என் மலர்
நீங்கள் தேடியது "மூதாட்டி"
- தனக்கு தெரியாமல் குழந்தை பெற்றெடுத்த மனைவி மேரிபெத் மீது அவர் போலீசில் புகார் செய்தார்.
- 14 மற்றும் 15-வது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரி மேரிபெத் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தை சேர்ந்தவர் மேரிபெத் லூயிஸ். இவர் தனது 62-வது வயதில் 13-வது குழந்தை பெற்றெடுத்து அங்குள்ள பத்திரிகை செய்திகளில் இடம்பிடித்திருந்தார்.
மேரிபெத் லூயிசுக்கு பிறந்த முதல் 5 குழந்தைகள் இயற்கையான கர்ப்பம் மூலம் பிறந்தன. மற்ற குழந்தைகள் ஐ.வி.எப். எனப்படும் செயற்கை கருத்தரித்தல் முறையில் பிறந்தவை ஆகும். 13 குழந்தைகள் இருந்ததால் மேரி பெத்தின் கணவர் பாப் இனிமேல் தங்களுக்கு குழந்தைகள் வேண்டாம் என்று முடிவெடுத்தார்.
ஆனால் 13 குழந்தைகள் இருந்தும் மேரிபெத் லூயிசுக்கு குழந்தைகள் மீதான ஆசை அடங்கவில்லை. குழந்தை பெற்றெடுப்பதில் தீராத ஆசை கொண்ட மேரிபெத், கணவருக்கு தெரியாமலேயே வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்க முடிவு செய்தார்.
இதையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு தனது 68-வது வயதில் அவருக்கு வாடகைத்தாய் மூலம் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கான பெற்றோர் உரிமை சான்றிதழ், தபாலில் வந்தபோது தான் மேரிபெத்தின் கணவர் பாப்பிற்கு 14, 15-வது குழந்தைகள் பிறந்த விஷயமே தெரியவந்தது.
தனக்கு தெரியாமல் குழந்தை பெற்றெடுத்த மனைவி மேரிபெத் மீது அவர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து அந்த குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மேரிபெத் நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு மேரிபெத் - பாப் தம்பதியே குழந்தைகளின் சட்டப்பூர்வ பெற்றோர் என தீர்ப்பு அளித்தது. ஆனால் குழந்தைகளை வளர்த்து வரும் காப்பகம் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது.
மருத்துவமனையில் வாடகைத் தாய் ஒப்பந்தத்தில் கணவர் பெயரில் மேரிபெத் போலியாக கையெழுத்திட்டு உள்ளார். மேலும் கோர்ட்டு விசாரணையின்போது காணொலி காட்சி மூலம் கணவர் ஆஜராவதுபோல் மேரிபெத் ஆள்மாறாட்டம் செய்ததும் தெரியவந்து உள்ளது. இந்த நிலையில் 14 மற்றும் 15-வது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரி மேரிபெத் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறார்.
- ஜாங் தனது குடும்பத்தினரிடம் தவளைகளை பிடித்து வருமாறு கூறினார்.
- 8 சிறிய தவளைகளை பிடித்து வந்தனர்.
சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்சோ பகுதியை சேர்ந்த 82 வயதான ஜாங் என்ற பெண் முதுகுவலியால் அவதிபட்டு வந்தார். இதற்கு பல சிகிச்சைகள் மேற்கொண்டும் குணமாகவில்லை. இதற்கிடையே தவளைகளை உயிருடன் விழுங்கினால் முதுகுவலி குணமாகும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை நம்பிய ஜாங் தனது குடும்பத்தினரிடம் தவளைகளை பிடித்து வருமாறு கூறினார். அதன்படி 8 சிறிய தவளைகளை பிடித்து வந்தனர். ஜாங் முதலில் 3 தவளைகளை விழுங்கினார். அடுத்த நாள் 5 தவளைகளை விழுங்கினார். அதன்பின் அவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பரிசோதனையில் தவளைகளை விழுங்கியதால் ஜாங்க்குக்கு செரிமான பாதிப்பு ஏற்பட்டு ஒட்டுண்ணி தொற்றுகள் மற்றும் ரத்தக் கோளாறுகள் ஆகிய நோய்கள் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
- ஒருபுறம், வயது முதிர்வு மறுபுறம் நாய் கடித்த காயம் ஆகியவற்றால் அவர் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார்.
