என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் பின்தங்கிய தமிழகம்.. முதலிடத்தை தட்டிச்சென்ற உத்தரப் பிரதேசம்
- 2012 முதல் 2018-ம் ஆண்டு வரை உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதல் இடத்தில் இருந்துள்ளது.
- தென்னிந்திய மாநிலங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதலிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
மத்திய அரசு 2024-25-ம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகள் வருகையை உள்நாடு மற்றும் வெளிநாடு என்ற 2 வகைகளில் மாநிலம் வாரியாக வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா முழுவதும் 294.82 கோடி உள்நாட்டு பயணிகளும், 2 கோடியே 9 லட்சத்து 42 ஆயிரம் வெளிநாட்டு பயணிகளும் சுற்றுலா மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 64.68 கோடி சுற்றுலாப் பயணிகள் உத்தரபிரதேசத்திற்கு சென்றுள்ளனர். இது இந்திய அளவில் 21.9 சதவீதம் ஆகும். இதன் மூலம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் உத்தரபிரதேசம் முதல் இடத்தை பெற்றுள்ளது.
அடுத்தபடியாக தமிழகம் 30.68 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் 2-ம் இடத்தை பெற்றுள்ளது. இது தேசிய அளவில் 10.4 சதவீதமாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் என ஆன்மிக தலங்கள் மற்றும் ஊட்டி, கொடைக்கானல் என மலைவாழ் தலங்கள், மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் காரணமாக அதிக அளவில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து 2012 முதல் 2018-ம் ஆண்டு வரை உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதல் இடத்தில் இருந்துள்ளது.
ஆனால், 2019-ம் ஆண்டு வாரணாசியில் அமைந்துள்ள காசி விசுவநாதர் கோவில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு 2021 டிசம்பர் 13-ந் தேதி காசி விசுவநாதர் கோவில் காரிடார் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2020-ல் அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 2024 ஜனவரி 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக உத்தரபிரதேசத்திற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் உத்தரபிரதேசம் முதல் இடத்தை பெற்றுள்ளது. அதனால், தமிழகம் 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் 30.45 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை (தேசிய அளவில் 10.3 சதவீதம்) கவர்ந்து 3-வது இடத்தை பெற்றுள்ளது. 4-வது இடத்தில் 29.02 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் (தேசிய அளவில் 9.8 சதவீதம்) ஆந்திரபிரதேசமும், 5-வது இடத்தில் 23 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் (தேசிய அளவில் 7.8 சதவீதம்) ராஜஸ்தானும் இடம் பெற்றுள்ளன.
இதேபோன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 37.1 லட்சம் எண்ணிக்கையுடன் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தை பெற்றுள்ளது. 2-வது மாநிலமாக 31.2 லட்சம் பயணிகளுடன் மேற்கு வங்கமும், 3-வது மாநிலமாக 22.7 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் உத்தரபிரதேசமும் இடம் பெற்றுள்ளன.
அதே போன்று 22.7 லட்சம் பயணிகளுடன் குஜராத் மாநிலம் 4-வது இடத்தை பெற்றுள்ளது. 11.6 லட்சம் பயணிகளுடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பட்டியலில் தமிழகம் 5-வது இடத்தை பெற்றுள்ளது. இருந்த போதிலும் தென்னிந்திய மாநிலங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதலிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.






