search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thamirabarani river"

    • மாநகர பகுதியில் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடியது.
    • மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதன் காரணமாக அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் பரவலாக மழை பெய்த நிலையில், இன்றும் காலை வரையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    அதன்படி பாபநாசத்தில் 30 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 21 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 12 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. பாபநாசம் அணை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு 2,358 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து வினாடிக்கு 2,547 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணைக்கு 1,728 கனஅடி நீர் வரும் நிலையில் வினாடிக்கு 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதுதவிர கடனா அணையில் இருந்து 303 கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் மொத்தமாக இன்று காலை நிலவரப்படி தாமிரபரணி ஆற்றில் 6 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் ஓடியது. மாநகர பகுதியில் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடியது.


    தற்போது தைப்பூச திருவிழாவிற்காக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு செல்லும் முருக பக்தர்கள் பாதயாத்திரை வரும்போது ஆற்றில் குளித்துவிட்டு செல்கின்றனர். தற்போது ஆற்றில் தண்ணீர் அளவு அதிகரித்து காணப்படுவதால் அங்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில் இன்று காலை முதல் குளிக்க வந்தவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்து திரும்பி அனுப்பி வைத்தனர்.

    மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்டில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. நாலுமுக்கில் அதிகபட்சமாக 8.2 சென்டிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 7.7 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாஞ்சோலையில் 37 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மாவட்டத்தில் களக்காடு, மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி, அம்பை, ராதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காட்சியளிக்கிறது.

    குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பை, கன்னடியன் கால்வாய் பகுதியில் தலா 14 மில்லிமீட்டரும், சேரன்மகா தேவி, மூலக்கரைப்பட்டியில் தலா 3 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் கடனா அணை பகுதியில் 16 மில்லிமீட்டர் மழை பெய்தது. ராமநதி, கருப்பாநதி மற்றும் குண்டாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. தென்காசி, செங்கோட்டை, ஆய்குடியில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மெயினருவியில் அதிக அளவு தண்ணீர் விழுவதால் அங்கு இன்றும் 4-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்டவற்றில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் 26 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று முதல் தொடர்ந்து பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ஏற்கனவே பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம் இன்னும் ஒரு சில இடங்களில் வடியாமல் இருக்கும் நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அப்பகுதியினர் அச்சம் அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் எட்டயபுரம், விளாத்திகுளம், வைப்பாறு, சூரன்குடி ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. சாத்தான்குளம், கோவில்பட்டி, கழுகுமழை, கடம்பூர், கயத்தாறு ஆகிய இடங்களிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    • தாமிரபரணி ஆற்றில் சுமார் 1½ லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த மாதம் பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் சுமார் 1½ லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. மேலும் தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருருப்பதாவது:-

    கனமழை எச்சரிக்கை உள்ளதாலும், நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் மழையாலும், தாமிரபரணி ஆற்றில் அதிகபடியான மழைநீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், உப்பாற்று ஓடை கரையோர பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தாமிரபரணி ஆற்றில் 5000 முதல் 7000 கனஅடி நீர் செல்ல வாய்ப்புள்ளது.
    • பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம். கால்நடைகளையும் இறக்க வேண்டாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.

    மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், நெல்லை மாவட்டம் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * திருநெல்வேலி மாவட்டம் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    * தாமிரபரணி ஆற்றில் 5000 முதல் 7000 கனஅடி நீர் செல்ல வாய்ப்புள்ளது.

    * பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம். கால்நடைகளையும் இறக்க வேண்டாம்.

    * ஒரு சில பகுதிகளில் கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். பெரு வெள்ள அபாயம் எதுவுமில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கனமழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
    • குமரிக்கடல் பகுதியில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

    நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இந்த நிலையில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியிருப்பதாவது:-

    அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை அடுத்து, தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


    அதன்படி, கனமழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    குமரிக்கடல் பகுதியில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

    தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 7000 கனஅடி உபரிநீர் திறந்து விடப்படுவதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

    • பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 11 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