- மூதாட்டி கால் கடுக்க நடந்து சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒடிசாவின் நுவபாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 95 வயது மூதாட்டி மங்கல் பாரி மொஹாரா. ஒரு அடி எடுத்து வைப்பது கூட அவருக்கு சிரமமானது. இந்த சூழலில் சமீபத்தில் மூதாட்டி மொஹாராவை ஒரு நாய் கடித்தது.
அவருக்கு ஆரம்ப சிகிச்சை அளித்த உள்ளூர் மருத்துவர் அவருக்கு ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும், ஆனால் தற்போது தன்னிடம் தடுப்பூசி இல்லை என்று கூறினார்.
இதனால் மோஹாரா, தடுப்பூசி போடுவதற்காக தனது கிராமத்திற்கு அருகிலுள்ள சீனப்பள்ளி சமூக சுகாதார மையத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது.
பத்து கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள சீனப்பள்ளிக்குச் செல்ல போக்குவரத்து வசதி இல்லாததால், மொஹாரா கால்நடையாகவே புறப்பட்டார்.
ஒருபுறம், வயது முதிர்வு மறுபுறம் நாய் கடித்த காயம் ஆகியவற்றால் அவர் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். பெரும் சிரமங்களுக்கு இடையில் அங்கு தடுப்பூசி போட்ட பிறகு, அவர் கிராமத்திற்குத் 10 கி.மீ திரும்பி நடந்தார். மூதாட்டி கால் கடுக்க நடந்து சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- குட்டியம்மாள் வயது முதிர்வு காரணமாக தளர்ந்து காணப்படுகிறார்.
- வனப்பகுதியில் கிடைக்கும் பழங்கள், கிழங்குகளை சாப்பிடுகிறேன்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகை மலையின் உச்சியில் பூங்குளம் பகுதியில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகிறது. மலையில் பாய்ந்தோடும் நீரோடைகள் பாபநாசம் காரையாறு அணையை வந்தடைகின்றன. காரையாறு அணை அருகில் அகஸ்தியர் காலனி குடியிருப்பு, சின்ன மைலார், பெரிய மைலார், சேர்வலாறு, இஞ்சிக்குழி உள்ளிட்ட இடங்களில் காணி இன பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.
காரையார் அணைக்கு மேலே சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுக்குள் பொதிகை மலை உச்சியின் அடிப்பகுதியில் இஞ்சிக்குழி கிராமம் உள்ளது. முன்பு இங்கு 40 குடும்பத்தினர் வசித்த நிலையில் தற்போது 3 குடும்பத்தினர் மட்டுமே வசிக்கின்றனர். அதில் குட்டியம்மாள் (வயது 110) என்ற மூதாட்டி மட்டும் தார்ப்பாயாலான வீட்டில் தனியாக வசிக்கிறார். மற்ற குடும்பத்தினர் வேலைக்காக காரையாறு அணை அடிவாரத்துக்கு சென்று விட்டு, அவ்வப்போது இஞ்சிக்குழி வருகின்றனர்.
அடர்ந்த வனப்பகுதியான இங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் சாலை, தொலைத்தொடர்பு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் கிடையாது. இஞ்சிக்குழியில் அடர்ந்த காட்டில் தனியாக வசிக்கும் மூதாட்டி குட்டியம்மாளுக்கு கடந்த 2021-ம் ஆண்டு நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த விஷ்ணு முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார். மேலும் அவரது வீட்டுக்கு சோலார் மின்வசதி அமைத்து கொடுத்தார்.
