என் மலர்
நீங்கள் தேடியது "declining birth rate"
- உலகின் மக்கள்தொகை அதிகம் இருந்த நாடான சீனாவை, இந்தியா பின்னுக்கு தள்ளிவிட்டது.
- 2024-ம் ஆண்டில் 8 லட்சத்து 47 ஆயிரத்து 715 குழந்தைகள் மட்டுமே பிறந்து இருக்கின்றன.
சென்னை:
இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 121 கோடியே 8 லட்சத்து 54 ஆயிரத்து 977 பேர் இருந்தனர். ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 146 கோடியாக உயர்ந்து இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது ஆண்டுக்கு 1.5 சதவீதம் என்ற அடிப்படையில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் இருக்கிறது.
உலகின் மக்கள்தொகை அதிகம் இருந்த நாடான சீனாவை, இந்தியா பின்னுக்கு தள்ளிவிட்டது. நாட்டில் இறப்பு விகிதங்கள் ஒருபுறம் இருந்தாலும், அதனை விட பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதே மக்கள்தொகை உயர்வுக்கான முக்கிய காரணமாக உள்ளது.
ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இங்கு பிறப்பு விகிதம் ஆண்டுக்கு, ஆண்டு கடும் சரிவை சந்தித்து வருகிறது.
பிறப்பு விகிதங்கள், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
அதன்படி தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு 9 லட்சத்து 45 ஆயிரத்து 842 குழந்தைகள் பிறந்து இருக்கிறார்கள். அதாவது தினமும் சராசரியாக 2 ஆயிரத்து 591 குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டு, நேற்று வரை பதிவு செய்யப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 7 லட்சத்து 41 ஆயிரத்து 928 ஆக இருக்கிறது. அதன்படி சராசரியாக ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 138 குழந்தைகள்தான் பிறந்துள்ளனர்.
இன்னும் டிசம்பர் மாதம் முடிய 18 நாட்கள் மட்டுமே இருப்பதால் தமிழகத்தில் இந்த ஆண்டு 7 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறக்க வாய்ப்பு இருக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்தாலும் 8 லட்சத்தை தாண்டுவது சற்று சிரமம்தான் என்று தெரிகிறது.
இந்த எண்ணிக்கையை கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதாவது 6 ஆண்டுகளில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை 18 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 1.3 முதல் 1.5 சதவீதம் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வந்தாலும் தமிழகத்தில் மட்டும் கடந்த 6 ஆண்டு களில் சராசரியாக ஆண்டுக்கு 3.1 சதவீதம் அளவுக்கு பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது.
கடந்த 2020-ம் ஆண்டு தமிழகத்தில் 9 லட்சத்து 39 ஆயிரத்து 788 குழந்தைகள் பிறந்திருக்கின்றனர். 2021-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 9 லட்சத்து 12 ஆயிரத்து 875 ஆக குறைந்தது. தொடர்ந்து 2022-ம் ஆண்டில் 9 லட்சத்து 36 ஆயிரத்து 361 குழந்தைகளும், 2023-ம் ஆண்டில் 9 லட்சத்து 2 ஆயிரத்து 329 குழந்தைகளும் பிறந்து இருக்கிறார்கள்.
ஆனால் மிக குறைவாக தொடர்ந்து 2024-ம் ஆண்டில் 8 லட்சத்து 47 ஆயிரத்து 715 குழந்தைகள் மட்டுமே பிறந்து இருக்கின்றன. கடந்த 2024-ம் ஆண்டுடன், இந்தாண்டு இதுவரை பிறந்த குழந்தைகள் எண்ணிக்கையை ஒப்பிட்டால் சுமார் 67 ஆயிரத்து 715 குழந்தைகள் குறைவாக பிறந்து இருக்கிறது. இது 8 சதவீதம் சரிவு ஆகும்.
ரிசர்வ் வங்கியும், தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வருவதை தனது ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவலாக சுட்டிக்காட்டி உள்ளது.
அந்த அறிக்கையில் 'கடந்த 2004-ம் ஆண்டு தமிழகத்தில் 1,000 மக்களுக்கு 17 குழந்தைகள் என்ற பிறப்பு விகிதம் பதிவாகி இருந்தது. ஆனால் கடந்த 2024-ம் ஆண்டில் இது 12 என்று கடும் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது.
