என் மலர்
நீங்கள் தேடியது "அமெரிக்கா வரிவிதிப்பு"
- இந்தியாவும், சீனாவும் பண்டைய நாகரிகங்கள் கொண்ட நாடுகள்.
- புதிய சந்தைகள், புதிய எரிசக்தி வினியோக ஆதாரங்களை தேட அவர்களை கட்டாயப் படுத்துகிறது.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்து உள்ளது. உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதி உதவி செய்து வருவதாக அமெரிக்கா விமர்சித்து வருகிறது. இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
மேலும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்படாமல் ரஷியாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணை வாங்கி வருகிறது. இந்தநிலையில் ரஷிய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத்தல் பலன் அளிக்காது என கூறி உள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு செர்ஜி லாவ்ரோவ் இது தொடர்பாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ரஷியா மீது விதிக்கப்பட்ட புதிய தடைகளால் எங்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை. அந்த காலக்கட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தடைகளை டிரம்பின் முதல் பதவி காலத்தில் விடுக்கப்பட்டது.
மேற்கத்திய நாடுகள் இந்த தடைகளை விதித்தபோது இருந்த சூழ்நிலையில் இருந்து நாங்கள் முடிவுகளை எடுக்க தொடங்கினோம்.
இந்தியாவும், சீனாவும் பண்டைய நாகரிகங்கள் கொண்ட நாடுகள். எனக்கு பிடிக்காததை செய்வதை நீங்கள் நிறுத்துங்கள், அல்லது நான் உங்கள் மீது வரிகளை விதிப்பேன் என்று அவர்களிடம் பேசுவதில் எந்த பயனும் இல்லை. இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத் தல்கள் பலன் அளிக்காது என்பது நிரூபணம் ஆகி வருகிறது.
இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவின் கோரிக்கை களை எதிர்த்து வருகிறது. அந்த நாடுகள் அமெரிக்கா வின் அழுத்தத்தை விட தங்கள் சொந்த தேசிய நலன்களை அடிப்படையாக கொண்ட கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றி வருகின்றன.
இந்த வரி அச்சுறுத்தல் அந்த நாடுகளின் பொருளா தார வளர்ச்சியை குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது என்பதோடு மட்டுமல்லாமல் குறைந்த பட்சம் மிகவும் கடுமையான சிரமங்களை உருவாக்குகிறது.
இதனால் புதிய சந்தைகள், புதிய எரிசக்தி வினியோக ஆதாரங்களை தேட அவர்களை கட்டாயப் படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக ஏற்றுமதியாளர்கள் மீள முடியாத அளவிற்கு மிக மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
- வரி விதிப்பு நடைமுறையால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு பாதிப்பிலிருந்து தமிழக ஏற்றுமதியாளர்கள் மீட்க நடவடிக்கை தேவை என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 50 சதவீத வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் தமிழக ஏற்றுமதியாளர்கள் மீள முடியாத அளவிற்கு மிக மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
தங்கள் எதிர்காலம் குறித்த கேள்விகளோடும் கவலைகளோடும் இருக்கும் நெசவாளர்கள். மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர் ஒவ்வொருவரோடும் தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தியாவின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் பெருமையாகத் தமிழ்நாடு எப்போதும் இருந்து வருகிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் நமது மாநிலம் கிட்டத்தட்ட 10% அளவிற்குப் பங்களிக்கிறது. இது நாட்டின் மிகப் பெரிய ஏற்றுமதி அளவுகளில் ஒன்றாகும். ஜவுளி, ஆடை தோல் மற்றும் காலணிகள், ஆட்டோமொபைல்கள், ஆட்டோ உதிரி பாகங்கள். இயந்திரங்கள். ரசாயனங்கள். மின்னணுப் பொருட்கள். கடல் உணவு வகைகள், நகைகள் உள்ளிட்டவை வரை தமிழ்நாட்டின் தொழில்கள். லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதோடு, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றுகின்றன.
இந்நிலையில் இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்காவின் 50 சதவீதம் என்ற புதிய வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளதால் தமிழக ஏற்றுமதியாளர்கள். தாங்கள் மேற்கொண்டு வரும் ஏற்றுமதித் தொழிலைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏனெனில், வங்கதேசம் உள்ளிட்ட பிற ஆசிய நாடுகள் மீது அமெரிக்கா இந்த அளவிற்கு வரியை விதிக்கவில்லை. இதனால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மற்ற நாட்டுப் பொருட்களின் விலை குறைவாகவும், அதே நேரத்தில் 50 சதவீதம் வரி விதிப்பிற்கு உட்படுத்தப்பட்ட இந்தியப் பொருட்களின் விலை அதிகமாகவும் இருக்கும்.
