என் மலர்
நீங்கள் தேடியது "ஏற்றுமதி"
- சீனா, வங்கதேசம், துருக்கிக்கு அடுத்தபடியாக இந்தியா இருக்கிறது.
- இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் அமெரிக்க சந்தையை அதிகம் நம்பி உள்ளது. அமெரிக்காவின் 50 சதவீத அதிகப்படியான வரி விதிப்புக்கு பிறகு திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு ஆடை அனுப்புவதில் தேக்கம் நிலவி வர்த்தக பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
அமெரிக்காவுடன் மத்திய அரசு வர்த்தக பேச்சுவார்த்தையை ஒருபுறம் தொடர்ந்தாலும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மாற்று சந்தையை நோக்கி நகர தொடங்கி உள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயத்த ஆடைகள் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐரோப்பிய சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு 4-வது இடத்தை பிடித்துள்ளது. சீனா, வங்கதேசம், துருக்கிக்கு அடுத்தபடியாக இந்தியா இருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 9 மாதங்களில் ஐரோப்பிய நாட்டுக்கு இந்தியாவில் இருந்து ரூ.37 ஆயிரத்து 600 கோடிக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய வர்த்தகர்கள் இந்தியாவுக்கு அதிக ஆர்டர்களை வழங்கி வருவதால், இதை சாதகமாக பயன்படுத்தி ஐரோப்பா சந்தையை கைப்பற்றும் முனைப்பில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- எம்.ஜி.ஆர். போல மக்களிடத்திலே செல்வாக்கு பெற்ற தலைவர் என்று சொன்னால் எனக்கு தெரிந்து யாரும் இல்லை.
- தொடர்ந்து உழைத்தால் தொடர்ந்து உயரலாம்.
திருப்பூர்:
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா திருப்பூரில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
எல்லோரோடும் இணைந்து பணியாற்றுகின்ற ஒரு பெரிய வாய்ப்பை இறைவன் எனக்கு தந்திருக்கிறான். தி.மு.க.வோடும் பணியாற்றி இருக்கிறேன். அ.தி.மு.க.வோடும் பணியாற்றி இருக்கிறேன். இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால் நான் முதன்முதலாக பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நான் சார்ந்த இயக்கத்தினுடைய கவுன்சிலர்களே ஒட்டுமொத்த பாராளுமன்றத்தில் ஒருவர் கூட இல்லை.
அன்றைக்கு கம்யூனிஸ்ட் சகோதர கவுன்சிலர்களோடும் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். இதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்தான். அதனால்தான் என்னவோ என்னை கட்சி அரசியலில் இருந்து இறைவன் விலக்கி வைக்க வேண்டும் என்று நினைத்து விட்டான் போலும். எதுவுமே நம்முடைய முடிவிலே மட்டும்தான் நம்முடைய பயணம் தொடர்கிறதா என்று கேட்டால் என்னைப் பொறுத்தளவில் நிச்சயமாக இல்லை.
நாம் ஒரு திசையில் பயணிப்போம் என்று நினைப்போம். அந்த திசையை நோக்கி சென்று கொண்டிருப்போம். அதே தான் நம்முடைய முழு வாழ்வும் என்கின்ற நிலை இருக்கும். ஆனால் கால சூழலும் இறைவனுடைய விருப்பமும் வேறாக இருக்கும். பங்களாதேஷ்க்கு எக்ஸ்போர்ட் செய்து கொண்டிருந்த நேரத்தில் நான் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்று நினைக்கவே இல்லை. அரசியல் ஈடுபாடு என்பது எனக்கு எப்பொழுதும் இருந்து கொண்டு தான் இருந்தது.
பள்ளியிலே படிக்கின்ற போது மாணவர் தலைவனாக தேர்தலில் நின்று வெற்றி பெற்றேன். அவினாசி சுந்தரமூர்த்தி நாயனார் அருள் எனக்கு இல்லாமல் போயிருந்தால் நான் இந்த இடத்திலே உங்கள் முன்பாக நிற்பதற்கான வாய்ப்பே நிச்சயமாக சத்தியமாக இல்லை.
