என் மலர்
நீங்கள் தேடியது "Arvind Kejriwal"
- டெல்லியின் பாதுகாப்பு குறித்த அலட்சியத்தை பொறுத்துக்கொள்ள முடியாது
- இந்த குண்டு வெடிப்பிற்கு பின்னால் பெரிய சதி இருக்கிறதா?
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.
அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியின் பாதுகாப்பு குறித்து முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்புச் செய்தி மிகவும் கவலையளிக்கிறது. சிலர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன, இது மிகவும் வருத்தமளிக்கிறது.
இந்த வெடிப்பு எவ்வாறு நிகழ்ந்தது, இதற்குப் பின்னால் பெரிய சதி இருக்கிறதா என்பது குறித்து காவல்துறையும் அரசாங்கமும் உடனடியாக விசாரிக்க வேண்டும். டெல்லியின் பாதுகாப்பு குறித்த அலட்சியத்தை பொறுத்துக்கொள்ள முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
- பஞ்சாப் மாநிலத்தின் 92 சதவீத மக்கள் இலவசமாக மின்சாரம் பெறுகிறார்கள்.
- பாசனத்திற்கு குறைந்த பட்சம் 8 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது
ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ஆட்சி செய்து வருகிறது. பகவத் மான் முதலமைச்சராக இருந்து வருகிறார். அந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், மின்மாற்றிகள் மற்றும் வினியோக யூனிட் அமைப்பதற்கான கட்டுமான தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது, அடுத்த வருடத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்தில் மின்தடை இருக்காது என கெஜ்ரிவால் உறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறியதாவது:-
பஞ்சாப் மாநிலத்தின் 92 சதவீத மக்கள் இலவசமாக மின்சாரம் பெறுகிறார்கள். பாசனத்திற்கு குறைந்த பட்சம் 8 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது நாள் முழுவதும் வழங்கப்படும் வகையில் விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.
24 மணி நேரம் மின்சாரம் வழங்குவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். 25 ஆயிரம் கி.மீ. புதிய பவர் கேபிள் பதிப்பதற்கான கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. 8,000 புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்கள், 77 புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வேலைகள் மிகப்பெரிய அளவில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த சிஸ்டமும் நவீனமாக்கப்படும். அடுத்த கோடைக்காலத்தில், பஞ்சாபில் மின்தடை என்பதே இருக்காது.
இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
- மாயாவதி காலி செய்த பங்களாவை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
- அந்த பங்களா மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரிக்கு ஒதுக்கப்பட்டது.
ஓராண்டு காத்திருப்புக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு இறுதியாக அதிகாரப்பூர்வ பங்களாவை ஒதுக்கியுள்ளது.
கெஜ்ரிவால், கடந்த 2024 செப்டம்பர் 17 அன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபின், தனது கட்சி எம்.பி.யான அசோக் மிட்டலின் வீட்டில் தற்காலிகமாக வசித்து வருகிறார்.
தேசிய அங்கீகாரம் பெற்ற கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு மத்திய அரசு பங்களா ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் அரசு பங்களா ஒதுக்கீட்டில் ஏற்பட்ட தாமதம் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி மனு தாக்கல் செய்தது.
இதனையடுத்து, செப்டம்பர் 25 அன்று, 10 நாட்களுக்குள் தகுந்த பங்களாவை ஒதுக்குவதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் உறுதியளித்தது.
அந்த வகையில் கெஜ்ரிவாலுக்கு டெல்லியில் லோதி எஸ்டேட்டில் உள்ள டைப்-7 பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பங்களாவில் இதற்கு முன்னர், பாஜக தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான இக்பால் சிங் லால்புரா வசித்து வந்தார்.
முன்னதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி காலி செய்த பங்களாவை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அந்த பங்களா மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரிக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லி தேர்தலின்போது கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ அரசு இல்லத்தில் ஆடம்பர வசதிகள் இருப்பதாக பாஜக தீவிர பிரசாரம் மேற்கொண்டு ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
- வாக்கு திருட்டு தொடர்பான காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு ரேகா குப்தா பதில் அளித்துள்ளார்.
- காங்கிரஸ் செய்தால் சரி, நாங்கள் செய்தா தவறா? எனக் கூறியதாக கெஜ்ரிவால் வீடியோ வெளியிட்டிருந்தார்.
