என் மலர்
நீங்கள் தேடியது "Durai vaiko"
- துரை வைகோவின் ஆதரவாளர்கள், கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
- திடீரென கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று அறிவித்தார்.
சென்னை:
மறுமலர்ச்சி தி.மு.க.வை கடந்த 1994-ம் ஆண்டு வைகோ தொடங்கினார்.
கட்சியின் பொதுச்செயலாளரான வைகோவின் மகன் துரை வைகோ, தொடக்க காலங்களில் அரசியலில் ஈடுபடாமல் பொது சேவைகளில் மட்டுமே ஈடுபட்டு வந்தார்.
கட்சியினரின் விருப்பம் காரணமாக கட்சிக்குள் வந்த துரை வைகோ, சாதாரண தொண்டராகவே இருந்தார். பின்னர் தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு நடந்த ம.தி.மு.க.வின் 29-வது பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் முதன்மை செயலாளராக துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிருப்தி அடைந்த அவர்கள் கட்சியில் இருந்து வெளியேறினார்கள்.
இதற்கிடையே, துரை வைகோவின் ஆதரவாளர்கள், கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதேபோல, பல்வேறு மாவட்டங்களிலும் மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டனர்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, இதுபோன்ற தீர்மானம் ஏதும் நிறைவேற்றக்கூடாது என்றும், இதுகுறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்க ஏப்ரல் 20-ந் தேதி (அதாவது இன்று) கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறும் எனவும் அறிவித்தார்.
இதையடுத்து திடீரென கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று அறிவித்தார்.
இந்த நிலையில், ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிர்வாகக்குழு கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மல்லை சத்யா மட்டும் வைகோவின் சேனாதிபதி என சொந்தம் கொண்டாட முடியாது.
- ம.தி.மு.க. முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகியதில் மாற்றம் இல்லை.
ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு எதிராகவே, கட்சி பதவியை துரை வைகோ துறந்ததாக கூறப்படும் நிலையில் பொதுச்செயலாளர் வைகோவின் சேனாதிபதி நான் என மல்லை சத்யா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இதுதொடர்பாக எம்.பி. துரை வைகோ கூறுகையில்,
* வைகோவுக்கு மல்லை சத்யா மட்டும் சேனாதிபதியில்லை.
* மல்லை சத்யா மட்டும் வைகோவின் சேனாதிபதி என சொந்தம் கொண்டாட முடியாது.
* ம.தி.மு.க. முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகியதில் மாற்றம் இல்லை.
* ம.தி.மு.க.வுக்காகவும், வைகோவுக்காகவும் உழைத்த தொண்டர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர் என்று கூறினார்.
- என்னால் கட்சிக்கோ, தலைமைக்கோ எந்த களங்கமும் ஏற்படக் கூடாது என நினைக்கிறேன்.
- தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பத்தின்பேரிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன்.
என்னால் கட்சிக்கோ, தலைமைக்கோ எந்த களங்கமும் ஏற்படக் கூடாது என நினைக்கிறேன் என்றும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன் என்றும் மதிமுக எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு துரை வைகோ கூறியதாவது:-
இது உட்கட்சி விவகாரம். நம் இயக்க தலைமை அவர்கள் எடுக்க வேண்டிய முடிவு இது. என்னால் கட்சிக்கோ, தலைமைக்கோ எந்த களங்கமும் ஏற்படக் கூடாது என நினைக்கிறேன். மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன்.
கட்சியில் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். நிர்பந்தத்தாலேயே அரசியலுக்கு வந்தேன். தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பத்தின்பேரிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன்.
பதவியில் இருப்பதால்தான் பிரச்சினை வருகிறது. தொண்டனாக தொடர்வேன். இது உள்கட்சி விவகாரம், வெளியில் விவாதிக்க முடியாது. தேர்தல் அரசியல் எனக்கு வேண்டாம், விருப்பம் இல்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கட்சியின் மூத்த தலைவருக்கும் துரை வைகுாவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு.
- கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிக்கை.
