search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parliament election"

    • கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி கோரிக்கை நிறைவேற்றும் வரை தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.
    • வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது.

    பாலக்கோடு:

    தருமபுரி பாராளுமன்ற தொகுதி பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதி அள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரெயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி கோரிக்கை நிறைவேற்றும் வரை தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.

    ஆனால் இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை கூட நடத்தவராததால் திட்டமிட்டபடி ஒட்டுமொத்த கிராம மக்களும் இன்று பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

     

    வெறிச்சோடி காணப்படும் வாக்குசாவடி மையம். 

    வெறிச்சோடி காணப்படும் வாக்குசாவடி மையம். 

    இதனால் வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. இக்கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஆண் வாக்காளர்கள் 768 பேரும், பெண் வாக்காளர்கள் 668 பேரும் என மொத்தம் ஆயிரத்து 436 வாக்குகள் உள்ள நிலையில் இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகாதது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை எந்த ஒரு தேர்தல் அதிகாரியும் கிராமத்துக்கு வரவில்லை என பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

    • நத்தம் அருகே ஊராளிபட்டி ஊராட்சிக்குட்பட்டது சீரங்கம்பட்டி கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • சீரங்கம்பட்டியில் இருந்து எட்டையம்பட்டிக்கு செல்லும் சாலை கடந்த 20 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி டி.கே.என். புதூர் 2-வது வார்டு பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதிகாரிகள் வந்து சமாதானம் செய்து சென்ற நிலையில் இன்று தாங்கள் யாரும் வாக்களிக்க செல்ல மாட்டோம் என கூறி ஊரின் முன்பு தேர்தல் புறக்கணிப்பு பதாகையை வைத்தனர். மேலும் வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டி தாங்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

    யாரும் ஊருக்குள் வர வேண்டாம் எனவும் அவர்கள் தெரிவித்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.

    நத்தம் அருகே ஊராளிபட்டி ஊராட்சிக்குட்பட்டது சீரங்கம்பட்டி கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 450 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை என கூறி பேனர்கள் வைத்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில்.

    சீரங்கம்பட்டியில் இருந்து எட்டையம்பட்டிக்கு செல்லும் சாலை கடந்த 20 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இதை சரி செய்ய மாவட்ட, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இன்னும் சாலை வசதி அமைத்து தரவில்லை. மேலும் கிராம மந்தைக்கு வண்ணக்கல் பதிக்க கோரிக்கை வைத்தோம். அதுவும் நிறைவேற்றப்படவில்லை. எங்கள் பகுதிக்கு பகுதி நேர ரேசன் கடை கேட்டு மனு கொடுத்தோம். இதுவரை கடை அமைத்து தரவில்லை. மேலும் எங்கள் பல கோரிக்கைகளை நிறைவேற்றாததால் இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் திண்டுக்கல் மாநகராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட சின்ன அய்யன்குளம் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என கூறி அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நடிகர்கள் அஜித், ரஜினிகாந்த், விக்ரம், சூர்யா, கார்த்தி, பிரபு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
    • விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற மக்களவை தேர்தலானது ஏழு கட்டமாக நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அதே போல் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    அதன்படி, நடிகர்கள் அஜித், ரஜினிகாந்த், விக்ரம், சூர்யா, கார்த்தி, பிரபு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

    இதையடுத்து நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

    வாக்களிக்க வந்த விஜயால் வாக்குச்சாவடியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்ட விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார்.

    இதையடுத்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    • கோபிசெட்டிபாளையம் கொடிவேரி அரசு பள்ளி மற்றும் முருகன்புதூர் பகுதி அரசு பள்ளி வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களிக்க காத்திருந்தனர்.
    • பெருந்துறை அடுத்த பட்டக்காரன் பாளையம் பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காலை வாக்குப்பதிவு எந்திரம் பழுது ஏற்பட்டது.

    சித்தோடு:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் காலை முதலே ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. ஆனால் இன்று காலை ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமானது.

    ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தோடு அடுத்த மேட்டு நாசுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு காலை தொடங்கியது. இங்கு அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 23-ல் பொதுமக்கள் வாக்களிக்க காத்திருந்தனர்.