காங்கிரசின் வாக்கு மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, டெல்லி முதல்வர் ரேகா குப்தா பேசியதை, கெஜ்ரிவால் எடிட் செய்து வீடியோ வெளியிட்ட நிலையில் எனது ரீல்ஸ்-களை பார்ப்பதை நிறுத்துங்கள் என ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரேகா குப்தா கூறியதாவது:-
கெஜ்ர்வால் சார்-க்கு நான் சொல்ல விரும்புகிறேன், தயவு செய்து என்னுடைய வீடியோக்கள், பேட்டிகள் மற்றும் ரீல்ஸ்களை பார்ப்பதை குறைத்துக் கொள்ளவும். நான் என்ன சொல்கிறேன். என்ன சொல்லவில்லை என்று நாள் முழுவதும் என்னுடைய ரீல்ஸ்களை பார்த்து கண்டு பிடிக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
கெஜ்ரிவால் கவனம் செலுத்த விரும்பினால், பஞ்சாப் மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அங்குள்ள மக்களை அவர் பார்க்க வில்லை.
ரேகா குப்தா பேசியதாக கெஜ்ரிவால் வெளியிட்டிருந்த வீடியோவில் "காங்கிரஸ் 70 ஆண்டுகளாக ஆட்சி செய்த காலத்தில் EVS கையாளப்பட்டது. அது பரவாயில்லை. ஆனால் இப்போது நாங்கள் கையாளும்போது அவர்கள் மோசமாக உணர்கிறார்கள்" என பதிவாகியிருந்தது. மேலும், முதலமைச்சர் என்ன சொல்கிறார்? என கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால் டெல்லி பாஜக ரேகா குப்தா பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் "காங்கிரஸ் 70 வருடங்களாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாண்டு வந்த வரை, அது பரவாயில்லை, ஆனால் இப்போது நாம் அதைச் செய்துவிட்டதால், அவர்கள் வருத்தப்படுகிறார்கள். அவர்கள் வெற்றி பெறும்போது, அது பொதுமக்களின் ஆணை, நாம் வெற்றி பெறும்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படுகின்றன?.
இந்த பார்முலா எங்கே எழுதப்பட்டுள்ளது? ராகுல் காந்தி இதை எங்கே படித்தார் என்று யாராவது சொல்லுங்கள். அவர் எப்போதும் பொதுமக்களை தவறாக வழி நடத்துகிறார், எப்போதும் மக்களிடம் பொய் சொல்கிறார். பொதுமக்கள் அவருக்கு பல வாய்ப்புகளை வழங்கியுள்ளனர், அவர் பல ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்துள்ளார். இன்று அவர் மிகவும் கீழ்த்தரமாக இதுபோன்ற விஷயங்களைச் சொல்லும் அளவுக்குக் தரம் தாழ்ந்துவிட்டார்" என ரேகா குப்தா குறிப்பிட்டுள்ளார்.
- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று முதல் 7 நாட்கள் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- ஒரு வாரத்திற்கு பிறகு சிகிச்சை முடிந்து மீண்டும் டெல்லி திரும்புகிறார்.
ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா வந்துள்ளார்.
அவர் கோட்டயம் மாவட்டம் காஞ்சிரப்பள்ளி அருகே பரத்தோடு பகுதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கியிருந்து சிகிச்சை பெற உள்ளார். இதற்காக அவர் நேற்று இரவு கேரளா வந்தார். பின்பு அவர் ஆயுர்வேத சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு சென்றார்.
அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலுடன் அவரது குழுவை சேர்ந்தவர்கள் மற்றும் கேரள போலீசார் ஆயுர்வேத மருத்துவமனைக்கு சென்றனர். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அந்த மருத்துவமனையில் இன்று முதல் 7 நாட்கள் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பின்பு ஒரு வாரத்திற்கு பிறகு சிகிச்சை முடிந்து மீண்டும் டெல்லி திரும்புகிறார். ஆயுர்வேத சிகிச்சைக்காக பல அரசியல் பிரபலங்கள் கேரளாவுக்கு வந்துள்ளனர். இந்தநிலையில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் வந்திருக்கிறார்.
மூன்று முறை டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 2024 மக்களவை தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு மார்ச் மாதம் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அதே ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு ஜாமின் வழங்கியதை தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்தார். அதன்பிறகு தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால், 2025 சட்டமன்ற தேர்தலில் டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த சட்டம் யாரையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது.
- சர்வாதிகாரம் அதிகரிக்கும் போதெல்லாம் புரட்சி வலுவடைகிறது என்பதற்கு வரலாறு சாட்சி.
ஜம்மு-காஷ்மீரின் ஒரே ஆம் ஆத்மி எம்எல்ஏவான மெஹ்ராஜ் மாலிக், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (PSA) கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த சட்டம் யாரையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது.
சட்டம் ஒழுங்கை பாதிக்கும் விதமான செயல்களில் ஈடுபட்டதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இதற்கு ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், தனது தொகுதி மக்களுக்கு மருத்துவமனை கேட்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏவை சிறையில் அடைக்க வேண்டிய அளவுக்கு பெரிய குற்றமா? மெஹ்ராஜ் மாலிக் ஆம் ஆத்மி கட்சியின் சிங்கம்.