    நெல்லை:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    நெல்லையின் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 11 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. நீர் திறப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்திய பெருங்கடலில் காற்று சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தூத்துக்குடிக்கு இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • நெல்லை, அம்பை மற்றும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • நாங்குநேரியில் 30 கிராமங்களும் என தனித்தனியாக பாதிப்பு அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பெய்த அதி கனமழை மற்றும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து வட்டங்களிலும் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு ரேஷன் கார்டு அடிப்படையில் பொருட்களை நிவாரணமாக வழங்க கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் மாவட்ட வழங்கல் துறை மூலமாக ரேஷன் கார்டு தாரர்களுக்கு 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு ஆகிய பொருட்களை இலவசமாக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் பொருட்கள் வழங்குவதை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தார், நெல்லை, அம்பை மற்றும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் கனமழையால் முழுமையாக பாதிக்கப்பட்ட வட்டங்களாக நெல்லை, பாளை, சேரன்மகாதேவி ஆகியவை கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அம்பை, ராதாபுரம், நாங்குநேரி, திசையன்விளை, மானூர் உள்ளிட்ட வட்டங்களில் குறிப்பிட்ட அளவிலான கிராமங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

    இதில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் 16 கிராமங்களும், நாங்குநேரியில் 30 கிராமங்களும் என தனித்தனியாக பாதிப்பு அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று மாலைக்குள் மாவட்டம் முழுவதும் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள கிராமங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும், அதன் அடிப்படையில் அரசு அறிவித்த நிவாரண தொகை எந்தெந்த கிராமங்களுக்கு எவ்வளவு என்பது கணக்கிடப்படும் என்று அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • உடன்குடியில் இருந்து நெல்லைக்கு நேரடி போக்குவரத்து இதுவரை தொடங்கவில்லை.
    • சுற்றுப்புற பகுதி மக்கள் இன்று கடும் அவதிப்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள சடையனேரிகுளம் கனமழையால் உடைந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சடையநேரி குளத்தில் ஏற்பட்ட உடைப்பு முழுமையாக அடைக்கப்பட்டது.

    குளம் உடைப்பால் பாதிக்கப்பட்ட பரமன்குறிச்சி கஸ்பா, வெள்ளாளன்விளை, சீயோன்நகர், வட்டன் விளை, மருதூர்கரை ஆகிய கிராமங்களில் இன்றும் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. வெள்ள நீர் வடிவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் உடன்குடியில் இருந்து நெல்லைக்கு நேரடி போக்குவரத்து இதுவரை தொடங்கவில்லை. தொடர் விடுமுறைக்கு பின் அரசு அலுவலகங்கள் அனைத்தும் இன்று திறந்து செயல்படுவதால், நேரடி போக்குவரத்து வசதி இல்லாமல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் உடன்குடி மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் இன்று கடும் அவதிப்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் சில இடங்களில் வெள்ளம் முழுமையாக வடியவில்லை.
    • 8-வது நாளாக இன்றும் மின்வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 16, 17, 18-ந் தேதிகளில் வரலாறு காணாத அளவில் கனமழை கொட்டி தீர்த்தது.

    இடைவிடாது பெய்த மழையால் தாமிபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன.

    குறிப்பாக தூத்துக்குடி நகரம் மட்டுமின்றி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல், தென்திருப்பேரை, ஆறுமுகனேரி, காயல்பட்டிணம், ஆழ்வார்திருநகரி, நாசரேத் சுற்றுவட்டாரப் பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

    மேலும் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை, நெல்லை- திருச்செந்தூர் சாலை உள்ளிட்ட சாலைகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.


    2 மாவட்டங்களிலும் ஏராளமான இடங்களில் பாலங்கள் உடைந்தும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் போக்குவரத்து தடைபட்டது. இதைப்போல மின்வினியோகம், தொலை தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாவட்ட போலீசார், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    வெள்ள சேத பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து நிவாரணம் அறிவித்தார்.

    மேலும் மத்திய குழுவினரும், நெல்லை, தூத்துக்குடியில் ஆய்வு செய்த நிலையில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக சாலை, மின்வினியோகம், குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பிவிட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் சில இடங்களில் வெள்ளம் முழுமையாக வடியவில்லை. தூத்துக்குடி நகரில் புதிய பஸ்நிலைய பகுதிகள், குறிஞ்சி நகர், இந்திராநகர், பச்சாது நகர், பாரதிநகர், தங்கமணிநகர், காந்திநகர், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் இன்னும் வெள்ளநீர் முழுமையாக வடியவில்லை.