வரி அதிகமான காரணத்தினால் அமெரிக்க வணிகர்கள் இந்தியப் பொருட்களை வாங்குவதைத் தவிர்த்து வருகின்றனர். இது தமிழக ஏற்றுமதியாளர்களின் தலையில் விழுந்த மிகப் பெரிய 'இடி' ஆகும்.
இந்த வரி விதிப்பு நடைமுறையால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன.
திருப்பூரில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகள், கோயம்புத்தூரில் உள்ள ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகள் மற்றும் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் மீனவர்கள் ஆகியோரின் வருமானம் குறைந்து, தொழிற்சாலைகள் மூடப்பட்டு, நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெறும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்புக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளனர்.
இதனால் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் தமிழ்நாட்டின் இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறு தொழில்முனைவோர் தான் முதலில் பாதிக்கப்படுவார்கள்.
இந்தக் கூடுதல் வரிவிதிப்பு அச்சுறுத்தல், சிறிது காலமாகவே இருந்து வந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
வெளியுறவுக் கொள்கையில் ஒரு முன்முயற்சி எடுத்திருந்தால் இந்தச் சூழ்நிலையைத் தடுத்திருக்க முடியும் என்ற உணர்வை நாம் ஒவ்வொருவரும் பெறுவதைத் தவிர்க்க இயலவில்லை.
'உலகளாவிய தெற்கின் குரல்' என்று ஒன்றிய அரசு பெருமையாகக் கூறிக்கொண்டாலும், அமெரிக்காவின் வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்த உடனே இந்தியத் தொழில்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டை ஆளுகின்ற திமுக அரசும், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க, எந்த அவசரத் திட்டமோ, நிவாரண நடவடிக்கைகளோ அல்லது தொலைநோக்குப் பார்வையோ இல்லாமல், 'முதலீட்டு உச்சி மாநாடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றிய வெற்று விளம்பரங்களோடு தன்னை நிறுத்திக்கொண்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்குக் கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்ட கடல் உணவுகள், 50 சதவீத வரி விதிப்பால் பாதி வழியில் துத்துக்குடிக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வந்த செய்திகள் கவலை அளிக்கின்றன. ஏனெனில் இதில் பாதிக்கப்படுவது தமிழக ஏற்றுமதியாளர்கள் தான்.
எனவே, தொழில் மற்றும் வேலைவாய்ப்பினைப் பாதுகாப்பதற்காக ஒன்றிய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகிறது. ஆகவே, ஒன்றிய, மாநில அரசுகளுக்குத் தமிழக வெற்றிக் கழகம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது.
1. தொழில் துறை, தொழில்முனைவோர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க, விரைவாகவும் தீர்க்கமாகவும் செயல்படக் கூடிய, தொழில் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகளை (குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து) உள்ளடக்கிய ஒன்றிய-மாநில அளவிலான கூட்டுப் பணிக்குழுவை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விளம்பரத்தால் எண்ணற்ற மக்கள் துணிகளை வாங்க குவிந்தனர்.
- தரமற்ற துணிகளே இருந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே வரி அதிகரிப்பால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத ஜவுளி ரகங்கள் சலுகை விலையில் விற்பனை என விளம்பரம் செய்யப்பட்டு துணிகள் வீரப்பனை செய்யப்பட்டது.
இந்த விளம்பரத்தால் எண்ணற்ற மக்கள் துணிகளை வாங்க குவிந்தனர். ஏராளமான மக்கள் குவிந்த நிலையில் தரமற்ற துணிகளே இருந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
உள்ளூர் சந்தையில் விற்கப்படுவதை ஏற்றுமதி துணிகள் என ஏமாற்றுவதாக மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட துணிகள் விற்பனை நிறுத்தப்பப்பட்டது.
- ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஒரு அரசியல் கட்சியை போல் நடந்து கொண்டுள்ளது.
- தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் கணிசமானவற்றை நிறைவேற்றியுள்ளனர்.
மதிமுக தென் மண்டல மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது.