என்னுடைய ஜாதகத்தை ஒருவர் பார்த்து சொன்னார். நீ இரண்டு முறையாவது பாராளுமன்ற உறுப்பினர் ஆவாய் என்று. அவரது வாழ்க்கை முழுவதும் தொழில் ஜோசியம் அல்ல. அவர் அரசியலில் ஒரு பொறுப்பிலே இருக்கிறார். அவர் சொன்னதும் உடனே எனக்கு சிரிப்பே நீக்கவில்லை. நான் சார்ந்து இருக்கிற இயக்கத்திலே நான் ஒரு முறை கவுன்சிலர் ஆனாலே பெரியது என்று சொன்னேன். இன்றைக்கு அவர் உயிரோடு இல்லை. ஆனால் அவர் சொன்ன வாக்குப் பலித்திருக்கிறது. காங்கயத்தை சேர்ந்த நாவிதர் ஒருவர் எனது ஜாதகத்தை பார்த்து விட்டு நீங்கள் எந்த காரணத்தை கொண்டும் அரசியலை விட்டு விலகி விடாதீர்கள் என்றார். அரசியலில் ஏற்றத்தாழ்வுகள் வரத்தான் செய்யும்.
எம்.ஜி.ஆர். போல மக்களிடத்திலே செல்வாக்கு பெற்ற தலைவர் என்று சொன்னால் எனக்கு தெரிந்து யாரும் இல்லை. வாழ்க்கையில் ஒருவன் பிறந்து விட்டான் என்று சொன்னால் அவன் இறக்கின்ற வரை உழைக்க வேண்டும் என்பதுதான். நான் என்னுடைய தகப்பனாரோடு பல நேரங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருப்பேன். அவர் சொன்னது ஒன்று என்னுடைய மனதில் என்றைக்கும் ஆழமாக பதிந்திருக்கிறது. அவர் ஒருமுறை என்னிடத்தில் சொன்னார். எவ்வளவு வசதி வந்தாலும் எவ்வளவு அதிகாரம் உன்னிடத்தில் வந்தாலும் சாப்பிடுகிறவரை நீ ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இறைவன் உனக்கு தருகின்ற உணவு உழைக்காமல் வரக்கூடாது. ஒருவர் தலைவராக உயர்கிறார் என்று சொன்னால் அவரிடத்தில் ஏதாவது ஒரு பண்பு இருந்தால் மட்டும்தான் அவர் தலைவராக உருவாக முடியும். நான் சார்ந்த இயக்கம் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மிக எதிரானது என்பது எல்லோருக்கும் தெரிந்தது. இப்பொழுது தான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் அல்ல . ஆனால் கலைஞர் கருணாநிதி இடத்தில் எனக்கு ஒன்று பிடிக்கும். எந்த நேரத்திலும் உழைப்பை நிறுத்தாத ஒரு தலைவர் . தோல்வியைப் பற்றி துவண்டு விடாமல் அவர் தொடர்ந்து உழைத்தார். கடுமையாக முயற்சிக்காமல் யாராலும் உயர்ந்த இடத்திற்கு வர முடியாது.
தொடர்ந்து உழைத்தால் தொடர்ந்து உயரலாம். குறிக்கோளை நிர்ணயம் செய்து கொண்டு அதை நோக்கி பயணம் செய்ய வேண்டும், சத்தியமும் தர்மமும் அந்த பயணத்தில் இருக்க வேண்டும். அடுத்தவரை வீழ்த்துவதை விட தான் உயர வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.
திருப்பூர் பின்னலாடைக்கு எத்தனையோ சரிவுகள் வந்துள்ளது. ஆனால் இன்றைய சரிவு நம் கையில் இல்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் என்ன நினைக்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. இருந்தாலும் நீங்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏற்றுமதி இதைவிட 2 மடங்காகும் நாள் விரைவில் வரும். அதுவரை நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று பேசினார்.
- வங்கதேசத்தின் தேசிய மீனாக ஹில்சா உள்ளது.