    சில இடங்களில் வெள்ள நீர் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தேங்கி கிடக்கும் நீரில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் கிடப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நகரில் பல இடங்களில் இயல்புநிலை திரும்பினாலும் வெள்ளம் வடியாத பகுதிகளில் 9-வது நாளாக இன்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    மாப்பிள்ளையூரணி, தருவைக்குளம் சாலையில் குளம் போல் வெள்ளநீர் தேங்கி கிடக்கிறது. அந்த வழியாக செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளநீரில் ஊர்ந்தபடி செல்கின்றனர். இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

    தொடர்ந்து வெள்ளத்தில் நடப்பதால் கால்களில் புண் ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே இந்தப்பகுதிகளில் வெள்ளநீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

    புன்னக்காயல் உள்ளிட்ட சில கிராமங்களில் 8-வது நாளாக இன்றும் மின்வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அங்கு மின்கம்பங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் புதிய மின்கம்பங்கள் அமைத்து மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வரும் நிலையில் நிவாரண முகாம்களில் இருந்து பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். ஆனால் பலர் வீடுகள் இழந்தும், விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி கடும் சேதம் ஏற்பட்டதால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

    • 5 மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
    • லாரிகள் மூலமாக குடிநீர் வினியோகம் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளமானது தாமிரபரணி ஆற்றில் கரை புரண்டு ஓடியது.

    இந்த வெள்ளத்தினால் ஆற்றில் குடிநீர் எடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த உறைகிணறுகள் மூழ்கியது. பாபநாசத்தில் தொடங்கி புன்னக்காயல் வரையிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் மூழ்கி அதில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார்கள் பழுதடைந்தன. இதன் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    மேலும் பல்வேறு வகையான கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கும் குடிநீர் எடுத்துச்செல்ல ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த குழாய்களும் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டு சேதமடைந்ததால் குடிநீர் வினியோகம் அடியோடு பாதிக்கப்பட்டது. இதனால் 5 மாவட்டங்களிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், ஒரு சில நாட்களுக்கு பிறகு தற்காலிக ஏற்பாடாக லாரிகள் மூலமாக குடிநீர் வினியோகம் நடைபெற்றது.

    தொடர்ந்து வெள்ளம் சற்று தணிந்ததால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்டிருந்த உறை கிணறுகளில் மோட்டார்கள் பழுது பார்க்கப்பட்டு குறைந்த அளவில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக ஆறுகளில் உள்ள உறைகிணறுகளை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஊழியர்கள் அழைத்து வரப்பட்டு அவர்கள் சீரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பணிகளை மேலும் துரிதப்படுத்த கேரளாவில் இருந்து நேற்று முன்தினம் தொழில்நுட்ப குழு வரவழைக்கப்பட்டது. அதன்படி 9 பேர் கொண்ட குழு வந்து 2 நாட்களாக குடிநீர் திட்டங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒரு சில இடங்களில் உறைகிணறுகளை சுற்றிலும் நீர் அதிகமாக இருந்தாலும், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தொழில்நுட்ப குழுவினர் பத்திரமாக அழைத்து செல்லப்பட்டு பணி செய்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்வதற்கு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போர்க் கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • வெள்ளத்தால் 750 நீர் நிலைகளில் உடைப்புகள் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன்படி பாளை சீவலப்பேரி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த உரை கிணறுகள் மற்றும் கூட்டு குடிநீர் திட்டப் பணிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார்.

    பின்னர் சிவந்தி பட்டியில் உள்ள நெடுஞ் சான்குளத்தில் உடைப்பு ஏற்பட்டு ஏராளமான ஏக்கர் நெற்பயிர்கள் நாசமானதால் அதனையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போர்க் கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    நெடுஞ்சாலை துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, மின்சார துறை, வேளாண்துறை, நீர்வளத் துறை என அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் ஒன்றிணைந்து சீரமைப்பு பணிகளில் ஒருங்கிணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    சீவலப்பேரி பகுதியில் ஆய்வு செய்த பின்னர் தற்போது சிவந்திபட்டியில் குளம் உடைந்த பகுதியை ஆய்வு செய்துள்ளேன்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 750 நீர் நிலைகளில் உடைப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் 328 உடைப்புகள் இதுவரை சரி செய்யப்பட்டுள்ளன.


