என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழகம்"

    • நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
    • திருச்சி சென்று, ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

    சென்னை:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார். நாளை மதியம் சென்னைக்கு வரும் அவர், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்த விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்துகொள்கிறார்.

    நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அன்றையதினம் இரவு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஜனாதிபதி தங்குகிறார். நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திரவுபதி முர்மு திருச்சி செல்கிறார். பின்னர் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செல்கிறார்.

    மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி சென்று, ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதைத்தொடர்ந்து திரவுபதி முர்மு, திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    ஜனாதிபதியின் சென்னை வருகையையொட்டி டிரோன்கள் பறக்க விடுவதற்கு தடை விதித்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். திரவுபதி முர்மு பங்கேற்கும் நந்தம்பாக்கம் நிகழ்ச்சிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதபோல அவர் கவர்னர் மாளிகையில் தங்குவதாலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • மாநில வாரியாக அரசு பள்ளிகளில் அதிகம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் பீகார் முதலிடத்தில் இருக்கிறது.
    • 2-வது இடத்தில் உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்கள் உள்ளன.

    சென்னை:

    நாடு முழுவதும் மொத்தம் 14 லட்சத்து 72 ஆயிரம் பள்ளிகள் இருக்கின்றன. அதில் 10 லட்சத்து 21 ஆயிரம் பள்ளிகள் அதாவது 69.14 சதவீதம் அரசு பள்ளிகள் ஆகும். அதேபோல மொத்தமுள்ள 24 கோடியே 80 லட்சம் பள்ளி மாணவர்களில் 12 கோடியே 75 லட்சம் பேர் அதாவது 51.4 சதவீத மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். ஆனால் ஆண்டுக்கு, ஆண்டு அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இது தொடர்பான தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

    அதன்படி கடந்த 2021-22-ம் ஆண்டின் நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 14.32 கோடியாக இருந்தது. ஆனால் இது தற்போது 1 கோடியே 54 லட்சம் குறைந்து போய் 12 கோடியே 78 லட்சம் ஆகி இருக்கிறது.

    மாநில வாரியாக அரசு பள்ளிகளில் அதிகம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் பீகார் முதலிடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் ஒரு கோடியே 74 லட்சத்து 66 ஆயிரத்து 574 பேர் படிக்கின்றனர். 2-வது இடத்தில் உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் தலா 1.58 கோடி மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். 10-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு 48 லட்சத்து 40 ஆயிரத்து 34 மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர்.

    ஆனால் தமிழகத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டுகளில் 53 லட்சத்து 14 ஆயிரத்து 845 மாணவர்களும், 2022-23-ம் ஆண்டுகளில் 50 லட்சத்து 42 ஆயிரத்து 26 மாணவர்களும் அரசு பள்ளிகளில் படித்து உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இந்த எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.

    • நாட்டில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது
    • தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.1,96,309 ஆக உள்ளது.

    பாராளுமன்ற மக்களவையில் பீகார் எம்.பி.க்கள் 2 பேர் நாட்டின் தனிநபர் வருமான விவரங்களை கேள்விகளாக கேட்டு இருந்தனர். இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

    அந்த பதிலில் நாட்டில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது. அங்கு 2024-2025-ம் ஆண்டு தனிநபர் வருமானம் ரூ.2,04,605 ஆக இருந்தது. 2-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.1,96,309 ஆக உள்ளது.

    இந்நிலையில், தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு 2ம் இடம் பிடித்தது திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், தொழில்துறை, கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் சமூக நலனில் மாபெரும் சாதனைகளைப் படைத்து நாட்டிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது, தமிழ்நாடு. அந்தச் சாதனை பட்டியலில் மற்றுமொன்றாக, தமிழ்நாடு ரூ.1,96,309 என்ற தனிநபர் வருமான குறியீட்டின் மூலம் மாநிலங்களுக்கிடையே இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தச் சாதனையானது, திராவிட மாடலின் தொலைநோக்கு திட்டங்கள், தொழில் வளர்ச்சி, முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது. "எல்லார்க்கும் எல்லாம்" என்ற உன்னத கொள்கையோடு செயல்பட்டு வரும் நமது திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்த அடுத்த மணிமகுடம் தான் இது.