மதிமுக கட்சியின் முதன்மை செயலாளராக இருக்கும் வைகோவின் மகன் துரை வைகோவுக்கும், கட்சியில் உள்ள மூத்த தலைவர் ஒருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் கட்சித் தலைவர்கள் அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வைகோ மகன் துரை வைகோவிற்கு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அன்புக் கட்டளையிட்டுள்ளார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் வைத்து துரை வைகோவை வைகோ சமாதானம் செய்து வருவதாகவும், பதவி விலகல் முடிவை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அன்பு கட்டளையிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- அரசியல் பொது வாழ்வில் எங்கள் குடும்பம் ஒரு உயிரையே தந்திருக்கிறது.
- என்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்.
ம.தி.மு.க. கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக துரை வைகோ கூறியிருப்பதாவது:
அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018 ஆம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ அவர்கள் திடீரென உடல் நலம் குன்றி இதய பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் கனடா நாட்டில் எனது குழந்தைகள் படிப்புக்காக சென்று தங்கி இருந்த நான் உடனடியாக நாடு திரும்பினேன். தலைவருக்கு இதய சிகிச்சை அளிக்கப்பட்டு பேஸ் மேக்கர், ஸ்டன்ட் வைக்கப்பட்டது. இதனால் எப்போதும் சுற்றுப் பயணங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த எனது தந்தை வைகோ வழக்கம் போல செயல்பட முடியாத நிலை உருவானது. தலைவர் என்பதை தாண்டி என் தந்தை உடல் நலத்தை பாதுகாக்க அவரை கண்ணை இமை காப்பது போல் பாதுகாக்க முடிவு எடுத்து அவருக்கு கடமையாற்றி வந்தேன். சென்னையில் நடந்த மாநாட்டிலும் தலைவருடன் இருந்து கவனித்துக் கொண்டேன்.
இந்த சூழ்நிலையில் தான் கழகத்தின் முன்னணி நிர்வாகிகள் தலைவர் உடல்நலமின்றி இருப்பதால் தங்கள் இல்லத் திருமண நிகழ்ச்சிகளில் என்னை கலந்து கொள்ள அன்போடு அழைத்தனர். அதைப்போல கட்சியை சேர்ந்தவர்களின் குடும்பங்களின் துக்க நிகழ்வுகளிலும் பங்கு கொண்டு ஆறுதல் கூறினேன். என் தந்தை தலைவர் வைகோ அவர்களுக்காக இத்தனை ஆண்டு காலம் எத்தனையோ சோதனைகளை தாங்கிக் கொண்டு தங்கள் கைப் பொருளை செலவிட்டு கட்சிக்காக உழைத்து வரும் ம.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் கட்சியை காப்பாற்றி வருகிறார்களே, அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்பது என்னுடைய கடமை என்பதை உணர்ந்தேன். அப்படி செல்லுகிற தருணங்களில் அவர்களின் நிபந்தனையற்ற அன்பு என்னை நெகிழ்ச்சி அடையச் செய்தது. தலைவர் மீது வைத்துள்ள பாசத்தால் கட்சியினர் என் மீது காட்டுகிற நேசம் வளர்ந்தது.
இந்த சூழ்நிலையில் தான் கொரோனா காலத்தில் மீண்டும் இயக்கத் தந்தை வைகோ உடல் நலம் பாதிக்கப்பட்டார். ஏழு எட்டு மாதங்களுக்கு மேலாக வெளியே போக முடியாத அளவுக்கு வீட்டிலேயே சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அதன் பிறகும் முன்பு போல பயணங்கள் மேற்கொள்ளவோ, கூட்டங்களில் வீர முழக்கம் செய்யவோ முடியாத நிலை தலைவருக்கு ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில் தான் ஊரக உள்ளாட்சி தேர்தல் வந்தது. எந்த குருவிகுளம் ஒன்றிய சேர்மனாக என் தந்தை வைகோ பொறுப்பு வகித்தாரோ அதே குருவிகுளம் ஒன்றியக் குழுத் தலைவர் பொறுப்பில் மறுமலர்ச்சி தி.மு.க.வை சேர்ந்த ஒருவரை அமர வைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். அதைக் களத்தில் நிறைவேற்றிக் காட்டி தமிழ்நாட்டில் தி.மு.க.வை தவிர பிற கட்சிகள் ஒன்றியத் தலைவர் பதவியை ஒரு இடத்திலே கூட பிடிக்க முடியாத நிலைமையில் ம.தி.மு.க. குருவிகுளம் பஞ்சாயத்து யூனியனைக் கைப்பற்றியது.
