என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர்"

    • தொடர்ந்து சிறிது நாட்களிலேயே மற்ற அனைவரும் கல்லை வெளியே எடுத்து விட்டனர்.
    • அனைத்து நேரங்களிலும் வாயில் கல்லை போட்டு சுற்றித்திரிந்தேன்.

    முக்கூடல்:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் பாலகன் தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி. 80 வயதான முதியவர் ஆரம்ப காலங்களில் எலக்ட்ரீசியன், சைக்கிள் கடை என பல்வேறு தொழில்கள் செய்து வந்த நிலையில் தற்போது வயது முதிர்வு காரணமாக வீட்டிற்கு தேவையான சிறுசிறு வேலைகளை செய்து வருகிறார்.

    அது மட்டுமின்றி அவரது பள்ளி பருவத்தில் இருந்து சுமார் 69 ஆண்டுகளாக வாயில் கல்லை வைத்து கொண்டே இருந்து வருகிறார்.

    இதுகுறித்து கோவிந்தசாமி கூறுகையில், நான் 1956-ம் ஆண்டு முக்கூடல் சொக்கலால் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் போது, எனது வகுப்பில் மாணவர் ஒருவர் சரியாக பேச முடியாமல் தவித்ததால் பள்ளி ஆசிரியர் அந்த மாணவன் வாயில் சிறிய கல்லை போட்டு பேசுமாறு தெரிவித்தார். இதே போல் நாமும் செய்தால் என்ன என்று எண்ணி, நான் உட்பட எனது நண்பர்கள் 10 பேர் வாயில் கல்லை போட்டு சுற்றி திரிந்தோம். அதில் ஒரு நண்பன் விளையாடும் போது பல் உடைந்து கல்லை வெளியேற்றிவிட்டான். தொடர்ந்து சிறிது நாட்களிலேயே மற்ற அனைவரும் கல்லை வெளியே எடுத்து விட்டனர்.

    ஆனால் எனக்கு வெளியே எடுக்க விருப்பமில்லை. சாப்பிடும் போது, குளிக்கும் போது, வேலை பார்க்கும் போது, தூங்கும் போது என அனைத்து நேரங்களிலும் வாயில் கல்லை போட்டு சுற்றித்திரிந்தேன். இவ்வாறு சுமார் 69 ஆண்டுகளாக இதை போல் வாயில் கல்லை போட்டுள்ளேன்.

    ஒருமுறை நான் தூங்கி கொண்டிருக்கும் போது வாயில் இருந்த கல்லை எனது மனைவி எடுத்து நெல் மூட்டையில் போட்டு விட்டார். அதனை தேடி எடுத்து மீண்டும் போட்டுக் கொண்டேன் என தெரிவித்தார்.

    இது குறித்து அவரது அண்ணன் மகன் பிரசாத் கூறுகையில், எனது சித்தப்பா சிறுவயதில் இருந்தே வாயில் கல்லை போட்டுள்ளார். இதனை நாங்கள் ஒரு சாதனையாகவே பார்க்கிறோம் என்றார்.

    • பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சத்தில் கல்லறை கட்டியுள்ளார்.
    • தனக்குத்தானே கல்லறை கட்டிக் கொண்டது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது

    தெலங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்டம், லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் இந்திரய்யா (வயது 80). இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். தனது மரணத்திற்கு பிறகு தனது பிள்ளைகளுக்கு தொந்தரவு ஏற்படக் கூடாது என்பதற்காக தனக்குத்தானே கல்லறை கட்ட முடிவு செய்தார். இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த கொத்தனார் மூலம் தனது மனைவியின் கல்லறை அருகே பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சத்தில் கல்லறை கட்டியுள்ளார்.

    இந்திரய்யா தினமும் தனது கல்லறைக்கு சென்று சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு சிறிது நேரம் அங்கேயே தங்கி இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இது குறித்து இந்திரய்யா கூறுகையில், தனக்குத்தானே கல்லறை கட்டிக் கொண்டது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

    5 வீடுகள், ஒரு பள்ளி மற்றும் ஒரு தேவாலயம் கட்டி இருக்கிறேன் என தெரிவித்தார். மேலும் தனது கல்லறையில் குறிப்பு ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் மரணம் தவிர்க்க முடியாதது. இறுதியாக செல்லும்போது யாரும் செல்வத்தை எடுத்துச் செல்ல முடியாது என எழுதி வைத்துள்ளார்.

    • தனியொரு மனிதனாக வெள்ளைச் சட்டை, வேட்டியுடன் கையில் ஒரு கருப்பு கைப்பையுடன் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்கிறார்.
    • எந்தக் காரியத்துக்கும் வயது ஒரு தடையில்லை என்று கூறினார்.

    கேரளாவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 90 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியர் நாராயணன் நாயர் போட்டியிடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

    எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஆஷமன்னூர் கிராமப் பஞ்சாயத்தின் இரண்டாவது வார்டில் சுயேச்சை வேட்பாளராக நாராயணன் போட்டியிடுகிறார். இதுவே இவருக்கு முதல் தேர்தல் களம் ஆகும்.

    அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஆதரவாளர்களுடன் கூட்டமாகச் செல்ல, வேட்பாளர் நாராயணன் நாயர் தனியொரு மனிதனாக வெள்ளைச் சட்டை, வேட்டியுடன் கையில் ஒரு கருப்பு கைப்பையுடன் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்கிறார்.

    தனது முதுமை குறித்துக் கேட்கப்பட்டபோது, எந்தக் காரியத்துக்கும் வயது ஒரு தடையில்லை என்று நாராயணன் நம்பிக்கையுடன் கூறுகிறார். தனது வார்டு வளர்ச்சிக்காக நிறைய செய்ய வேண்டும் என்பதே தனது இலக்கு என்று அவர் குறிப்பிடுகிறார்.

    போஸ்டர்கள், பேனர்கள் ஆகியவற்றை விட மக்களை நேரடியாகச் சந்தித்தால் தான் பலன் கிடைக்கும். திருமண அழைப்பிதழ்கள் கூட நேரில் சென்று கொடுத்தால் தான் திருமணத்துக்கு வருவார்கள் என நாராயணன் தெரிவிக்கிறார்.

    இவரது நேர்மையான அணுகுமுறைக்கு வாக்காளர்கள் மத்தியிலும் வரவேற்பு நிலவுகிறது.

    கேரளாவில் டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடதப்பட்டு டிசம்பர் 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.   

    • ஸ்கை டைவிங் சாகசத்தை செய்த சுஹாத் சிங்கின் செயல் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
    • மேகங்களைத் தொட்ட பிறகு "நான் தைரியத்தைக் கண்டேன்" என்று முதியவர் கூறினார்.

    அரியானாவைச் சேர்ந்த சுஹாத் சிங் என்ற 80 வயது முதியவர்ஸ்கை டைவிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.

    80 வயதில் 15,000 அடி உயரத்தில் இருந்து குறித்து ஸ்கை டைவிங் சாகசத்தை செய்த சுஹாத் சிங்கின் செயல் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    அந்த வீடியோவில், ஸ்கை டைவிங் சாகசத்தை செய்வதற்கு முன்பு முன்பு அவர் சிரித்தது முதல் மேகங்களைத் தொட்ட பிறகு "நான் தைரியத்தைக் கண்டேன்" என்று சொல்வது என அந்த எல்லா தருணங்களும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    ஆர்வம், தைரியம் மற்றும் சிறிது பைத்தியக்காரத்தனம் ஆகியவை வயதைப் பொருட்படுத்தாமல், மனதை இளமையாக வைத்திருக்கும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.

    • புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரானது.
    • ராம்பாலின் பேரன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவாமிகாந்தை கைது செய்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ககோரி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் ராம்பால் ராவத் என்ற 65 வயதான முதியவர் அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு கோவில் வளாகத்தில் சிறுநீர் கழித்துள்ளார்.

    இதை அங்கிருந்த சுவாமி காந்த் என்பவர் பார்த்து ஆவேசமடைந்தார். அவர் ராம்பால் ராவத்தை கடுமையான வார்த்தைகளால் திட்டியதோடு அவரை நாக்கினால் நக்கி சுத்தப்படுத்தும்படி கட்டாயப்படுத்தி உள்ளார்.

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரானது. இது ராம்பால் குடும்பத்திற்கு தெரியவந்ததும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக ராம்பாலின் பேரன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவாமிகாந்தை கைது செய்தனர்.

    • ஜப்பானில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் தேதி முதியோர் தினமாக கொண்டாடப்படுகிறது.
    • இந்த ஆண்டில் மட்டும் புதிதாக 52,310 பேர் 100 வயதை தாண்டி உள்ளனர்.

    டோக்கியோ:

    உலகிலேயே வயதானவர்கள் அதிகம் வசிக்கும் நாடு ஜப்பான். அங்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் தேதி முதியோர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    இதனை முன்னிட்டு முதியோர்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

    1963-ம் ஆண்டு இந்த கணக்கெடுப்பு தொடங்கியது. அப்போது 100 வயதானவர்களின் எண்ணிக்கை 153 ஆக இருந்தது. அதன்படி, இந்த ஆண்டுக்கான புள்ளி விவரங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் 100 வயதானவர்களின் எண்ணிக்கை சுமார் 1 லட்சமாக அதிகரித்துள்ளது. அவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

