என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து விழுந்த ஓட்டல் ஊழியர் சாவு
- ஆல்பர்ட் ஆத்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
- ஆற்றில் விழுந்த ஆல்பர்ட்டுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை பேட்டையை அடுத்த கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட்(வயது 35). இவர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் கொக்கிரகுளம் சுலோச்சன முதலியார் ஆற்று பாலத்தின் மீது நடந்து சென்று கொண்டிருந்தார். பாலத்தின் மீது அவர் சென்று கொண்டிருந்தபோது ஆற்றில் செல்லும் தண்ணீரை வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் விழுந்தார். தாமிரபரணி ஆற்றில் தற்போது மிக குறைந்த அளவிலேயே தண்ணீர் செல்வதால், விழுந்த ஆல்பர்ட்டுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சந்திப்பு போலீசார் அங்கு விரைந்து வந்து ஆற்றில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தவறி கீழே விழுந்தாரா? அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? என விசாரித்து வருகின்றனர்.