மக்களின் குரலாக மாறி அவர்களின் உரிமைகளுக்காக அவர் எப்போதும் போராடுவார். சிறை, அச்சுறுத்தல்கள் மற்றும் சதித்திட்டங்கள், இவை அனைத்தும் ஆம் ஆத்மியின் எந்த சிப்பாயையும் ஒருபோதும் பயமுறுத்த முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா கூறுகையில், " இது அரசாங்கத்தின் வெளிப்படையான சர்வாதிகாரம், மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்புபவர்கள் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறார்கள்.
ஆனால் சர்வாதிகாரம் அதிகரிக்கும் போதெல்லாம் புரட்சி வலுவடைகிறது என்பதற்கு வரலாறு சாட்சி" என்று தெரிவித்துள்ளார்.
- அமெரிக்க பருத்தி இறக்குமதிக்கு 11 சதவீத கலால் வரியை தள்ளுபடி செய்யும் மோடி அரசின் முடிவை கெஜ்ரிவால் விமர்சித்தார்.
- கடனில் மூழ்கிய விவசாயி தற்கொலையின் விளிம்பில் இருக்கிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு விதித்த 50 சதவீத வரிக்கு இந்தியா வலுவான பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய கெஜ்ரிவால், "பிரதமர் கொஞ்சம் தைரியம் காட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். முழு நாடும் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறது.
இந்திய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நீங்கள் 75 சதவீத வரி விதிக்கவேண்டும். வரியை மட்டும் விதித்து பாருங்கள். பின்னர் டிரம்ப் இறங்கி வருகிறாரா என்று பார்ப்போம்" என்று தெரிவித்தார்.
மேலும், டிசம்பர் 31, 2025 வரை அமெரிக்க பருத்தி இறக்குமதிக்கு 11 சதவீத கலால் வரியை தள்ளுபடி செய்யும் மோடி அரசின் முடிவை கெஜ்ரிவால் விமர்சித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதவில், இறக்குமதி மீதான 11% வரியை அரசாங்கம் நீக்கியுள்ளதால் ஜவுளி நிறுவனங்கள் ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து மலிவான பருத்தியை இறக்குமதி செய்துள்ளன.
நமது நாட்டு விவசாயிகள் இப்போது எங்கு செல்ல வேண்டும்? அவர்களின் பருத்தி சந்தையில் விற்கப்படாது. கடனில் மூழ்கிய விவசாயி தற்கொலையின் விளிம்பில் இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
- அனைத்து அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் குறிப்பாக மத்திய அரசு பஞ்சாபிற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
- 37 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் இவ்வளவு பயங்கரமான பேரழிவைச் சந்தித்துள்ளது.
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பஞ்சாப் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
இந்நிலையில் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் குறிப்பாக மத்திய அரசு பஞ்சாபிற்கு உதவுமாறு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், "இன்று பஞ்சாப் எதிர்கொள்ளும் பேரழிவு சாதாரண வெள்ளம் அல்ல, 37 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் இவ்வளவு பயங்கரமான பேரழிவைச் சந்தித்துள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன, இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட நமது சகோதர சகோதரிகள் ஒரே அடியில் வீடற்றவர்களாகிவிட்டனர். அவர்களின் வாழ்நாள் முழுவதும் சம்பாத்தியமும் கனவுகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
நாட்டிற்கு ஏற்பட்ட எந்தவொரு பேரிடரையும் பஞ்சாப் எப்போதும் எதிர்த்து நிற்கிறது. இன்று, பஞ்சாப் நெருக்கடியில் உள்ளது. இந்த கடினமான நேரத்தில் பஞ்சாப் மக்களுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவுமாறு எனது நாட்டு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை பஞ்சாப் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குகிறார்கள். இந்த பயங்கரமான துயரத்திலிருந்து பஞ்சாபைக் காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைவோம்." என்று அழைப்பு விடுத்துள்ளார்.
- மக்களுக்கான சேவையாற்றுவதில் உங்களுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்.
- உங்கள் தலைமை பொது குடிமக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை தொடர்ந்து வலுப்படுத்தட்டும்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
மக்களுக்கான சேவையாற்றுவதில் உங்களுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன். உங்கள் தலைமை பொது குடிமக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை தொடர்ந்து வலுப்படுத்தட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- துணைநிலை ஆளுநரின் தொடர்ச்சியான இடையூறுகளுக்கு மத்தியிலும் நாங்கள் பணியாற்றினோம்.
- இலவச மின்சாரம், கல்வி சீர்திருத்தங்கள் அனைத்தும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் செய்யப்பட்டன.
டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த ஆம் ஆத்மி கடந்த பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிடம் தோற்றது.
இந்நிலையில் மொஹாலியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், ஆம் ஆத்மி தலைவர் ஜாஸ்மின் ஷா எழுதிய 'கெஜ்ரிவால் மாடல்' புத்தகத்தின் பஞ்சாபி பதிப்பை வெளியிட்டபோது ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து ஒன்றை தெரிவித்தார்.
