என் மலர்
நீங்கள் தேடியது "Government of Tamil Nadu"
- சுற்றுசூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை பயன்படுத்துங்கள்.
- பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) சிலைகளைப் பயன்படுத்த கூடாது.
விநாயகர் சதுர்த்தி விழாவின்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகத்திற்கு நீண்ட கால பாரம்பரியம் உள்ளது. விநாயகர் சதுர்த்தி, தெய்வீகத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல. நமது சுற்றுச்சூழலின் அழகையும் தூய்மையையும் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும். மேலும் மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிலைகளை கரைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
விநாயகர் சதுர்த்தி விழா - செய்ய வேண்டியவை
1. சுற்றுசூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை பயன்படுத்துங்கள்.
1. சிலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய இயற்கையாக மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்துங்கள்.
2. சுற்றுசூழலிற்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜை பொருட்களாக பயன்படுத்தவும்
3. அகற்றி துவைத்து மீண்டும் உபயோகிக்ககூடிய அலங்கார துணிகளையே அலங்காரத்திற்கு பயன்படுத்தவும்.
4. பிரசாத விநியோகத்திற்கு மக்கும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்தவும்.
5. பொறுப்புடன் குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்துங்கள்.
6. அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்.
7. எல்.இ.டி. பல்புகள் போன்ற சுற்றுசூழலிற்கு உகந்த விளக்குகளை பயன்படுத்தவும்.
8. அலங்கார பொருட்களை எதிர்கால பண்டிகைகளுக்கு சேமித்து பயன்படுத்தவும்.
விநாயகர் சதுர்த்தி விழா - செய்யக்கூடாதவை
1. பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) சிலைகளைப் பயன்படுத்த கூடாது.
2. சிலைகளை அலங்கரிப்பதற்கு, சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் இரசாயனங்களை பொருட்கள் அல்லது சாயங்களை பயன்படுத்த கூடாது.
3. சிலைகளின் மேல் பூசிற்கும் அலங்காரத்திற்கும் நச்சுத்தன்மையுள்ள மற்றும் மக்கும் தண்மையற்ற இரசாயனசாயங்கள் /எண்ணெய் வண்ணப் பூச்சுகளை பயன்படுத்த கூடாது.
4. சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலாலான பொருட்களை பூஜை பொருட்களாக பயன்படுத்த கூடாது.
5. வண்ணப் பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட ஒரு முறையே உபயோகித்து தூக்கியெறியகூடிய அலங்கார பொருட்களை பயன்படுத்த கூடாது.
6. பண்டிகையின்போது ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியகூடிய கோப்பைகள். பிளாஸ்டிக் தட்டுகள், கரண்டிகள் மற்றும் உறிஞ்சு குழாய்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
7. குப்பை மற்றும் கழிவுகளை பொறுப்பற்று கொட்ட கூடாது.
8. அனுமதி இல்லாத நீர் நிலைகளில் சிலைகளை கரைக்க கூடாது.
9. ஃபிலமென்ட் பல்புகளை விளக்குகளாக பயன்படுத்த கூடாது.
10. ஒற்றை உபயோக அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கள்ளச்சாராயம் குடித்துச் செத்தால் 10 லட்சம் கொடுக்கும் திமுக அரசு.
- கொரோனோ பெருந்தொற்று பணியின் போது உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்க வேண்டும்.
முறைப்படி வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, போதிய மருத்துவர் - செவிலியர் பணியிடங்களை நியமனம் வேண்டும் என்பது உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து, அவர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ள திமுக அரசு, குறைந்தபட்சம் கொரோனா தொற்றுப் பணியின்போது உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியைக்கூடச் செய்ய மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
கொரோனா பெருந்தொற்றுக் காலம் முதல் தற்போதைய டெங்கு தொற்றுக் காலம் வரை தம் உயிரைப் பொருட்படுத்தாது, மக்கள் உயிர் காக்க முன்கள வீரர்களாக முனைப்புடன் கடமையாற்றி வருபவர்கள் அரசு மருத்துவர்கள். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் விரைந்து கட்டுக்குள் வர அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்புமிக்க கடின உழைப்பே முதன்மையான காரணமாகும். தமிழ்நாட்டின் 18000 அரசு மருத்துவர்கள்தான் கோடிக்கணக்கான ஏழை-எளிய தமிழக மக்களின் நல்வாழ்விற்கு ஆணிவேராக உள்ளனர்.
