என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TAPS"

    • ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் பெயரை மாற்றிவிட்டு, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்று அறிவித்துள்ளது.
    • ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஓய்வூதியம் அவ்வப்போது உயர்த்தி மறுநிர்ணயம் செய்யப்படும் பரிந்துரை இல்லை.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பழைய ஓய்வூதியத் திட்டம், மீண்டும் கொண்டுவரப்படும் என 2021-ல் தேர்தல் வாக்குறுதியாக அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க, கடந்த நான்கரை ஆண்டுகாலமாக எதுவும் செய்யாமல், அரசு ஊழியர்களின் தொடர் போராட்டங்களை சமாளிப்பதற்கு, ஆட்சி முடியப்போகும் நேரத்தில் 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' (TAPS) என்ற ஒரு ஏமாற்று மாடல் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளது இந்த விடியா திமுக அரசு.

    `ஒன்றிய அரசு, குன்றிய அரசு' என்று எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறைகூறும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 'ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்' (Unified Pension Scheme) பெயரை மாற்றிவிட்டு, தற்போது தமிழ் நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்று அறிவித்துள்ளது.

    விடியா திமுக ஸ்டாலின் அரசு கடந்த நான்கரை ஆண்டுகளாக, அடுத்தவர்களின் திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி பெருமைகொள்வதை அனைவரும் நன்கு அறிவார்கள்.

    அதைப் போலவே, மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு அரசு ஊழியர்களின் பங்களிப்புடன் கூடிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என புதிய பெயருடன் ஸ்டிக்கர் ஒட்டி அரங்கேற்றியுள்ளது வேடிக்கையாகவும், விந்தையாகவும் உள்ளது.

    பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தபின் அரசு ஊழியர்களை இதுவரை ஏமாற்றி வந்த நிலையில், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கும், அரசு ஊழியர்களின் போராட்டங்களை தற்காலிகமாக சமாளிப்பதற்கும், பங்களிப்புடன் கூடிய மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாக அறிவித்து மீண்டும் அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளார் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின்.

    இச்செயல் `புதிய மொந்தையில் பழைய கள்' என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஏதுமில்லை. ஓய்வு பெறும்போது கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம், விலைவாசிப் புள்ளி உயர்வின் அடிப்படையில் அகவிலைப் படியும் கிடைக்கும்; ஊதியக் குழு பரிந்துரையின்படி ஓய்வூதிய அடிப்படைத் தொகையும் மாற்றியமைக்கப்படும்.

    ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களிடமிருந்து மாதம்தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுவது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (Unified Pension Scheme) அப்பட்டமான நகல் ஆகும்.

    மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்த அம்சமான ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஓய்வூதியம் அவ்வப்போது உயர்த்தி மறுநிர்ணயம் செய்யப்படும் என்ற பரிந்துரையும், ஸ்டாலின் இப்போது அறிவித்துள்ள, தமிழ் நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இல்லை.

    எனவே, எதிர்பார்த்தபடி பெரிய மாற்றம் ஏதுமில்லை என்பதை பல அரசு ஊழியர்கள் உணர்ந்திருந்தாலும், இனிப்பு என்ற பெயரில் பொய்யை மூடி மறைத்த சங்க நிர்வாகிகள், புதிய திட்டத்தை ஏற்றுக்கொண்டு புன்னகைப்பது வேடிக்கையாக உள்ளது.

    உண்மையை அரசு ஊழியர்கள் ஒருநாள் உணர்வார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டதையும், அதற்கு சங்க நிர்வாகிகள் துணை போயுள்ளனர் என்பதையும் புரிந்துகொள்வார்கள். அதற்கு வரும் தேர்தலில் திமுக-வை தோற்கடித்து தக்க பரிசைத் தருவார்கள்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

    • கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக அளிக்கப்படும்.
    • 50 சதவீதத்தில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்த வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் (உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்) மீண்டும் அமல்படுத்தப்படும் என கடந்த 3-ந்தேதி அறிவித்தார்.

    இந்த நிலையில் ஜனவரி 1-ந்தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் திட்டத்தின்படி, கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக அளிக்கப்படும். 50 சதவீதத்தில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும். அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வும் அளிக்கப்படும். ஓய்வூதியதாரர் இறந்தால் அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

    50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு தரப்படும். பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெற்றாலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் அளிக்கப்படும். ஓய்வு பெறும்போதும் பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும்.

    • ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவிகிதத் தொகையினை ரத்து செய்திட வேண்டும்
    • திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும்

    தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என அ.ம.மு.க தலைவர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;

    "ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவிகிதத் தொகையினை ரத்து செய்திட வேண்டும், பணி ஓய்வின் போது 15 ஆண்டுகளுக்கான ஓய்வூதியத்தினை தொகுத்து வழங்க வேண்டும், பொது வருங்கால வைப்பு நிதித் தொகையின் அசலை வட்டியுடன் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    தமிழ்நாடு அரசால் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை, பழைய ஓய்வூதியத் திட்டத்துடன் ஒப்பிடும் சவலைக் குழந்தையாக இருப்பதாக விமர்சித்திருக்கும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் தங்களின் பெரும்பாலான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

    அதோடு, புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்பட்ட நாளில் தொடங்கி தற்போது வரை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு பேராசிரியடமிருந்தும் பிடித்தம் செய்துள்ள சுமார் 1 கோடி ரூபாய் அளவிலான தொகையை திருப்பித் தரவில்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    எனவே, பல்வேறு குறைபாடுகள் மற்றும் எதிர்ப்புகளிடையே தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் (State Own Tax Revenue) சுமார் 21-22% ஓய்வூதியத்திற்குச் செலவாகும்
    • நிதி மேலாண்மை செம்மையாக இருந்தால் ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமே.

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (OPS) இணையான பலன்களை வழங்கக்கூடிய "தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்" (Tamil Nadu Assured Pension Scheme - TAPS) என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதன்படி அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அவர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தின் அடிப்படையில், 50% ஓய்வூதியமாக வழங்கப்படும். ஊழியர்கள் தங்களின் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதத்தைப் பங்களிப்பாக வழங்குவார்கள். மீதமுள்ள கூடுதல் நிதித் தேவையை முழுமையாகத் தமிழக அரசே ஏற்கும்.

    ஓய்வூதியதாரர் காலமானால், அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60% தொகை அவரது குடும்பத்தினருக்கு (வாரிசுதாரர்களுக்கு) குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும் போன்றவை அடங்கும். இந்த வாக்குறுதி நடைமுறையில் சாத்தியமற்றது என்றும், தமிழ்நாடு அரசுக்கு பெரும் நிதிச்சுமையை அளிக்கும் என பலதரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த அறிவிப்பு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், 

    "தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (TAPS) முழு விவரங்கள் வெளிவந்துள்ளன. இந்தத் திட்டம் அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்பது தெளிவு; ஆனால் நிதி மேலாண்மை செம்மையாக இருந்தால் ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமே.

    தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் (State Own Tax Revenue) சுமார் 21-22% ஓய்வூதியத்திற்குச் செலவாகும் என்பது கணிப்பு. சொந்த வரி வருவாயைப் பெருக்குவதில் அரசு மேலும் கவனம் செலுத்த வேண்டும். திட்டச் செலவுகளில் மதிப்பீட்டை மிகாமல் பணிகளை முடிக்க வேண்டும். சிக்கனம் முக்கியம். செம்மையான நிதி மேலாண்மையை அரசின் தாரக மந்திரமாக அரசின் எல்லாத் துறைகளும் கடைப்பிடிக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    ×