என் மலர்
இந்தியா

துணை ஜனாதிபதி தேர்தலில் 'இந்தியா' கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு
- துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்த பலரும் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
- துணை ஜனாதிபதி தேர்தலில், மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிப்பார்கள்.
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், கடந்த மாதம் 21-ந்தேதி, மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அவர் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.
புதிய துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9-ந்தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பாணை கடந்த 7-ந் தேதி வெளியிடப்பட்டது.
இதற்கிடையே, துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுகிறார்.
இதுகுறித்து அக்கூட்டணி வட்டாரங்கள் கூறியதாவது:-
துணை ஜனாதிபதி தேர்தல் முடிவு எப்படி வரும் என்றாலும், அந்த தேர்தலை கண்டு பயந்து ஓடாமல் போட்டியிட வேண்டும் என்று 'இந்தியா' கூட்டணி கட்சிகளிடையே பலமான கருத்து நிலவுகிறது. வலிமையான அரசியல் செய்தியை அளிக்க போட்டியிடுவது அவசியம் என்று கருதப்படுகிறது.
இதுதொடர்பாக முறையான விவாதம் நடக்கவில்லை. இருப்பினும், திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஒரு தரப்பினர், பா.ஜ.க. தனது வேட்பாளரை அறிவித்த பிறகு, நாம் வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்த பலரும் ஆர்வம் தெரிவித்துள்ளனர். ஒரு சில பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
கருத்தொற்றுமையுடன் வேட்பாளரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எதிர்க்கட்சிகளை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களில், பாராளுமன்றத்தில் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக போராடி வருகின்றன. இந்த பின்னணியில், பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சி நடந்து வருகிறது.
கடந்த 7-ந் தேதி, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இல்லத்தில் 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. அதுபோல், மல்லிகார்ஜூன கார்கே இன்று 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்களுக்கு விருந்து அளிக்கிறார்.
துணை ஜனாதிபதி தேர்தலில், மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிப்பார்கள். தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை 3 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை முறையாக இல்லாததால் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனு தாக்கலுக்கு 21-ந் தேதி கடைசிநாள். 22-ந்தேதி மனுக்கள் பரிசீலிக்கப்படும். மனுக்களை வாபஸ் பெற 25-ந் தேதி கடைசிநாள்.
மக்களவை, மாநிலங்களவையின் மொத்த பலம் 781. அவற்றில், துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற குறைந்தபட்சம் 391 எம்.பி.க்களின் வாக்குகளை பெற வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 எம்.பி.க்கள் உள்ளனர்.
இது இடைத்தேர்தலாக இருந்தபோதிலும், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர் முழு பதவிக்காலமான 5 ஆண்டுகளும் பதவி வகிக்கலாம்.
துணை ஜனாதிபதிக்கு போட்டியிடுபவர் இந்திய குடிமகனாகவும், 35 வயது நிரம்பியவராகவும், மாநிலங்களவை எம்.பி. ஆக தகுதி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளின் ஆதாயம் தரும் பதவி எதையும் வகிக்கக்கூடாது.