ம.தி.மு.க. ஒன்றியக் குழுத் தலைவர் பதவி ஏற்றதும் இயக்கத் தந்தை வைகோ அந்த அலுவலகத்தில் சேர்மன் இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தபோது நானும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்களும் அடைந்த நெகிழ்ச்சிக்கு அளவு இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் கழகத் தொண்டர்கள் நிர்வாகிகள் என்னை கட்சியில் ஈடுபடுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்து அழைத்த வண்ணம் இருந்தனர்.
கழகத் தொண்டர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முன்வந்த தலைவர் நிர்வாக குழு கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்டார். நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொண்ட 106 பேரில் 104 பேர் கழகத்தில் நான் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வாக்குகளை அளித்தனர். இப்படியாகத்தான் கழகத்தின் தலைமைக் கழகச் செயலாளராக, அதன் பின்னர் பொதுக்குழுவில் முதன்மைச் செயலாளராக கட்சியில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் ஒருபோதும் எந்த பொறுப்பையும் தலைமை பதவியையும் விரும்பியதில்லை. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற இந்த மாபெரும் இயக்கத்தில் நான் ஒரு முன்னணி தொண்டனாக இருந்து இயக்கத்திற்கும், தொண்டர்களுக்கும், இயக்கத் தந்தை வைகோ அவர்களுக்கும் பணியாற்ற வேண்டும், அது என் கடமை என்று மனதில் உறுதி ஏற்றுக் கொண்டேன்.
சட்டமன்றத் தேர்தல் வந்தபோது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு இடங்களில் சாத்தூர் தொகுதியும் ஒன்றாகும். அத்தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று இயக்கத் தோழர்களும் சாத்தூர் தொகுதி மக்களும், அதைவிட மேலாக கூட்டணி தலைமையும் விரும்பிய நிலையில் நான் போட்டியிடாமல் அந்த வாய்ப்பு கட்சியில் மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் டாக்டர் ரகுராமனுக்கு கிடைக்கச் செய்தேன். அதன் பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வந்ததும் எல்லா மாநகராட்சிகளிலும் கழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவும் பேரூராட்சி நகராட்சிகளில் கழகத்தினர் உறுப்பினர்களாக பதவிக்குச் செல்லவும் நான் என்னால் முடிந்தவரை முயற்சிகளை மேற்கொண்டேன். அதற்காக கூட்டணி தலைமையுடன் பல நேரங்களில் கோரிக்கை வைத்து அதனை நிறைவேற்றி இருக்கிறேன்.
தமிழகத்தில் நகராட்சி தலைவராக மாங்காடு முருகன் அவர்களின் மனைவி சுமதி முருகன் பொறுப்பு ஏற்கவும், ஆவடி மாநகராட்சி துணை மேயர் பொறுப்பை சூர்யகுமார் ஏற்கவும், பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் துணைத் தலைவர்களாக நமது இயக்கத் தோழர்கள் இடம் பெற செய்யவும் என்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றோம் என்பதை கழக தோழர்கள் நன்கு அறிவார்கள்.
தமிழ்நாட்டு அரசியலில் மறுமலர்ச்சி தி.மு.க. நம்பிக்கை தரக்கூடிய வகையில் வெற்றி நடை போடத் தொடங்கியதும் இயக்கத்திற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள தொடங்கினேன். இயக்கத் தோழர்களுக்கு தொண்டர்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் தலைவருக்கு துணையாகவும் செயல்பட்டு வரும் எனக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் ஊக்கமளித்தனர்.
பாராளுமன்றத் தேர்தல் நிதி திரட்டும் பணிகளில் நமது கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு கணிசமான நிதியையும் திரட்டித் தந்து தலைவரை மகிழ்வித்தனர். பாராளுமன்றத் தேர்தல் குறித்து நிர்வாகக் குழுவில் கருத்துப் பரிமாற்றம் நடந்தபோது கிடைக்கிற ஒரு சீட்டை கட்சியில் சீனியராக இருக்கிற சிறப்பாக செயல்படுகிற விசுவாசம் மிக்க ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தினேன். ஆனால் நூற்றுக்கு நூறு விழுக்காடு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நான்தான் திருச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அக்கூட்டத்தில் வலியுறுத்தினார்கள்.