இக்கூட்டத்திற்கு துணை பொது செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில், முதன்மைச் செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தூத்துக்குடி ஆர்.எஸ்.ரமேஷ் குமரி வெற்றிவேல், நெல்லை மத்திய மாவட்டம் கே.எம்.ஏ. நிஜாம், நெல்லை புறநகர் உவரி எம்.ரைமண்ட், தென்காசி தெற்கு ராம உதயசூரியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என கூறி சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல காரணங்களை தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இது பலத்த சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். தேர்தல் ஆணையத்தை பொருத்தவரை ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஒரு அரசியல் கட்சியை போல் நடந்து கொண்டுள்ளது.
பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசிடம் கேட்டோம். அந்த விவாதத்துக்கு அவர்கள் மறுத்துவிட்டனர். தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தான் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அங்கு பேரணி நடந்து வருகிறது.
தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் கணிசமானவற்றை நிறைவேற்றியுள்ளனர். சில வாக்குறுதிகளுக்கு முதல்-அமைச்சரும் துறை சார்ந்த அமைச்சரும் பதில் அளித்துள்ளனர். பல வாக்குறுதிகள் நிறைவேறாமல் இருப்பதற்கு நிதி நெருக்கடியும் ஒரு காரணம். இதுபோன்ற நிலை பா.ஜ.க. அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் நிலவுகிறது.
இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு அமெரிக்க நாடு 50 சதவீதம் வரிவிதிப்பால் மிகப்பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு பொறுத்த வரை ஜவுளித்துறை முக்கிய தொழிலாக உள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பால் ஆயிரக் கணக்கான தொழிற்சாலைகள் மூடப்படும் அபாய நிலை உருவாகியுள்ளது.
இதனால் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் தங்களது வேலை இழக்கும் நிலை வரும். மத்திய அரசு இதற்குரிய மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
ஏற்கனவே மத்திய அரசு மாற்று ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிகிறது. 200 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. இதில் 40 நாடுகளை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
அந்த நாடுகளுடன் பேசி அமெரிக்க மூலமாக ஏற்படும் வர்த்தக இழப்பை ஈடு செய்யும் அளவுக்கு ஏற்றுமதியை கொண்டு சென்றால் இப்பிரச்சினையை சரி செய்யலாம் என்ற முயற்சி இருக்கிறது. இதனை விரைந்து செய்ய வேண்டும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து த.வெ.க. தலைவர் விஜய் பேசியதை தவிர்க்க வேண்டும். பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் மதிமுக சார்பில் மாநாடு நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட 1% பாதிப்பு ஏற்படலாம்.
- பல ஏற்றுமதி சார்ந்த முக்கிய துறைகள், குறிப்பாக MSME-கள், பெரும் வேலை இழப்புகளை எதிர்கொள்ள உள்ளன.
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி உங்கள் அன்பு நண்பர் ட்ரம்ப் ஆட்சி" இன்று முதல் இந்தியாவுக்கு 50% சுங்கவரி விதித்துள்ளார். இந்த சுங்கவரியின் முதல் பாதிப்பாக, 10 துறைகளில் மட்டும் நாம் சுமார் ₹2.17 லட்சம் கோடி இழப்பைச் சந்திக்க உள்ளோம்.
நமது விவசாயிகள், குறிப்பாக பருத்தி விவசாயிகள், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் காக்க எந்த "தனிப்பட்ட விலையையும்" செலுத்தத் தயார் என்று நீங்கள் கூறியிருந்தீர்கள்.
ஆனால் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், இந்த பாதிப்பைக் குறைக்கவும் நீங்கள் எதுவும் செய்யவில்லை.
குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) பரிந்துரைப்படி, நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட 1% பாதிப்பு ஏற்படலாம், மேலும் இதனால் சீனா பயனடையும் என்று கூறப்படுகிறது.
பல ஏற்றுமதி சார்ந்த முக்கிய துறைகள், குறிப்பாக MSME-கள், பெரும் வேலை இழப்புகளை எதிர்கொள்ள உள்ளன.
ஒரு சிறிய பகுதி- இது பனிப்பாறையின் முனை மட்டுமே- கீழ்க்கண்டவாறு வெளிப்படுத்துகிறது:
இந்திய ஜவுளி ஏற்றுமதித் துறையில் சுமார் 5,00,000 வேலைகள் (நேரடி மற்றும் மறைமுக) இழப்பு ஏற்படலாம்.