ஆடம்பரத் திட்டங்களுக்காகப் பல்லாயிரம் கோடிகளைச் செலவழிக்கும் திமுக அரசு, 12 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவர்கள் வீதியில் இறங்கிப் போராடியும், அவர்களது அடிப்படை உரிமைகளைக் கூட இன்றுவரை நிறைவேற்றாமல் அலட்சியம் செய்வது கொடுங்கோன்மையாகும்.
அதுமட்டுமன்றி, கொரோனோ பெருந்தொற்றுப் பணியின்போது உயிரிழந்த 11 அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியும், அரசுப்பணியும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சிறிதும் மனச்சான்று இன்றி திமுக அரசு ஏற்கமறுப்பது அதைவிடவும் பெருங்கொடுமையாகும்.
கடந்த 22.11.2020 அன்று மருத்துவப்பணியில் இருக்கும்போதே கொரோனா தொற்றால் மரணமடைந்த திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர் விவேகானந்தன் அவர்கள் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவராவார். அவருடைய மனைவி திவ்யாவிற்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி கேட்டுப் பலமுறை முறையிட்டும் திமுக அரசு அவரது கோரிக்கைக்கு இன்றுவரை செவிமடுக்கவில்லை.
அரசு மருத்துவர் விவேகானந்தன் மரணத்திற்குப் பிறகு அவரது ஏழைக் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதியும், அவரது மனைவிக்கு அரசுப்பணியும் வழங்க வேண்டும் என்று முதலில் அறிக்கை வெளியிட்டது வேறு யாருமல்ல; அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், இன்றைய முதல்வருமான ஐயா ஸ்டாலின் அவர்கள்தான்! தான் முன்வைத்த கோரிக்கையை, தன் கையில் அதிகாரம் கிடைத்த பிறகு நிறைவேற்ற மறுப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதமாகும்.
கள்ளச்சாராயம் குடித்துச் செத்தால் 10 லட்சம் கொடுக்கும் திமுக அரசு, உயிரைக் காப்பாற்றும் அரசு மருத்துவர் பணியின் போது ஏற்பட்ட கொரோனா தொற்றால் உயிரிழந்தால் அவரது குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வைப்பதுதான் சமூக நீதியா?!
உயிர்களைக் காக்க நாள்தோறும் போராடிவரும் மருத்துவர்கள் தங்கள் உரிமைகளைக் காக்க ஆண்டுக்கணக்கில் போராடிவரும் துயரம் தொடர்வது மிகுந்த வேதனையளிக்கிறது.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற நிலை நீடிப்பது மருத்துவர்களின் ஈகத்தை அவமதிக்கும் செயலாகும் என்பதை உணர்ந்து, திமுக அரசு, மருத்துவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளான தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு அரசாணை 354-ன் படி, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
மக்கள் உயிர் காக்க தன் உயிரைப் பணயம் வைத்த அரசு மருத்துவரின் குடும்பத்தை ஒரு கருணை வேலைக்காகக் காத்திருக்கச் செய்து அலைகழிப்பது என்பது, மருத்துவர்களின் ஈகத்தையும், அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்தி இழிவுபடுத்துவதாகும். திமுக அரசின் இத்துரோகச்செயல், இனிவரும் இளந்தலைமுறை மருத்துவர்களிடத்தில் சேவைபுரிய வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடும் கொடுஞ்சூழலை ஏற்படுத்திவிடும்.
ஆகவே, கொரோனோ பெருந்தொற்று பணியின் போது உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்க வேண்டும், முறைப்படி வழங்க வேண்டிய உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும், போதிய மருத்துவர் - செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.
தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி எதிர்வரும் 11.06.2025 அன்று சேலம் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அரசு மருத்துவர் பெருமக்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தோள்கொடுத்து துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என சீமான் கூறியுள்ளார்.