    அப்போது அங்கு சோதனை வாக்குப்பதிவு முடிந்த உடன் 5 வாக்காளர்கள் மட்டுமே வாக்கு பதிவு செய்தனர் இதையடுத்து இந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் திடீரென பழுது ஏற்பட்டது.

    இதையடுத்து அடுத்த கட்டமாக எந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதைதொடர்ந்து வாக்குப்பதிவு எந்திர பழுது சரி செய்யப்பட்டு ஓட்டுப்பதிவு மீண்டும் தெடங்கியது.

    இதே போல் கோபிசெட்டிபாளையம் பகுதியிலும் காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. காலை 6 மணி முதலே மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர்.

    இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் கொடிவேரி அரசு பள்ளி மற்றும் முருகன்புதூர் பகுதி அரசு பள்ளி வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களிக்க காத்திருந்தனர்.

    அப்போது அந்த 2 பகுதிகளிலும் வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு எற்பட்டது. இதையடுத்து பணியாளர்கள் சரி செய்தனர். இதையடுத்து மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

    இதேபோல் கோபிசெட்டி பாளையம் அடுத்த நாமக்கல்பாளையம் பகுதியில் இன்று காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு பூத்தில் காலை 8.20 மணிக்கு பழுது ஏற்பட்டது. இதையடுத்து பணியாளர்கள் வந்து பழுதை சரி செய்தனர். இதைதொடர்ந்து 8.40 மணிக்கு சரி செய்யப்பட்டது.

    இதனால் அந்த பகுதியில் 20 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து மக்கள் மீண்டும் வாக்களித்து சென்றனர்.

    பெருந்துறை அடுத்த பட்டக்காரன் பாளையம் பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காலை வாக்குப்பதிவு எந்திரம் பழுது ஏற்பட்டது. இது பற்றி தகவல் கிடைத்ததும் பணியாளர்கள் வந்து சரி செய்தனர். இதையடுத்து மக்கள் நீண்ட வரிசையில் காதிருந்து வாக்களித்தனர். இதனால் இந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அலவந்தான்குளம் செயின்ட் அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 93-ல் மொத்தம் 997 வாக்குகள் உள்ளன.
    • பொதுக்கிணற்றில் குடிநீர் எடுப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு பலமுறை புகார் அளித்தும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.

    நெல்லை:

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இன்று காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.

    இதில் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானூர் அருகே உள்ள அலவந்தான்குளம் செயின்ட் அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 93-ல் மொத்தம் 997 வாக்குகள் உள்ளன. ஆனால் காலை 10.30 மணி வரையிலும் அங்கு 12 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.

    மானூர் அருகே பல்லிக்கோட்டை, நெல்லை திருத்து அம்மன்கோவில் தெரு மக்கள், கிருஷ்ணன் கோவில் தெரு மக்கள், தெற்கு தெரு மக்கள் மற்றும் அயல்நாடு வாழ் வாக்காளர்கள் இங்கு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    அலவந்தான்குளம் பகுதியில் உள்ள பொதுக்கிணற்றில் குடிநீர் எடுப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு பலமுறை புகார் அளித்தும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை என்று கூறி நெல்லை திருத்து மற்றும் பல்லிக்கோட்டை கிராம மக்கள் அங்கு வாக்களிக்காமல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் அந்த வாக்குச்சாவடியில் தேர்தல் ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். பூத் வெறிச்சோடி காணப்பட்டது.

    • ஒரு சில வாக்குப்பதிவு மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது காரணமாக ஓட்டுப்பதிவு சற்று தாமதமானது.
    • மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். எனினும் ஒரு சில வாக்குப்பதிவு மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது காரணமாக ஓட்டுப்பதிவு சற்று தாமதமானது.

    நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த கீரைக்காரன்தட்டு டி.டி.றி.ஏ. நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் எந்திர கோளாறால் 45 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும் எந்திர கோளாறு காரணமாக பெட்டைக்குளம் காதர் மீராசாகிப் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில்15 நிமிடமும், நவ்வலடி பள்ளியில் 10 நிமிடமும் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

    களக்காட்டில் உள்ள கோமதி அருள்நெறி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பேட்டரியில் சார்ஜ் இல்லாததால் வாக்குப்பதிவு எந்திரம் இயங்கவில்லை. இதனால் மாதிரி வாக்குப்பதிவு தாமதமானது. பின்னர் மாற்று பேட்டரிகள் வரவழைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.

    நெல்லை மாநகரில் தச்சநல்லூர் அருகே ஊருடையான் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகின. உடனடியாக அந்த பழுது சரிபார்க்கப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், பொன்னம்பாறை, அரசூர், புதுக்குளம், தச்சன்விளை ஆகிய 5 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறால் ஓட்டுப்பதிவு சிறிது நேரம் தாமதமானது.

    • வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
    • இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் மதியம் 1 மணி வரை அங்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.

    புதுக்கோட்டை:

    இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மதியம் 1 மணி வரை அங்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை, அதிகாரிகள் வாக்காளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • சந்திரன் தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு வாக்களிக்க பெயர் உள்ளது.
    • பூத் சிலீப் வழங்கப்பட்டும் அதிகாரிகள் குளறுபடியால் பெயர் இறந்ததாக கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 56). கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இன்று அப்பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்ற போது அவர் இறந்துவிட்டதாக வாக்காளர் ஜாபிதாவில் இருந்துள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்திரன் தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு வாக்களிக்க பெயர் உள்ளது. தனது பெயர் மட்டும் எவ்வாறு விடுபட்டது? என கேள்வி எழுப்பினார்.

    நகராட்சி அலுவலகத்தில் சென்று விண்ணப்பம் அளித்து புதிதாக வாக்காளர் அட்டைக்கு மனு அளிக்குமாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பூத் சிலீப் வழங்கப்பட்டும் அதிகாரிகள் குளறுபடியால் பெயர் இறந்ததாக கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    • வாக்களிக்க பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைபள்ளியில் வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
    • மலைவாழ் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவை செய்ய அணையில் படகு மூலம் வந்திறங்கினர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட தச்சமலை, மாங்கமலை, முடவன்பொற்றை உட்பட 10-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்களில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் வாக்களிக்க பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைபள்ளியில் வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் இந்த வாக்குசாவடி மையத்திற்கு மலைவாழ் மக்கள் வாக்களிக்க அணையில் படகு மூலம் வந்து வாக்களிப்பது வழக்கம்.

    இதையடுத்து தற்போது நடைபெற்றுவரும் பாராளுமன்ற தேர்தலிலும் மலைவாழ் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவை செய்ய அணையில் படகு மூலம் வந்திறங்கினர். தொடர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் நடந்து பேச்சிப்பாறையில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் வந்ததுடன் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

    • நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என என்னுடைய கணிப்பு.
    • இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை தமிழகத்திற்கும் உள்ளது.

    வேலூர்:

    தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் இன்று காட்பாடி காந்தி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவருடன் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

    அப்போது துரைமுருகன் கூறியதாவது:-

    தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றி பிரகாசமாக இருப்பதாக எனக்கு தகவல் வந்து கொண்டிருக்கிறது.

    இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடக்கிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என என்னுடைய கணிப்பு.

    வாக்காளர்கள் ஒழுங்கா வந்து வாக்கு மட்டும் போட்டால் போதும். இன்னமும் ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்தி தான். இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூளை முடுக்குகள் உள்ளன.

    தேர்தல் ஆணையம் எப்போதுமே சரியாக இருக்காது. ஆளுங்கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். எந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை.

    நதிநீர் இணைப்பிற்கு தமிழகம் எப்போதும் தயாராக உள்ளது. தற்போது மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவோம் என கர்நாடக துணை முதல்-மந்திரி சிவகுமார் கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் கர்நாடக மக்களை உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் அப்படி பேசுகிறார்.

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை தமிழகத்திற்கும் உள்ளது.

