என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்லிகார்ஜூன கார்கே"

    • நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட 1% பாதிப்பு ஏற்படலாம்.
    • பல ஏற்றுமதி சார்ந்த முக்கிய துறைகள், குறிப்பாக MSME-கள், பெரும் வேலை இழப்புகளை எதிர்கொள்ள உள்ளன.

    அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி உங்கள் அன்பு நண்பர் ட்ரம்ப் ஆட்சி" இன்று முதல் இந்தியாவுக்கு 50% சுங்கவரி விதித்துள்ளார். இந்த சுங்கவரியின் முதல் பாதிப்பாக, 10 துறைகளில் மட்டும் நாம் சுமார் ₹2.17 லட்சம் கோடி இழப்பைச் சந்திக்க உள்ளோம்.

    நமது விவசாயிகள், குறிப்பாக பருத்தி விவசாயிகள், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் காக்க எந்த "தனிப்பட்ட விலையையும்" செலுத்தத் தயார் என்று நீங்கள் கூறியிருந்தீர்கள்.

    ஆனால் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், இந்த பாதிப்பைக் குறைக்கவும் நீங்கள் எதுவும் செய்யவில்லை.

    குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) பரிந்துரைப்படி, நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட 1% பாதிப்பு ஏற்படலாம், மேலும் இதனால் சீனா பயனடையும் என்று கூறப்படுகிறது.

    பல ஏற்றுமதி சார்ந்த முக்கிய துறைகள், குறிப்பாக MSME-கள், பெரும் வேலை இழப்புகளை எதிர்கொள்ள உள்ளன.

    ஒரு சிறிய பகுதி- இது பனிப்பாறையின் முனை மட்டுமே- கீழ்க்கண்டவாறு வெளிப்படுத்துகிறது:

    இந்திய ஜவுளி ஏற்றுமதித் துறையில் சுமார் 5,00,000 வேலைகள் (நேரடி மற்றும் மறைமுக) இழப்பு ஏற்படலாம்.

    ரத்தினங்கள் மற்றும் நகைத் துறையில், சுங்கவரி தொடர்ந்தால் 1,50,000 முதல் 2,00,000 வேலைகள் ஆபத்தில் உள்ளன.

    ஏப்ரல் முதல், அமெரிக்காவில் 10% அடிப்படை சுங்கவரி அமல்படுத்தப்பட்டதிலிருந்து, சௌராஷ்டிரா பகுதியில் வைர வெட்டுதல் மற்றும் மெருகூட்டலில் ஈடுபட்ட சுமார் 1,00,000 தொழிலாளர்கள் ஏற்கனவே வேலையை இழந்துள்ளனர்.

    சுமார் 5,00,000 இறால் விவசாயிகளின் நேரடி வாழ்வாதாரமும், மறைமுகமாக மேலும் 25,00,000 பேரின் வாழ்வாதாரமும் பெரும் ஆபத்தில் உள்ளது.

    இந்திய தேசிய நலன் மிக உயர்ந்தது. ஒரு வலிமையான வெளியுறவுக் கொள்கைக்கு உள்ளடக்கமும் திறமையும் தேவை. ஆனால் உங்கள் மேலோட்டமான வெளியுறவுக் கொள்கை ஈடுபாடுகள்- புன்னகைகள், கட்டிப்பிடிப்புகள் மற்றும் செல்ஃபிகள் - நமது நலன்களைப் பாதித்துள்ளன.

    நீங்கள் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தைப் பெறுவதில் தோல்வியடைந்துவிட்டீர்கள். இப்போது நமது நாட்டைக் காக்கவும் தோல்வியடைந்து வருகிறீர்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்த பலரும் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
    • துணை ஜனாதிபதி தேர்தலில், மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிப்பார்கள்.

    துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், கடந்த மாதம் 21-ந்தேதி, மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அவர் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    புதிய துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9-ந்தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பாணை கடந்த 7-ந் தேதி வெளியிடப்பட்டது.

    இதற்கிடையே, துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுகிறார்.

