என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழ்நாடு அரசின் செம்மொழி இலக்கிய விருதில் உருது  மொழியை சேர்க்கவேண்டும் -  எம்.எச். ஜவாஹிருல்லா
    X

    தமிழ்நாடு அரசின் செம்மொழி இலக்கிய விருதில் உருது மொழியை சேர்க்கவேண்டும் - எம்.எச். ஜவாஹிருல்லா

    • உருது மொழி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உள்ள 22 மொழிகளில் ஒன்றாகும்.
    • உருது மொழியை முஸ்லிம்களின் மொழியாகச் சிலர் திட்டமிட்டு பரப்புரை செய்து வருகின்றனர்.

    தமிழ்மொழி மட்டுமின்றி பிற இந்திய மொழிகளின் இலக்கியப் பங்களிப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில் "செம்மொழி இலக்கிய விருது" என்ற புதிய தேசிய விருதை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை அறிவித்தார். சாகித்ய அகாடமி விருதுகளில் அரசியல் தலையீடு இருப்பதை விமர்சித்து, இந்த மாற்று ஏற்பாடு குறித்து அவர் அறிவித்தார்.

    இதன் கீழ், முதற்கட்டமாக தமிழ் உட்பட 7 மொழிகளின் (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராத்தி) சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் விருது வழங்கப்படும். வெளிப்படைத்தன்மையுடன் விருதுகளைத் தேர்வு செய்ய, ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாகச் சிறந்த எழுத்தாளர்களைக் கொண்ட தன்னாட்சி பெற்ற தேர்வுக் குழுக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பில் ஹிந்தி, உருது மொழி இடம்பெறவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் செம்மொழி இலக்கிய விருது பட்டியலில் உருது மொழியை இணைக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவிமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராட்டியம் ஆகிய மொழிகளில் வெளியாகிற தலைசிறந்த படைப்புகளுக்குச் செம்மொழி இலக்கிய விருது ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.

    இந்தப் பட்டியலில் உருது மொழியையும் சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.

    உருது மொழி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் ஒன்றாகும்.

    உருது மொழியை முஸ்லிம்களின் மொழியாகச் சிலர் திட்டமிட்டு பரப்புரை செய்து வருகின்றனர். ஆனால் இது உண்மை அல்ல. உருது மொழியின் பல பிரபல முஸ்லிமல்லாத எழுத்தாளர்களும் கவிஞர்களும் உள்ளனர். எடுத்துக்காட்டாக பிரேம்சந்த் உடைய கதைகள் உலக அளவில் பாராட்டப்பட்டது பிராக் கவுரக்பூரி உடைய கஸல்களும் மிகவும் பிரபலமானதாக உள்ளது

    இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி வரும் வரை சுமார் 800 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த முகலாயர்களின் ஆட்சி மொழி. பாரசீக மொழி அதனோடு அரபு மொழி கலந்து அதுவே காலப்போக்கில் உருது மொழியாக உருவெடுத்தது.

    ஹிந்தி மொழிக்கும் உருது மொழிக்கும் உள்ள வித்தியாசம், ஹிந்தி மொழி பாரசீக மொழியோடு சமஸ்கிருதத்தை கலந்ததாக இருக்கிறது, உருதுமொழி பாரசீக மொழியோடு அரபி மொழி கலந்ததாக இருக்கிறது.

    உருது மொழி பாரசீக மற்றும் அரபி இலக்கணம் மற்றும் எழுத்து வடிவங்களைக் கொண்டது, ஹிந்தி தேவநாகரி எழுத்து வடிவத்தை இலக்கணத்தைக் கொண்டது.

    இந்தியா முழுவதும் உள்ள மக்களால் பேசப்படும் மொழிகளில் உருது மொழி ஐந்தாவது பெரிய மொழியாக இருக்கிறது. இந்தியா முழுவதும் சுமார் 20 கோடி மக்கள் உருது மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு இருக்கிறார்கள்.

    ஹிந்தி திரைப்படங்களில் உள்ள வசனங்கள் மட்டுமே ஹிந்தி மொழியில் இருக்கிறது, பாடல்கள் அனைத்தும் உருது மொழியிலேயே அமைக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் அன்று முதல் இன்று வரை இந்துஸ்தானி இசை, கஜல் இசை, கவாலி இசை போன்ற இசைகள் உருது மொழியினால் தான் உருவாகியிருக்கிறது.

    இந்திய ரூபாய் நோட்டுகளில் உருது மொழி இடம் பெற்று இருப்பதும் டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் அரசின் அதிகாரப் பூர்வமான மொழியாகவே உருது மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    எனவே உருது மொழியின் தனிச் சிறப்புத் தொன்மை மற்றும் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொண்டு செம்மொழி இலக்கிய விருது பட்டியலில் உருது மொழியையும் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×