தற்போது குட்டியம்மாள் வயது முதிர்வு காரணமாக தளர்ந்து காணப்படுகிறார். சரிவர நடக்க முடியாததால் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினார். மேலும் காரையாறில் உள்ள ரேஷன் கடைக்கும் சென்று உணவுப்பொருட்களை வாங்க முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து மூதாட்டி குட்டியம்மாள் கூறுகையில், ''இஞ்சிக்குழியில் 40 குடும்பத்தினர் வசித்த நிலையில் தற்போது நான் மட்டுமே வசிக்கின்றேன். இங்கு எந்த வசதியும் இல்லாததால் பலரும் மலையடிவாரத்துக்கு சென்று விட்டனர். 2 குடும்பத்தினர் மட்டும் தங்களது குடியிருப்புகளுக்கு அவ்வப்போது வந்து செல்வார்கள்.
யானைகளின் பிளிறல் சத்தத்தைக் கேட்டுதான் காலையில் கண்விழிப்பேன். சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் இயல்பாக சுற்றி திரியும். வயது முதிர்வு காரணமாக காரையாறு ரேஷன் கடைக்கு செல்ல முடியவில்லை. மளிகை பொருட்களையும் வாங்க முடியவில்லை. வனப்பகுதியில் கிடைக்கும் பழங்கள், கிழங்குகளை சாப்பிடுகிறேன்.ரேஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்தால் பயனுள்ளதாக இருக்கும்'' என்றார்.
- மூதாட்டி வீட்டு முன்பு பக்கத்து வீட்டை சேர்ந்த பிரேமா என்பவர் குப்பை கொட்டியுள்ளார்.
- மூதாட்டிக்கு குப்பை கொட்டிய பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர்தாலுகா கவுதம்புரா என்ற பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி ஹுச்சம்மா (76). இவரது வீட்டு முன்பு பக்கத்து வீட்டை சேர்ந்த பிரேமா என்பவர் குப்பை கொட்டியுள்ளார். இதைப்பார்த்த மூதாட்டி ஹுச்சம்மா அவரிடம் ஏன் எனது வீட்டின் முன்பு குப்பை கொட்டினாய் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் பிரேமாவுக்கு ஆதரவாக அவரது குடும்பத்தை சேர்ந்த மஞ்சுநாத், தர்ஷன் ஆகியோர் வந்து மூதாட்டியிடம் வாக்குவாதம் செய்தனர்.
பின்னர் ஆத்திரம் அடைந்த பிரேமா, மூதாட்டி ஹுச்சம்மாவை அந்த பகுதியில் இருந்த ஒரு மரத்தில் கட்டிவைத்து தாக்கினார். இந்த சம்பவத்தில் பிரேமாவுக்கு ஆதரவாக மஞ்சுநாத், தர்ஷன் ஆகியோர் செயல்பட்டனர். மூதாட்டியை பிரேமா மரத்தில் கட்டி வைத்து தாக்கியதை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். மேலும் ஒரு கட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் மூதாட்டியை மீட்டனர்.
பின்னர் இது குறித்து தாக்கப்பட்ட ஹுச்சம்மாவின் மகன் கண்ணப்பா என்பவர் ஆனந்த்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் பிரேமா, மஞ்சுநாத், தர்ஷன் ஆகியோர் மீத தாக்குதல் குற்றச்சாட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் வயதான பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய பிரேமாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் மஞ்சுநாத், தர்ஷன் ஆகியோரின் பங்கு என்ன என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது..
- ஆரம்பத்தில் 5 பைசாவுக்கு ஆப்பம் விற்பனை செய்தேன்.
- விலைவாசியை கருத்தில் கொண்டு 10 பைசா, 25 பைசா, 50 பைசா என்று படிப்படியாக விலையை உயர்த்தி விற்பனை செய்தேன்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமர். இவருடைய மனைவி ராஜம்மாள் (வயது 70). திருமணமான சில வருடங்களில் ராமர் இறந்து விட்டார். இதனால் ராஜம்மாள் தனது மகன் சங்கரநாராயணனுடன் வசித்து வருகிறார்.