    இதுகுறித்து அக்கூட்டணி வட்டாரங்கள் கூறியதாவது:-

    துணை ஜனாதிபதி தேர்தல் முடிவு எப்படி வரும் என்றாலும், அந்த தேர்தலை கண்டு பயந்து ஓடாமல் போட்டியிட வேண்டும் என்று 'இந்தியா' கூட்டணி கட்சிகளிடையே பலமான கருத்து நிலவுகிறது. வலிமையான அரசியல் செய்தியை அளிக்க போட்டியிடுவது அவசியம் என்று கருதப்படுகிறது.

    இதுதொடர்பாக முறையான விவாதம் நடக்கவில்லை. இருப்பினும், திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஒரு தரப்பினர், பா.ஜ.க. தனது வேட்பாளரை அறிவித்த பிறகு, நாம் வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

    துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்த பலரும் ஆர்வம் தெரிவித்துள்ளனர். ஒரு சில பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

    கருத்தொற்றுமையுடன் வேட்பாளரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எதிர்க்கட்சிகளை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.

    இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களில், பாராளுமன்றத்தில் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக போராடி வருகின்றன. இந்த பின்னணியில், பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சி நடந்து வருகிறது.

    கடந்த 7-ந் தேதி, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இல்லத்தில் 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. அதுபோல், மல்லிகார்ஜூன கார்கே இன்று 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்களுக்கு விருந்து அளிக்கிறார்.

    துணை ஜனாதிபதி தேர்தலில், மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிப்பார்கள். தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதுவரை 3 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை முறையாக இல்லாததால் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனு தாக்கலுக்கு 21-ந் தேதி கடைசிநாள். 22-ந்தேதி மனுக்கள் பரிசீலிக்கப்படும். மனுக்களை வாபஸ் பெற 25-ந் தேதி கடைசிநாள்.

    மக்களவை, மாநிலங்களவையின் மொத்த பலம் 781. அவற்றில், துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற குறைந்தபட்சம் 391 எம்.பி.க்களின் வாக்குகளை பெற வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 எம்.பி.க்கள் உள்ளனர்.

    இது இடைத்தேர்தலாக இருந்தபோதிலும், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர் முழு பதவிக்காலமான 5 ஆண்டுகளும் பதவி வகிக்கலாம்.

    துணை ஜனாதிபதிக்கு போட்டியிடுபவர் இந்திய குடிமகனாகவும், 35 வயது நிரம்பியவராகவும், மாநிலங்களவை எம்.பி. ஆக தகுதி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகளின் ஆதாயம் தரும் பதவி எதையும் வகிக்கக்கூடாது.

    • அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த நீங்கள் தவறிவிட்டீர்கள்.
    • 50 சதவீத வரி விதிக்க டிரம்ப் எடுத்த முடிவு வெளியுறவு கொள்கையில் ஒரு பேரழிவாகும்.

    புதுடெல்லி:

    ரஷியாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டார்.

    இது தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் தேசிய நலன் மிகவும் உயர்ந்தது. நமது வெளியுறவு கொள்கையில் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில் டிரம்ப் 50 சதவீத வரியை உயர்த்தி உள்ளார்.

    இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியபோது பிரதமர் மோடி அமைதியாக இருந்தார். குறைந்தது 30 முறையாவது கூறிவிட்டார். கடந்த ஆண்டு நவம்பர் 30-ந்தேதி அன்று பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் மிரட்டினார். அங்கு பிரதமர் மோடி அமர்ந்து இருந்தார். வெளிப்படையாக சிரித்து கொண்டே இருந்தார். அதே நேரத்தில் டிரம்ப் 'பிரிக்ஸ்' இறந்து விட்டதாக அறிவித்தார்.

    பல மாதங்களாக சமச்சீர் வரிகளை டிரம்ப் திட்டமிட்டு வருகிறார். அது பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. விவசாயம், சிறு-குறு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில்கள் போன்ற நமது முக்கிய துறைகளில் ஏற்பட்ட பாதிப்பை குறைக்க மத்திய பட்ஜெட்டில் நீங்கள் (மோடி) எதுவும் செய்யவில்லை.

    உங்கள் மந்திரிகள் பல மாதங்களாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேசி வருகின்றனர். அவர்களில் சிலர் பல நாட்களாக வாஷிங்டனில் முகாமிட்டு இருந்தனர்.

    அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த நீங்கள் தவறிவிட்டீர்கள். உங்களுக்கு 6 மாதங்களுக்கும் மேலாக இருந்தது. இப்போது டிரம்ப் மிரட்டி வற்புறுத்துகிறார். ஆனால் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்.

    50 சதவீத வரி விதிக்க டிரம்ப் எடுத்த முடிவு வெளியுறவு கொள்கையில் ஒரு பேரழிவாகும். இதை பிரதமர் மோடியால் சமாளிக்க முடியாமல் திணறுகிறார். இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்பது மோடி அரசுக்கு தெரியாது.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.



    • மிலிந்த் கார்கே கடந்த சில நாட்களாக புற்றுநோய் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
    • மிலிந்த் கார்கே கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல்.

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகாவைச் சேர்ந்தவர். இவருக்கு 2 மகள்கள் மற்றும் 3 மகன்கள் என மொத்தம் 5 பேர் உள்ளனர்.

    இதில் மூத்த மகன் பிரியங் கார்கே சித்தராமையா தலைமையில் கர்நாடக அரசில் பஞ்சாயத்து ராஜ், கிராமப்புற வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளின் அமைச்சராக பணியாற்றி வருகிறார்.

    இவரது 2-வது மகன் மிலிந்த் கார்கே. இவர் கடந்த சில நாட்களாக புற்றுநோய் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மிலிந்த் கார்கே கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்துவதற்காக நாடு தழுவிய பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
    • கிராம அளவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

    ஐதராபாத்:

    காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்துவதற்காக நாடு தழுவிய பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் முறையாக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் இன்று மாலை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்குகிறார்.

    இந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட 40,000 காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பங்கேற்கின்றனர். இதில் கிராம அளவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. நேற்று தெலுங்கானா மாநில எம்.எல்.ஏ.க்கள் சிலர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தனர். அப்போது விரிவாக்கம் செய்யப்பட உள்ள அமைச்சரவையில் தங்களுக்கு இடம் வேண்டும் என கேட்டு அடம் பிடித்தனர். இதற்கு மல்லிகார்ஜுன கார்கே எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. இது தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அனைத்து பகுதிகளிலும் 10 முதல் 15 பேர் கொண்ட ஒரு கமிட்டியை உருவாக்கி வருகிறார்கள்.
    • இதுவரை 50 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது.

    தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசில் தற்போது 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விடம் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்று காங்கிரசில் பலர் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் கீழ்மட்டத்தில் காங்கிரசுக்கு அந்த அளவுக்கு பலம் இருக்கிறதா என்ற கேள்வியும் உள்ளது. இதை சரி கட்ட கிராம கமிட்டிகள் அமைக்கும் புதிய முயற்சியை தமிழகத்தில் காங்கிரஸ் செயல்படுத்தி வருகிறது. அதன்படி கிராமங்கள், கிராம பஞ்சாயத்துக்கள், வார்டுகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என்று அனைத்து பகுதிகளிலும் 10 முதல் 15 பேர் கொண்ட ஒரு கமிட்டியை உருவாக்கி வருகிறார்கள்.

    இதுவரை 50 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது. அதற்கு கிராம கமிட்டி அமைத்து முடிக்கும் போது 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கிடைப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் முகவரி, செல்போன் எண்கள், எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்ற அனைத்து விவரங்களும் கட்சி தலைமையிடம் இருக்கும். தேர்தல் நேரத்தில் இவர்கள் மூலம் ஆதரவு திரட்டவும், எளிதாக இருக்கும். சமீபத்தில் சென்னையில் நடந்த காங்கிரஸ் செயற்குழுவில் மேலிட பொறுப்பாளர் சோடங்கர் பேசும் போது, கூடுதல் தொகுதிகள் கேட்கலாம். அதற்கு ஏற்ப முதலில் நமது கட்சியை பலப்படுத்துவோம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

    இன்னும் 2 மாதத்துக்குள் அப்பணியை முடிக்க திட்டமிட்டு உள்ளார்கள். இதைத் தொடர்ந்து வருகிற ஆகஸ்டு மாதம் திருச்சியில் ராகுல்காந்தியை அழைத்து பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளார்கள்.