ரத்தினங்கள் மற்றும் நகைத் துறையில், சுங்கவரி தொடர்ந்தால் 1,50,000 முதல் 2,00,000 வேலைகள் ஆபத்தில் உள்ளன.
ஏப்ரல் முதல், அமெரிக்காவில் 10% அடிப்படை சுங்கவரி அமல்படுத்தப்பட்டதிலிருந்து, சௌராஷ்டிரா பகுதியில் வைர வெட்டுதல் மற்றும் மெருகூட்டலில் ஈடுபட்ட சுமார் 1,00,000 தொழிலாளர்கள் ஏற்கனவே வேலையை இழந்துள்ளனர்.
சுமார் 5,00,000 இறால் விவசாயிகளின் நேரடி வாழ்வாதாரமும், மறைமுகமாக மேலும் 25,00,000 பேரின் வாழ்வாதாரமும் பெரும் ஆபத்தில் உள்ளது.
இந்திய தேசிய நலன் மிக உயர்ந்தது. ஒரு வலிமையான வெளியுறவுக் கொள்கைக்கு உள்ளடக்கமும் திறமையும் தேவை. ஆனால் உங்கள் மேலோட்டமான வெளியுறவுக் கொள்கை ஈடுபாடுகள்- புன்னகைகள், கட்டிப்பிடிப்புகள் மற்றும் செல்ஃபிகள் - நமது நலன்களைப் பாதித்துள்ளன.
நீங்கள் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தைப் பெறுவதில் தோல்வியடைந்துவிட்டீர்கள். இப்போது நமது நாட்டைக் காக்கவும் தோல்வியடைந்து வருகிறீர்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது.
- பருத்தி மீதான இறக்குமதி வரிகளை நீக்க வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு வலுயுறுத்தினார்.
இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
அக்கடிதத்தில், பருத்தி மீதான இறக்குமதி வரிகளை நீக்க வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு வலுயுறுத்தினார்.
இந்நிலையில், வருகிற செப்டம்பர் 30 வரை பருத்தி மீதான வரிகளை தற்காலிகமாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளதால், இந்திய ஜவுளித் துறைக்கு உதவியாக பருத்தி மீதான 11% இறக்குமதி வரிக்கு தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- வரிவிதிப்பு தமிழ்நாட்டின் உற்பத்தித் துறை மற்றும் வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தும்.
- பிரேசில் அரசு அந்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு வரி ஒத்திவைப்பு மற்றும் வரிச் சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில், இரு நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டுவதாகவும், தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், தற்போதைய 25% வரி மற்றும் அதன் தொடர்ச்சியாக 50% வரி அதிகரிப்பு காரணமாக கடுமையான தாக்கங்களை எதிர்கொள்வதால், தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் கவலை அளிக்கும் ஒரு பிரச்சனை குறித்து பிரதமர் மோடி கவனத்திற்குக் கொண்டுவருவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த நிதியாண்டில், இந்தியாவின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியான $433.6 பில்லியன் மதிப்பிலான பொருட்களில் 20 விழுக்காடு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் $ 52.1 பில்லியன் பொருட்களில் 31 விழுக்காடு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இவ்வாறு அமெரிக்க சந்தையை தமிழ்நாடு அதிகமாகச் சார்ந்திருப்பதால், இறக்குமதி வரியின் தாக்கம், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கும் என்றும், இந்த வரிவிதிப்பு தமிழ்நாட்டின் உற்பத்தித் துறை மற்றும் வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரிவிதிப்பினால் ஜவுளி, ஆடைகள், இயந்திரங்கள், ஆட்டோமொபைல்ஸ், ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள், தோல், காலணிகள், கடல் பொருட்கள் மற்றும் இரசாயனங்கள் துறைகளில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தத் துறைகள் அனைத்தும் அதிகத் தொழிலாளர்களை சார்ந்தவை என்பது இன்னும் கவலைக்குரியது என்றும், இதில் எந்தவொரு ஏற்றுமதி மந்தநிலையும் விரைவாக பெருமளவிலான பணி இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் தனது கடிதத்தில் கவலைபடத் தெரிவித்துள்ளார்.