ராஜம்மாள் அப்பகுதியில் குறைந்த விலையில் ஆப்பம் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். விலைவாசி கடுமையாக உயர்ந்தபோதிலும் கடந்த 20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு ஆப்பம் விற்கிறார். இதனை அப்பகுதி மக்கள், மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகின்றனர். இதுகுறித்து மூதாட்டி ராஜம்மாள் கூறியதாவது:-
கடந்த 50 ஆண்டுகளாக இப்பகுதியில் குறைந்த விலையில் ஆப்பம் விற்று வருகிறேன். ஆரம்பத்தில் 5 பைசாவுக்கு ஆப்பம் விற்பனை செய்தேன். விலைவாசியை கருத்தில் கொண்டு 10 பைசா, 25 பைசா, 50 பைசா என்று படிப்படியாக விலையை உயர்த்தி விற்பனை செய்தேன்.
கடந்த 20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு ஆப்பம் விற்கிறேன். கணவர் இறந்த பின்னர் வீட்டில் குழந்தையுடன் இருந்தபோது மனதுக்கு பாரமாக இருந்தது. மேலும் அதிக கவலை அடைந்ததால் இதய நோயாலும் பாதிக்கப்பட்டேன். ஏழை மக்களுக்கு உதவுவதற்காக குறைந்த விலையில் ஆப்பம் விற்க தொடங்கினேன். இது மனதுக்கு மிகுந்த ஆறுதல் அளித்தது. தொடர்ந்து எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஏழைகளுக்கு குறைந்த விலையில் ஆப்பம் வழங்க முடிவு செய்தேன். அதன்படி நாள்தோறும் காலையில் ஒரு ரூபாய்க்கு ஆப்பம் விற்கிறேன். இதனால் வாழ்க்கை தேவைக்கு போதுமான பணம் கிடைப்பதுடன் மன நிம்மதியுடன் வாழ்கிறேன்.
இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
- அவர்கள் வெற்றி பெறும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
- மாநிலங்களுக்கு இடையேயான புத்தராஜா கிரிக்கெட் கோப்பை போட்டிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
ஒடிசாவை சேர்ந்த 95 வயதான மூதாட்டி சபித்ரி மஜ்ஹி, பல வருடங்களாக விளையாடுவதற்கு GROUND இல்லாமல் இருந்த கிராமத்து சிறுவர் மற்றும் இளைஞர்களுக்காக தன்னுடைய 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.
ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தில் சிங்கஜார் என்ற கிராமம் அமைந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக, இந்த கிராமத்தில் கிரிக்கெட், கால்பந்து மற்றும் கபடி போன்ற மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சிங்கஜார், விளையாட்டுகளை விரும்பும் கிராமமாக மாநிலத்தில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளது. இருந்தபோதிலும், கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தனியார் விளையாட்டு மைதானங்களை புதுப்பித்து மாநிலங்களுக்கு இடையேயான புத்தராஜா கிரிக்கெட் கோப்பை போட்டிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
எனவே விளையாட தங்களுக்கென ஒரு மைதானம் இல்லாதது குறித்து குழந்தைகளின் ஏக்கத்தை பார்த்த அந்த கிராமத்தை சேர்ந்த விளையாட்டு ஆர்வலரான 95 வயது மூதாட்டி சபித்ரி மாஜி, விளையாட்டு மைதானம் கட்டுவதற்காக தனது ஐந்து ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். தற்போது, நன்கொடையாக வழங்கப்பட்ட நிலத்தில் அரசாங்கம் ஒரு அரங்கம் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோருகின்றனர்.

தனது முடிவு குறித்து பேசிய மூதாட்டி சபித்ரி மாஜி ''எங்கள் கிராமத்தின் குழந்தைகள் விளையாட்டுகளில் பங்கேற்பதைப் பார்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. அவர்கள் வெற்றி பெறும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் அவர்களுக்கு வழங்கிய விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் விளையாடுகிறார்கள், உடற்பயிற்சி செய்கிறார்கள், ஆரோக்கியமாக இருக்கிறார்கள்'' என்று தெரிவிக்கிறார்.
முன்னதாக மூதாட்டி, கிராமத்தில் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி மற்றும் கோவிலுக்கு நிலங்களை நன்கொடையாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. சபித்ரி மாஜியின் கணவர் நிலம்பர் மாஜி 10 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.