    இதில் மல்லிகார்ஜூன கார்கேவும் பங்கேற்கிறார். இந்த கூட்டத்திற்கு தற்போது அமைக்கப்படும் கிராம கமிட்டிகள் மூலம் ஆட்களை திரட்டவும் திட்டமிட்டு உள்ளார்கள். இது வருகிற தேர்தலில் காங்கிரசின் எழுச்சிக்கும் அந்த கூட்டணியில் கூடுதல் இடம் கேட்பதற்கு அடிப்படையாக அமையும் என்கிறார்கள்.

    • மோடி பணவீக்கத்தையும் வேலையின்மையையும் கொடுத்தார். இவர்கள் நாட்டை பலவீனப்படுத்துகிறார்கள்.
    • நாங்கள் ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறோம். அதை சிதைப்பதை பற்றி அவர்கள் பேசுகிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    * மோடி பணவீக்கத்தையும் வேலையின்மையையும் கொடுத்தார். இவர்கள் நாட்டை பலவீனப்படுத்துகிறார்கள். பிரதமர் மோடியின் 56 அங்குல மார்பு சுருங்கிவிட்டது

    * நீங்கள் அனைவரையும் பலவீனப்படுத்த முயற்சிக்கிறீர்கள், ஆனால் மக்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்வதன் மூலம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்த முடியாது.

    * நாங்கள் ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறோம். அதை சிதைப்பதை பற்றி அவர்கள் பேசுகிறார்கள்.

    * இந்த நாட்டில், அரசியலமைப்பு உயர்ந்தது. நமது ஜனநாயகம் அரசியலமைப்பின் கீழ் இயங்குகிறது

    * காங்கிரஸ் வளரும் போதெல்லாம், அதை அடக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் அடக்கப்பட வேண்டியவர்கள் அல்ல.

    * நாடுதான் உயர்ந்தது, பின்னர்தான் கட்சிகள், மதங்கள். அனைவரும் நாட்டிற்காக ஒன்றுபட வேண்டும்.

    * பஹல்காம் தாக்குதல் தொடர்பான நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டபோதும், பீகாரில் பிரதமர் உரையாற்றியது நாட்டின் துரதிர்ஷ்டம்.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.

    • ராகுல் காந்தியின் பாதயாத்திரை ஒட்டுமொத்த அரசியல் சூழலையே மாற்றியமைக்கும்.
    • ராகுல் காந்தி தொடங்கியுள்ள பாதயாத்திரை தெலுங்கானாவில் தற்போது நடந்து வருகிறது.

    ஐதராபாத்

    இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியுள்ள பாதயாத்திரை தெலுங்கானாவில் தற்போது நடந்து வருகிறது. இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அவருடன் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த செப்டம்பர் 7-ந் தேதி தொடங்கிய இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை கடந்து சென்ற வாரம் தெலுங்கானாவில் நுழைந்துள்ளது.

    யாத்திரையின் 56-வது நாளான நேற்று ஐதராபாத் நகரின் பாலநாகர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த யாத்திரை தொடர்ந்தது. ஹபீஸ்பேட்டில் காலை இடைவேளையும், முதாங்கியில் மாலை இடைவேளையும் விடப்பட்டது.

    பாதயாத்திரை சென்றவர்கள் கவுலம்பேட்டில் இரவில் ஓய்வெடுத்தனர்.

    முன்னதாக இந்த பாதயாத்திரையில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பங்கேற்கும் யாத்ரீகர்களை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று போவன்பள்ளியில் சந்தித்து உரையாடினார்.

    பின்னர் இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருந்ததாவது:-

    இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டுள்ள யாத்ரீகர்களை ஐதராபாத்தின் போவன்பள்ளியில் சந்தித்து பேசினேன். ராகுல் காந்தியுடன் 3,500 கி.மீ. நடந்து செல்லும் அவர்கள் நமது கட்சி தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றனர்.

    இந்திய ஒற்றுமை பயணம் ஒரு மவுன புரட்சியை ஏற்படுத்துகிறது. இது ஒட்டுமொத்த அரசியல் சூழலையே மாற்றியமைக்கும்.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

    • குஜராத் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கு மானப்பிரச்சினை.
    • ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் குஜராத் இடம்பெறவில்லை

    அறிவிக்கப்பட்டாயிற்று, குஜராத் சட்டசபை தேர்தல் திருவிழா. நாளை வேட்புமனுதாக்கல் தொடங்குகிறது.

