என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thangam thenarasu"

    • மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஓஎன்ஜிசி-க்கு சுற்றுச்சூழல் அனுமதியினை நேரடியாக வழங்கியுள்ளது.
    • ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியினை உடனே திரும்ப பெறுமாறு தமிழக அரசு வலியுறுத்தல்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசு, கடந்த 20.02.2020 அன்று தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல (Protected Agricultural Zone – PAZ) சட்டம், 2020-ஐ இயற்றியதன் மூலம் காவிரி டெல்டா பகுதியினை , பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்தது.

    இச்சட்டத்தின் அடிப்படையில், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகள் ஆகிய டெல்டா பகுதிகளில் புதிதாக எரிபொருள், இயற்கை வாயு, நிலக்கரி மீத்தேன் மற்றும் ஷேல் வாயு போன்றவற்றின் இருப்பு குறித்த ஆராய்ச்சி, மற்றம் அகழ்வுத் தொழில்கள் ஆகியவை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. மேலும், கடந்த 2023-ம் ஆண்டு இத்தடை மயிலாடுதுறை மாவட்டத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

    இதற்கிடையில், ஓஎன்ஜிசி (Oil and Natural Gas Corporation Ltd.) நிறுவனமானது, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இருப்பு குறித்து ஆய்வு செய்ய விண்ணப்பித்திருந்ததை தொடர்ந்து, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (State Environment Impact Assessment Authority – SEIAA) ஓஎன்ஜிசி-க்கு சுற்றுச்சூழல் அனுமதியினை நேரடியாக வழங்கியுள்ள செய்தி தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

    இதனை அடுத்து ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியினை உடனே திரும்ப பெறுமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைத்திற்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

    விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தமிழ்நாட்டின் எந்த ஒரு பகுதியிலும், ஹைட்ரோ கார்பன் தொடர்பான எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திடமான கொள்கை முடிவாகும்.

    எனவே, தற்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் நம் மாநிலத்தின் எந்த ஒரு பகுதியிலும் இத்திட்டங்களைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என திட்ட வட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • 2024-25ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 11.19% ஆகும்.
    • தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டி இருக்கிறது.

    முன்பு 9.69% என்று மதிப்பிடப்பட்ட 2024-25ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மாநில பொருளாதார வளர்ச்சி விகிதத்தை இன்று 11.19% என்று திருத்தி மத்திய அரசின் புள்ளிவிவரத்துறை மதிப்பிட்டுள்ளது.

    இது வேறு எந்த பெரிய மாநிலமும் பெற்றிராத அபரிமிதமான பெரும் வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரண்டு இலக்க வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு – சீரான கொள்கைநெறி வழியில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளில் ஒன்று, மணிமகுடத்தில் மற்றொரு பொறித்த வைரக்கல்லாகத் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டி இருக்கிறது.

    ஏற்கனவே நாம் சொல்லிருக்கக்கூடிய 9.69% என்கிற அந்த GSDP உடைய இலக்கையும் தாண்டி, இன்றைக்கு 11.8% பொருளாதார குறியீடுகள் உயர்ந்து இருக்கின்றன. ஏறத்தாழ 12% நெருங்கி வரக்கூடிய வாய்ப்பை பெற்று இருக்கிறோம்.

    நம்முடைய சாதனையை நாம்தான் முறியடிக்க முடியும் என்கிற வகையில் 9.69% என்ற ஒற்றை இலக்கத்தில் இருந்த பொருளாதார வளர்ச்சி சதவீதத்தை இன்றைக்கு இரட்டை இலக்கத்திற்கு கொண்டு வந்திருக்கிற மகத்தான சாதனையை மாண்புமிகு முதலமைச்சருடைய ஆட்சி உருவாக்கியிருக்கிறது.