- ஒருங்கிணைந்த கல்வித்திட்ட நிதியை பெறுவதில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு தமிழக அரசு தான் காரணமாகும்.
- மாநில உரிமைகளைக் காப்பதற்காக எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கவில்லை.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி தமிழக அரசுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2151.59 கோடியை மத்திய அரசு வழங்க மறுப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஜூலை 13-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு வாய்ப்பில்லை. இது தமிழ்நாட்டுக்கு பெரும் பின்னடைவு ஆகும்.
ஒருங்கிணைந்த கல்வித்திட்ட நிதியை பெறுவதில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு தமிழக அரசு தான் காரணமாகும். இந்த சிக்கலில் தமிழ்நாட்டிற்கு எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய நீதி இப்போது வரை தள்ளிக் கொண்டே போவதற்கு காரணம், தமிழக அரசின் சார்பில் காட்டப்பட்ட அலட்சியமும், அடுக்கடுக்காக இழைக்கப்பட்ட தவறுகளும் தான்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான முதல் காலாண்டில், அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான 3 மாதங்களில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.573 கோடியை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதி வரை வழங்காத நிலையில், அதைக் கண்டித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவது உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அதன்பின் தொடர்ந்து வெளியிட்ட அனைத்து அறிக்கைகளிலும் இதையே வலியுறுத்தியிருந்தேன். கடந்த மே 22-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மீண்டும் ஒருமுறை இந்த யோசனையை வலியுறுத்தியிருந்தேன்.
ஆனால், தமிழக அரசோ, அதை மதித்து நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக வீண் அரசியலைச் செய்து காலத்தைக் கடத்தியது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்ததற்கும் இது தான் காரணம் ஆகும். நேற்றைய வழக்கு விசாரணையின் போது, எவ்வளவு காலமாக மத்திய அரசின் நிதி வரவில்லை என்றும், எப்போது வழக்கு தொடர்ந்தீர்கள் என்றும் உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக் கால நீதிபதி வினா எழுப்பினார். அதற்கு பதிலளித்த தமிழக அரசின் வழக்கறிஞர், கடந்த ஆண்டு முதலே நிதி வரவில்லை என்றும், கடந்த மே மாதம் 20-ஆம் தேதி தான் வழக்குத் தொடர்ந்ததாகவும் பதிலளித்தார். அதனடிப்படையில் தான் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியவாறு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே தமிழக அரசின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தால் அடுத்த சில மாதங்களில் இந்த வழக்கில் தீர்ப்பு வந்திருக்கும். தமிழகத்திற்கான நிதியும் கிடைத்திருக்கும். ஆனால், மக்கள் நலனை விட, அரசியல் லாபம் தேடுவதில் தான் திமுக அரசு தீவிரம் காட்டியது. அதனால் தான் 43 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, ஒரு லட்சம் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்குவதையும் தமிழக அரசு தடுத்து விட்டது. இப்படியாக தமிழக அரசின் செயல்களால் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
மாநிலங்களின் உரிமைகளை மீட்பது தான் தங்களின் லட்சியம் என்று கூறித் தான் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், மாநில உரிமைகளைக் காப்பதற்காக எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கவில்லை. சுமார் ஓராண்டு காலம் உறங்கிக் கொண்டிருந்து, மிகவும் தாமதமாக உச்சநீதிமன்றத்தை அணுகியதன் மூலம் நிதியைப் பெறுவதில் தோல்வியடைந்து விட்டது.
தமிழக அரசு உடனடியாக மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகி, வழக்கை விரைவாக விசாரித்து தமிழகத்திற்கு நிதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் ஏழைக் குழந்தைகளைச் சேர்க்கவும், அவர்களுக்கு கல்வி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆளுநரின் செயல்கள் சட்டவிரோதம் என்று கண்டித்தனர்.
- அதை எதிர்த்து மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்
மசோதாக்கள், துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னருக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையில் கடந்த 8 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆளுநரின் செயல்கள் சட்டவிரோதம் என்று கண்டித்ததுடன் நிலுவையில் இருந்த தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கும் சிறப்பு அதிகாரத்தின்மூலம் தாங்களே ஒப்புதல் வழங்குவதாக தெரிவித்தனர். மேலும் அரசு அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடுவும் நிர்ணயித்தனர். இந்த தீர்ப்பு தொடர்பான முழு விவரமும் இன்று வெளியாகியது.