    இந்த ஆண்டில் மட்டும் புதிதாக 52,310 பேர் 100 வயதை தாண்டி உள்ளனர். அவர்களுக்கு பிரதமர் கையால் வாழ்த்து மடல், பரிசுத்தொகை மற்றும் வெள்ளிக்கோப்பை ஆகியவை முதியோர் தினமான நாளை வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி டகாமரோ புகோகா கூறுகையில், உலகின் மற்ற பகுதிகளில் சாப்பிடும் உணவுகளில் உப்பு மற்றும் சர்க்கரை அதிகளவில் கலந்துள்ளது. இதற்கு மாற்றாக மீன், காய்கறி போன்ற ஆரோக்கியமான உணவுகளை ஜப்பானிய மக்கள் அதிகம் எடுத்துக் கொள்கின்றனர். நடைபயிற்சியும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால்தான் மற்ற நாடுகளை விட ஜப்பானிய முதியவர்கள் சுறுசுறுப்பாக செயல்படுகின்றனர் என்றார்.

    • என்னுடைய பேர குழந்தைகளுடன் அமர்ந்து பாடம் படிப்பேன்.
    • ஆங்கிலம் மட்டும் தான் எனக்கு சற்று கடினமாக இருந்தது.

    கேரளாவின் ஆலப்புழாவைச் சேர்ந்த பி.டி.கோபிதாஸ் என்ற முதியவர் 80வது வயதில், பிளஸ் 2க்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.

    1957ல் 5ம் வகுப்பு முடித்த கோபிதாஸ் அதன்பிறகு பள்ளிக்குச் செல்லவில்லை. பின்னர் பல ஆண்டுகளுக்கு முன்பு கேரளா அரசின் கல்வியறிவு திட்டம் குறித்து அறிந்து 7, 10ம் வகுப்புகளுக்கான படிப்பில் கோபிதாஸ் தேர்ச்சி பெற்றார்.

    பிளஸ் 2க்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் பேசிய கோபிதாஸ், "பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியிருந்தாலும் நான் தினமும் எதையாவது படித்துக்கொண்டு தான் இருப்பேன். அதனால் மீண்டும் பள்ளி பாடப்புத்தகங்களை படிப்பது எனக்கு சிரமமாக இருக்கவில்லை. ஒருநாளைக்கு 2 மணிநேரம் படிப்பேன். என்னுடைய பேர குழந்தைகளுடன் அமர்ந்து பாடம் படிப்பேன். ஆங்கிலம் மட்டும் தான் எனக்கு சற்று கடினமாக இருந்தது.

    நான் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது என் அம்மாவின் கனவு. அதை நிறைவேற்ற முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

    என்னுடைய ஆசிரியர்கள் உட்பட பலரும் என்னை தொடர்ந்து படிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதனால் சட்டம் படித்து வழக்கறிஞராக விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.

    கோபிதாஸுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், தற்போது அவர் தனது இளைய மகள் மற்றும் அவர்களது இரண்டு பேராகுலந்திகளுடன் ஒன்றாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • லாங் என்ற முதியவர், குவாங்டாங் மாகாணத்தில் தனியாக வசித்து வருகிறார்.
    • லாங், தனது துணைக்கு சியான்பா என்ற பூனையை வளர்த்து வருகிறார்.

    சீனாவைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர், தான் இறந்த பிறகு தனது பூனையைப் பராமரிக்க விரும்புவோருக்கு தனது முழு சொத்தையும் கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளார்.

    லாங் என்ற முதியவர், குவாங்டாங் மாகாணத்தில் தனியாக வசித்து வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி உயிரிழந்த நிலையில், குழந்தைகள் இல்லாத லாங், தனது துணைக்கு 4 தெரு பூனைகளை எடுத்து வளர்க்க ஆரம்பித்தார்.

    இந்த 4 பூனைகளில் சியான்பா என்ற பூனை மட்டுமே இன்னும் அவருடன் உள்ளது. தான் உயிரிழந்த பிறகு இந்த பூனையை யார் பார்த்துக்கொள்வது என்று கவலைப்பட்ட லாங், சியான்பாவை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்ள கூடிய நபரை தேடி வருகிறார்.

    இந்நிலையில், அவரது பூனையை பத்திரமாக பார்த்து கொள்பவருக்கு தனது அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சேமிப்புகள் உட்பட தனது முழு எஸ்டேட்டையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

    • 17 வயது சிறுவன் ஓட்டி வந்த டிராக்டர் காளியப்பன், குமார் ஆகியோர் மீது மோதியது.
    • இந்த விபத்தில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி ராமர் கோவில் பஸ் நிறுத்தம் அடுத்த திண்டில் வண்ணாத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது70). சீங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (47). இவர்கள் 2 பேரும் நேற்று காலை வண்ணாத்திப்பட்டி ஊருக்கு நடுவே உள்ள மரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர்.