    இந்த இரட்டை இலக்கத்திலே பொருளாதார ஆட்சியை உருவாக்குவது, Real terms-ல் வளர்ச்சி பெறுவது என்பது கலைஞர் அவர்கள் ஆட்சி பொறுப்பிலே இருந்தபோது 13% வளர்ச்சியை நாம் பெற்று இருந்தோம். அதன்பின் 14 வருடத்திற்கு பிறகு இன்றைக்கு மாண்புமிகு முதலமைச்சரின் ஆட்சியில்தான் இரட்டை இலக்க வளர்ச்சியைத் தமிழ்நாடு பெற்று இருக்கிறது.

    இந்திய அளவில் பல மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடுதான் இந்த இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்று இருக்கிறது என்பது குறிப்பிட்டத்தக்கது. எனவே இந்த வளர்ச்சி என்பது 2030ஆம் ஆண்டு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம் என்பதற்கு திடமான வழியை வகுத்து தந்துள்ளது.

    முதலமைச்சரின் சீரிய முயற்சிகளிலான தொழில் முதலீடுகள், தொழில் முதலீடுகள் மூலம் கிடைத்த வேலை வாய்ப்புகள் என அனைத்தின் காரணமாக இந்தப் பொருளாதார வளர்ச்சி அமைந்திருகிறது. பொருளாதார வளர்ச்சிக்கான முழு சூழ்நிலைகளையும் நாம் உருவாக்கி இருக்கிறோம். நாம் முதலீடுகளுக்கான முதல் முகவரி தமிழ்நாடு என்கிற அளவில் மாண்புமிகு முதலமைச்சர் முயற்சியின் காரணமாக ஈர்க்கப்பட்டு இருக்கக்கூடிய ஏராளமான முதலீடுகளே இந்தப் பெருமையைத் தந்து இருக்கிறது.

    நிதி நிலைமையை நாம் சரியாகக் கையாண்டு இருக்கிறோம்; நாட்டின் பொருளாதாரத்தை நாம் உயர்த்தி இருக்கிறோம். கடன் வாங்குகிறார்கள் என குற்றச்சாட்டு வைக்கிறார்கள். ஆனால் வரைமுறைகளுக்கு உட்பட்டு முதலீடுகளுக்காக நாம் வாங்குகின்ற கடன்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது என்பதைக் காட்டுகின்றது. ஒன்றிய அரசு நமக்கு உரிய நிதிகளை விடுவிக்காத போதிலும், நமது முதலமைச்சரின் கூரிய நோக்கிலான வழிகாட்டுதல் மூலம் இந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

    • நாட்டில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது
    • தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.1,96,309 ஆக உள்ளது.

    பாராளுமன்ற மக்களவையில் பீகார் எம்.பி.க்கள் 2 பேர் நாட்டின் தனிநபர் வருமான விவரங்களை கேள்விகளாக கேட்டு இருந்தனர். இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

    அந்த பதிலில் நாட்டில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது. அங்கு 2024-2025-ம் ஆண்டு தனிநபர் வருமானம் ரூ.2,04,605 ஆக இருந்தது. 2-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.1,96,309 ஆக உள்ளது.

    இந்நிலையில், தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு 2ம் இடம் பிடித்தது திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், தொழில்துறை, கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் சமூக நலனில் மாபெரும் சாதனைகளைப் படைத்து நாட்டிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது, தமிழ்நாடு. அந்தச் சாதனை பட்டியலில் மற்றுமொன்றாக, தமிழ்நாடு ரூ.1,96,309 என்ற தனிநபர் வருமான குறியீட்டின் மூலம் மாநிலங்களுக்கிடையே இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தச் சாதனையானது, திராவிட மாடலின் தொலைநோக்கு திட்டங்கள், தொழில் வளர்ச்சி, முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது. "எல்லார்க்கும் எல்லாம்" என்ற உன்னத கொள்கையோடு செயல்பட்டு வரும் நமது திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்த அடுத்த மணிமகுடம் தான் இது.

