என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஒடிசா"
- மூதாட்டி பதூரியை பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வந்து பென்ஷன் பணத்தை வாங்கிக்கொள்ளும்படி கூறியுள்ளனர்.
- கிராம சாலையில் அவர் தவழ்ந்து செல்லும் வீடியோவால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒடிசாவில் தந்து பென்ஷன் பணத்தை வாங்க 80 வயது மூதாட்டி நடக்க முடியாமல் 2 கிலோமீட்டர் தவழ்ந்தே செல்ல நேர்ந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. ஒடிசா மாநிலம் கியான்ஜ்கர் [Keonjhar] பகுதியில் உள்ள ரைசுவான் கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி பதூரி [Pathuri Dehury] மூத்த குடிமக்களுக்கான அரசு ஓய்வூதியம் பெற்று வந்துள்ளார்.
வயது மூப்புடையவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்குச் சென்று ஓய்வூதியத்தை ஒப்படைக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தல் இருந்தும் ரைசுவான் கிராம பஞ்சாயத்து அதிகாரி, மூதாட்டி பதூரியை பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வந்து பென்ஷன் பணத்தை வாங்கிக்கொள்ளும்படி கூறியுள்ளார்.
மிகுந்த ஏழ்மையில் வாடும் பதூரி அன்றாட தேவைகளுக்கு பென்ஷன் பணத்தை மட்டுமே நம்பியுள்ள நிலையில் தனது வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்துச் செல்ல புறப்பட்டுள்ளார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மூதாட்டி பதூரியால் நடக்க முடியாமல் இருந்த நிலையில் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு அவர் தவழ்ந்தே சென்று பென்ஷன் பணம் வாங்கியுள்ளார்.
80-year-old woman was forced to crawl nearly 2 km to panchayat office in Telkoi block of Odisha's Keonjhar to collect her old-age pension, despite a government directive to deliver the allowances to homes of elderly and disabled beneficiaries.@CMO_Odisha @BJP4Odisha… pic.twitter.com/DbtXXIrU74
— Siddhant Anand (@JournoSiddhant) September 24, 2024
கிராம சாலையில் அவர் தவழ்ந்து செல்லும் வீடியோவால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்த மாதத்திலிருந்து மூதாட்டி பதூரியின் வீட்டுக்கே சென்று பென்ஷன் பணத்தை வழங்க வேண்டும் என்று மாவட்ட BDO அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
- வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது.
- இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதனால் ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வட ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவுக்கு இடையேயுள்ள வங்கக்கடலில் நேற்று நள்ளிரவு காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகி உள்ளது. இது மத்திய ஆந்திராவில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக ஆந்திரா, தெலுங்கானா, மற்றும் ஒடிசாவில் ஒருசில இடங்களில் இனிவரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வருகிற 29-ந்தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் வருகிற 27-ந்தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய குமரிக் கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த மாதம் ருக்சானா, போலங்கிர் பகுதியில் நடந்த படப்பிடிப்பின் போது குளிர்பானம் குடித்தார்.
- உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தோம்.
புவனேஸ்வர்:
ஒடிசாவை சேர்ந்த பிரபல சம்பல்புரி பாடகி ருக்சானா பானோ (வயது 27). இவர் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென்று மரணம் அடைந்தார். பாக்டீரியா தொற்று நோய் காரணமாக அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. ஆனால் அவர் இறந்ததற்கான காரணத்தை மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை.
இந்த நிலையில் பாடகி ருக்சானா பானோ விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக அவரது தாயும், சகோதரியும் குற்றம் சாட்டினார்கள். மேற்கு ஒடிசாவை சேர்ந்த அவரது போட்டி பாடகர் ஒருவரால் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக கூறினார்கள். ஆனால் அந்த பாடகர் பற்றிய விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை. பாடகி ருக்சானாவுக்கு ஏற்கனவே மிரட்டல்கள் வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது சகோதரி கூறியதாவது:-
கடந்த மாதம் ருக்சானா, போலங்கிர் பகுதியில் நடந்த படப்பிடிப்பின் போது குளிர்பானம் குடித்தார். அதன்பிறகு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த மாதம் 27-ந்தேதி அவர் பவானிபட்னா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு அவரை மேல் சிகிச்சைக்காக போலங்கிர் பகுதியில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவ
மனையில் அனுமதித்தோம். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பர்கர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அதன் பிறகும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தோம். அவர் குடித்த குளிர்பானத்தில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாடகி ருக்சானாவின் தாயாரும் இதே கருத்தை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங் களில் வைரலாகி வருகிறது.
