என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள்"

    • இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாகவும் டிரம்ப் அறிவித்தார்.
    • கடந்த 6 மாதங்களாக ஏற்றுமதியாளர்கள் கவலையில் இருந்தனர். இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    திருப்பூர்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2-வது முறையாக பதவி ஏற்ற பிறகு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பில் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

    அந்தவகையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் 25 சதவீதம் கூடுதல் வரியை கடந்த ஆண்டு (2025) ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி அமல்படுத்தினார். அதன் பின்னர், இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாத காரணத்தால், அந்த அதிருப்தி காரணமாக மேலும் 25 சதவீதம் அபராதம் விதித்து 50 சதவீதமாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி உயர்த்தினார்.

    இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். 50 சதவீத வரி விதிப்பால் திருப்பூரில் ஆடை உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்தனர்.

    திருப்பூரில் ஆண்டுக்கு ரூ.50ஆயிரம் கோடிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அதில் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு அமெரிக்காவுக்கு ஆடைகள் அனுப்பப்படுகின்றன. இதன் காரணமாக ரூ.15 ஆயிரம் கோடி ஆடை வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

    எனவே வரி விவகாரத்தில் சுமூக தீர்வு காண வேண்டும், அமெரிக்க வரி விதிப்பில் இருந்து மீள்வதற்கு சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து மத்திய அரசு பஞ்சு இறக்குமதி வரி குறைப்பு உள்ளிட்ட சில சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் திருப்பூர் ஆடை வர்த்தகம் அமெரிக்காவை நம்பியே இருப்பதால் வரியை குறைத்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். இல்லையென்றால் திருப்பூர் ஆடை வர்த்தகம் முற்றிலும் முடங்கும். எனவே மத்திய அரசு இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் ஆடை ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து வரியை குறைக்கும் வகையில், இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. இந்த நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் நேற்று தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாகவும் டிரம்ப் அறிவித்தார்.

    அதன்படி அமெரிக்காவின் இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனை திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் தலைவர்(ஏ.இ.பி.சி.) சக்திவேல் கூறுகையில்,

    அமெரிக்காவின் வரி குறைப்பு மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். கடந்த 6 மாதங்களாக ஏற்றுமதியாளர்கள் கவலையில் இருந்தனர். இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பாரத பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் ஆகியோருக்கு எங்களது சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு ரூ.15000 கோடி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த வரிக்குறைப்பின் காரணமாக அமெரிக்காவுக்கான ஏற்றுமதி இந்த வருடமே மேலும் 10 சதவீதம் அதிகரிக்கும்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில்,

    இந்த வரிகுறைப்பு திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு மிக்க மகிழ்ச்சியான செய்தியாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது தான். குறிப்பாக பெனால்டி வரியை முற்றிலுமாக குறைத்து. அடிப்படை வரியிலும் 7 சதவீதம் குறைத்து 18 சதவீதமாக குறைத்து இருப்பது நமது போட்டி நாடுகளான வங்காளதேசம், வியட்நாம், இந்தோனேசியா நாடுகளை விட குறைவான வரி விதித்து இருப்பதால்ஆயத்த ஆடை தொழிலுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். இந்த வரி குறைப்பு காரணமாக ஆய்த்த ஆடை ஏற்றுமதி 2030 ஆம் ஆண்டுக்குள் 2 மடங்காக அதிகரிக்கும்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கமான டீமா அமைப்பின் தலைவர் எம்.பி.முத்து ரத்தினம் கூறுகையில்,

    அமெரிக்காவின் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இதனால் திருப்பூர் பின்னலாடைத்தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய பிரதமர் மோடிக்கு எங்கள் நன்றி.

    திருப்பூர் ரைசிங் உரிமையாளர்கள் சங்க தலைவர் கருணாம்பிகா எம்.வி.ராமசாமி:-

    இந்திய-ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்த சமயத்தில், அமெரிக்காவும் இந்தியாவுடன் வரிச்சலுகை ஒப்பந்தம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். அந்த கனவு இன்று நினைவாகிவிட்டது. திருப்பூர் இனிமேல் மின்னல் வேகத்தில் முன்னேறும் காலம் உறுதியாகிவிட்டது. இதற்கு ஒத்துழைத்து உதவிய மத்திய அரசுக்கும், அமெரிக்காவுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கமான சைமா அமைப்பின் துணைத்தலைவர் எஸ்.பாலச்சந்தர்:-