பாராளுமன்றத் தேர்தலில் ஒரு புதிய சின்னமாகத் தீப்பெட்டி சின்னத்தை தேர்வு செய்து 15 நாட்களில் மக்களிடையே எடுத்துச் சென்று திருச்சி தொகுதியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆதரவோடு வியக்கத்தக்க வெற்றியை நாம் பெற்றோம். எனக்கு வாய்ப்பினை தந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெருமை சேர்க்கிற வகையில் தான் பாராளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்துகிறேன். திருச்சி தொகுதியில் மக்கள் கழகத்திற்கு பேராதரவு தரும் வகையிலும் ,தொகுதி பிரச்சனைகளுக்கு வேண்டிய தீர்வு கிடைக்கும் வகையிலும் பணியாற்றுகிறேன். ஒன்றிய அமைச்சர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களுக்கு இயக்கத்தந்தையை அழைத்துக் கொண்டு நேரடியாக போய் சந்தித்து அவற்றை நிறைவேற்றுவதற்கு முனைந்து வருகிறேன். அதைப்போல மாநில அரசுக்கும் மக்கள் கோரிக்கைகளை நேரடியாக எடுத்துச் சென்று தீர்வு காணுவதற்கு பெரு முயற்சி மேற்கொள்கிறேன். இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக மறுமலர்ச்சி தி.மு.க.வுக்கு வலிமை சேர்ப்பதாக இருக்கும் என்பதால் தளராத ஊக்கத்துடன் மக்கள் பணியை செய்து வருகிறேன்.
இயக்க தந்தையை நேசிப்பதை போல என்னையும் கழகத் தோழர்கள் பாராட்டி வருவது எனக்கு பொறுப்பை அதிகரிப்பதாக இருக்கிறதே என்ற கவலையுடன் தான் தினம்தோறும் என் பணிகளை மிகுந்த கவனத்தோடு செய்கிறேன். தலைவர் உருவாக்கிய மறுமலர்ச்சி தி.மு.க. என்கிற இந்த திராவிட இயக்கம் தமிழ்நாட்டு அரசியலில் வலிவும் பொலிவும் பெற வேண்டும் என்று லட்சக்கணக்கான தொண்டர்கள் நினைப்பதை போல நானும் அதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறேன்.
நம்முடைய இயக்கத் தந்தை அரசியலுக்கு வந்து இழந்தது தான் அதிகம். அவர் பெற்றது தமிழ்நாட்டின் உரிமைக்கு போராடி வரும் "வாழ்நாள் போராளி" என்கிற விருது மட்டும்தான். மதுவிலக்கு போராட்டத்தில் கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்ட எனது பாட்டி மாரியம்மாள் அதனாலயே உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிர் துறந்தார்கள். தலைவர் வைகோ மீது பழிச்சொல்லை வீசியதை தாங்க முடியாமல் தான் எங்கள் உறவினர் ஒருவர் உயிர் தியாகம் செய்தார். சிவகாசி இரவி தீக்குளித்தபோது எழுந்த மன வேதனையில் இருந்து தலைவர் மீள்வதற்குள் எங்கள் குடும்பத்தில் இந்த துயரமும் நிகழ்ந்தது.
அரசியல் பொது வாழ்வில் எங்கள் குடும்பம் ஒரு உயிரையே தந்திருக்கிறது. அதை கூட நாங்கள் தாங்கிக் கொண்டோம். தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக செய்து வருகிறார் ஒருவர். நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் 'முதன்மை செயலாளர் "என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை எனவே கழகத்தின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.
ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பேன். ஆனால் அதன் பிறகு தலைமைக் கழகத்தின் மிக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன். என்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். அதே நேரத்தில் மறுமலர்ச்சி தி.மு.க.வின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். திருச்சி தொகுதி மக்கள் மகத்தான வெற்றி பெற செய்து தங்கள் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு என்னை அனுப்பி வைத்துள்ளார்கள். அந்த மக்களுக்காக ஒரு எம்பி என்ற வகையில் கண்ணும் கருத்துமாக கடமையாற்றுவேன். எப்போதும் போல இயக்கத் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அரணாகவும் சுக துக்கங்களில் பங்கேற்கும் தோழனாகவும் இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஏழு ஆண்டுகளாக நான் மேற்கொண்ட முயற்சிகளை கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தொடர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நம் தலைவர் மனம் கலங்கி விடாமல் அவரைப் பாதுகாக்க வேண்டும் என்று இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வருகிற 20-ந்தேதி வைகோ தலைமையில் நடைபெறும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
- வைகோவிடம் இருந்து என்னை பிரிக்கும் ஆற்றல் மரணத்துக்கு மட்டுமே உண்டு என்று தனது அரசியல் பயணத்தை பற்றி நீண்ட பதிவை வெளியிட்டு உள்ளார்.