இந்நிலையில் இன்று வெளியான தீர்ப்பு விவரத்தில், "ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.
ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்காதபட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்" என்றும் தெரிவித்துள்ளது.
இந்திய வரலாற்றில் நாட்டின் ஜனாதிபதியின் செயல்பாடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் கட்டளையிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- அரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே ஆலோசனை செய்து அதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்தது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாய்ந்து விழுந்த மரங்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டன.
சென்னை:
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேத்தில் காற்று பலமாக வீசியது.
இதனால் பெரும்பலான இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. சாலைகளில் சாய்ந்த மரங்களை மாநகராட்சி பணியாளர்கள் இரவோடு இரவாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கனமழையின் காரணமாக மின்வெட்டு இருந்த போதும் அவை உடனடியாக சரிசெய்யப்பட்டன.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முன்கூட்டியே பேரிடர் அமைப்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழக அரசு இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே ஆலோசனை செய்து அதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்து.
இந்நிலையில் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாய்ந்து விழுந்த மரங்கள் உடனுக்குடன் அகற்றப்படுகின்றன. மின் இணைப்பும் அதிகமாக துண்டிக்கப்படவில்லை. அதற்காக பாராட்டுகள்! தமிழக அரசு மேற்கொண்ட புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
- சென்னை, கோவை , மதுரை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களிலும் ரேண்டம் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:
கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களுக்கு சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 100% ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் சென்னை, கோவை , மதுரை, திருச்சி உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. என கூறினார்.
- காங்கிரஸ் அரசு பொறுப்புக்கு வந்தவுடன் மேகதாது அணை கட்டும் பணியை தொடங்கப் போவதாக கூறி இருக்கிறது.
- காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு சொட்டுநீர்கூட காவிரியில் வராது.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மீண்டும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த மாதம் பொறுப்பு ஏற்றது. கர்நாடக மாநில துணை முதல்வரான டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி வரிசையில் இருந்தபோது, மேகதாது அணை கட்ட வலியுறுத்தி பெங்களூருவில் இருந்து 10.01.2022-ல் நடை பயணம் தொடங்கி, 10 நாட்கள் பல ஊர்கள் வழியாகச் சென்று 19.01.2022 அன்று மேகதாதுவில் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்.
தற்போது மீண்டும் காங்கிரஸ் அரசு பொறுப்புக்கு வந்தவுடன், மேகதாது அணை கட்டும் பணியை தொடங்கப் போவதாக கூறி இருக்கிறது. நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், மேகதாது அணை கட்டும் பணியை தொடங்குவோம். எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டோம் என்று கூறி இருப்பது கண்டனத்துக்கு உரியது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு சொட்டுநீர்கூட காவிரியில் வராது. உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16, 2018-ல் அளித்தத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய 177.25 டி.எம்.சி. நீர், கானல் நீராகவே போய்விடும் ஆபத்துதான் விளையும்.
எனவே ஒன்றிய பா.ஜ.க. அரசு மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கவே கூடாது. தமிழ்நாட்டின் மரபு உரிமையை கர்நாடக மாநிலம் பறித்துக் கொள்வதை ஏற்கவே முடியாது.
எனவே, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை தமிழ்நாடு அரசு விரைவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சமூகநீதியில் அக்கறை கொண்ட எந்த முதலமைச்சரும் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்கமாட்டார்கள்.
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கே உண்டு.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அனைத்து அதிகாரங்களும், கட்டமைப்பும் தமிழக அரசுக்கே இருக்கும் நிலையில், தமிழக அரசே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் என்று அறிவிக்காமல், மத்திய அரசு இந்தக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பிரத மருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுவது தாம் விளையாட வேண்டிய பந்தை, பிரதமர் பக்கம் திருப்பி விடும் செயல் என்பதைத் தவிர வேறு எதுவும் அல்ல.