    கடந்த ஆட்சியின் இறுதியாண்டான 2020-21-ல் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 1.43 இலட்சம் ரூபாய் மட்டுமே. நம் கழக ஆட்சியில், கடந்த நான்கு ஆண்டுகளில் சராசரியாக 8.15 சதவீதம் வளர்ச்சியோடு 2024-25 ஆம் ஆண்டில் தனி நபர் வருமானம் 1.96 இலட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த ஆட்சிக் காலத்தில், 2016-17 ஆம் ஆண்டு முதல் 2020-21 ஆம் ஆண்டு வரை 4.42 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. இத்தகைய உயரிய சராசரி வளர்ச்சியானது, வெற்றிகரமான திராவிட மாடல் ஆட்சிக்கு ஒரு சான்றாகும்.

    தேசிய சராசரியுடன் ஒப்பிடுகையில் 2024-25 ஆம் ஆண்டில் தேசிய சராசரி தனிநபர் வருமானம் 1.14 இலட்சம் மட்டுமே. 2014-15 முதல் 2024-25 வரையிலான கடந்த பத்தாண்டு தேசிய சராசரி வளர்ச்சி விகிதம் 57 சதவீதம் மட்டுமே. ஆனால், அனைவரையும் வியக்க வைக்கும் வகையில், தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி விகிதமோ 83.3 சதவீதம் ஆகும். மக்கள் நலனை மையப்படுத்தி, பொருளாதார முன்னேற்றத்தில் மட்டும் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசு கவனம் செலுத்தியதால் இவை சாத்தியமானது. இதே உற்சாகத்தோடு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி அண்ணன் தளபதி அவர்களின் தலைமையில் இன்னும் வேகமாகப் பயணிப்போம்!" என்று தெரிவித்துள்ளார். 

    • மானியக் கோரிக்கையில், விலையில்லா மடிக்கணினி வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
    • எப்படியும் இந்த ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க இயலாது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

    மானியக் கோரிக்கையில் விலையில்லா மடிக்கணினி வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் எந்த நிதியை வைத்து மடிக்கணினி வழங்கப்போகிறார், எப்போது வழங்கப்போகிறார் என்பதையும் அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    விளம்பரத்துக்காக திட்டங்களை அறிவித்துவிட்டு, அதைச் செயல்படுத்த நிதி ஒதுக்காமல், வெறும் கையில் முழம் போடுவதை திமுகவினரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

    மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வாங்க இந்த ஆண்டு ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக, சட்டசபையில் தமிழக நிதியமைச்சர் கூறியிருக்கிறார்.

    ஆனால், உயர்கல்வி மானியக் கோரிக்கையிலோ அல்லது தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கையிலோ இந்தத் திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை. யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் அமைச்சர்? தமிழக மாணவர்களையா?

    எப்படியும் இந்த ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க இயலாது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள். பிறகு ஏன் இந்த வெற்று அறிவிப்பு? நிதியே ஒதுக்காமல், இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு என எப்படி கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல் சட்டமன்றத்தில் பேசுகிறார் தமிழக நிதியமைச்சர்?

    மானியக் கோரிக்கையில், விலையில்லா மடிக்கணினி வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எந்த நிதியை வைத்து, மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப் போகிறார், எப்போது வழங்கப் போகிறார் என்பதை அமைச்சர் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்காக ரூ.1,400 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • மின் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைக்காக ரூ.1,036 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இறுதி துணை மதிப்பீட்டை இன்று தாக்கல் செய்தார். அதில் மொத்தம் ரூ.19,287.44 கோடிக்கு நிதி ஒதுக்குவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிதிநிலை தன்மையை உயர்த்துவதற்கும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பங்கு மூலதன உதவியாக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்காக ரூ.1,400 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மின் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைக்காக ரூ.1,036 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பஸ்கள் வாங்குவதற்காக போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதலாக ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பென்ஜல் புயல் பாதிப்பு துயர் தணிப்பு பணிகளுக்காக ரூ.901.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. தொண்டர்களின் எதிர்காலத்தை வேறு யாரோ தீர்மானித்து கொண்டிருக்கின்றனர்.
    • அமைச்சர் தங்கம் தென்னரசின் பேச்சிற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

    * அ.தி.மு.க. தொண்டர்களின் எதிர்காலத்தை வேறு யாரோ தீர்மானித்து கொண்டிருக்கின்றனர்.