சென்னை:
ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோ எம்.பி.க்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி தொகுதியில் மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வருகிற 20-ந்தேதி வைகோ தலைமையில் நடைபெறும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையில் மேலும் சில மாவட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டித்துள்ளார். கழக கட்டுப்பாட்டுக்கு எதிராக மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்துவது, தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்று எச்சரித்து உள்ளார். இந்த விவகாரத்துக்கு நிர்வாகக் குழுவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் கூறினார்கள்.
அதேநேரம் மல்லை சத்யா தனது முகநூல் பக்கத்தில் எனது பாரம்பரியம் என்பது வைகோ பாரம்பரியம் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன். நம்பி கெட்டான் சத்யா என்று வேண்டுமானால் சொல்லலாம்.
ஆனால் நம்பிக்கை துரோகம் செய்தான் மல்லை சத்யா என்று ஒருபோதும் வரக்கூடாது என்ற உறுதியோடு ம.தி.மு.க.வில் பயணிக்கிறேன்.
வைகோவிடம் இருந்து என்னை பிரிக்கும் ஆற்றல் மரணத்துக்கு மட்டுமே உண்டு என்று தனது அரசியல் பயணத்தை பற்றி நீண்ட பதிவை வெளியிட்டு உள்ளார். இந்த சிக்கலுக்கு 20-ந்தேதி வைகோ எப்படி தீர்வு காணப்போகிறார் என்பதே ம.தி.மு.க.வினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- 20-ந்தேதி நிர்வாக குழுவை கூட்டி தலைவர் வைகோ விவாதிக்கிறார்.
- மகனா? மல்லை சத்யாவா? என்ற கேள்வி வரும் போது வைகோ என்ன முடி வெடுப்பார்.
சென்னை:
ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளராக இருப்பவர் மல்லை சத்யா. கட்சியின் மூத்த நிர்வாகி என்பதோடு கட்சி தொடங் கப்பட்டது முதல் வைகோவுடன் பயணித்து கொண்டு இருப்பவர்.
கட்சி நலிவடைந்த போது எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், பாலவாக்கம் சோமு போன்ற முக்கிய நிர்வாகிகள் வெளியேறினார்கள். ஆனாலும் எந்த சலனமும் இல்லாமல் மல்லை சத்யா வைகோவுடனேயே இருக்கிறார்.
இந்த நிலையில் துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே எழுந்துள்ள மோதல் உச்ச கட்டத்தை அடைந்து திருச்சி யில் ம.தி.மு.க.வினர் மல்லை சத்யாவை நீக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு சென்றிருக்கிறது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னை தாயகத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் இந்த விவகாரம் வெடித்தது. வைகோ முன்னிலையில் கூட்டத்தில் இருந்து துரை வைகோ வெளியேறினார். இதனால் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் துரை வைகோவின் ஆதரவாளர் சத்யகுமரன், இது துரை வைகோவின் காலம். அவரது கட்டளையை ஏற்காத, பின்பற்றாத, மதிக்காத யாராக இருந்தாலும் பெட்டியை கட்டிக் கொண்டு வாயை பொத்திக் கொண்டு வெளியேறுங்கள் என்று அறிக்கை வெளியிட்டார்.
இதற்கு பதிலடி கொடுத்து மல்லை சத்யா வெளியிட்ட பதிவில் ம.தி.மு.க.வில் 32 ஆண்டுகள் உழைத்ததற்கு வெகுமானமாக புற்றுநோய், பகட்டு வேஷம், நம்பிக்கை துரோகி, பத்தினிவேஷம், வெளியேறு என்ற விருதுகளை எனக்கு அளித்துள்ளார்கள். அவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள் என்பதையும் விசுவாசமுள்ள கட்சியினர் அறிவார்கள்.