    மேகதாது அணை கட்டக்கூடாது என்பது தமிழகத்தின் உரிமை. நான் 25 ஆண்டுகளாக காவிரி பிரச்சனையை கவனிக்கிறேன். இது எனக்கு சாதாரணமான செய்தி.

    புதியதாக பதவிக்கு வந்ததால் கர்நாடகா துணை முதல்- மந்திரி சிவக்குமாருக்கு இது புதுசாக தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாற்று எந்திரம் வரவழைக்கப்பட்டு அரசியல் கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் அதிகாரிகள் பொருத்தினர்.
    • சுமார் 45 நிமிட நேரம் தாமதத்திற்கு பிறகு காலை 7.45 மணியளவில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

    ஏரியூர்:

    ஏரியூர் அருகே வாக்குப்பதிவு எந்திரம் பழுது காரணமாக 45 நிமிடம் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு தொடங்கியது.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டடமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரியூர் அருகே உள்ள ராமகொண்ட அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, புதூர் சோளப்பாடியில், வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனை தொடர்ந்து மாற்று எந்திரம் வரவழைக்கப்பட்டு அரசியல் கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் அதிகாரிகள் பொருத்தினர்.

    சுமார் 45 நிமிட நேரம் தாமதத்திற்கு பிறகு காலை 7.45 மணியளவில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. இதன் காரணமாக வாக்காளர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பின்னர் வாக்களித்தனர்.

    • இந்தியர்கள் அனைவரும் தவறாது வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டும்.
    • இந்தியா கூட்டணி மக்கள் பலமுள்ள கூட்டணி.

    புதுச்சேரி:

    முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று காலை மிஷன் வீதியில் உள்ள பசுமை வாக்குச்சாவடியான வ.உ.சி. அரசு பள்ளி மையத்தில் தனது வாக்கை செலுத்தினார்.

    சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று தனது மகளுடன் அவர் வாக்கை செலுத்தினார். இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியர்கள் அனைவரும் தவறாது வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டும். இந்த தேர்தல் பணநாயகத்திற்கும், மக்கள் சக்திக்கும் இடையில் நடைபெறும் தேர்தல். மோடியின் பணபலமும், ராகுல் காந்தியின் மக்கள் சக்தியும் களத்தில் இருக்கின்றன. எப்போதும் மக்கள் சக்திதான் வெற்றி பெறும் என்பது அனைவருக்கும் தெரியும்.

    பிரதமர் மோடி தனது தேர்தல் வாக்குறுதிகளாக அனைவருக்கும் வேலைவாய்ப்பு, நாட்டின் அமைதி, பொதுசொத்தை பாதுகாப்பது, எல்லை பாதுகாப்பு போன்ற வாக்குறுதிகளை கொடுத்தார். 10 ஆண்டுகளாக அவர் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதை பற்றி பேசுவதும் இல்லை.

    காங்கிரஸ் கட்சியை வசைப்பாடி, வாரிசு அரசியல் என பேசி வாக்கு சேகரித்தார். மோடியின் ஆட்சி ஒட்டுமொத்த ஊழல் ஆட்சி, வருமான வரித்துறை வழக்கு போன்ற வழக்குகளில் உள்ளவர்கள் தேர்தல் பத்திரங்களை கொடுத்துள்ளனர். முதலமைச்சர் ரங்கசாமி 3 ஆண்டுகளில் எந்த சாதனையையும் செய்யவில்லை. புதுவையில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. கஞ்சா போதை பொருட்கள் அதிகரித்துள்ளன.

    தேர்தல் அறிக்கையில் கூறிய எதனையும் அவர் நிறைவேற்றவில்லை. வேட்பாளர் நமச்சிவாயம் அவரது துறையில் எதையும் செய்யவில்லை. வெளிநாட்டிலேயே அவர் இருக்கிறார். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

    மின்சார துறையை தனியாருக்கு தாரைவார்த்து கொடுத்துள்ளார். சொத்து குவித்து வைத்துள்ளார். பா.ஜனதா பணத்தை வாரி இறைத்து வருகிறது. இந்தியா கூட்டணி மக்கள் பலமுள்ள கூட்டணி. புதுவை மக்கள் பணத்திற்கு அடிபணியமாட்டார்கள்

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×