    திரைப்படங்களுக்கு பூஜை போடுகிற நாளிலேயே படம் விலை போய்விடுகிறமாதிரி, தேர்தல் அறிவிப்பு வெளியான சூட்டிலேயே வெற்றி யாருக்கு என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

    182 இடங்களை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கு மானப்பிரச்சினை. இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்துக்குள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், இங்கு வெற்றி வாகை சூடி, 1995-ம் ஆண்டு தொடங்கி சுவைத்து வருகிற வெற்றிக்கனியை மீண்டும் சுவைத்துவிட பா.ஜ.க. துடிக்கிறது.

    ஆட்சியை பறிகொடுத்து கால் நூற்றாண்டு கடந்து விட்டது, இந்த முறையாவது வெற்றி பெற்று, ஆட்சியைப்பிடித்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அஸ்திவாரம் போட நினைக்கிறது காங்கிரஸ்.

    ஆனால் டெல்லி, பஞ்சாபில் வெற்றி பெற்று, இப்போது ஆம் ஆத்மியின் பார்வை குஜராத் பக்கம் திரும்பி இருக்கிறது. 2024 தேர்தலுக்கு பின்னர் இந்தியாவை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்று கனவு வளர்த்து களத்தில் குதிக்கிறது, கெஜ்ரிவாலின் கட்சி.

    மும்முனைப் போட்டி தேர்தல் களத்தில் அனல் பறக்க வைக்கும் என்பதில் சந்தேகத்துக்கு அணுவளவும் இடம் இல்லை. இந்த மோதலில் வெற்றி யாருக்கு என்பதே நாட்டின் பேசுபொருளாக மாறப்போகிறது.

    "எங்கள் கட்சியே வெற்றி பெறும். இரட்டை என்ஜின் அரசு மீண்டும் அமையும். பிரதமர் மோடி தலைமையில் மாபெரும் வெற்றி பெறுவோம்" என்று தேர்தல் அறிவிப்பு வெளியான கணத்திலேயே மார் தட்டி இருக்கிறார், பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா.

    எந்தவொரு ஆட்சியும் 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறபோது, அதற்கு எதிரான மனநிலை மக்களிடம் ஏற்படுவது வாடிக்கை. இப்போது அந்த வகையில் குஜராத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராய் திரும்பியுள்ள பிரச்சினைகள் உண்டு.

    விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பில்கிஸ்பானு கும்பல் கற்பழிப்பு குற்றவாளிகள் விடுவிப்பு, மோர்பி பால விபத்து, அரசு வேலைவாய்ப்பு தேர்வு வினாத்தாள் கசிந்துவிடுவதும் தேர்வு ஒத்திவைப்பும், கடைக்கோடி பகுதிகளில் சுகாதார வசதி-அடிப்படை கல்வி வசதியின்மை, மழைவெள்ளத்தில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்காமை, சரியான சாலை வசதிகள் இன்மை, அதிகபட்ச மின்கட்டணம், அரசு திட்டங்களுக்கு நில எடுப்பில் அதிருப்தி... இப்படி பா.ஜ.க. அரசுக்கு எதிரான அம்சங்கள் அணிவகுக்கின்றன.

    குஜராத்தை சேர்ந்தவர் நாட்டின் பிரதமர் என்ற 'டிரம்ப் கார்டு' கை கொடுக்கும், மத்தியிலும், மாநிலத்திலும் இரட்டை என்ஜின் அரசு என்னும் பிரசாரம் வெற்றிதரும் என்று முழுமையாய் நம்புகிறது பா.ஜ.க.

    மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் காங்கிரசின் கனவுக்கு காரணங்கள் உண்டு.

    காந்தி-நேரு குடும்பத்தில் இருந்து காங்கிரஸ் விடுவிப்பு, காங்கிரஸ் கட்சியின் தலைவராக அரை நூற்றாண்டுக்குப் பிறகு முதல்முறையாக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்பு, இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் வாக்குவங்கி, 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வாக்குறுதி போன்றவை இந்த முறை கண்டிப்பாய் கைகொடுக்கும், வெற்றி தேடித்தரும் என்பது காங்கிரசின் நம்பிக்கை.