    மீதமுள்ள குளங்களில் உடைப்புகளை அடைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவந்திப்பட்டியில் ஏற்பட்டுள்ள குளம் உடைப்பு இன்னும் 2 அல்லது 3 நாட்களில் குளங்கள் அடைக்கப்பட்டு சரி செய்யப்படும். நீர்வளத் துறை மூலமாக மீண்டும் இந்த குளங்களுக்கு அந்தந்த அணைகள் மூலமாக தண்ணீர் நிரப்பி விவசாயம் செய்வதற்கு வழிவகை செய்யப்படும்.

    சாலைகளை பொறுத்த வரை இரண்டு மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட 175 இடங்களில் சாலைகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 150 இடங்களில் சாலைகள் சரி செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு பொது போக்குவரத்தை தொடங்கி உள்ளோம். அதன் பின்னர் சாலைகளை முழுமையாக சீரமைக்கும் பணிகள் நடைபெறும்.

    அதேபோல் மின்சார இணைப்புகளை பொருத்த வரை நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. ஒன்று 2 இடங்களில் மட்டும் வெள்ளம் வடியாமல் இருப்பது உள்ளிட்ட சில காரணங்களால் மின்விநியோகம் கொடுக்க முடியாமல் உள்ளது.

    இதுபோல் தூத்துக்குடி பகுதியிலும் ஒரு சில இடங்களில் மட்டுமே மின்விநியோகம் வழங்கப்பட வேண்டி உள்ளது. ஏரலில் இரவு முழுவதும் மின்சாரத்துறை உயர் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரையிலும் அனைவரும் ஒன்றிணைந்து இரவு பகல் பாராமல் பணியில் ஈடுபட்டு மின் வினியோகம் வழங்கி உள்ளனர்.

    இதேபோல் ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், கால்நடை துறை உள்ளிட்டவையும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

    தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை பொறுத்த வரை தற்போது ஏற்பட்ட வெள்ளத்தால் 2 மாவட்டங்களிலும் உள்ள 101 கூட்டு குடிநீர் திட்டங்களில் 71 திட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் 34 திட்டங்கள் சரி செய்யப்பட்டு விட்டது. இன்னும் 36 திட்டங்கள் சரி செய்யப்பட வேண்டி உள்ளது.

    வெள்ளத்தால் ஏற்பட்ட மனித உயிரிழப்புகளை பொறுத்தவரை இதுவரை நெல்லை மாவட்டத்தில் 13 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 22 பேரும் இறந்துள்ளனர். தொடர்ந்து வெள்ளத்தால் இறந்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

    அதன் பின்னர் முழுமையான விவரம் தெரியவரும். இது தவிர நெற்பயிர்கள், வீடுகள் உள்ளிட்டவை சேதமடைந்தது தொடர்பான கணக்கெடுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறு வணிகர்கள், தொழிற்சாலை உள்ளிட்டவர்களின் பாதிப்புகள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் பின்னர் அவர்களுடன் கலந்து ஆலோசித்து அரசு உரிய நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கும். இது போன்ற வணிகர்கள் மற்றும் தொழிற் சாலை நிறுவனங்களுக்கு அரசு நேரடியாக உதவுவதை தவிர வங்கிகள் மூலமாகவும், காப்பீடு திட்டங்கள் மூலமாகவும் உதவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த கால கட்டங்களில் கேரளாவுக்கு நிவாரண பணிகளுக்காக தமிழகத்தில் இருந்து அதிக உதவிகள் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தற்போது கேரளாவில் இருந்து நீர்வளத்துறைக்கு டெக்னிக்கல் குழு இங்கு வந்துள்ளது. அவர்கள் குடிநீர் சப்ளை பணிகளுக்கு தேவையான அனைத்து சீரமைப்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்குமாறும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
    • பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், விடுபடாமல் வழங்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வெள்ளம் பாதித்துள்ள மாவட்டங்களில், குறிப்பாக தூத்துக்குடியில் ஏழு நாட்கள் ஆகியும் இன்னும் தண்ணீர் வடியாததால் பல பகுதிகளில் தேங்கிய மழை நீரில் கால்நடைகள் இறந்து மிதக்கின்றன. இதனால், கடும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேங்கிய வெள்ள நீரை அப்புறப்படுத்த பிற மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள ராட்சத மோட்டார்களை உடனடியாகக் கொண்டு சென்று தேங்கிய வெள்ள நீரை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு தற்போது தி.மு.க. அரசு அறிவித்துள்ள 6,000 ரூபாய் நிவாரணத் தொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே, இதை 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    மேலும், வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள், விளை நிலங்கள், வணிக நிறுவனங்கள், உப்பளங்கள், பாதிக்கப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர மற்றும் சரக்கு வாகனங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு உரியவர்களுக்கு நிவாரணம் அளிப்பதுடன், மீண்டும் அவர்கள் தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்குமாறும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை நிவாரணமாக, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், விடுபடாமல் வழங்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைக் கழிவுகள், இறந்த கால்நடைகள் போன்றவற்றை உரிய முறையில் அகற்றி, நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்கு ஆங்காங்கே சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி, சுகாதாரப் பணிகளை உடனடியாகத் துவங்கிட இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சென்னையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தண்ணீரில் மிதந்தன.
    • இன்சூரன்ஸ் நிறுவனங்களின் உதவியை உரிமையாளர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்