- மழைக்காலங்களில் மேற்கு வங்கத்தில் ஹில்சா மீன் பிடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
துர்கா பூஜையை ஒட்டி, நட்புறவின் அடையாளமாக இந்தியாவுக்கு 1200 மெட்ரிக் டன் ஹில்சா மீன்களை வங்கதேசம் ஏற்றுமதி செய்ய உள்ளது
வங்கதேசத்தின் தேசிய மீனாக ஹில்சா உள்ளது. மழைக்காலங்களில் இனப்பெருக்க காலத்தில், முட்டையிடுவதற்கு வசதியாக, மேற்கு வங்கத்தில் ஹில்சா மீன் பிடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
குறிப்பாக அந்நாட்டின் பத்மா ஆற்றில் பிடிபடும் இவ்வகை மீன்கள், மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் அதிகளவில் மக்களால் விரும்பி வாங்கப்படும்.
முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசாங்கம் கடந்த ஆண்டு ஹில்சா மீன்கள் ஏற்றுமதியைத் தடை செய்தது. ஆனால் துர்கா பூஜைக்கு சற்று முன்னதாக மீன்களுக்கான தேவை அதிகமாக இருந்தபோது தடையை வங்கதேச அரசாங்கம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவில் இருந்து சுமார் ரூ.23 ஆயிரம் கோடிக்கு கடல் உணவுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- தற்போது அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக ஏற்றுமதி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு இறால் உள்பட கடல் உணவுகள் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆனால் அமெரிக்கா தற்போது இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளதால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடியில் கடல் உணவுகள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்க மாநில தலைவர் செல்வின்பிரபு நிருபரிடம் கூறியதாவது:-
இந்தியாவில் இருந்து சுமார் ரூ.23 ஆயிரம் கோடிக்கு கடல் உணவுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ஆந்திரா மாநிலத்தில் இருந்து ஏற்றுமதியாகிறது.
தற்போது அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக ஏற்றுமதி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு இறால் உள்ளிட்ட கடல் உணவு ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது.
ஒரு கன்டெய்னரில் 3 முதல் 4 சதவீதம் வரை மட்டுமே லாபம் கிடைக்கும். அதை விட வரி மிகவும் அதிகமாக இருப்பதால் நிறுத்தப்பட்டு உள்ளது.
ஏற்கனவே அனுப்பப்பட்ட கன்டெய்னர்களை அமெரிக்க வியாபாரிகள் ஏற்க மறுத்து விட்டனர். இந்த கன்டெய்னர்கள் அமெரிக்காவை சென்றடைய இன்னும் 15 நாட்கள் வரை ஆகும். அதுவரை ஏதேனும் வாய்ப்புகள் கிடைக்குமா? என்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
அதன்பிறகும் ஏற்கப்படாதபட்சத்தில் அந்த கன்டெய்னர்கள் மீண்டும் கொண்டு வரப்படும். அதுவரை காத்திருக்கிறோம். அந்த கடல் உணவு வேறு நாட்டுக்கு விற்பனைக்கு அனுப்ப வேண்டுமென்றால், அந்த கன்டெய்னரை பிரித்து, அதில் வேறு நாட்டுக்கு உரிய முறையில் 'பேக்கிங்' செய்ய வேண்டும். இது அதிக பொருட்செலவை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருப்பூர் பின்னலாடைகளில் 35 சதவீதம் வரை வரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 26.8 சதவீதம் பங்களித்தது
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.இது பின்னலாடைத்துறை உள்பட இந்தியாவின் பல்வேறு துறை ஏற்றுமதி வர்த்தகம் நெருக்கடியை சந்தித்துள்ளது. குறிப்பாக திருப்பூரில் மட்டும் ஆண்டுக்கு ரூ.12,000 கோடி பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு ரூ.45,000 கோடிக்குப் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு திருப்பூரில் இருந்து அதிக அளவில் பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளில் 30 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை வரை அமெரிக்காவுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்தநிலையில் 50 சதவீத வரி விதிப்பு திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள்-ஏற்றுமதியாளர்களை கவலையடைய வைத்துள்ளது. இந்த வரி தமிழ்நாட்டின் ஜவுளி மற்றும் ஆடைத்துறையை கடுமையாகப் பாதிக்கும். எனவே ஏற்றுமதியாளர்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 8 பில்லியன் டாலர்கள், அதாவது 26.8 சதவீதம் பங்களித்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம். சுப்பிரமணியன் கூறுகையில், திருப்பூரில் இருந்து கிட்டத்தட்ட 60 சதவீதம் பின்னலாடை ஏற்றுமதி செய்யப்படுகிறது. வருகிறது. கடந்த ஆண்டு எங்கள் ஏற்றுமதி ரூ.45,000 கோடி மதிப்புடையதாக இருந்தது. அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் ரூ.12,000 கோடி மதிப்புள்ள வணிகம் பாதிக்கும் அபாயம் உள்ளது. மத்திய அரசு அமெரிக்காவுடன் தலையிட்டு ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்றார்.
சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜா சண்முகம் கூறுகையில், வரி விதிப்பால் கடந்த 10 நாட்களில் அமெரிக்காவுக்கு ரூ.4,000 கோடி மதிப்புள்ள ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக, இந்திய ஏற்றுமதியாளர்களும் அமெரிக்க இறக்குமதியாளர்களும் அடிப்படை வரியை 10 சதவீதம் பகிர்ந்து வருகின்றனர். ஆட்குறைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இப்போதைக்கு எதுவும் கூற முடியாது . திருப்பூரில் உள்ள சில அலகுகள் மூடப்பட்டுள்ளது. சரக்கு அனுப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வேலை இழப்புகள் எதுவும் இல்லை.
2030 ம் ஆண்டுக்குள் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் ரூ.1லட்சம் கோடியை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆனால் தற்போதைய வரி விதிப்பால் அடுத்த 5 ஆண்டுகளில் இலக்கை அடைவதை கடினமாக்குகிறது என்றார்.
இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பினரின் (சிட்டி) கூற்றுப்படி, இந்தியா 2025ம் நிதியாண்டில் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஜவுளி மற்றும் ஆடைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் வளர்ச்சி குறைந்துள்ளது. ஜூன் 2025ல், அமெரிக்காவிற்கான ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 3.3 சதவீதம் மட்டுமே வளர்ந்தது. இது இந்தியாவின் முந்தைய ஆண்டை விட மிகவும் குறைவாகவும், வியட்நாம் மற்றும் வங்காளதேசத்தை விட மிகவும் பின்தங்கியதாகவும் உள்ளது.
இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பினரின் தரவுகளின்படி, இந்தியா வியட்நாமிடம் சந்தைப்பங்கை இழந்து வருகிறது. ஜனவரி மற்றும் ஜூன் 2025க்கு இடையில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 5.36 பில்லியன் டாலராக இருந்தது. அதே நேரத்தில் வியட்நாமின் ஏற்றுமதி 18.5 சதவீதம் அதிகரித்து 8.54 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் மாதாந்திர ஏற்றுமதி ஜனவரியில் 860 மில்லியன் டாலரில் இருந்து ஜூன் மாதத்தில் 770 மில்லியன் டாலராக குறைந்தது.
ஏற்றுமதியாளர்களின் துயரங்களை அதிகரிக்கும் வகையில் 50 சதவீதம் வரியுடன் இணைந்து, அமெரிக்காவில் இந்திய ஜவுளிகள் மீதான மொத்த வரிகள் 59-64 சதவீதமாக உயரக்கூடும் என்று உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. ஜவுளி உற்பத்தியில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை உள்ளூரில் விற்பனையாவதால் இந்தியா அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியும் என்று அதன் நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா கூறினார்.
இருப்பினும் கூடுதல் 25 சதவீதம் வரி தற்காலிகமானது என்று ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவரும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கவுரவ தலைவருமான ஏ. சக்திவேல் தெரிவித்துள்ளார். மேலும் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் சந்தைகளை பன்முகப்படுத்த இந்தியா முயற்சித்து வருகிறது. இங்கிலாந்துடன் ஏற்கனவே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது, மேலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மற்றொரு ஒப்பந்தம் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தங்கள் கிட்டத்தட்ட 50 சதவீத இழப்புகளை ஈடுசெய்ய உதவும் என்று ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவுடனான பிரச்சினைகளுக்கு முன்கூட்டியே தீர்வு காண்பது மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்தித்து விவாதிக்க உள்ளனர்.