    கடந்த ஆட்சியின் இறுதியாண்டான 2020-21-ல் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 1.43 இலட்சம் ரூபாய் மட்டுமே. நம் கழக ஆட்சியில், கடந்த நான்கு ஆண்டுகளில் சராசரியாக 8.15 சதவீதம் வளர்ச்சியோடு 2024-25 ஆம் ஆண்டில் தனி நபர் வருமானம் 1.96 இலட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த ஆட்சிக் காலத்தில், 2016-17 ஆம் ஆண்டு முதல் 2020-21 ஆம் ஆண்டு வரை 4.42 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. இத்தகைய உயரிய சராசரி வளர்ச்சியானது, வெற்றிகரமான திராவிட மாடல் ஆட்சிக்கு ஒரு சான்றாகும்.

    தேசிய சராசரியுடன் ஒப்பிடுகையில் 2024-25 ஆம் ஆண்டில் தேசிய சராசரி தனிநபர் வருமானம் 1.14 இலட்சம் மட்டுமே. 2014-15 முதல் 2024-25 வரையிலான கடந்த பத்தாண்டு தேசிய சராசரி வளர்ச்சி விகிதம் 57 சதவீதம் மட்டுமே. ஆனால், அனைவரையும் வியக்க வைக்கும் வகையில், தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி விகிதமோ 83.3 சதவீதம் ஆகும். மக்கள் நலனை மையப்படுத்தி, பொருளாதார முன்னேற்றத்தில் மட்டும் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசு கவனம் செலுத்தியதால் இவை சாத்தியமானது. இதே உற்சாகத்தோடு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி அண்ணன் தளபதி அவர்களின் தலைமையில் இன்னும் வேகமாகப் பயணிப்போம்!" என்று தெரிவித்துள்ளார். 

    • மாநிலங்கள் வாரியான தனிநபர் வருமான விவரங்களும் அளிக்கப்பட்டு இருந்தன.
    • நாட்டில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் பீகார் எம்.பி.க்கள் 2 பேர் நாட்டின் தனிநபர் வருமான விவரங்களை கேள்விகளாக கேட்டு இருந்தனர். இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீடுகளின்படி, 2024-2025-ம் ஆண்டுக்கான நிலையான விலையில் தனிநபர் நிகர தேசிய வருமானம் ரூ.1,14,710 ஆக உள்ளது.

    10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2014-2015-ம் ஆண்டுக்கான நிலையான விலையில் இது ரூ.72,805 ஆக இருந்தது.

    தனிநபர் வருமானம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையில் மாறுபடும். இது பொருளாதார வளர்ச்சியின் நிலைகள், துறைசார் அமைப்பு, கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிர்வாக வழிமுறைகளில் உள்ள வேறுபாடுகள் போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்படக்கூடும்.

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும், மாநிலங்கள் வாரியான தனிநபர் வருமான விவரங்களும் அளிக்கப்பட்டு இருந்தன.

    இதன்படி நாட்டில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது. அங்கு 2024-2025-ம் ஆண்டு தனிநபர் வருமானம் ரூ.2,04,605 ஆக இருந்தது.

    2-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.1,96,309 ஆகும்.இதற்கு அடுத்த இடங்களில் அரியானா (ரூ.1,94,285), தெலுங்கானா (ரூ.1,87,912), மகாராஷ்டிரா (ரூ.1,76,678), இமாச்சல பிரதேசம் (ரூ.1,63,465) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

    • தினசரி மின்தேவை கடந்த மாதம் முதல் 20,000 மெகாவாட்டாக உயா்ந்தது.
    • கடந்த வாரத்தில் சென்னை மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும் மழை பெய்தது.

    சென்னை:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால், தினசரி மின்தேவை குறைந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு மாா்ச் மாதத்திலேயே வெயில் தாக்கம் அதிகரித்தது. இதனால், மின்சாதன பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், மின் தேவை 22,000 மெகா வாட்டை தாண்டும் என எதிா்பாா்க்கப்பட்டது. இதைப் பூா்த்தி செய்ய ஏப்ரல், மே மாதங்களில் கூடுதலாக 6,000 மெகாவாட் மின்சாரம் தனியாா் நிறுவனங்களிடம் இருந்து யூனிட் ஒன்று ரூ.9-க்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில், தினசரி மின்தேவை கடந்த மாதம் முதல் 20,000 மெகாவாட்டாக உயா்ந்தது. மின் தேவையை மின்வாரியம் முறையாகக் கையாண்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தது.