அதாவது, "எங்கள் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நாங்கள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை, ஆனாலும் நாங்கள் செய்து காட்டினோம். ஆட்சி மற்றும் நிர்வாகத்திற்காக எனக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று நான் உணர்கிறேன்.
துணைநிலை ஆளுநரின் தொடர்ச்சியான இடையூறுகளுக்கு மத்தியிலும் நாங்கள் பணியாற்றினோம். மொஹல்லா கிளினிக்குகள், இலவச மின்சாரம், கல்வி சீர்திருத்தங்கள் அனைத்தும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் செய்யப்பட்டன. நெருக்கடிக்கு மத்தியிலும் ஆட்சி செய்ததற்காக எனக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும்" என்றார்.
இந்நிலையில் இதுகுறித்து விமர்சித்த டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, "அவர் மனநல பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஊழல், குழப்பம், திறமையின்மை ஆகியவற்றிற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டால் மட்டுமே அவர் பெற முடியும்.
பல ஊழல் வழக்குகளில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள ஒருவருக்கு நோபல் பரிசு குறித்து பேச என்ன தகுதி உள்ளது? அவர் டெல்லியை சூறையாடிவிட்டார். மக்கள் அவரை நிராகரித்துவிட்டனர். கெஜ்ரிவால் நோபல் பரிசு பற்றி பேசினால், நீங்கள் சிரித்துக்கொண்டே கேட்க வேண்டும்" என்று கூறினார்.
- 14 ஏர் கண்டிஷனர்கள் மற்றும் பல தொலைக்காட்சிகள் உட்பட, குடியிருப்பின் புதுப்பிப்புக்காக ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
- அதில் விளக்கு அமைப்புகளுக்கு மட்டுமே ரூ.6 லட்சத்திற்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டது.
டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் வீட்டின் ரூ.60 லட்சம் மதிப்பிலான புதுப்பித்தல் பணிகள் சர்ச்சைக்கு பின் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராஜ் நிவாஸ் மார்க்கில் உள்ள ரேகா குப்தாவுக்கு இரண்டு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒன்று குடியிருப்புக்காகவும் மற்றொன்று அலுவலகப் பணிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.
14 ஏர் கண்டிஷனர்கள் மற்றும் , 5 LED தொலைக்காட்சிகள் உட்பட, குடியிருப்பின் புதுப்பிப்புக்காக ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதில் விளக்கு அமைப்புகளுக்கு மட்டுமே ரூ.6 லட்சத்திற்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை பொதுப்பணித்துறை வெளியிட்ட டெண்டரின்படி, முதல் கட்ட கட்டுமானப் பணிகள் ஜூலை மாத நடுப்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டது.
பள்ளி கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சினைகளால் மக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் முதலமைச்சரின் வீண் செலவுகளை ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் விமர்சித்தது. இதைத்தொடர்நது நிர்வாக காரணங்களுக்காக புதுப்பித்தல் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டதாக டெல்லி அரசு அறிவித்தது.
முன்னதாக கடந்த பிப்ரவரி சட்டமன்றத் தேர்தலில் கெஜ்ரிவால் ஆடம்பர பங்களாவில் வசிப்பதாக பாஜக பிரசாரம் செய்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- சமீபத்தில் 5 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் நடந்தது.
- இந்த இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக, காங்கிரஸ், டிஎம்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன.
இந்நிலையில், குஜராத் மற்றும் பஞ்சாப் சட்டசபை இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:
குஜராத் மற்றும் பஞ்சாப் இடைத்தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபின் லூதியானா மேற்கு சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் எங்கள் வேட்பாளர் சஞ்சீவ் அரோரா வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி மீதான தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
குஜராத்தின் விசாவதார் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரும், கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான கோபால் இத்தாலியா வெற்றி பெற்றுள்ளார். குஜராத் மக்கள் இப்போது பா.ஜ.க. மீது வெறுப்படைந்து, ஆம் ஆத்மி கட்சிமீது நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
பஞ்சாபிலும், குஜராத்திலும் ஆம் ஆத்மியை தோற்கடிக்க காங்கிரசும், பா.ஜ.க.வும் முயன்றன. ஆனால், மக்கள் அவர்களை நிராகரித்துள்ளனர்.
2027-ம் ஆண்டில் பஞ்சாப், குஜராத் ஆகிய இரு மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. சிலர் இது 2027-க்கான அரையிறுதி என கூறுகிறார்கள். 2027-ல் ஆம் ஆத்மி கட்சியின் புயல் வீசும். குஜராத்தைப் பொறுத்தவரை 2027 தேர்தல் போட்டி என்பது பா.ஜ.க-ஆம் ஆத்மி கட்சி இடையேதான் இருக்கும் என தெரிவித்தார்.