பருத்தி வரி தள்ளுபடி
இதற்கிடையில் ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30 வரை பருத்தி மீதான 11 சதவீதம் இறக்குமதி வரியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் பருத்தி விலை கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் வரையிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உற்பத்தி செலவு குறைந்து பங்களாதேஷ் ,வியட்நாம், இலங்கை போன்ற போட்டி நாடுகளுடன் விலை நிர்ணயம் செய்வதில் சிறப்பான நிலையை அடைய முடியும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் செப்டம்பர் 30 வரையிலும் என்பது குறுகிய கால அளவாக உள்ளதால் அதனை நீட்டிப்பு செய்து அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செயற்கை நூலிழை ஆடைகளை பொறுத்தவரை, திருப்பூரில் 10 முதல் 20 சதவீதம் வரை செயல்படுத்தி வருகிறோம். தற்பொழுது பருத்தி விலை குறைய வாய்ப்பிருப்பதால் பருத்தி ஆடைகளுக்கான ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும் . இதன் மூலம் போட்டிநாடுகளுடன் போட்டியிட்டு வர்த்தகத்தை அதிகரிக்க உதவும். இந்த விலை குறைப்பின் மூலம் அதிகப்படியான ஆர்டர்களை எங்களால் பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.
- இந்த வரி உயர்வால் அமெரிக்க நுகர்வோர் தான் பாதிக்கப்படுவார்கள்.
- அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூரில் பின்னலாடை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்படாது.
திருப்பூர்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு 25 சதவீத வரியை உயர்த்திய நிலையில் கூடுதலாக 25 சதவீத வரியை உயர்த்தி அறிவித்துள்ளார். இதனால் இந்திய பொருட்கள் விலை அமெரிக்காவில் உயர்வதன் காரணமாக வர்த்தகம் பெருமளவில் பாதிக்கும்.
குறிப்பாக அமெரிக்காவுக்கான பின்னலாடைகள் ஏற்றுமதி ரூ.12,000 கோடி அளவில் பாதிக்கும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்த வரி விதிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. மத்திய அரசு இது தொடர்பாக உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும். இந்த வரி உயர்வால் அமெரிக்க நுகர்வோர் தான் பாதிக்கப்படுவார்கள். 100 ரூபாய் ஆடைகள் இனி ரூ.150ஆக உயரும். அவற்றை வாங்க முடியாமல் அமெரிக்க நுகர்வோர்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.
இந்தியாவுக்கான வரி உயர்வை போட்டி நாடுகளான பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்தும் பட்சத்தில் நமக்கு கிடைக்கக்கூடிய அமெரிக்க ஆர்டர்கள் பாதிக்கும்.
அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூரில் பின்னலாடை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்படாது. இங்கிலாந்துடன் வரியில்லா ஒப்பந்தம் செய்து கொண்டதால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிக அளவு ஆர்டர்கள் திருப்பூருக்கு கிடைக்கும். இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளதே தவிர குறைவதற்கு வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வர்த்தக பற்றாக்குறை 5.77 பில்லியனாக இருந்தது.
- இந்த வருடம் ஏப்ரல் மாதத்திலா் 8.65 பில்லியனாக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருந்துள்ளது. இதனால் 8.65 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
2024 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (பொருட்கள் மற்றும் சேவைகள்) 65.48 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது அது 73.80 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
அதேவேளையில் 2024 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதி (பொருட்கள் மற்றும் சேவைகள்) 71.25 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது அது 82.45 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருப்பதால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வர்த்தக பற்றாக்குறை 5.77 பில்லியனாக இருந்த நிலையில், இந்த வருடம் ஏப்ரல் மாதத்திலா் 8.65 பில்லியனாக அதிகரித்துள்ளது.
- கடந்த 2024-25 நிதியாண்டில் மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
- மாநிலத்தின் ஒட்டுமொத்த மின்னணு சுற்றுச்சூழல் அமைப்புக்கும் வாழ்த்துகள்.
சென்னை:
2024-25 நிதியாண்டில் மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கடந்த 2024-25 நிதியாண்டில் மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இது இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 41.23 சதவீதம் அதிகமாகும். மாநிலத்தின் ஒட்டுமொத்த மின்னணு சுற்றுச்சூழல் அமைப்புக்கும் வாழ்த்துகள். இது உண்மையிலேயே பெருமைக்குரிய தருணம்.