    கடந்த வாரத்தில் சென்னை மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும் மழை பெய்தது. இவ்வாறு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது தொடா்ச்சியாக கோடை மழை பெய்து வருவதால், பல இடங்களில் குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக தினசரி மின்தேவை 17,000 முதல் 18,000 மெகாவாட்டாக குறைந்துள்ளது.

    தமிழகத்தின் தினசரி மின்தேவை இனி அதிகரிக்க வாய்ப்பில்லை எனவும், இதனால் தமிழகத்துக்கு தடையில்லா மின்சாரம் வழங்க முடியும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    • நாடு முழுவதும் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது.
    • தமிழகத்தில் இன்று சென்னை துறைமுகம், கல்பாக்கத்தில் ஒத்திகை.

    பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலைத்தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வேகப்படுத்தியுள்ளது.

    நாடு முழுவதும் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது. சில வடமாநிலங்களில் ஏற்கனவே இந்த பயிற்சி தொடங்கிவிட்டது.

    அதன்படி, தமிழகத்தில் இன்று சென்னை துறைமுகம், கல்பாக்கத்தில் ஒத்திகை நடைபெறும் என்றும் இது இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஒத்திகை நடைபெறும் எனவும் மாநில பேரிடர் மேலாண்மை தெரிவித்தது.

    இந்நிலையில், சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம், புதுச்சேரி ஆகிய இடங்களில் போர்க்கால ஒத்திகை தொடங்கியுள்ளது.

    ஒத்திகையின்போது சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிகளை ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.

    இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையம் தாக்கப்படும் சூழலில் நிலைமையைச் சமாளிப்பது குறித்து ஒத்திகை நடத்தப்படுகிறது.

    மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேரிடர் மேலாண்மை ஆணைய வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

    புதுச்சேரி அருகே லாஸ்பேட்டையிலும் போர் சூழலில் பாதுகாப்பு ஒத்திவை நடைபெற்று வருகிறது.

    • கடந்த 2024-25 நிதியாண்டில் மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
    • மாநிலத்தின் ஒட்டுமொத்த மின்னணு சுற்றுச்சூழல் அமைப்புக்கும் வாழ்த்துகள்.

    சென்னை:

    2024-25 நிதியாண்டில் மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கடந்த 2024-25 நிதியாண்டில் மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இது இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 41.23 சதவீதம் அதிகமாகும். மாநிலத்தின் ஒட்டுமொத்த மின்னணு சுற்றுச்சூழல் அமைப்புக்கும் வாழ்த்துகள். இது உண்மையிலேயே பெருமைக்குரிய தருணம்.

    கடந்த ஆண்டு 9.56 பில்லியனிலிருந்து இந்த ஆண்டு 14.65 பில்லியனாக 53 சதவீதம் மகத்தான வளர்ச்சி. இது வெறும் ஆரம்பம் தான். மின்னணு ஏற்றுமதியில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இதோ வருகிறோம்.

    இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.

    • கடந்த 2014-ம் ஆண்டு நாட்டில் மொத்தம் 387 கல்லூரிகளும், அந்த கல்லூரிகளில் 51 ஆயிரத்து 400 எம்.பி.பி.எஸ். இடங்களும் இருந்தன.
    • எம்.பி.பி.எஸ். இடங்களில் 11 ஆயிரத்து 745 எண்ணிக்கையில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது

    சென்னை:

    நாட்டில் எத்தனை பதிவு செய்த அலோபதி டாக்டர்கள் மற்றும் ஆயுஷ் டாக்டர்கள் இருக்கிறார்கள் என்ற விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் தற்போது 13 லட்சத்து 86 ஆயிரத்து 150 அலோபதி டாக்டர்கள் பதிவு செய்துள்ளனர். அதேபோல 7 லட்சத்து 51 ஆயிரத்து 768 ஆயுஷ் டாக்டர்கள் அதாவது ஆயுர்வேதம், சித்தா, யுனானி, இயற்கை மருத்துவ டாக்டர்கள் உள்ளனர். மேலும் நாட்டின் தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் 811 பேருக்கு ஒரு டாக்டர்கள் இருக்கின்றனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு நாட்டில் மொத்தம் 387 கல்லூரிகளும், அந்த கல்லூரிகளில் 51 ஆயிரத்து 400 எம்.பி.பி.எஸ். இடங்களும் இருந்தன. ஆனால் 2019-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 536 கல்லூரிகளும், 80 ஆயிரத்து 312 இடங்களும் என உயர்ந்தது. தற்போது 2023-24-ம் ஆண்டில் மிக அதிகளவாக 722 மருத்துவ கல்லூரிகளும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 297 எம்.பி.பி.எஸ். இடங்களும் இருக்கின்றன.