- போலீசார் இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- விசாரணையில் மோசடியில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மும்பை:
மும்பையில் வசித்து வரும் 86 வயது மூதாட்டியை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போலீஸ் அதிகாரி எனக்கூறி ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர் மூதாட்டியின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் அதிகளவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக கூறினார். மேலும் அதற்காக மூதாட்டி மற்றும் அவரது மகள் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்போவதாக மிரட்டினார். இதேபோல மூதாட்டியை டிஜிட்டல் கைது செய்து இருப்பதாக கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டியிடம் மேலும் சிலர் அதிகாரிகள் எனக்கூறி பேசினர்.
அந்த கும்பல் வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதாக கூறி மூதாட்டியிடம் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த 5-ந்தேதி வரை ரூ.20 கோடி வரை பறித்தனர். இந்த நிலையில் சமீபத்தில் தான் ஏமாற்றப்படுவது குறித்து அறிந்த மூதாட்டி இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது மோசடியில் மலாடு மேற்கு பகுதியை சேர்ந்த ஷயான் ஜமீல் சேக்(20), மிரா ரோட்டை சேர்ந்த ரஜிக் அசாம் பட்டிற்கு(20) தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மோசடியில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விருதாம்பாள் உயிரிழந்துள்ளார்.
- சம்பவம் தொடர்பாக எல்லப்பன், கோபி கிருஷ்ணன், சுப்ரமணி, விவேக் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் 3 சென்ட் இடத்திற்காக விருதம்பாள் என்கிற மூதாட்டி எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படுகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விருதாம்பாள் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக எல்லப்பன், கோபி கிருஷ்ணன், சுப்ரமணி, விவேக் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூதாட்டி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த எல்லப்பன் என்பவர் மற்றும் தரப்பினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமங்கலம் அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- அவர்கள் தங்களை உறவினர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டதோடு திருமணத்திற்காக பத்திரிகை கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி கல்லுப்பட்டி மேட்டு தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி ருக்மணி வயது (70). இவர்களது மகன், மகள்களுக்கு திருமணம் ஆகி விட்டது.
இதன் காரணமாக ரவி- ருக்குமணி தம்பதி தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை ரவி வெளியே புறப்பட்டு சென்றார். ருக்மணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் தங்களை உறவினர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டதோடு திருமணத்திற்காக பத்திரிகை கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தனர்.
ருக்மணி 3 பேரையும் இதுவரை பார்த்ததில்லை. இருப்பினும் வீட்டுக்குள் அழைத்து அமரச் செய்தார்.
உறவினர்கள் போல் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த 3 வாலிபர்கள் திடீரென்று ருக்மணியை கத்தியை காட்டி மிரட்டி அவரது வாயில் துணியை வைத்து அடைத்து கையை துண்டால் கட்டினர். பின்னர் அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு 3 பேரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பினர்.
இதை சற்றும் எதிர்பாராத ருக்மணி செய்வதறியாது திகைத்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் ருக்மணி கட்டிப்போட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து டி. கல்லுப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
உறவினர்கள் போல் நடித்து மூதாட்டியை கட்டிப்போட்டு நகையை பறித்துச் சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சாலையில் கேட்பாரற்ற நிலையில் தவித்து வந்த பார்வை திறன் குறைபாடு உடைய மூதாட்டியை அரவணைப்புடன் பேசி முதியோர் காப்பகத்தில் சேர்க்க உதவிய கமிஷனரின் செயல் அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.
- மாநகராட்சி கமிஷனர் தனது அலுவலகத்தில் இருக்கையில் அமர வைத்து மூதாட்டியை கனிவுடன் நடத்திய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது 72). இவருக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு நெல்லையில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்வதாக கூறி அவரது உறவினர்கள் அவரிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் வரை பெற்றதாக தெரிகிறது.
பின்னர் முத்தம்மாளை நெல்லையில் உள்ள கண் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்காமல் மருத்துவமனை அருகே உள்ள பஸ் நிறுத்த சாலையில் விட்டு சென்றனர்.