இது கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதற்கு ஒப்பானது. சமூகநீதியில் அக்கறை கொண்ட எந்த முதலமைச்சரும் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நான் மீண்டும், மீண்டும் கூறிக் கொள்வது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கே உண்டு, அதற்கு எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை என்பதைத் தான். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி தான் கர்நாடகம், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி உள்ளன. எனவே, இனியும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதாமல், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்தும் என்று அறிவித்து, செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் திட்டத்திற்கான விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்.
- தேவேந்திரர் இளைஞர் பேரவை தலைவர் பேட்டியளித்துள்ளார்.
பனைக்குளம்
ராமநாதபுரத்தில் தேவேந்திரர் இளைஞர் பேரவை நிறுவன தலைவர் அழகர்சாமி பாண்டியன் நிருபர்களிடம் கூறிய தாவது:-
டெல்டா மண்டலங்களை குறிவைத்து எடுக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன், இப்போது முகவை மாவட் டத்தை பாலைவனமாக்க முயல்கின்றனர்.
முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை, கமுதி உள்ளிட்ட தாலு காக்களில் 20 இடங்களில் 2ஆயிரம் முதல் 3ஆயிரம் மீட்டர் வரை சோதனை முறையில் ஆழ்துளை கிணறுகளை தோண்டுவதற்காக, தமிழக அரசின் சுற்றுச்சூழலிடம் ஓ.என்.ஜி.சி விண்ணப்பித்திருக்கிறது.
சமவெளி பகுதியில் மட்டுமில்லாமல் 143 சதுர கிலோமீட்டர் ஆழமற்ற கடல் பகுதியிலும் ஆழ் துளை கிணறுகளை தோண்டுவதற்கான உரிமத்தை ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உரிமக் கொள்கை (ஹெல்ப்) மூலமாக 3-வது சுற்று திறந்தவெளி ஏலத்தின் மூலம் பெற்று இருக்கிறது.
ஏற்கனவே முகவை மண்டலத்தில் நீடிக்கும் பெரும் வறட்சியால் குடிநீருக்கே பெரும் போராட் டத்தை நாம் நடத்தி வரும் நிலையில், 3 ஆயிரம் மீட்டர் ஆழத்திற்கு ஓ.என்.ஜி.சி ஆழ்துளை கிணறுகளை சோதனை முறையில் அமைக்குமானால், கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
மேலும் இம்மாவட்டத்தில் வாழும் மீனவ மக்களின் வாழ்வாதாரமும் கேள்வி குறியாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே அரியலூரில் 10 கிணறுகளை அமைக்கவும், கடலூரில் 5 கிணறுகளை அமைக்கவும், இதே ஓ.என்.ஜி.சி கொடுத்த விண்ணப்பத்தை நிரா கரித்தது போல், ராமநாதபு ரம் மாவட்டம் தொடர்பான விண்ணப்பத்தையும் தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தை பாலைவனம் ஆக்க முயலும் ஓ.என்.சி.சி நிறு வனத்தின் இத்திட்டத்தை எதிர்த்து அனைத்து விவசாயிகள் மீனவர்கள், பொதுமக்களை ஒன்று திரட்டி எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பக்தர்கள் எந்தவித சிரமமுமின்றி அருட்பெருஞ் ஜோதியை தரிசனம் செய்து பாதுகாப்பாக திரும்பிச் செல்கின்றனர்.
- ஜோதி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தைப்பூசத் திருநாளன்று உலகம் முழுவதிலுமிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வடலூருக்கு வருகை தந்து அருட்பெருஞ் ஜோதியை தரிசிக்க தன்னெழுச்சியாகக் கூடுவார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவதைக் கண்டு, வள்ளலாரின் பொதுமை நோக்கத்தின் மீது அளவு கடந்த பற்று கொண்ட வடலூர் பார்வதி புரம் பகுதி மக்கள் வள்ளலாருக்கு தானமாக கொடுத்த நிலம்தான் 100 ஏக்கர் வடலூர் பெரு வெளியாகும்.