    மேலும் நாட்டிலேயே அதிகபட்சமாக 74 மருத்துவ கல்லூரிகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகாவில் 70, மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 68, தெலுங்கானாவில் 56, குஜராத்தில் 40, ஆந்திராவில் 37 என்ற எண்ணிக்கையிலும் உள்ளன.

    அதேநேரத்தில் எம்.பி.பி.எஸ். இடங்களில் 11 ஆயிரத்து 745 எண்ணிக்கையில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் 11 ஆயிரத்து 650 இடங்கள் உள்ளன. வெறும் 95 இடங்கள் வித்தியாசத்தில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது. 10 ஆயிரத்து 845 இடங்களுடன் மகாராஷ்டிரா 3-வது இடத்திலும், 9 ஆயிரத்து 903 எண்ணிக்கையில் உத்தரபிரதேசம் 4-வது இடத்திலும் உள்ளது.

    இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    • 5-ந்தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அங்கிருந்து நேரடியாக பாம்பன் வருகிறார்.
    • பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின்னர் பிரதமர் மோடி, ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார்.

    சென்னை:

    பழைய பாம்பன் பாலம் 1914-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்தப் பாலத்தின் வழியே நடைபெற்ற போக்குவரத்தின் வாயிலாக ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தது. கடலுக்கு நடுவில் இருந்த பழைய பாலத்தில் 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டது.

    இதற்கிடையே, பாம்பன் ரெயில் பாலம் 110 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கடல் அரிப்பின் காரணமாக பாலத்தின் பல இடங்களில் உறுதித்தன்மை குறைந்தது. கப்பல் போக்குவரத்துக்காக பயன்படும் 'தூக்கு பாலத்தில்' அவ்வப்போது பழுதும் ஏற்பட்டது. எனவே, பாதுகாப்பு கருதி இப்பாலத்தில் 2022-ம் ஆண்டு டிசம்பர் 22-ந்தேதியுடன் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.

    பின்னர், பழைய பாம்பன் ரெயில் பாலம் அருகே புதிய ரெயில் பாலம் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியது. ரூ.550 கோடி மதிப்பீட்டில் புதிய ரெயில் பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது. 2 ஆயிரத்து 78 மீட்டர் நீளத்திற்கு (2.1 கிலோ மீட்டர் தூரம்) கட்டப்பட்டு வந்தது. இதற்கிடையே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி புதிய ரெயில்வே பாலத்தை ஆய்வு செய்தார். அப்போது, ஒருசில குறைகளை சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு கமிஷனர் சுட்டிக்காட்டிய குறைகள் சரிசெய்யப்பட்டது.

    இதையடுத்து, புதிய ரெயில் பாலம் கட்டுமானப் பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவடைந்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. பின்னர், பிப்ரவரி மாதத்தில் இந்த பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ஏதும் நடைபெறவில்லை.

    ரெயில்வே பாலப் பணிகள் முடிந்து 3 மாதங்கள் ஆகியும் திறந்துவைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. குறிப்பாக, பாம்பன் புதிய ரெயில்வே பாலம் மத்திய அரசின் கனவு திட்டம் என்பதால் அதை பிரதமர் மோடி மட்டுமே திறந்து வைப்பார் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். கடந்த 23-ந்தேதி தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர் தலைமையில், ரெயில்வே உயர் அதிகாரிகள் பாம்பன் பாலத்தை ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில், பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தமிழகம் வருகிறார். முன்னதாக 5-ந்தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அங்கிருந்து நேரடியாக பாம்பன் வருகிறார். 6-ந்தேதி பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    பாம்பன் ரெயில்வே பாலம் திறப்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய ரெயில்வே மந்திரி அஷ்விணி வைஷ்ணவ் மற்றும் தமிழக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க. மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே செய்து வருகிறது.

    இதேபோல, பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின்னர் பிரதமர் மோடி, ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். அதன்பிறகு பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்கிறார். இதைத் தொடர்ந்து, மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி செல்ல உள்ளதாக பா.ஜனதா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • ராமேசுவரம் செல்லும் ரெயில்கள் அனைத்தும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
    • பாம்பன் கடலில் ரூ.546 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தின் தென்கோடியில் அமைந்து உள்ளது ராமேசுவரம். புனித நகரமான இங்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வருகிறார்கள்.