- காவல் நிலையத்தில் ராணுவ அதிகாரி மற்றும் அவரது வருங்கால மனைவி மீது தாக்குதல்.
- மேலும் பெண்ணுக்கு எதிராக அதிகாரிகள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு.
ஒடிசா மாநிலத்தில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவி ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார். இவரது கடையில் சில இளைஞர்கள் தகராறில் ஈடுபட, காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது போலீஸ் அதிகாரிகளை தாக்கியதாக ராணுவ அதிகாரி மற்றும் அவரது வருங்கால மனைவி மீது போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
அத்துடன் இருவரையும் தாக்கியுள்ளனர். அதுவும் இல்லாமல் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளனர். தன்னுடைய ஜாக்கெட், பிரா ஆகியவற்றை கழற்றிய பிறகு, ஆண் அதிகாரி ஒருவர் மார்பில் உதைத்ததாக பெண் குற்றம்சாட்டினார். மேலும், இன்ஸ்பெக்டர் தன்னுடைய ஆணுறுப்பை காட்டி பாலியல் தொந்தரவு செய்ததாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் உள்பட ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதி விசாரணை தேவை என ஒடிசா மாநில முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நவீன் பட்நாயக் கூறியதாவது:-
கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக ராணுவ அதிகாரி மற்றும் அவரது வருங்கால மனைவி ஆகியோர் காவல் நிலையத்தில் நடந்ததை நாம் கேட்டிருப்போம். இருவரும் தாக்கப்பட்டது மற்றும் ராணுவ அதிகாரி வருங்கால மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக வெளியான குற்றச்சாட்டு மிகமிக அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.
முழுமையான நீதி விசாரணை நடத்தப்பட்டு விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். ஒடிசா மாநிலத்தில் பாஜக-வின் திறமையின்மைமைய இந்த சம்பவம் காட்டுகிறது.
இவ்வாறு நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
- மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை.
சென்னை:
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
அது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கே ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கு தென் கிழக்கே நிலை கொண்டிருந்தது.
இது மேலும் வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில் நேற்றிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை கணிப்பின் படி மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்று இன்று மாலைக்குள் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரையை ஒடிசா புரி மற்றும் சத்தீஷ்கர் இடையே கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் புயல் காலை 8 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குயதாகவும், மேலும் 11 மணி அளவில் வடகிழக்கு பகுதியை நோக்கி நகரத் தொடங்கியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் வேளையில் புவனேஸ்வர் மற்றும் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயம் உள்ள பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாய் மாறி உள்ளது.
இதனால் மேலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடிமின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். மேலும் தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
- ஆந்திராவில் மழைக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்தனர்.
- 25 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஆந்திராவில் கனமழை பெய்துள்ளது.
திருப்பதி:
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திற்கு அருகில், விசாகப்பட்டினம்-கோபால்பூருக்கு இடையே வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையில் கரையைக் கடந்தது.
இதன் காரணமாக ஆந்திரா, தெலுங்கானாவில் பலத்த மழை பெய்தது. ஆந்திராவில் மேற்கு கோதாவரி, விஜயவாடா, அமராவதி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டியது.
பல மாவட்டங்களில் 15 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்தது. இதில் விஜயவாடா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழை தண்ணீர் வெள்ளம் போல் ஓடியது.
மேலும் தாழ்வான பகுதிக ளில் தண்ணீர் தேங்க வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
கோதாவரி, கிருஷ்ணா ஆறுகள் மற்றும் அவற்றின் துணை நதிகள் உட்பட ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் வழியாக பாயும் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
ஆறு குளங்கள் ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ளத்தில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். அவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் கயிறுகளை கட்டி மீட்டனர்.
விஜய வாடா, மொகல் ராஜபுரம், சுண்ணாம்பு மலையில் இடைவிடாமல் பெய்த பலத்த மழையின் காரண மாக மலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் அங்கிருந்த வீடுகளின் மீது விழுந்ததில் வீடுகள் தரை மட்டமாகியது.