    அப்போது அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுவன் அங்கு டிராக்டரை ஓட்டி வந்தான். இந்த நிலையில் சிறுவன் ஓட்டி வந்த டிராக்டர் காளியப்பன், குமார் ஆகியோர் மீது மோதியது.

    இந்த விபத்தில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். குமாருக்கு இடது கால் முறிந்து படுகாயம் அடைந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக குமார் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் டிராக்டர் மோதி இறந்த காளியப்பன் சாவிற்கு காரணமான சிறுவனை கைது செய்ய கோரி அஞ்செட்டி-தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் காளியப்பனின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து அஞ்செட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்கள் சமாதானம் அடைந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் விபத்திற்கு காரணமான சிறுவன், சிறுவனின் தந்தை ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • காயமடைந்த சிந்துஜா தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
    • சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முத்தையாபுரம் அருகே உள்ள சுந்தர்நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் நிஷாந்த். இவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வரும் கந்தசாமி (வயது91) என்பவர் நிஷாந்தின் வீட்டு காம்பவுண்டை ஒட்டி வாழை மரத்தை வளர்த்து வந்துள்ளார். வாழை மரத்தின் காய்ந்த இலைகள் நிஷாந்தின் வீட்டிற்குள் விழுந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே வாழை மரத்தின் காய்ந்த கிளைகளை அகற்றுமாறு நிஷாந்த் கூறியுள்ளார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் நிஷாந்தின் மனைவி சிந்துஜா (வயது 30) வீட்டின் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அரிவாளுடன் அங்கு வந்த கந்தசாமி வாழை மரத்தின் இலைகளை ஏன் வெட்டினாய்? என்று சொல்லி திடீரென்று சிந்துஜாவின் கையில் வெட்டினார். இதில் காயமடைந்த அவர் அலறியவாறு தெருவில் ஓடினார். ஆனாலும், ஆத்திரம் தீராத முதியவர் அரிவாளுடன் அவரை துரத்தி சென்று வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிந்துஜாவின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதை பார்த்த முதியவர் வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

    இதில் காயமடைந்த சிந்துஜா தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவர் கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    • குடும்பத்துடன் வசிக்கும் இவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோழிக்கோடு போலீசார் தெரிவித்தனர்.
    • 2007-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து கேரளா திரும்பிய அவர், அதன்பிறகு இங்கேயே வசித்து வந்துள்ளார்.

    காஷ்மீர் மாநிலம் பஹல்கானில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கி உள்ளது.

    கேரள மாநிலத்தில் 104 பாகிஸ்தானியர்கள் உள்ளனர். இவர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதில் கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டியை சேர்ந்த ஹம்சா (வயது 79) என்பவரும் ஒருவர். குடும்பத்துடன் வசிக்கும் இவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோழிக்கோடு போலீசார் தெரிவித்தனர்.

    ஆனால் இதனை ஏற்க மறுத்த ஹம்சா, நான் பிறந்த இடம் இது தான். இங்கேயே என் இறுதி மூச்சை விட விரும்புகிறேன் என்றார். கேரளாவில் பிறந்த ஹம்சா, கடந்த 1965-ம் ஆண்டு வேலை தேடி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். கராச்சியில் தனது சகோதரருடன் கடை நடத்திய அவர், 1972-ம் ஆண்டு வங்கதேச விடுதலை போருக்கு பிறகு இந்தியா திரும்ப, பாகிஸ்தான் குடியுரிமையை பெற்றாராம்.

    2007-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து கேரளா திரும்பிய அவர், அதன்பிறகு இங்கேயே வசித்து வந்துள்ளார். இவர் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்த போதும் அது வழங்கப்படவில்லை. அவரது நீண்ட கால விசா காலாவதியான நிலையில், கேரள ஐகோர்ட்டு உத்தரவின் படி ஹம்சா கேரளாவில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போதைய நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • நேற்று மாலை சிறுமி மாடியில் தனியாக இருந்தபோது அங்கு சென்ற முதியவர் மிட்டாய் தருவதாக ஏமாற்றினார்.
    • சிறுமி மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.

    உத்தரப் பிரதேசத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த 4 வயது சிறுமியை 80 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹாரில் புக்ராசி சௌகி பகுதியில் 80 வயது முதியவர் தனது பக்கத்தில் வீட்டில் வசித்த 4 வயது தலித் சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    நேற்று மாலை சிறுமி தனது வீட்டு மாடியில் தனியாக விளையாடிகொண்டிருந்தபோது அங்கு சென்ற முதியவர் மிட்டாய் தருவதாக ஏமாற்றி அங்கு வைத்தே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதையறிந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

    சிறுமி மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் முதியவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

    சிறுமியின் மருத்துவ அறிக்கை கிடைத்த பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

    ×