கடந்த ஆண்டு 9.56 பில்லியனிலிருந்து இந்த ஆண்டு 14.65 பில்லியனாக 53 சதவீதம் மகத்தான வளர்ச்சி. இது வெறும் ஆரம்பம் தான். மின்னணு ஏற்றுமதியில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இதோ வருகிறோம்.
இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.
- திருப்பூர் பின்னலாடைத்துறையின் பங்கு 49 சதவீதமாகும்.
- அடுத்த ஆண்டுகளில் இந்த மேல்நோக்கிய வளர்ச்சியை தக்க வைப்போம்.
திருப்பூர்:
இந்தியாவின் ஆயத்த ஆடை வர்த்தகம் தொடர்ந்து ஏறுமுகத்தில் பயணித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் முந்தைய ஆண்டை விட வர்த்தகம் உயர்ந்து வந்த நிலையில், கடந்த 2024-25-ம் நிதியாண்டு ஏற்றுமதியில் 10 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் கடந்த நிதியாண்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் கோடியாகும். இதில் திருப்பூர் பின்னலாடைத்துறையின் பங்கு 49 சதவீதமாகும்.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 20 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த சாதனை, பின்னலாடை துறையின் நீடித்த வேகத்தையும், இந்திய நிட்வேர் மற்றும் ஆடைகளுக்கான வலுவான உலகளாவிய தேவையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) துணை தலைவர் சக்திவேல் கூறியதாவது:-
இந்திய ஆயத்த ஆடையின் சீரான, நிலையான வளர்ச்சி மாதந்தோறும் திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தின் மீதான நம்பிக்கை பிரதிபலிப்பதாக இருந்தது. குறிப்பாக ஆயத்த ஆடை வர்த்தகத்தில் இந்த ஆண்டு திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி 15 முதல் 20 சதவீதம் வளர்ச்சியை எட்டும் என்று கடந்த ஜனவரி மாதம் நான் தெரிவித்தேன்.
அதபோல் கடந்த ஆண்டை விட திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் 20 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. நாம் எதிர்பார்த்தது போல் ரூ.40 ஆயிரம் கோடி என்ற இலக்கை அடைந்து சாதனை படைத்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. பின்னலாடை ஏற்றுமதியின் வளர்ச்சி என்பது திருப்பூர் உற்பத்தியாளர்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கும். ஏற்றுமதியாளர்களின் உலகளாவிய போட்டித்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. அடுத்த ஆண்டுகளில் இந்த மேல்நோக்கிய வளர்ச்சியை தக்க வைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:-
முந்தைய ஆண்டைவிட, கடந்த நிதியாண்டின் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தபட்சம் 15 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் 20 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. ரூ.40 ஆயிரம் கோடியை எட்டுவோம் என்று நம்பினோம். அதை நோக்கியே எங்களின் பயணம் இருந்தது. அதன்படி கடந்த நிதியாண்டு வர்த்தகம் ரூ.40 ஆயிரம் கோடியை எட்டியது மகிழ்ச்சியளிக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொருட்களை தயாரிக்க தேவியான மூலக் கூறுகள் முற்றிலும் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- அதன் பெரும்பாலான விநியோகம் சீனாவிலிருந்து வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட பலவேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார்.
இதற்கு மற்ற நாடுகள் பணிந்த நிலையில் வல்லரசான சீனா தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இருவரும் மாற்றி மாற்றி வரியை உயர்த்தி வருகின்றனர். சீன பொருட்கள் மீது அமெரிக்கா 145 சதவீத வரியும், அமெரிக்க பொருட்கள் மீது சீனா 125 சதவீத வரியும் விதிப்பதாக அறிவித்தன.
இந்நிலையில் அமெரிக்காவுக்கு, கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா அதிரடியாக நிறுத்தி உள்ளது.
இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள், மற்றும் பிற நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவையான மூலக் கூறுகள் முற்றிலும் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தக போரில் சீனா ஏற்றுமதிக்கு புதிய நெறிமுறைகளை வகுத்து வருகிறது. ஏற்கனவே கார்கள் முதல் மிசைல்கள் வரை தயாரிக்க தேவியான காந்தங்கள் மற்றும் மூலக்கூறுகளின் ஏற்றுமதி சீன துறைமுகங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என நியூ யார்க் டைம்ஸ் இதழ் தெரிவிக்கிறது.