இவ்வளவு பெரிய நிலம் இருப்பதால்தான் தைப்பூசத் தன்று வடலூரில் கூடும் பக்தர்கள் எந்தவித சிரமமுமின்றி அருட்பெருஞ் ஜோதியை தரிசனம் செய்து பாதுகாப்பாக திரும்பிச் செல்கின்றனர்.
தைப்பூசத் திருநாளில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் ஜோதி வழிபாட்டிற்காக கூடுகிறார்கள் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அடுத்த நாள் அதிகாலை, 6-வது 'ஜோதி வழிபாட்டின்' போதும் கூட்டம் நிறைந்து காணப்படும். அதற்கு அடுத்த நாள் வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் 'திரு அறைக் காட்சி நாள்' என்பதால், மேலும் பல லட்சம் பக்தர்கள் 'திரு அறை தரிசனம்' காண கூடுவார்கள்.
இப்படி வருடத்தில் 4 முக்கிய நாட்களும் கடலூர் மாவட்ட பக்தர்கள் மட்டு மல்லாது, பிற மாவட்டங்கள், வெளி மாநிலம், வெளிநாடு என்று சன்மார்க்க அன்பர்கள் லட்சக்கணக்கில் ஒன்று கூடும் இடமாக வடலூர் பெருவெளி உள்ளது. இப்படி, விழாக் காலங்களில் கூடும் பக்தர்கள் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இப்படி லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடும் வடலூர் பெருவெளியில், சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை கையகப்படுத்தி 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை' கட்டுவதற்கு தி.மு.க. அரசு முனைந்துள்ளதை அறிந்து இப்பகுதி மக்கள் தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்து வருகின்றனர். 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை' அரசு கட்டுவதில் தங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆனால் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடும் வடலூர் பெரு வெளியில் இம்மையத்தை கட்டுவதால், ஜோதி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளார்கள்.
இப்படி, இப்பெருவெளி நிலத்தை கையகப்படுத்தினால் 'மாத பூச வழிபாடும், தைப்பூச சிறப்பு வழிபாடும்' தடைபடும். தைப்பூசத் திரு நாளன்று பக்தர்கள் எந்த வித சிரமுமின்றி அருட்பெரும் ஜோதியை தரிசிக்க அப்பகுதி கிராம மக்கள் மனமுவந்து அளித்த நிலத்தை தி.மு.க. அரசு வேறொரு பணிக்காக கையகப்படுத்த நினைப்பது, நிலத்தை தானம் செய்த மக்கள் மட்டுமின்றி லட்சக்கணக்கான பக்தர்களின் மனதையும் வேதனைப்படுத்தி உள்ளது.
தி.மு.க. அரசு வடலூர் பெருவெளியில் 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம்' கட்டுவதை விடுத்து, வேறொரு இடத்தைத் தேர்வு செய்து இம்மையத்தைக் கட்ட இந்த அரசுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தும், அவர்களது வேண்டுகோளை தி.மு.க. அரசு புறக்கணித்து, வடலூர் பெருவெளியிலேயே சர்வதேச மையம் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரி உள்ளதாகத் தெரிகிறது.
'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று கூறிய வள்ளலார், தைப்பூசத் திரு நாளில் அருட்பெருஞ் ஜோதியைக் காண வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி காத்திருப்பதற்கு பொது வெளியை ஏற்படுத்தினார். அந்த பொதுவெளியை, பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிராக 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம்' கட்டும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை' வடலூரிலேயே வேறொரு இடத்தில் கட்டுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொருளாதாரம் இல்லாமல் தவிக்கும் சாதாரண மக்கள் தான் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள்.
- பொது மக்கள் மீது கூடுதல் சுமையைத் திணிக்கும் வகையில் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீடு அமையக்கூடாது.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு, சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் முறையாக மதிப்பிட வேண்டும். அதாவது அரசு, சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் சுமார் 33 சதவீதம் உயர்த்தியது நியாயமில்லை. குறிப்பாக மாநிலத்தில் சொத்துக்களை வழிகாட்டி மதிப்பீடு செய்யும் முறை அரசுக்கு உண்டு. இருப்பினும் பொது மக்களின் சிரமத்தை அறிந்து, ஆலோசனையைக் கேட்டு மதிப்பீடு செய்திருக்க வேண்டும்.