    ஆனால் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் குஜராத் இடம்பெறவில்லை; சோனியா-ராகுல் பிரசாரம் செய்வார்களா என்பது கேள்விக்குறி; முன்னிலைப்படுத்துவதற்கு கட்சியில் எழுச்சிமிக்க தலைவர்கள் குஜராத்தில் இல்லை என்பதெல்லாம் பின்னடைவுகள்.

    பா.ஜ.க., காங்கிரசுடன் மல்லு கட்டப்போகிறது, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. இந்தக் கட்சிக்கும் ஆட்சியை கைப்பற்றிவிடும் ஆசை இருக்கிறது. நாங்கள் மாறுபட்ட சக்தி என்னும் பிரசாரம், இலவச மின்சாரம்... வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்... 18 வயதான பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை என வாக்குறுதிகள் கைகொடுக்கும் என்று ஆம் ஆத்மி நம்புகிறது. இலவச வாக்குறுதிகளை குஜராத் மக்கள் வரவேற்பார்களா, மாட்டார்களா என்பது பட்டிமன்ற விவாதப்பொருள்.

    ஆனால் பிரதமர் மோடி தேர்தல் இலவசங்களுக்கு எதிராக உரத்த குரல் எழுப்பும்போது, மக்களிடம் இந்த இலவச வாக்குறுதிகள் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று மறுக்கவும் முடியாது. பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களிடம் இது வரவேற்பை பெற்று ஓட்டு வங்கியாக மாறுமா என்பதெல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய அம்சங்கள்.

    அதே நேரத்தில் குஜராத் மாநில அரசியலில் ஆம் ஆத்மி கத்துக்குட்டி, குஜராத்தில் ஆம் ஆத்மியில் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை, ஓட்டு வங்கி பெயருக்குகூட இல்லை என்பது பாதகமான அம்சங்கள். ஆழம் தெரியாமல் காலை விட்டு தோல்வி அடைந்தால், அது ஆம் ஆத்மி இனி எடுக்கும் சோதனை முயற்சிகளுக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தி விடும் வாய்ப்பும் இருக்கிறது.

    வெற்றி யாருக்கு?

    மத்தியிலும் மாநிலத்திலும் இரட்டை என்ஜின் என்கிற பா.ஜ.க. வாதம், அந்தக்கட்சியின் வெற்றிக்கு அஸ்திவாரம். கட்சிக்கு தலித் தலைமை, வேலை வாய்ப்பு வாக்குறுதிகள், ஆட்சியைப் பறிகொடுத்து கால் நூற்றாண்டு என்ற அனுதாப அலை ஆகியவை காங்கிரசின் வெற்றிக்கு அஸ்திவாரமாக அமையலாம். ஆம் ஆத்மி மாற்றத்துக்கான அரசியல் என்ற வாதம் அதன் வெற்றிக்கு அஸ்திவாரமாக அமையக்கூடும்.

    கடைசி நேர மாற்றங்கள், அதிரடிகள், பிரசாரங்கள் என்ன விதமான அலையை ஏற்படுத்தும் என்பதையெல்லாம் கவனிக்க வேண்டியதிருக்கிறது.

    டிசம்பர் 8 தான் வெற்றியை தீர்மானிக்கும். ஆமாம். அன்றுதான் ஓட்டு எண்ணிக்கை.

    • பிரியங்கா கடந்த மாதம் 31-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார்.
    • பூபேஷ்பாகல், பிரதாப் சிங் பஜ்வா, சச்சின் பைலட் போன்ற தலைவர்களும் காங்கிரசுக்கு பிரசாரம் செய்தனர்.

    புதுடெல்லி:

    68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக வருகிற 12-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக பா.ஜனதா தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அங்கு பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினர்.

    காங்கிரஸ் கட்சி அங்கு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறது. பிரியங்கா கடந்த மாதம் 31-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார். பூபேஷ்பாகல், பிரதாப் சிங் பஜ்வா, சச்சின் பைலட் போன்ற தலைவர்களும் காங்கிரசுக்கு பிரசாரம் செய்தனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    அவர் நாளையும், 9-ந்தேதியும் அங்கு பிரசாரம் மேற்கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்ற பிறகு சட்டசபை தேர்தலை முதல் முறையாக சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இமாச்சல பிரதேசத்தை பொறுத்த வரை எந்த கட்சியும் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது இல்லை. அங்கு பா.ஜனதா-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி 3-வது அணியாக களம் இறங்குகிறது.

