என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுக்கூட்டம்"

    • அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததை விட கூட்டம் கணிசமாக அதிகரித்தால், அது ஒரு தீவிரமான விதிமீறலாகக் கருதப்படும்
    • நிகழ்ச்சிக்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பார்வையாளர்கள் தேவையின்றி ஒன்றுக்கூடக்கூடாது

    தவெக தலைவர் விஜய்யின் கரூர் பரப்புரை கூட்டத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு தயாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

    அதன்படி,

    • புதிய நெறிமுறைகளின்படி வரையறுக்கப்பட்ட இடத்தில் நிகழ்ச்சி நடத்த 10 நாள்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்
    • அரசு பரிந்துரைத்ததற்கு மாற்றாக வேறு இடத்தில் நிகழ்ச்சி நடத்த 10 முதல் 30 நாட்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்
    • 50,000-க்கும் மேல் மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு 30 நாட்கள் அல்லது அதற்கு முன்பே விண்ணப்பிக்கலாம்
    • நிர்ணயிக்கப்பட்ட இடத்தை தவிர, வேறு எங்கும் வி.ஐ.பி. உரையாற்றக் கூடாது
    • 500 பேருக்கு ஒரு கழிப்பறை, 300 மீட்டர் அளவில் ஒரு நடமாடும் கழிப்பறை ஏற்படுத்த வேண்டும்
    • ஒரு நபருக்கு 4 லிட்டர் குடிநீர், ஒவ்வொரு 100 மீட்டருக்கும் குடிநீர் வசதியை ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
    • நிகழ்விற்கான அனுமதி, சம்பந்தப்பட்ட காவல் துறையினரால் விதிக்கப்படும் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
    • அனுமதி கடிதத்தில் 'இத்தனை மணி முதல் இத்தனை மணி வரை' என்று கொடுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாட்டை எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது.
    • ரோடு ஷோக்கள் 3 மணிநேரத்திற்குள் நடத்தப்பட வேண்டும்.
    • விண்ணப்பத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையைப் பின்பற்றுவதற்கு உட்பட்டே இந்த அனுமதி வழங்கப்படுகிறது. அதாவது 500 பேர் வருவார்கள் என்று குறிப்பிட்டிருந்தால், அந்த எண்ணிக்கையைத் தாண்டக்கூடாது
    • அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததை விட கூட்டம் கணிசமாக (50 சதவீதத்திற்கும் மேல்) அதிகரித்தால், அது ஒரு தீவிரமான விதிமீறலாகக் கருதப்படும்; மேலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நிகழ்ச்சிக்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பார்வையாளர்கள் தேவையின்றி ஒன்றுக்கூடக்கூடாது. நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்க, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சரியான கால அட்டவணையை பங்கேற்பாளர்களுக்குத் தெரிவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
    • கூட்டப் பாதுகாப்பு, ஒழுங்குமுறை மற்றும் சீரான மேலாண்மை போன்றவற்றை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் உறுதிசெய்ய வேண்டும். மேடைகள், தடுப்புகள் (Barricades), பந்தல்கள், அனைத்து தற்காலிக அமைப்புகள், மின்விளக்கு மற்றும் ஒலி அமைப்புகள் மற்றும் மின் இணைப்புகளின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்புச் சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர்கள் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து பெற வேண்டும். இந்தச் சான்றிதழ்களை நிகழ்ச்சி தொடங்குவதற்கு குறைந்தது 4 மணி நேரத்திற்கு முன்னதாக அனுமதி வழங்கிய அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்
    • ஏதேனும் அசம்பாவிதம் அல்லது தீ விபத்து ஏற்பட்டால் அதைச் சமாளிக்கத் தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் தீயணைப்புத் துறையின் வழிகாட்டுதலின்படி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்
    • அனைத்து வாகனங்களும் ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களுக்கு (Parking lots) மட்டுமே திருப்பி விடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்; பொதுப் போக்குவரத்திற்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது. எதிர்பார்க்கப்படும் ஒவ்வொரு 50 வாகனங்களுக்கும் குறைந்தது ஒரு தன்னார்வலர் (Volunteer) இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
    • நிகழ்வு நடைபெறும் முழு நேரத்திலும் அவசரகால மீட்பு வாகனங்களுக்கு (ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள், காவல் துறை வாகனங்கள்) தடையற்ற போக்குவரத்து இருப்பதை ஏற்பாட்டாளர் உறுதி செய்ய வேண்டும்.
    • டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் ஏதேனும் வைப்பதாக இருந்தால், நடைமுறையில் உள்ள தமிழ்நாடு அரசின் அரசாணை மற்றும் சட்ட விதிகளின்படி, உரிய அனுமதி பெற்றே நிறுவ வேண்டும். 
    • நடைமுறையில் உள்ள நிபந்தனைகளுக்கு இணங்கவே தற்காலிகக் கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டும்.
    • கர்ப்பிணிப் பெண்கள், மூத்த குடிமக்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய நபர்கள் பாதுகாக்கப்படுவதையும், அதிக மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளுக்கு அவர்கள் ஆளாகாமல் இருப்பதையும், அதிக நேரம் நிற்க வைக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்காகத் தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும், மேலும் அவர்களைக் கவனித்துக்கொள்வதற்காகத் தனி தன்னார்வலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
    • அனுமதிக்கப்பட்ட அளவை விட மக்கள் அதிகம் வந்துவிட்டால், கூட்ட நெரிசலைத் தவிர்க்க 100 பேருக்கு ஒரு தன்னார்வலர் என்ற கணக்கில் ஆட்களை நியமித்து, தடுப்புகள் மூலம் அவர்களைப் பாதுகாப்பு பகுதிகளுக்குப் பிரித்து அனுப்ப வேண்டும்.
    • ஊர்வலமாகச் செல்லும்போது சாலையை முழுமையாக அடைக்காமல், ஒரு பக்கமாக மட்டுமே செல்ல வேண்டும். மறுபாதியை வாகனங்கள் செல்வதற்காக ஒதுக்கி, பொதுமக்களுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
    • நிகழ்ச்சியின் தன்மை அல்லது எதிர்பார்க்கப்படும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு, தகுதிவாய்ந்த அதிகாரம் கொண்ட அதிகாரி (காவல் துறை), அவசியமெனக் கருதப்படும் வேறு எந்தவொரு குறிப்பிட்ட நிபந்தனைகளையும் விதிக்கலாம். 
    • அனுமதிக்கான அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்றுவதற்கு ஏற்பாட்டாளரே முழுப் பொறுப்பாவார். இதில் ஏதேனும் விதிமீறல் அல்லது குறைபாடுகள் ஏற்பட்டால், வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்; மேலும், சேதங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படவும் வாய்ப்புள்ளது. 

    என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×