    ரெயிலில் வருபவர்கள் ராமேசுவரம் செல்வதற்காக மண்டபத்தையும் ராமேசுவரத்தையும் இணைக்கும் வகையில் கடல் மீது ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.

    1914-ல் அமைக்கப்பட்ட இந்த பாலம் சுமார் 2.3 கி.மீ. நீளம் உடையது. இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமையுடையது. நிலப்பரப்பை ராமேசுவரம் தீவுடன் இணைக்கும் இந்த பாலத்தை கப்பல் கடந்து செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுவில் கத்திரி வடிவில் தூக்குகளும் அமைக்கப்பட்டது. கப்பல் வரும்போது அந்த தூக்கு திறந்து கொள்ளும். அதன் பிறகு மூடிக் கொள்ளும்.

    இந்த பாலம் நூறு வயதை தாண்டி விட்டதால் இதன் அருகிலேயே கடந்த 2020-ம் ஆண்டில் புதிய பாலம் கட்டுமான பணி தொடங்கியது.

    இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஏற்பட்ட கடல் அரிப்பின் காரணமாக பழைய பாலத்தில் இருந்த 'ஷெர்ஜர்' தூக்கு பாலத்திலும் விரிசல் ஏற்பட்டது. இதனால் பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது.

    ராமேசுவரம் செல்லும் ரெயில்கள் அனைத்தும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அங்கிருந்து பயணிகள் கடல் மீது அமைந்துள்ள சாலை பாலம் வழியாகவே ராமேசுவரம் சென்று வருகிறார்கள்.

    பாம்பன் கடலில் ரூ.546 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

    கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் நடுவில் 650 டன் எடை கொண்ட தூக்குப் பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. கப்பல்கள் செல்லும்போது இந்த செங்குத்து பாலம் செங்குத்து வடிவில் திறக்கும்.

    இரட்டை தண்டவாளங்களுடன் அமைந்துள்ள இந்த பால வேலை கடந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது.

    அதன் பின்பு பல கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு ரெயில் போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதமே திறப்பு விழாவை நடத்த ரெயில்வே நிர்வாகம் தயாரானது. ஆனால் பல்வேறு காரணங்களால் திறப்பு விழா நடத்துவது தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

    இப்போது இந்த பாலத்தை பிரதமர் மோடி திறப்பது உறுதியாகி உள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) திறப்பு விழா நடக்கிறது.

    திறப்பு விழா ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீவத்சவா உள் ளிட்ட உயர் அதிகாரிகள் நேற்று ராமேசுவரம் வந்தனர். இந்த குழுவினர் மண்டபம் ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தை பார்வையிட்டனர். பின்னர் பாம்பன் பாலத்தில் நின்று புதிய, பழைய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் கூறியதாவது:-

    பாம்பன் புதிய ரெயில் பாலத்தை இன்னும் 2 வாரங்களில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஏப்ரல் மாதம் முதல் வாரம் அல்லது மூன்றாவது வாரத்தில் திறப்பு விழா நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பழைய ரெயில் பாலத்தை அகற்றுவது குறித்து இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. புதிய ரெயில் பாலம் திறக்கப்பட்ட பின்னரே ராமேசுவரம் ரெயில் நிலையப் பணிகள் முடிவடையும் என்றார்.

    மீண்டும் அதிகாரிகள் குழுவினர் இன்று காலை மதுரையில் இருந்து சிறப்பு ரெயில் மூலமாக ராமேசுவரம் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.

    திறப்பு விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதால் செய்யப்பட வேண்டிய விரிவான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே உள்ள கோவில் கட்டிட வளாகத்தில் மேடை அமைத்து பிரதமர் உரையாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    அந்த இடத்தில் மேடை அமைப்பது தொடர்பாகவும், பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் மண்டபம் பொதுப் பணித்துறை ஹெலிபேட் தளம், குந்துகால் பகுதியில் உள்ள விவேகானந்தர் நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷார் தலைமையிலான ரெயில்வே உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