    சென்னை:

    தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் பெய்த பெருமழையால் வடக்கே 4 தெற்கே 4 என்று 8 மாவட்டங்களை அடியோடு புரட்டிப் போட்டது. சென்னையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தண்ணீரில் மிதந்தன.

    இதனால் பழுதடைந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பழுது பார்க்க வாகன ஷோரூம்களில் வாகனங்கள் குவிந்து உள்ளன. இந்த வாகனங்களை பழுது நீக்க இன்சூரன்ஸ் நிறுவனங்களின் உதவியை உரிமையாளர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

    தண்ணீரில் மூழ்கிய கார்களை முற்றிலும் மூழ்கியிருந்தால் 'பி' பிரிவு, பாதி டயர் அளவு மூழ்கி இருந்தால் 'சி' பிரிவு என்று வகைப்படுத்தி இருக்கிறார்கள். அதற்கேற்ப தொகைகளை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முடிவு செய்கின்றன.

    ஆனால் பொதுமக்களுக்கு பயன் அளிப்பதாக இல்லை என்றே பலரும் புலம்புகிறார்கள். சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் சுமதி அன்பரசு. காங்கிரஸ் நிர்வாகியான இவரது காரும் தண்ணீரில் சிக்கியது. அந்த காரை பழுது நீக்குவதற்காக அம்பத்தூரில் ஒரு ஷோரூ மில் விட்டிருக்கிறார். அந்த காரை பழுது நீக்க சுமார் ரூ.8 லட்சம் செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளார்கள்.

    இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கேட்ட போது, ரூ.4 லட்சம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்கள். சரி, அந்த காரை விற்றால் எவ்வளவு கிடைக்கும் என்று மதிப்பிட்ட போது ரூ.5 லட்சம் என்று மதிப்பிட் டுள்ளார்கள்.

    இதனால் திகைத்து போன சுமதி இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் அவர்கள் தர ஒப்புக் கொண்டுள்ள ரூ.4 லட்சத்தையாவது தந்தால் மீதி பணம் போட்டு வேறு காராவது வாங்கலாம் என்று நினைத்துள்ளார்.

    ஆனால் பணத்தை உங்களுக்கு தர முடியாது பழுது நீக்கும் நிறுவனத்துக்குத் தான் கொடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள். இன்சூரன்ஸ் கட்டுவது நான்தானே. பணத்தை என்னிடம் தருவது நியாயம் தானே? என்று கேட்டுள்ளார்.

    ஐந்து லட்சம் மதிப்புள்ள காருக்கு ரூ.8 லட்சத்தை செலவழிப்பதில் எந்த நன்மையும் கிடையாது. எனவே என்ன செய்வது என்று தெரியாமல் அவர் தவித்து வருகிறார். இதே போல் இன்னும் பலர் தவிப்பதாக கூறப்படுகிறது.

    ×