    • 2023-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிட பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • 224 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 1 முதல் 3 வேட்பாளர்களை கட்சி தேர்வு செய்யும்.

    பெங்களூரு:

    காங்கிரஸ் புதிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பாராட்டு விழா கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் சலீம் அகமது பேசுகையில், கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் இளைஞர்கள் மற்றும் பெண்களை அடையாளம் காண மாநில காங்கிரஸ் நேர்மையான முயற்சியை மேற்கொள்ளும்.

    இதற்காக மாநில காங்கிரஸ் சார்பில் ஒரு குழு அமைக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் குறிப்பிட்ட நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் இந்த பட்டியல் மத்திய தேர்தல் குழுவால் பரிசீலிக்கப்படும் என்றார்.

    பின்னர் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:-

    2023-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிட பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களை மதிப்பிடுவதற்காக 3 கருத்து கணிப்புகளை நடத்தி உள்ளதாக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

    224 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 1 முதல் 3 வேட்பாளர்களை கட்சி தேர்வு செய்யும். இந்த 3 பேரில் 50 வயதுக்குட்பட்ட ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார். இதில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதே நேரத்தில் கார்கேவின் இந்த அறிவிப்பு அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகளிடையே பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இதுகுறித்து நிர்வாகி ஒருவர் கூறுகையில், 68 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் சீட் வழங்காமல் இருக்க முடியாது.

    மேலும் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பலர் தற்போதும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். எனவே புதிதாக இளைஞர்களுக்கு சீட் எப்படி ஒதுக்க முடியும் என்றார்.

    • மோடி அரசு விமானநிலையங்கள், துறைமுகங்களை விற்பனை செய்து வருகிறது.
    • நாட்டின் சொத்துக்கள் ஒரு சிலரின் கைகளில் சென்றடைகிறது.

    மும்பை :

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்ரா என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் மராட்டியத்தில் நடைபயணம் செய்கிறார். இதையொட்டி நாந்தெட்டில் நேற்று முன்தினம் இரவு ராகுல் காந்தியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:-

    காங்கிரஸ் நாட்டுக்கு என்ன செய்தது என்று பா.ஜனதா தலைவர்கள் அடிக்கடி கேட்கின்றனர். காங்கிரசால் தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நாங்கள் அரசியலமைப்பு சாசனத்தை பாதுகாத்தோம். அதனால் தான் இன்று நீங்கள் (மோடி) பிரதமராக முடிந்தது.

    ஆண்டுதோறும் 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என பா.ஜனதா உறுதி அளித்தது. ஆனால் தற்போது அவர்கள் 75 ஆயிரம் வேலைவாய்ப்புகளை மட்டும் கொடுத்து உள்ளனர். 18 கோடி வேலைவாய்ப்புகள் எங்கே போனது?.

    மோடி அரசு விமானநிலையங்கள், துறைமுகங்களை விற்பனை செய்து வருகிறது. நாட்டின் சொத்துக்கள் ஒரு சிலரின் கைகளில் சென்றடைகிறது. காங்கிரஸ் உணவு பாதுகாப்பை கொடுத்தது. கடந்த 9 ஆண்டுகளில் பா.ஜனதா கொண்டு வந்த 10 திட்டங்களின் பெயரை அவர்களால் கூறமுடியுமா?.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே பேசுகையில், " பா.ஜனதா ஒரு நிகழ்வு. ஆனால் காங்கிரஸ் ஒரு பேரியக்கம். பிரதமர் அவர் தாயை சந்திக்கும் போது கூட கேமராவை தான் பார்க்கிறார். ஏனெனில் அது ஒரு நிகழ்ச்சி. பா.ஜனதா நாட்டுக்கு பசி, பயம், ஊழலை தான் கொடுத்து உள்ளது" என்றார்.

    இதேபோல கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பாலாசாகேப் தோரட், அசோக் சவான், தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் உள்ளிட்டவர்களும் பேசினர்.

    ×