அடித்து வரப்பட்டுள்ளது. மேலும் அருவி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சுவர் மற்றும் தரை கற்களும் சேதம் அடைந்து காணப்படுகிறது.
வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைய தொடங்கியுள்ளதால் முற்றிலும் குறைந்த பின்னர் அருவிப்பகுதி சுத்தம் செய்யப்பட்டு பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என கூறப்படுகிறது.
- தன்னார்வ தொண்டு அமைப்புகளும் சாப்பாடு, பிரட், பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.
- பால் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பாலகங்கள் முன்பு நீண்ட வரிசையின் நின்று பால் பாக்கெட்டுகள் வாங்கி சென்றனர்.
நெல்லை:
நெல்லையில் பெய்த மிக கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மாநகர பகுதி மற்றும் மாவட்டத்தில் தாமிரபரணி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் முற்றிலுமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு 75 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் சுமார் 3,500 பேர் நேற்று முன்தினம் முதல் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் மாநகர பகுதியில் மட்டும் 12 நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டு வரும் நிலையில் தன்னார்வலர்களும் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு உதவினர். மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தன்னார்வ தொண்டு அமைப்புகளும் சாப்பாடு, பிரட், பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.
இன்று மழை குறைந்துவிட்டதால் வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. சந்திப்பு சிந்துப்பூந்துறை உள்ளிட்ட பகுதியில் படகு மூலம் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வந்தது. சுமார் 20 படகுகள் மூலமாக பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த மழை வெள்ளத்தின் காரணமாக சுமார் 36 கிராமங்கள் மற்றும் 2 பேரூராட்சிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மாநகரில் பொதுமக்களின் தேவைக்காக 10 ஆயிரம் லிட்டர் பால் கூடுதலாக கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. ஆனாலும் பெரும்பாலான இடங்களில் பால் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பாலகங்கள் முன்பு நீண்ட வரிசையின் நின்று பால் பாக்கெட்டுகள் வாங்கி சென்றனர்.