இதில் வீட்டில் தூங்கிய வர்கள் மீது பாறைகள் விழுந்ததில் உடல் நசுங்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
தொடர் மழையின் காரணமாக உப்பலாவில் ஆசிரியர் ராகவேந்திரா பள்ளிக்கு விடுமுறை விட்டு விட்டு தனது காரில் மான்விக்,சவுரிஷ் என்ற மாணவர்களை ஏற்றிக் கொண்டு அங்குள்ள ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்றார்.
பாலத்தில் அதிக அளவு மழை வெள்ளம் சென்றதால் கார் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டது காரில் இருந்த 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
மங்களகிரியில் கண்டாலய பேட்டை மழையில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மீது பாறைகள் விழுந்ததில் நாகரத்தினம்மா என்பவர் இடிப்பாடுகளில் சிக்கி உயிர் இழந்தார்.
ஆந்திராவில் மழைக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்தனர். ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. விஜயவாடாவில் ரெயில் தண்டவாளம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் விஜயவாடா-காசிபேட்டை மார்க்கத்தில் ரெயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளது.
கடந்த 25 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஆந்திராவில் கனமழை பெய்துள்ளது. இதனால் அனைத்து நிகழ்ச்சிகளையும் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ரத்து செய்து மழை பாதிக் கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி உள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத் திலும் பலத்த மழை பெய்து வருகிறது. ஐதராபாத் உள்ளிட்ட நதரங்களில் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, கிராமங்க ளுக்கு இடையேயான சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது.
இன்று தெலுங்கானாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் ஆந்திராவுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் அடுத்த 2 நாட்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என மத்திய நீர் ஆணையம் எச்சரித்துள்ளது.
- வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
- லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
மத்திய மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும்.
அதற்கடுத்த 2 நாட்களில், மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
தமிழகத்தில் சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
நாளை முதல் செப் 4-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
குஜராத்தின் தரைப்பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெல்ல நகர்ந்து இன்று அரபிக் கடலில் புயலாக மாறும். இதற்கு 'அஸ்னா என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் நாளை, நாளை மறுநாள் கடற்பரப்பை விட்டு நகர்ந்து வடகிழக்கு அரபிக் கடலை அடையும்.
பொதுவாக, ஆகஸ்ட் மாதத்தில் அரபிக் கடலில் புயல்கள் உருவாவதில்லை. முன்னதாக 60 ஆண்டுகளுக்கு முன்பு 1964-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அரபிக் கடலில் புயல் உருவானது.
- சுகாதாரத்துறை சார்பில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
- கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளை கொன்று அழிக்கும் பணிகள் நடந்தது.
புவனேஸ்வர்:
ஒடிசாவின் புரி மாவட்டத்தின் பிபிலி பகுதியில் பறவைக்காய்ச்சல் வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மாநில அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையில் இறங்கியது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் உஷார் நிலையும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிபிலி பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளை கொன்று அழிக்கும் பணிகள் நடந்தது.
இந்த பணிகளுக்காக 13 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. மேலும் சில பண்ணைகளில் உரிமையாளர்களே இந்த பணிகளை மேற்கொண்டனர். கடந்த 23-ந்தேதி தொடங்கிய இந்த பணிகள் நேற்று மாலையில் நிறைவடைந்தது. இதில் மொத்தம் 11,700 கோழிகள் கொன்றழிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக அருகில் உள்ள வீடுகள் மற்றும் கிராமங்களில் கோழிகளை அழிக்கும் பணிகள் இன்று நடைபெறும் என்று கூறப்பட்டு உள்ளது.
- மாநிலத்தில் டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 2000 -த்தை கடந்துள்ளது.
- ஜூல் ஓரமிற்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மத்திய பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சர் ஜூல் ஓரம் இன் மனைவி ஜிங்கியா [58 வயது] டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். ஒடிசாவில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மாநிலத்தில் டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 2000 த்தை கடந்துள்ளது.