சீனா வகுத்து வரும் புதிய நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்தால் அமெரிக்காவின் ராணுவ தளவாட உற்பத்தி உட்பட பல நிறுவனங்களின் உற்பத்தி தடைப்படும் என்று கூறப்படுகிறது.
பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 தனிமங்களின் தொகுப்பான 'உலகின் அரிய மண் தாது'க்களில் சுமார் 90 சதவீதத்தை சீனா உற்பத்தி செய்கிறது. சமாரியம், காடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், லுடீடியம், ஸ்காண்டியம் மற்றும் யட்ரியம் ஆகியவை உட்பட ஏழு வகை நடுத்தர மற்றும் கனரக அரிய மண் தாதுக்கள் ஏற்றுமதியை கட்டுப்படுத்த சீனா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் ஒரே ஒரு அரிய சுரங்கம் மட்டுமே உள்ளது. அதன் பெரும்பாலான விநியோகம் சீனாவிலிருந்து வருகிறது. எனவே சீனாவின் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்க உற்பத்தியைப் பெருமளவில் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தொழில் நிலையை பாதுகாக்கும் வகையில் புதிய கொள்கைகள்
- பல்வேறு காரணங்களால், வெளிநாட்டு வர்த்தக கொள்கை மறுசீரமைப்பு
திருப்பூர்,நவ.21-
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது ஜெர்மனி. இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் 4 சதவீதம் ஆடைகள் ஜெர்மனிக்கு செல்வது குறிப்பிடத்தக்கது. ஜவுளி இறக்குமதி செய்யும் பெரிய நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது ஜெர்மனி.
ஜெர்மனியில் ஜவுளி வர்த்தகர்களும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏற்றுமதி வர்த்தகர்களும் சந்தித்து வர்த்தக வாய்ப்புகளை பறிமாறிக்கொள்ள ஏதுவாக அடிக்கடி வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சந்திப்பு நிகழ்ச்சிகளும், கண்காட்சிகளும் இந்தாண்டு எழுச்சியுடன் நடத்தப்படுகிறது.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) சார்பில் வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சி பிப்ரவரி 27, 28ந் தேதிகளில் ஜெர்மனியில் உள்ள பெர்லினில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா - ஜெர்மனி இடையே ஜவுளித்தொழில் வர்த்தகம் சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் வர்த்தக அபாரமாக வளர்ச்சி பெற்றுள்ளது.கடந்த 2019 ம் ஆண்டில் 3.09 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்தது. கடந்த 2021ம் ஆண்டில் 3.34 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ஏ.இ.பி.சி., அதிகாரிகள் கூறியதாவது:-
இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்ததை மேம்படுத்தும் வகையில் ஏ.இ.பி.சி., ஊக்கமளித்து வருகிறது. ஜவுளி ஏற்றுமதியில் முக்கிய நாடாக இருக்கும் ஜெர்மனியுடன் வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்பதன் வாயிலாக புதிய ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க முடியும். வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0421 2232634 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்தநிலையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிநாட்டு வர்த்தக கொள்கை உருவாக்கப்படுகிறது.
எதிர்பாராத வகையில் ஏற்படும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வர்த்தக நாடுகளில் உருவாகும் அசாதாரண சூழல், பஞ்சு -நூல் உற்பத்தியில் மாறுபாடு, பணமதிப்பில் உருவாகும் ஏற்றத்தாழ்வு போன்ற நேரத்தில் தொழிலை பாதுகாக்கும் வகையில் தேவையான திருத்தம் செய்யப்படுகிறது.
கடந்த 2015ல் உருவாக்கிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை 2022 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன்பின் தற்போதைய தொழில் நிலையை பாதுகாக்கும் வகையில் புதிய கொள்கைகள் உருவாக்கப்படுமென தொழில்துறையினர் எதிர்பார்த்தனர்.புதிய அம்சங்களுடன் புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை உருவாக்கப்படும் என தொழில்துறையினர் பெரிதும் எதிர்பார்த்தனர். வெளிநாட்டு வர்த்தகம் 'டாலர்' பணமதிப்பின் அடிப்படையில் நடக்கிறது.