விளிம்பு நிலை தலைமுறையில் இருந்த என்னை குன்றின் மேல் வைத்து அழகு பார்த்து, அரசியல் அங்கீகாரம் வழங்கிய வைகோவுக்கு காலம் முழுவதும் நன்றியோடு இருப்பேன். என் விசுவாசம், நம்பகத் தன்மையை வைகோ அறிவார் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இன்று வைகோவின் அழைப்பின் பேரில் கோயம்பேட்டில் அம்பேத் கார் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியிலும் மல்லை சத்யா பங்கேற்றார்.
இது தொடர்பாக கருத்து கேட்க மல்லை சத்யாவை தொடர்பு கொண்ட போது எதுவும் கூற மறுத்துவிட்டார்.
அவருக்கு நெருக்கமான சிலரிடம் விசாரித்த போது, துரை வைகோ கட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அவரை சுற்றியிருக்கும் சிலர் மல்லை சத்யாவை காயப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.
கடந்த 4 ஆண்டுகளாக அவரது பெயரை கூட சென்னையில் எந்த நிகழ்ச்சியிலும் போடக் கூடாது. சுவர் விளம்பரங்கள், பேனர்களிலும் பெயர் போட்டோக்கள் இடம் பெறக் கூடாது என்று கட்டுப்பாடு போட்டு உள்ளார்கள்.
கட்சி தொடங்கியதில் இருந்து எவ்வளவு போராட் டங்கள், எத்தனை முறை ஜெயில் என்று கட்சிக்காகவே உழைத்து கொண்டிருப்பவர். தன் மீது போடப்பட்ட பல வழக்குகளை கோர்ட்டில் சந்தித்து வென்று இருக்கிறார். அவரையே அசிங்கப்படுத்தி ஓரம் கட்ட வேலை பார்க்கிறார்கள்.
நேற்று முன் தினம் கூட்டத்தில் இருந்து வெளியேறிய துரை வைகோ வை சமாதானப்படுத்த ஓடியவர்களில் ஒருவர் மல்லை சத்யாவை நான் தாக்குகிறேன் தலைவரே என்று சொன்னபோதும் அதை துரை வைகோ கண்டிக்கவில்லை. எனவே அவரது மனநிலை புரிகிறது.
20-ந்தேதி நிர்வாக குழுவை கூட்டி தலைவர் வைகோ விவாதிக்கிறார். மகனா? மல்லை சத்யாவா? என்ற கேள்வி வரும் போது வைகோ என்ன முடி வெடுப்பார் என்று தெரிய வில்லை. நிச்சயம் மல்லை சத்யா கட்சியை விட்டு விலக வாய்ப்பு இல்லை. ஆனால் அவரை வெளி யேற்ற வாய்ப்பு இருப்ப தாகவே கருதுகிறோம் என்றனர்.
நிர்வாக குழுவில் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
- காரில் விருட்டென புறப்பட்டு சென்ற துரை வைகோவை ம.தி.மு.க. நிர்வாகிகள் பின் தொடர்ந்து சென்றனர்.
- 'தவறாக பேசி இருந்தால் மன்னிச்சிக்கோங்க' என துரை வைகோவிடம் மூத்த நிர்வாகி ஒருவர் மன்றாடினார்.
சென்னை ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைகோ தலைமையில் தொழிற்சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற துரை வைகோ கூட்டம் முடியும் முன்பாகவே திடீரென கோபித்துக்கொண்டு கிளம்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
காரில் விருட்டென புறப்பட்டு சென்ற துரை வைகோவை ம.தி.மு.க. நிர்வாகிகள் பின் தொடர்ந்து சென்றனர்.
'தவறாக பேசி இருந்தால் மன்னிச்சிக்கோங்க' என துரை வைகோவிடம் மூத்த நிர்வாகி ஒருவர் மன்றாடினார்.
'அவன வெட்டிட்டு நான் ஜெயிலுக்கு போறேன்' என துரை வைகோவிடம் தொண்டர் ஒருவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- 56 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், சமூகத்துக்காகவும், தமிழர் நலன், தமிழக மக்களுக்காக எடுத்த முயற்சிகளில் வைகோ, 80 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளார்.
- மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால், மின் கட்டணத்தை உயர்த்தும் நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டது.
