என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தாமிரபரணி நதி குறித்து 1 மாதத்திற்குள் ஐகோர்ட்டில் ஆய்வறிக்கை- நீர் பாதுகாப்பு நிபுணர் பேட்டி
- பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.
- 2-வதாக ஆற்றில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற வேண்டும்.
நெல்லை:
தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தக்கோரி தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராஜ், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் தாமிரபரணி ஆற்றின் நிலையை விரிவாக ஆய்வு செய்து பொருத்தமான சீரமைப்பு நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்காக ராஜஸ்தானை சேர்ந்த நீர் பாதுகாப்பு நிபுணர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர சிங்கை ஆணையராக நியமித்தனர்.
இந்த நிலையில் அவர் வழக்கு தொடுத்த முத்தாலங்குறிச்சி காமராசுடன் நெல்லைக்கு வந்து தாமிரபரணி ஆற்றில் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை ஆற்று நீர் மாசுபடும் இடங்கள், அதனை சரி செய்ய மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகள், பாதாள சாக்கடைகள் கழிவு நீர் சென்று சேரும் ராமையன்பட்டி பகுதி உள்ளிட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் நகர் பகுதிக்குள் தாமிரபரணி பாய்ந்தோடும் சிந்துபூந்துறை பகுதியில் கழிவுநீர் நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கலக்கும் இடங்களை ஆய்வு செய்தார். அங்கிருந்த பொதுமக்களிடம் பாதிப்புகள் குறித்து விளக்கம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நதியை தூய்மைப்படுத்த வழிமுறைகளை ஆராய ஐகோர்ட்டு எனக்கு பொறுப்பு வழங்கியுள்ளது. நதி மிகுந்த மாசடைந்து இருப்பதை கண்டேன். உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் நடைபெற்றுள்ள சுத்தப்படுத்தும் பணிகளில் ஊழல் ஏற்பட்டு விட்டது. பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.
மேலும் நீதிமன்றத்திற்கு 3 பரிந்துரைகளை செய்ய இருக்கிறேன். முதலாவதாக ஆறு எங்கு உற்பத்தியாகி எந்தெந்த பகுதிகள் வழியாக எங்கு வரை செல்கிறது, அதில் எந்தெந்த இடங்களில் கழிவுநீர் கலக்கிறது, ஆற்றின் திசைகள் மாறுபாடு ஏற்பட்டுள்ளதா? என்பதை டிஜிட்டல் மேப்பிங் செய்ய வேண்டும்.
2-வதாக ஆற்றில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற வேண்டும். பாகுபாடு இன்றி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் தாமிரபரணி ஆறு பாதுகாப்பு திட்டத்திற்கு உடனடியாக ஒரு சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். அவரது கட்டுப்பாட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மக்கள்தொகை மற்றும் தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் மாசு அதிகரிக்கிறது. சுத்தமான நதி நீரில் கழிவுநீரை கலப்பது மிகப்பெரிய தவறு. பாபநாசம் முதல் கடல் வரை வாழும் மக்களிடம் 'நதி அறிவு' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் நதியை தங்கள் ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாக கருதினால் மட்டுமே தூய்மைப்பணிகள் முழுமை பெறும்.
மிகக்குறைந்த மழையுள்ள ராஜஸ்தானில் என்னால் 23 நதிகளை மீட்க முடிந்திருக்கும் போது, நல்ல மழையுள்ள இந்த பகுதியில் தாமிரபரணியை மீட்பது மிகவும் எளிதான காரியம். இதற்கு நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிர்வாகம் என அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
தாமிரபரணி நதி குறித்த எனது முழுமையான ஆய்வறிக்கையை இன்னும் 20 முதல் 30 நாட்களுக்குள் ஐகோர்ட்டில் சமர்ப்பிக்க உள்ளேன். அதன் மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றார்.
அவருடன் உதவியாளர் பாலாஜி, மொழிபெயர்ப்பாளர்கள் வினோத், இளங்கோ, சமூக ஆர்வலர் கிருஷ்ண குமார், நம் தாமிரபரணி நல்லபெருமாள், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு தாமிரபரணி பாதுகாப்பு குறித்து ஆலோசனை செய்தனர்.