2024-2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு 28% பங்களித்தது என்றும், இது இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிகவும் அதிகம் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டில் ஜவுளித் துறை கிட்டத்தட்ட 75 இலட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், 25% வரி மற்றும் முன்மொழியப்பட்டுள்ள 50% வரியின் காரணமாக, 30 இலட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும், இந்த நெருக்கடியைத் தணிக்க, நமது ஏற்றுமதி போட்டித்தன்மைக்கு நீண்டகாலமாகத் தடையாக இருக்கும் கட்டமைப்பு சிக்கல்களைத் தீர்ப்பது அவசியம் என்று தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட துறைகளைச் சேர்ந்த தொழில் அமைப்புகளுடன் தான் விரிவான ஆலோசனைகளை நடத்தியதாகவும், இந்த ஆலோசனைகளின் அடிப்படையில், ஜவுளித் துறைக்கு இரண்டு அம்சங்களில், அதாவது, மனிதனால் உருவாக்கப்பட்ட இழை மதிப்புச் சங்கிலிக்கான ஜிஎஸ்டி விகிதங்களில் உள்ள முரண்பாடுகளை நீக்கி, தலைகீழ் வரி கட்டமைப்பை சரிசெய்தல், முழு சங்கிலியையும் 5% ஜிஎஸ்டி அடுக்குக்குள் கொண்டு வருதல் மற்றும் அனைத்து வகையான பருத்திக்கும் இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளித்தல் ஆகியவற்றில் துரித நடவடிக்கை தேவைப்படுவதாக தனது கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கூடுதலாக, அவசரக் கடன் வரி உத்தரவாதத் திட்டத்தின் கீழ் (ECLGS) 30% பிணையமில்லாத கடன்களை 5% வட்டி மானியம் மற்றும் அசலைத் திருப்பிச் செலுத்துதலில் இரண்டு ஆண்டு தற்காலிக தடையுடன் நீட்டித்தல், RoDTEP நன்மைகளை 5% ஆக உயர்த்துதல், நூல் உட்பட அனைத்து ஜவுளி ஏற்றுமதிகளுக்கும் முன் மற்றும் பின் கடனை நீட்டித்தல் ஆகியவை நமது ஏற்றுமதி போட்டித்தன்மையை வலுப்படுத்துவதற்கான பிற முக்கியமான காரணிகளாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய வர்த்தகத்தில் சுங்கவரி தாக்கங்கள் மற்றும் போட்டி அழுத்தங்கள் காரணமாக மற்ற துறைகளும் இதேபோன்ற சவால்களை எதிர்கொள்கின்றன என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அதற்கு உடனடி நிவாரணம் வழங்கி, பணப்புழக்கத்தை மேம்படுத்தவும், செலவுச் சுமைகளைக் குறைக்கவும் சுங்கவரிகளால் பாதிக்கப்பட்ட அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் சிறப்பு வட்டி மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதையும், அதிக சுங்கவரி சந்தை அபாயங்களை ஈடுகட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAக்கள்) மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களை விரைவுபடுத்துவதையும் ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார். பிரச்சினையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் செயல்படுத்தப்பட்டதைப் போன்று, அசலைத் திருப்பிச் செலுத்துவதில் சலுகை உள்ளிட்ட ஒரு சிறப்பு நிதி நிவாரணத் தொகுப்பு நமது ஏற்றுமதியாளர்களை ஆதரிக்க வேண்டியது அவசியம் என்றும், பிரேசில் அரசு அந்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு வரி ஒத்திவைப்பு மற்றும் வரிச் சலுகைகளை அறிவித்துள்ளதைப் போன்று, இந்தியாவிலும் இதுபோன்ற ஒரு முயற்சியை தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் வலுவான உற்பத்தித் துறை, இதுவரை கண்டிராத ஒரு நெருக்கடியை தற்போது எதிர்கொள்வதாகவும், பல்வேறு துறைகளில் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் இந்த விஷயத்தில் அவசரமாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் தொழில்துறையைச்சார்ந்தவர்களுடன் கலந்தாலோசித்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அதோடு, இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்கவும், வர்த்தகத்தை மீட்டெடுக்கவும் ஒன்றிய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு முழு ஒத்துழைப்பினை வழங்கும் எனவும் தனது கடிதத்தில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு டிரம்ப் 50 சதவீதம் வரிவிதித்தார்
- இந்தியாவின் மீதான வரிகள் அதிகரிக்கப்படலாம் என்று அமெரிக்காவின் நிதி செயலாளர் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் போரை ஆதரிக்கும் விதமாக ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரிவிதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிர்ச்சி தந்தார்.