    திருப்பூர் பின்னலாடைத்தொழிலுக்கு நல்ல செய்தியை மத்திய அரசு வழங்கியுள்ளது. நிச்சயம் இது தொழில் துறையினருக்கு புத்துணர்ச்சியை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போதுள்ள தொழில் நிலையில் இருந்து பல மடங்கு வளர்ச்சியை நாம் காணப்போகிறோம். ஐரோப்பிய யூனியனை தொடர்ந்து அமெரிக்காவும் இந்தியாவுடன் கைகோர்த்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

    திருப்பூர் காஜா பட்டன் உரிமையாளர்கள் சங்க தலைவர் கருப்புசாமி:-

    கடந்த சில மாதங்களாகவே அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு காரணமாக திருப்பூர் தொழில் சற்று நலிவடைந்து காணப்பட்டது. தற்போது இந்த வரிக்குறைப்பு அறிவிப்பால் ஜாப் ஒர்க் தொழில் துறையினர் நிச்சயம் மகிழ்ச்சி அடைவர். ஏற்றுமதியும், உள்நாட்டு தொழிலும் நல்ல வளர்ச்சி அடையும் என்பதில் சந்தேகமில்லை. இனி வேலைவாய்ப்புகள் அதிக அளவில் பெருகும் என்று நம்புகிறோம். இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு தையல் நூல் வியாபாரிகள் சங்கம்:-

    திருப்பூர் தொழில் துறையினருக்கு இந்த ஆண்டு சிறப்பாக விடிந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது தற்போது நினைவாகியுள்ளது. அதேபோல் அமெரிக்காவும் ஒத்துழைப்புடன் வரிவிதிப்பில் சற்று இறங்கி வந்துள்ளது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் நல்ல வளர்ச்சி பெறக்கூடிய காலம் ஏற்பட்டுள்ளது. இதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்றார்.

    அதே நேரம் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரி தொடருமா? என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. அந்த வரியை குறைக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சீனா, வங்கதேசம், துருக்கிக்கு அடுத்தபடியாக இந்தியா இருக்கிறது.
    • இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் அமெரிக்க சந்தையை அதிகம் நம்பி உள்ளது. அமெரிக்காவின் 50 சதவீத அதிகப்படியான வரி விதிப்புக்கு பிறகு திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு ஆடை அனுப்புவதில் தேக்கம் நிலவி வர்த்தக பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.

    அமெரிக்காவுடன் மத்திய அரசு வர்த்தக பேச்சுவார்த்தையை ஒருபுறம் தொடர்ந்தாலும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மாற்று சந்தையை நோக்கி நகர தொடங்கி உள்ளனர்.

    அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயத்த ஆடைகள் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐரோப்பிய சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு 4-வது இடத்தை பிடித்துள்ளது. சீனா, வங்கதேசம், துருக்கிக்கு அடுத்தபடியாக இந்தியா இருக்கிறது.

    கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 9 மாதங்களில் ஐரோப்பிய நாட்டுக்கு இந்தியாவில் இருந்து ரூ.37 ஆயிரத்து 600 கோடிக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

    ஐரோப்பிய வர்த்தகர்கள் இந்தியாவுக்கு அதிக ஆர்டர்களை வழங்கி வருவதால், இதை சாதகமாக பயன்படுத்தி ஐரோப்பா சந்தையை கைப்பற்றும் முனைப்பில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    • நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும்.
    • நூல் விலை குறையவில்லை என்றாலும், அதிகரிக்காமல் இருந்தது தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள்.

    நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வருகிறது. எனவே நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர். கடந்த மாதம் நூல் விலை ரூ. 20 குறைந்த நிலையில் நடப்பு மாதத்திற்கான (டிசம்பர்) நூல் விலையை நூற்பாலைகள் இன்று வெளியிட்டன.

    இதில் நூல் விலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் கடந்த மாத நிலையே தொடரும் எனவும் நூற்பாலைகள் அறிவித்துள்ளது. நூல் விலை குறையவில்லை என்றாலும், அதிகரிக்காமல் இருந்தது தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

    அதன்படி ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.273-க்கும், 24-ம் நம்பர் ரூ.285-க்கும், 30-ம் நம்பர் ரூ.295-க்கும், 34-ம் நம்பர் ரூ.315-க்கும், 40-ம் நம்பர் ரூ.335-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.265-க்கும், 24-ம் நம்பர் ரூ. 275-க்கும், 30-ம் நம்பர் ரூ.285-க்கும், 34-ம் நம்பர் ரூ. 305-க்கும், 40-ம் நம்பர் ரூ.325-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×