இந்நடைமுறையை மாற்றம் செய்து இந்திய ரூபாய் மதிப்பில் வர்த்தகம் செய்ய வழிவகை செய்வது குறித்தும், தொழில்துறை அமைச்சரகம் தீவிரமாக ஆராய்ந்து வந்தது. விரிவாக ஆலோசனை நடத்திய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரகம் வெளிநாட்டு வர்த்தக கொள்கை புதுப்பிக்கும் முடிவை 6 மாதம் ஒத்திவைத்துள்ளது.
இதுகுறித்து ஏற்றுமதி வர்த்தகர்கள் கூறுகையில், உக்ரைன் போர் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக பல்வேறு நாடுகளில் இயல்பான வர்த்தகம் நடைபெறுவதில்லை. இயல்பு நிலை திரும்ப மேலும் சில நாட்களாகும்.
ஆஸ்திரேலியா, பிரிட்டன் நாடுகளுடன், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கும் முயற்சியும், இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதன்காரணமாகவே வெளிநாட்டு வர்த்தக கொள்கை மறுசீரமைப்பு மார்ச் 31 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றனர்.
இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல் கூறுகையில், பல்வேறு காரணங்களால், வெளிநாட்டு வர்த்தக கொள்கை மறுசீரமைப்பு 6 மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதற்கு முன்னதாக இந்திய ரூபாய் மதிப்பில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் (2023 ஏப்ரல்) இருந்து புதிய திருத்தங்களுடன் வெளிநாட்டு வர்த்தக கொள்கை உருவாக்கப்பட வாய்ப்புள்ளது என்றார்.
- பிபா விளையாட்டுக்காக விளையாட்டு சார்ந்த உடைகள் கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
- திருப்பூரில் இருந்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு 75 சதவீத ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
திருப்பூர் :
கத்தார் நாட்டில் பிபா உலகக்கோப்பை- 2022 தொடர் கடந்த 20ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 32 அணிகள் 8 வெவ்வேறு பிரிவுகளில் பங்கேற்று விளையாடி வருகின்றன. வளைகுடா நாடுகளில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெறுவது இதுவே முதல்முறை.
இதன்மூலம் கத்தார் நாட்டின் வர்த்தகம், சுற்றுலா, பொருளாதாரம் எனப் பல்வேறு விஷயங்கள் வளர்ச்சி அடையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இம்முறை இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், பிபா உலகக்கோப்பை போட்டிக்காக கத்தாருக்கு விளையாட்டு சார் உடைகளை ஏற்றுமதி செய்து திருப்பூர் உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும் வருமானம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் அது சார்ந்த சாயமிடுதல், பிரின்டிங்க், எம்ராய்டரி, நூல் மில்கள் உள்ளிட்ட உப தொழில்கள்,ஜாப் ஒர்க் நிறுவனங்களில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடி வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.
மேலும் தொழிலாளர் கள் சார்ந்து ஏராளமானோர் மறைமுக வேலை யினையும் பலர் பெற்று வருகின்றனர். திருப்பூரில் இருந்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு 75 சதவீத ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் சுமார் 35 ஆயிரம் கோடி அளவுக்கு அந்நிய செலாவணி ஈட்டித்தரும் நகராக திருப்பூர் உள்ளது.
ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிலில் சர்வதேச அளவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ள திருப்பூரில் இருந்து பிபா விளையாட்டுக்காக விளையாட்டு சார்ந்த உடைகள் கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதற்காக திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் கொச்சின் விமான நிலையம் வாயிலாக கத்தார் தலைநகர் தோஹாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்ட விளையாட்டு சார்ந்த உடைகள் சுமார் 17 சரக்கு தொகுப்புகள் கொச்சி விமான நிலையம் வாயிலாக கத்தாருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திருப்பூரை சேர்ந்த ஜவுளி நிறுவனங்கள் நல்ல வருமானம் ஈட்டியுள்ளதாகவும் தெரிகிறது.
இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் வாயிலாக ஆர்டர்களை பெற்று ஏற்றுமதி வழி வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை கைப்பற்றுவதற்கு அரசும் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே திருப்பூர் ஜவுளித் துறையினரின் கோரிக்கையாக உள்ளது.