ஈரோடு:
மாமனிதன் வைகோ ஆவணப்பட வெளியீடு நிகழ்ச்சிக்கு பின்னர் நேற்று ஈரோட்டில் ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
56 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், சமூகத்துக்காகவும், தமிழர் நலன், தமிழக மக்களுக்காக எடுத்த முயற்சிகளில் வைகோ, 80 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளார். தெலுங்கானாவில் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடர்ந்தபோது நானும் அவருடன் பங்கேற்றேன். அப்போது நாங்கள் வலதுசாரி அரசியலால் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் ஏற்பட்டு இருக்கும் சிக்கல்கள் குறித்து பேசினோம். தமிழகம் உள்பட இந்தியாவில் வலதுசாரிகளால் ஏற்படும் தாக்கம், பாதிப்புகள் குறித்து பேசினோம்.
ஆனால் நான் விருதுநகர் தொகுதியை எனக்கு ஒதுக்கித்தர வேண்டும் என்று பேசுவதற்காக சென்றதாக நாளிதழ் ஒன்று (தினத்தந்தி அல்ல) செய்தி வெளியிட்டது. அது தவறு. நான் எந்த தொகுதியை பெறுவது பற்றியும் அவருடன் பேசவில்லை.
விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியதால் ஏற்படும் இழப்பை சமாளிக்க, ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற வணிக பால் பாக்கெட்டுகளின் விலையை மட்டும்தான் அரசு உயர்த்தி இருக்கிறது. மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால், மின் கட்டணத்தை உயர்த்தும் நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டது.
இவ்வாறு ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ கூறினார்.
- வருகிற பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளுடன் ம.தி.மு.க.வின் கூட்டணியும் தொடரும்.
- தமிழகத்தில் பாஜகவின் வன்முறை கலாச்சாரம் வேர் ஊன்றி விடக்கூடாது என்பதற்காக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் தி.மு.க அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சென்னை உட்பட பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நிலையிலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுத்து உள்ளது. ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு நிதிகளை மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்காத நிலையிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சி குறித்து அதன் தலைவர் அண்ணாமலை கனவு கண்டு கொண்டிருக்கிறார். அது பலிக்காது. தமிழக மக்கள் மதவாத சக்திகளுக்கு ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டார்கள். மதவாத சக்திகளுக்கு எதிராகவே தமிழக மக்களின் செயல்பாடு இருக்கும்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மதத்தை வைத்து மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி வளர முயற்சிக்கிறது. கவர்னர் மக்களுக்காக செயல்படவில்லை. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்களுக்கு இதுவரை ஒப்புதல் வழங்காமல் மத்திய அரசின் ஊது குழலாக செயல்பட்டு வருகிறார்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளுடன் ம.தி.மு.க.வின் கூட்டணியும் தொடரும். தமிழகத்தில் பாஜகவின் வன்முறை கலாச்சாரம் வேர் ஊன்றி விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரிசி, பருப்பு கொள்முதல் செய்ததில் 100 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறி வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இதை மட்டும் வைத்து குற்றம் நடந்ததாக கூறிவிட முடியாது. இது பற்றி விசாரணை முடிந்த பின்னர் தான் பதில் சொல்ல முடியும்.
மதிமுக பூரண மதுவிலக்கு கொள்கையிலிருந்து ஒரு போதும் பின்வாங்க போவதில்லை. தமிழக முதல் அமைச்சரின் முயற்சியால் தமிழகத்தில் தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன, புயல் மழை காலங்களில் பாதிக்கப்பட்ட 4 லட்சம் மக்களுக்கு உடனடியாக தங்குமிடம் நிவாரணம் போன்றவை அளித்தது பாராட்டக்கூடியது.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விலைவாசியும் உயர்ந்துள்ளது. மத்திய அரசு மாட்டுத்தீவனம் மற்றும் யூரியா விலையை குறைக்கவில்லை.
பாரத பிரதமர் மோடியின் பேச்சை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாராளுமன்ற தேர்தலில் மதவாத சக்திகளுக்கு எதிராக தமிழக மக்கள் அனைவரும் சேர்ந்து முடிவு எடுப்பார்கள்.
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பமில்லை. ஆனால் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ம.தி.மு.க. தலைமை நிலைய செயலர் துரை வைகோ வங்கி கிளை அமையவுள்ள இடத்தை பார்வையிட்டார்.