தமிழகத்தில் இந்த போக்கு தொடர்ந்தால், எதிர்காலத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை மிக கணிசமாக குறைந்து தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு மாநிலத்தின் வளர்ச்சி தடைபடும். அதேபோல மக்கள்தொகையின் அடிப்படையில்தான் மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதால், தமிழகத்திற்கான பங்கீட்டு தொகை குறையும். ஆனால் அதே நேரத்தில், சரியான கொள்கை திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டால், குறைந்த மக்கள்தொகையுடன் உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை உருவாக்கும் வாய்ப்பாக இது இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதேசமயம் முதியோர் விகிதம் அதிகரித்தால் சமூக பாதுகாப்பு செலவுகள் உயர்வு, முதியோர் நலத்திட்டங்களுக்கு கூடுதல் அழுத்தம் போன்ற சவால்களை தமிழக அரசு எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும்.
- ஜப்பானுக்கு அடுத்த நிலையில் இத்தாலியும், பின்லாந்தும் உள்ளன
- குழந்தை பெற்று கொள்ள ஜப்பானிய தம்பதியினர் தயங்குகின்றனர்
கிழக்காசியாவில் உள்ள தீவு நாடு ஜப்பான். அந்நாடு ஒரு புதுவிதமான சிக்கலை எதிர்கொண்டு வருகிறது.
ஜப்பானின் தேசிய தகவல் தரவின்படி அந்நாட்டு மக்கள் தொகையில் 29.1 சதவீதம் பேர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக உள்ளனர். இந்நிலை இப்படியே நீடித்தால், 2040 வருட காலகட்டங்களில் இது 34.8 சதவீதம் எனும் நிலையை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
24.5 சதவீதத்துடன் இத்தாலியும், 23.5 சதவீதத்துடன் பின்லாந்தும் அடுத்தடுத்த நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்முறையாக அந்நாட்டில், 10 பேரில் ஒருவர் 80 வயது நிரம்பியவராக இருப்பது தெரியவந்துள்ளது.
உலகிலேயே பிறப்பு விகிதம் குறைவான நாடுகளில் ஜப்பானும் ஒன்று. நாட்டில் பணியில் உள்ள குடிமக்களில் 65 வயதை கடந்தவர்கள் 13 சதவீதத்திற்கும் மேலே இருப்பதால் பொருளாதாரத்திலும், அதிகரிக்கும் நாட்டின் சமூக பாதுகாப்பிற்கான செலவினங்களிலும் இதன் தாக்கம் கடுமையாக உள்ளது.
1970 காலகட்டங்களில் 20 லட்சமாக இருந்த குழந்தை பிறப்பு அந்நாட்டில் கடந்த வருட தரவுகளின்படி 8 லட்சத்திற்கும் குறைவான நிலையை எட்டியுள்ளது.
ஜப்பானிய நிறுவன பணியிடங்களில் ஊழியர்களுக்கான வேலை பார்க்கும் நேரம் மிக அதிகம். மேலும், அந்நாட்டில் வாழ்வதற்கான செலவினங்கள் மிக அதிகம். இக்காரணங்களால் தம்பதிகள் குழந்தை பெற்று கொள்வதை அரசாங்கம் ஊக்குவித்தாலும், மக்கள் தயங்குகிறார்கள்.
ஒரு கட்டமைப்புள்ள சமூகமாக இயங்கும் ஆற்றலை ஜப்பான் இழந்து வருவதாக அந்நாட்டின் பிரதமர் ஃப்யுமியோ கிஷிடா கடந்த ஜனவரியில் தெரிவித்தார். இச்சிக்கலை விரைவாக சரி செய்யும் நடவடிக்கைகளை அந்நாடு எடுக்க வேண்டும் என மனிதவள மேலாண்மை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில், 2021 ஆண்டு வெளியிடப்பட்ட தரவுகளின்படி வயதானவர்களின் ஜனத்தொகை 10.1 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.