ரஷிய அதிபர் புதின் இன்று அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் இடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையாவிட்டால், இந்தியாவின் மீதான வரிகள் அதிகரிக்கப்படலாம் என்று அமெரிக்காவின் நிதி செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் பேச்சுவார்த்தைக்கு முன்வர இந்தியா மீதான வரி விதிப்பும் முக்கிய காரணம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பொருட்களை தயாரிக்க தேவியான மூலக் கூறுகள் முற்றிலும் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- அதன் பெரும்பாலான விநியோகம் சீனாவிலிருந்து வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட பலவேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார்.
இதற்கு மற்ற நாடுகள் பணிந்த நிலையில் வல்லரசான சீனா தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இருவரும் மாற்றி மாற்றி வரியை உயர்த்தி வருகின்றனர். சீன பொருட்கள் மீது அமெரிக்கா 145 சதவீத வரியும், அமெரிக்க பொருட்கள் மீது சீனா 125 சதவீத வரியும் விதிப்பதாக அறிவித்தன.
இந்நிலையில் அமெரிக்காவுக்கு, கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா அதிரடியாக நிறுத்தி உள்ளது.
இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள், மற்றும் பிற நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவையான மூலக் கூறுகள் முற்றிலும் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தக போரில் சீனா ஏற்றுமதிக்கு புதிய நெறிமுறைகளை வகுத்து வருகிறது. ஏற்கனவே கார்கள் முதல் மிசைல்கள் வரை தயாரிக்க தேவியான காந்தங்கள் மற்றும் மூலக்கூறுகளின் ஏற்றுமதி சீன துறைமுகங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என நியூ யார்க் டைம்ஸ் இதழ் தெரிவிக்கிறது.
சீனா வகுத்து வரும் புதிய நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்தால் அமெரிக்காவின் ராணுவ தளவாட உற்பத்தி உட்பட பல நிறுவனங்களின் உற்பத்தி தடைப்படும் என்று கூறப்படுகிறது.
பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 தனிமங்களின் தொகுப்பான 'உலகின் அரிய மண் தாது'க்களில் சுமார் 90 சதவீதத்தை சீனா உற்பத்தி செய்கிறது. சமாரியம், காடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், லுடீடியம், ஸ்காண்டியம் மற்றும் யட்ரியம் ஆகியவை உட்பட ஏழு வகை நடுத்தர மற்றும் கனரக அரிய மண் தாதுக்கள் ஏற்றுமதியை கட்டுப்படுத்த சீனா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் ஒரே ஒரு அரிய சுரங்கம் மட்டுமே உள்ளது. அதன் பெரும்பாலான விநியோகம் சீனாவிலிருந்து வருகிறது. எனவே சீனாவின் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்க உற்பத்தியைப் பெருமளவில் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களுக்கும் இதர தயாரிப்புகளுக்கான வரியை டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பன்மடங்காக உயர்த்தியுள்ளது.
சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 5 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான 800 பொருட்களுக்கு அமெரிக்க அரசு தற்போது கூடுதல் வரி விதித்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு சீனா 25 சதவீதம் கூடுதல் வரி விதித்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இதனால், அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகப்போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனர்களை உரிமையாளர்களாக கொண்ட நிறுவனங்கள், அமெரிக்க நிறுவனங்களின் தொழில்நுட்பங்களை விலைக்கு வாங்குவதில் இருந்து குறைந்தபட்சம் 25 சதவீதத்தையாவது தடுத்து நிறுத்தும் நோக்கில் அமெரிக்க நிதி அமைச்சகம் விதிமுறைகளை வகுத்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், இதனை நடைமுறைப்படுத்தும் செயல்திட்டங்களை உருவாக்கும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என கூறியுள்ள அந்நாளிதழ், மேம்பட்ட அமெரிக்க அறிவுசார் தொழில்நுட்ப பொருட்கள் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதை கட்டுப்படுத்தும் திட்டங்களை அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து வடிவமைக்கவுள்ளன என தெரிவித்துள்ளது.
ஆனால், இதுகுறித்த கேள்விகளுக்கு வெள்ளை மாளிகை, நிதித்துறை அமைச்சகம் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகம் ஆகியவை விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #UStariffs