- லேப் டெக்னீசியன் உள்ளிட்ட ஊழியர்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியையடுத்த வில்லிசேரியில் இந்தியன் வங்கியின் கிளை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ம.தி.மு.க. தலைமை நிலைய செயலர் துரை வைகோ வங்கி கிளை அமையவுள்ள இடத்தை பார்வையிட்டார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த மக்களிடம், தங்கள் பகுதிக்கு நீண்ட நாள் கோரிக்கையான தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை அமைய வுள்ளது. தாங்கள் அதை முறையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும், அங்கிருந்த வங்கியின் மண்டல அலுவலக மேலாளர் பகவதி, வங்கி கிளை மேலாளர் ரகுநாத் ஆகியோருடன் வங்கி பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, வில்லிசேரி ஊராட்சி தலைவர் வேலன், துணைத் தலைவர் காசிராஜன், வில்லிசேரி வார்டு உறுப்பினர் கிருபா மற்றும் ம.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து அவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, அங்கு பணியில் இருந்த மருத்துவர் சரவணகுமார், லேப் டெக்னீசியன் உள்ளிட்ட ஊழியர்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
மேலும், தங்கள் மருத்துவ மனையில் மேம்படு த்தப்பட்ட மருத்துவ மனை யாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
வில்லிசேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் ஏராள மானோர் வெளிநாடுகளில் பணி புரிந்து வருகின்றனர். வங்கி பரிவர்த்தனைகளுக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இதை தவிர்ப்பதற்காக, வில்லிசேரி கிராமத்தில் வங்கி கிளை தொடங்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுசெயலர் வைகோ 2021 டிசம்பரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை மனு அனுப்பி வைத்தார். அதற்கு மத்திய நிதி அமைச்சர், டிசம்பர் 13-ம் தேதி அளித்த பதிலில், தங்கள் கோரிக்கையின்படி வில்லிசேரியில் கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி என ஏதேனும் ஒரு வங்கி அமைக்கப்படும் என பதில் அளித்திருந்தார்.
அதன்படி, தற்போது இந்தியன் வங்கி இங்கு அமைய உள்ளது. இந்த வங்கி அமைவதற்கு இங்குள்ள மக்கள் எடுத்துக் கொண்ட முயற்சி தான் காரணம். இது அவர்களுக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.
அப்போது, ம.தி.மு.க. மாநில துணை பொது செயலாளர் ராஜேந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், கட்சியின் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், ஒன்றிய செயலர்கள் கேசவநாராயணன், சரவணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் விவசாய விளைநிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் அந்தப் பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, கடந்த டிசம்பர் 20-ந் தேதி தூத்துக்குடி மாவட்ட கலெக்டரை விவசாயிகளுடன் சந்தித்து மனு வழங்கினேன்.
கோவில்பட்டி:
வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை ம.தி.மு.க. தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் விவசாய விளைநிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் அந்தப் பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, கடந்த டிசம்பர் 20-ந் தேதி தூத்துக்குடி மாவட்ட கலெக்டரை விவசாயிகளுடன் சந்தித்து மனு வழங்கினேன்.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972, அட்டவணை 3-ன் கீழ் இருக்கும் காட்டுப் பன்றிகளை அட்டவணை 5-ன் கீழ் இருக்கும் பட்டியலில் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அப்போது தான் காட்டுப் பன்றிகளை அழிக்க அரசின் முன் அனுமதி தேவைப்படாது. கடந்த 2016-ம் ஆண்டு, காட்டுப் பன்றிகளை தீங்கு விளைவிக்கும் உயிரினமாக அறிவித்து அட்டவணை 5-ன் கீழ் கொண்டுவர, உத்தரகாண்ட் மற்றும் பீகார் அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த அனுமதி ஓராண்டுக்கு மட்டும் தான் வழங்கப்பட்டது.
அதேபோல, காட்டுப் பன்றிகளை அட்டவணை 5-ன் கீழ் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அதுவரை இடைக்கால தீர்வாக, கேரள அரசைப் போல, தமிழ்நாடு வனத் துறை மூலம் உள்ளாட்சி அமைப்பு களுக்கு அதிகாரம் கொடுத்து கிராமக் குழுக்கள் மூலம் காட்டுப் பன்றிகளை அழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர், வன விலங்கு சட்ட நடை முறைகளைப் பார்த்து விட்டு, அரசு அதிகாரி களிடமும் கலந்தாலோ சித்து, உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி யளித்தார்.