கண் தெரியாத நிலையில் மூதாட்டி செய்வதறியாமல் கூச்சலிட்டு கத்திக்கொண்டே இருந்தார். இதனை கண்ட சமூக ஆர்வலர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவை தொடர்பு கொண்டு விபரத்தை கூறினர்.
இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி முதியோர் காப்பக நிர்வாகிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியை மீட்டு நடந்தது குறித்து விசாரித்தனர்.
அப்போது தனது சிகிக்சைக்காக உறவினர்களிடம் மூதாட்டி ஆயிரக்கணக்கில் பணம் இழந்து உள்ளதை அறிந்த நிர்வாகிகள், இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் தெரிவித்தனர்.
உடனடியாக அவருக்கு கண் பார்வை சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்ய மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியதோடு, மருத்துவர்கள் தெரிவிக்கும் தகவலை தன்னிடம் உடனடியாக தெரிவிக்கவும் கூறினார்.
இதனை தொடர்ந்து கண் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் மூதாட்டிக்கு பார்வை திறன் குறைபாடு சரியாவதற்கு வாய்ப்பு 95 சதவீதம் இல்லை என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அளித்த தகவலை மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து தெரிவிப்பதற்காக மாநகராட்சி முதியோர் காப்பக நிர்வாகி சரவணன் தலைமையிலான குழுவினர் முத்தம்மாளை ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் அழைத்து சென்றனர். அப்போது கனிவுடன் மூதாட்டியிடம் பேசிய கமிஷனர், உங்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்பு அளித்து கவனித்துக் கொள்வதற்கு ஏற்பாடுகளை செய்து தருவதாக தெரிவித்தார். மேலும் இழந்த பணத்தை காவல்துறை உதவியுடன் மீட்டு தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதனை கேட்ட மூதாட்டி கண்கலங்கிய நிலையில் நன்றியினை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ்சை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மூதாட்டிக்கு உரிய பராமரிப்பு அளிக்க வேண்டுகோள் விடுத்ததுடன், மாநகராட்சி முதியோர் காப்பக நிர்வாகிகள் உதவியுடன் புளியங்குடி காவல் நிலையத்திலும் சம்பவம் குறித்து புகார் அளிக்க கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஏற்பாடு செய்தார்.
சாலையில் கேட்பாரற்ற நிலையில் தவித்து வந்த பார்வை திறன் குறைபாடு உடைய மூதாட்டியை அரவணைப்புடன் பேசி முதியோர் காப்பகத்தில் சேர்க்க உதவிய கமிஷனரின் செயல் அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது. மேலும் மாநகராட்சி கமிஷனர் தனது அலுவலகத்தில் இருக்கையில் அமர வைத்து மூதாட்டியை கனிவுடன் நடத்திய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- தண்டவாளத்தை கடந்த போது, அந்த வழியாக நாகர்கோவில்-கோவை ரெயில் வந்தது. அதனை கோமதி கவனிக்கவில்லை. இதனால் அவர் மீது ரெயில் மோதியது.
- விபத்து குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமால். இவரது மனைவி கோமதி (வயது 70).
இவர்களுக்குச் சொந்த மான பூந்தோட்டம் ஆரல் வாய்மொழி ரெயில்வே நிலையம் அருகே உள்ளது. இந்த தோட்டத்திற்கு தினமும் திருமால் மற்றும் கோமதி சென்று வருவார்கள். ரெயில் தண்ட வாளத்தை கடந்து தான் அவர்களது தோட்டத்திற்கு செல்ல வேண்டும்.
இன்று காலை வழக்கம் போல கோமதி வீட்டில் இருந்து தோட்டத்திற்கு புறப்பட்டார்.அவர் தண்டவாளத்தை கடந்த போது, அந்த வழியாக நாகர்கோவில்-கோவை ரெயில் வந்தது. அதனை கோமதி கவனிக்கவில்லை. இதனால் அவர் மீது ரெயில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கோமதி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். விபத்து குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






