என் மலர்
நீங்கள் தேடியது "pudukkottai"
- தமிழகத்திற்கு நல்ல அமைச்சர்களை புதுக்கோட்டை மாவட்டம் கொடுத்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
- திருமயம் வட்ட மருத்துவமனை 10 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும் என முதல்வர் அறிவிப்பு
புதுக்கோட்டை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
எந்தக் கோட்டையாக இருந்தாலும் அது ஒரு நாள் பழைய கோட்டையாக ஆகிவிடும். ஆனால் எப்போதும் புதிய- கோட்டையாகவே இருப்பது, இந்த புதுக்கோட்டை! தமிழகத்திற்கு நல்ல அமைச்சர்களைக் கொடுத்த இந்த புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நான் நன்றி.
இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள, அடிக்கல் நாட்டப்பட்டுள்ள திட்டப் பணிகள் மட்டுமல்லாமல், இந்த மாவட்டத்தினுடைய மக்கள் மேலும் பயனடையும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
திருமயம் பகுதி மக்கள் பயன்பெறக்கூடிய வகையில், 10 கோடி ரூபாய் செலவில், கூடுதல் படுக்கைகள், நவீன அறுவை சிகிச்சை அரங்கம் போன்ற வசதிகளோடு, திருமயம் வட்ட மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.
இந்த மாவட்டத்தில் முக்கிய மீன்பிடிப்பு மையங்களாக இருந்து வரும் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் வாழக்கூடிய மீனவ மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், கோட்டைப்பட்டினம் மீன் இறங்குதளம் 15 கோடி ரூபாய் செலவிலும், ஜெகதாபட்டினம் மீன் இறங்குதளம் 15 கோடி ரூபாய் செலவிலும் மேம்படுத்தப்படும். மேலும் ஜெகதாப்பட்டினத்தில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.
மொத்தமாகச் சொல்வதாக இருந்தால், மாநிலம் முழுமைக்கும் என்ன தேவை, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்ன தேவை, ஒவ்வொரு தனிமனிதனின் தேவையும் என்ன என்பதை பார்த்துப் பார்த்துச் செய்யக்கூடிய அரசாக நம்முடைய தமிழ்நாடு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- புதுக்கோட்டையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளின் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
- ரூ.81.31 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 140 திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.143.05 கோடி மதிப்பீட்டிலான 1,397 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
புதுக்கோட்டை:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் தொடங்கி வைத்த நலத்திட்ட பணிகள் விபரம் வருமாறு:
ரூ.81.31 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 140 திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.143.05 கோடி மதிப்பீட்டிலான 1,397 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.379.30 கோடி மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.81 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 140 திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை (நபார்டு மற்றும் கிராம சாலைகள்), சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை என மொத்தம் ரூ.143 கோடி மதிப்பீட்டில் 1,397 திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட துறைகளின் சார்பில் முதலமைச்சர் பயனாளிகளுக்கு ரூ.379 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.
ஆகமொத்தம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மாைல நடைபெறும் அரசு விழாவில் புதிய திட்டப் பணிகள், நலத்திட்ட உதவிகள் என சுமார் ரூ.603.66 கோடி மதிப்பிலான மக்கள்நலத் திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த ஒரு சமூகத்தை சேர்ந்த பொதுமக்களை பற்றி வாட்ஸ் அப்பில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட நபர்களை கைது செய்யக்கோரி அந்த சமுதாய பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொன்னமராவதி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தின் மற்ற இடங்களில் போராட்டம் நீடிக்கிறது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் அமைதி திரும்பும் வகையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அடுத்து உள்ள புதுக்குளத்தின் அருகே நேற்று மாலை பொது மக்கள் நடந்து சென்றனர். அப்போது குளத்தில் ஒரு வாலிபரின் உடல் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்ரகுமான் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குளத்தில் பிணமாக மிதந்தது புதுக்கோட்டை காமராஜபுரம் 14-ம் வீதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கணேசன் (22) என்றும், புதுக்கோட்டையில் உள்ள தனியார் கியாஸ் ஏஜென்சியில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் காதல் விவகாரத்தில் அவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை அடுத்துள்ள வடுகப்பட்டி பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரி சந்தனலட்சுமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மறித்து அவர் வைத்திருந்த பையில் சோதனையிட்டனர். அப்போது அதில் ரூ.17 லட்சத்து 47 ஆயிரத்து 800 இருந்தது.
அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தும் போது அவர் வீரடிப்பட்டியை சேர்ந்த அய்யப்பன் என்பதும், அந்த பணத்தை கந்தர்வக்கோட்டையை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் அருள் என்பவரிடம் இருந்து வாங்கி வந்ததாகவும் கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, வெளிநாட்டு பணத்தை பண பரிமாற்றம் செய்து, அதனை உரியவரிடம் ஒப்படைத்து கமிஷன் பெறுவதற்காக பணத்தை கொண்டு சென்றதாகவும் கூறினார்.
இருப்பினும் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்ததால் அந்த பணத்தை வருமான வரித்துறையிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அ.தி.மு.க. பிரமுகர் அருளிடமும் விசாரணை நடத்த உள்ளனர். #LSPolls
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், விவசாயி. இவரது மகள் ரம்யா. இவர் கொத்தமங்கலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் கடந்த 2009ம் ஆண்டு ரூ.2.92 லட்சம் கடன் பெற்று புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் படித்து வந்தார்.
இந்த நிலையில் கஜா புயலால் ராஜேந்திரன் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த தென்னை மரங்கள் மற்றும் பயிர்கள் முழுமையாக சேதமடைந்தது.
இதற்காக தமிழக அரசு ரூ.34ஆயிரம் நிவாரணத்தொகையை அவரது வங்கி கணக்கில் செலுத்தியது. இது தொடர்பாக அவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ்.தகவல் வந்ததையடுத்து, ராஜேந்திரன் தொகையை பெற வங்கிக்கு சென்றார்.
அப்போது அந்த நிவாரண தொகையை வங்கி நிர்வாகம் மகளுக்காக வாங்கியிருந்த கல்வி கடனுக்கு வரவு வைத்து கொண்டது தெரியவந்தது. மேலும் ராஜேந்திரன், அவரது மனைவி ராணி ஆகியோருக்கு 100 நாள் வேலை திட்டத்தில் கிடைக்கும் தொகையையும் வங்கி வரவு வைத்தது தெரியவந்தது. இதனால் ராஜேந்திரன் அதிர்ச்சியடைந்தார்.
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன், வட்டி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ள நிலையில், வங்கி நிர்வாகத்தின்செயலால் அதிருப்தியற்ற ராஜேந்திரன், நிவாரணத்தொகையை பெற்று தரக்கோரி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்துள்ளார். மேலும் இது போன்று பலரின் நிவாரண தொகைகள் கடனுக்காக பிடித்தம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. #Gajastorm #Storm