இந்த நிலையில்தான் மத்திய அமைச்சர் ஜூல் ஓரம் மனைவி ஜிங்கியா டெங்கு காய்ச்சலுக்கு தலைநகர் புவனேஷ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் ஜூல் ஓரமிற்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜூல் ஓரம் மனைவியின் மறைவுக்கு அம்மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜூல் ஓரமின் அரசியல் பயணத்தில் ஜிங்கியா முக்கிய பங்காற்றினார் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜூல் ஓரம்-ஜிங்கியா தம்பதிக்கு 2 மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
- மதிய உணவு சாப்பிட்டு 15 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தை அடுத்த சிராபூரில் உதய் நாராயணன் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
நேற்று மதியம் அரங்கேறிய இந்த சம்பவத்தில் குறிப்பிட்ட பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவாக அரிசி சாதம் மற்றும் கறி வழங்கப்பட்டு இருக்கிறது. மாணவர்கள் சாப்பிட துவங்கிய நிலையில், ஒரு மாணவர் பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததை கண்டறிந்தார். உடனே அந்த உணவை சாப்பிட வேண்டாம் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள் அனைவரும் சிராபூரில் உள்ள சோரோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு குமட்டல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் குறித்து கல்வி அலுவலர் கூறும் போது, இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடைபெறும் என்றும் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக உத்தர பிரதேச மாநிலத்தின் கராக்பூரில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு சாப்பிட்டு 15 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கிட்டத்தட்ட 80 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மனதை தொடும் காதல் கதையை பகிர்ந்துள்ளார்.
- ஓட்டலுக்கு காதல்-வாழ்க்கை என்று பெயரிட்டனர்.
எனது பெற்றோரின் காதல் கதை என்று ஒடிசாவை சேர்ந்த பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
சமீர் ரிஷூ மொஹந்தி என்ற பெயர் கொண்ட அந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது பெற்றோரை பற்றிய மனதை தொடும் காதல் கதையை பகிர்ந்துள்ளார்.
அவரது தந்தை இந்தியாவை சேர்ந்தவர். தாய் ஜப்பானை சேர்ந்தவர். இவர்களுக்கு பிறந்த மொஹந்தி பதிவிட்டுள்ள வீடியோவில், எனது தாயார் ஒரு எழுத்தாளர் ஆவார். அவர் கல்லூரியில் படிக்கும் போது உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது ஒடிசா மாநிலம் பூரி பகுதிக்கு வந்த அவருக்கு அந்த பகுதி மிகவும் பிடித்துப் போனது. இதனால் படிப்பை முடித்த பிறகு பூரியில் குடியேற விரும்பிய அவர் தொடர்ந்து புத்தகங்கள் எழுதினார். ஆனாலும் போதிய வருமான ஆதாரம் இல்லை. எனவே பூரி பகுதியில் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்காக ஓட்டல் கட்ட விரும்பினார்.
ஆனால் எனது தாய் வெளிநாட்டவர் என்பதால் அங்கு நிலம் வாங்க முடியவில்லை. அப்போது தான் எனது தந்தையை சந்தித்துள்ளார். அவர்களுக்கிடையே காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அங்கு ஓட்டலை கட்டினர். அந்த ஓட்டலுக்கு காதல்-வாழ்க்கை என்று பெயரிட்டனர்.
இந்த ஓட்டல் எனது தாய்-தந்தையின் காதல் கதைக்கு ஒரு சான்று. சில காதல் கதைகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்பது உண்மை தான் என்று முடித்தார். அவரது இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளுடன் வைரலாகி வருகிறது.
- ஒடிசா கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.
- ஒடிசாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
ஒடிசாவில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைத்த பிறகு இன்று சட்டசபை கூடியது. ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ் உரையுடன் சட்டசபை தொடங்கியது. அப்போது கவர்னரின் உரைக்கு கண்டனம் தெரிவித்து பிஜு தனதா தளம் கட்சியினர் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் சட்டமன்றக் கட்சித் தலைவர் ராம சந்திர கதம் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸின் மகன் லலித் தாஸ் ராஜ்பவன் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து தான் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
பின்னர் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், "அரசு அதிகாரி மீது வன்முறையில் ஈடுபட்ட கவர்னரின் மகன் மீது பாஜக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம், ஒடிசாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
ஒடிசா கவர்னரின் மகன் லலித் குமார் தன்னை அழைத்து வர சொகுசு கார் அனுப்பவில்லை என்ற ஆத்திரத்தில் கவர்னர் மாளிகை பொறுப்பு அதிகாரியை தாக்கியுள்ளார். இந்த புகார் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்