    அவர்களுடன் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் மற்றும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    திறப்பு விழாவுக்கான தேதி இன்னும் உறுதியாகவில்லை. ஏப்ரல் முதல் வாரத்தில் 5-ந்தேதி பிரதமர் மோடி இலங்கை செல்கிறார். அங்கு பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. மேலும் தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாகவும் இலங்கை அதிபருடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த பயணத்தின்போது அவர் பாம்பன் பாலத்தையும் திறந்து வைக்க வரலாம் என்று கருதப்பட்டது. ஆனால் வெளிநாட்டு பயணத்துடன் இந்த நிகழ்ச்சியையும் சேர்த்து நடத்த வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

    மேலும் பிரதமர் மோடி ராமேசுவரம் வருவதை உணர்வுப் பூர்வமாக கருதக் கூடியவர். காசியை போல் ராமேசுவரத்துக்கு செல்வதையும் புனித பயணமாக கருதுவார். கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு ராமேசுவரம் வந்தபோது அங்குள்ள ராமகிருஷ்ணா மடத்தில் இரவு தங்கினார். அப்போது மெத்தையில் தூங்குவதை கூட தவிர்த்து தரையில் பாயில் படுத்து உறங்கினார். மறுநாள் ராமநாதசாமி கோவிலில் உள்ள 21 தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடினார்.

    எனவே இந்த முறையும் ராமேசுவரம் வருகையை தனித்துவமாக இருப்பதையே விரும்புவார். எனவே அடுத்தமாதம் (ஏப்ரல்) 3-வது வாரத்தில் பால திறப்பு விழாவுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். இந்த மாத இறுதிக்குள் தேதி உறுதியாகி விடும் என்றார்கள்.

    • வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • இருமொழிக்கொள்கை இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு கூறினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள ஸ்ரீசக்தி திரையரங்கம் அருகில் நடந்தது. இதற்கு வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான செல்வராஜ் தலைமை தாங்கி பேசினார். வடக்கு மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான தினேஷ் குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு. நாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கழக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., தலைமை கழக பேச்சாளர் தாம்பரம் ஜின்னா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி. பேசியதாவது :- இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது தி.மு.க.வின் முதன்மை கொள்கையாகும். இந்தி எதிர்ப்பு போராட்டம் திருப்பூரில் நடைபெற்றுள்ளது. இந்தியை மக்களிடம் திணிக்கக்கூடாது. இருமொழிக்கொள்கை இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு கூறினார். ஆனால் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கிறது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் குலக்கல்வி திட்டத்தை புகுத்தும் வகையில் பாடங்கள் அமைந்துள்ளது.

    இந்தியை எந்த காலத்திலும் திணிக்க அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்து வருகிறார். கனமழை பெய்தபோதும் சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளார். தொழில் நகரான திருப்பூரில் நூல் விலை உயர்வால் தொழில் பாதிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக நூல் விலை படிப்படியாக குறைந்து தொழில் நடக்கிறது. தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வெல்ல இப்போது இருந்தே பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி, தம்பி கோவிந்தராஜ், தெற்கு மாநகர பொருளாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், நிர்வாகிகள் திலகராஜ், சிவபாலன், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் 21-ந் தேதி முதல் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் என நல்லசாமி கூறினார்.
    • கள் இறக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நாங்கள் போலீசாரை கேள்வி கேட்போம்

    புதுக்கோட்டை

    தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் நல்லசாமி புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ''தமிழகம் முழுவதும் வருகிற ஜனவரி மாதம் 21-ந் தேதியில் இருந்து கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். கள் இறக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நாங்கள் போலீசாரை கேள்வி கேட்போம். கள்ளுக்கான தடையை அகற்றும் போராட்டத்தில் இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்பார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் இதுவும் வெற்றி பெறும். தென்னை மரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நீராவுக்கான நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். தமிழகத்தில் பனை, தென்னை, ஈச்சமரங்கள் இருந்தால் அவற்றில் இருந்து நீராகவோ, கள்ளாகவோ, பதநீராகவோ இறக்கியும், விற்றும், குடித்தும் கொள்ளலாம் எனவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக சந்தைப்படுத்தி உள்நாட்டிலும், பன்னாட்டிலும் விற்க வழி செய்யலாம். இவ்வாறு செய்தால் தமிழகத்திற்கு வருமானம் கிடைக்கும். தமிழகம் முதல் மாநிலமாக மாறும். முதல்-அமைச்சர் விரைவில் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என நம்புகிறோம்''. இவ்வாறு அவர் கூறினார்.

    ×