ஆனால் அரசு, பொது மக்களின் கருத்தைக் கேட்காமல் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி நடைமுறைப்படுத்துவதால் சிறிய அளவிலான சொத்து (வீடு, மனை, நிலம்) வாங்க முன்வரும், போதுமான பொருளாதாரம் இல்லாமல் தவிக்கும் சாதாரண மக்கள் தான் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள்.
ஐகோர்ட்டு உத்தரவை அரசு கவனத்தில் கொள்ளாமல் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் சுமார் 33 சதவீதம் கூடுதல் கட்டணத்தை வசூல் செய்வது உயர்நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல். எனவே தமிழக அரசு, பொது மக்கள் மீது கூடுதல் சுமையைத் திணிக்கும் வகையில் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீடு அமையக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீடு செய்ய முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழக அரசின் நடவடிக்கையால் புதுச்சேரிக்கு குறைவான பன்னீர் கரும்புகளே வந்துள்ளது.
- பொங்கல் பண்டிகையில் முக்கியமாக படையலில் வைக்கப்படும் கரும்பு புதுச்சேரியில் விளைவிப்பதில்லை.
புதுச்சேரி:
பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (திங்கட் கிழமை) கொண்டாடப்படுகிறது.
விழாவில் புதுபானையில் பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம். இதில் பன்னீர் கரும்பு, மஞ்சள் முக்கிய பொருளாக இடம் பெறும். இதுதவிர சர்க்கரைவள்ளி கிழங்கு, பிடிகரணை, நாட்டு பூசணிக்காய் பொங்கல் படையலில் வைக்கப்படும்.
பொங்கல் பண்டிகையில் முக்கியமாக படையலில் வைக்கப்படும் கரும்பு புதுச்சேரியில் விளைவிப்பதில்லை. புதுவையையொட்டியுள்ள தமிழக பகுதியான கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, பண்ருட்டி, பாலுார், கண்டரகோட்டை, குறிஞ்சிப்பாடி. நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விளைவிக்கப்படும் பன்னீர் கரும்பை வரவழைத்து வியாபாரிகள் விற்பனை செய்வார்கள்.
தற்போது பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 1000 மற்றும் பன்னீர் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது.
இதற்காக தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து பன்னீர் கரும்புகளை நேரடியாக கொள்முதல் செய்கிறது விவசாயிகளிடம் கரும்பின் ஒரு உயரத்தை பொருத்து ரூ.36 வரை விலை நிர்ணயித்து பெறப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள் தமிழக அரசு அதிகரிகளிடம் பன்னீர் கரும்புகளை விற்பனை செய்துள்ளனர்.
தமிழக அரசின் நடவடிக்கையால் புதுச்சேரிக்கு குறைவான பன்னீர் கரும்புகளே வந்துள்ளது. இவை உழவர் சந்தை உள்ளிட்ட சில இடங்களில் விற்பனை செய்யப்பட்டது. அங்கு, ஒரு ஜோடி கரும்பு ரூ.150 முதல் 200-க்கு விற்பனையானது.
பூக்கள் விலையும் அதிகரித்து இருந்தது. சாமந்தி கிலோ ரூ.140 முதல் ரூ.200 வரையிலும், ரோஜா ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. காட்டுமல்லி (காக்கட்டான்) கிலோ ரூ. 700, அலரி பூ கிலோ ரூ. 200-க்கும், அரும்பு கிலோ ரூ. 2000-க்கும், குண்டுமல்லி கிலோ ரூ.2500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதுபோல் மஞ்சள் கொத்தும் விலை அதிகரித்தது. மஞ்சள் கொத்து ஒன்று ரூ.20 முதல் ரூ.40 சர்க்கரை வள்ளி கிழங்கு கிலோ ரூ.50, நாட்டு பூசணிக்காய் கிலோ ரூ.30-க்கு, தேங்காய் ரூ. 15 முதல் ரூ.20-க்கும், முழு வாழை இலை ஒன்று ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கரும்புவரத்து குறைவால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றும் நாளையும் கூடுதலாக பன்னீர் கரும்புலோடு வரும்போது, விலை குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.