    * வேறு ஒரு இடத்தில் இருந்து வேறு யாரோ ஒருவர் கணக்குகளை போட்டுக்கொண்டிருக்கிறார். கவனமாக இருங்கள்.

    * வேறு யாரோ ஒருவரின் கணக்குகளை அ.தி.மு.க.வினர் புரிந்து கொள்ள வேண்டும்.

    * அ.தி.மு.க.வை பறித்துக்கொள்ள நினைப்பவர்களிடமிருந்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    * வானதி சீனிவாசன் மிகுந்த மகிழ்ச்சியுடன் சிரிக்கிறார், பூனை குட்டி வெளியே வந்துவிட்டது என்று பேசினார்.

    அமைச்சர் தங்கம் தென்னரசின் பேச்சிற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அ.தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்தனர்.

    • திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் பி.சி.ஸ்ரீராம்.
    • இவர் தெலுங்கு, இந்தி, மலையாளத்திலும் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

    இந்திய திரையுலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். தமிழில் பூவே பூச்சுடவா, மவுன ராகம், நாயகன், தேவர் மகன், காதல் தேசம், அலைபாயுதே, ஐ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாளத்திலும் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார். விக்ரம் நடித்த மீரா, கமல்ஹாசன், அர்ஜுன் இணைந்து நடித்த குருதிப்புனல் மற்றும் வானம் வசப்படும் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்.


    மேலும் பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வரும் இவர் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், பி.சி.ஸ்ரீராம் தனது சமூக வலைதளத்தில் சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டையில் ஒரு நாளிலேயே மின்சார விநியோகத்தில் அதிகமான ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளது. மின்சாரத் துறையின் செயல்பாட்டிற்கு என்ன நேர்ந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உடனடியாக பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்தப்படும். நகரம் முழுவதும் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருவதால் இது போல் நடக்கிறது. சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.




    • முதல்வன் திட்டத்திலும் அதிகளவில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • வடசென்னை வளர்ச்சியில் முதலமைச்சரின் திராவிட மாடல் அரசு உயர்ந்த அக்கறை கொண்டுள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மாதவரம் தொகுதியில் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்க அரசு முன்வருமா என சுதர்சனம் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூறியதாவது:-

    சென்னையில் ஏற்கனவே வண்ணாரப்பேட்டையில் தியாகராஜா கல்லூரி, நந்தனம் கல்லூரியிலும் தலா ஒரு பயிற்சி மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மதுரை, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களிலும் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

    சென்னையை பொறுத்த வரை போட்டி தேர்வுக்கான பயிற்சி குடிமை தேர்வுக்கான பயிற்சி மையம் இயங்கி வருவதோடு, முதன்மை தேர்வாக இருந்தாலும் ஏறத்தாழ 300 மாணவர்கள் பயிற்சி கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், போட்டி தேர்வில் ஈடுபடும் மாணவர்களை அரசு கருத்தில் கொண்டு தான் பல நூலகங்களிலும் போட்டி தேர்வுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இதற்கான வசதி உள்ளதோடு, முதலமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்திலும் அதிகளவில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    அதேபோல் வடசென்னை வளர்ச்சியில் முதலமைச்சரின் திராவிட மாடல் அரசு உயர்ந்த அக்கறை கொண்டுள்ளது. சென்னை, மதுரை மட்டுமல்லாமல் கோவையிலும் திருச்சியிலும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தது போல, எதிர்காலத்தில் வட சென்னையில் அறிவுசார் மையம் மற்றும் நூலகம் அமைக்கப்படும் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மின் கட்டண உயர்வுக்கு அதிமுக தான் காரணம்.
    • மின்வாரியத்தில் என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்பதை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்னும் புரிந்து கொள்ளாமல் உள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மூன்று முறை கடுமையாக மின்கட்டணத்தை உயர்த்திய பிறகும் தமிழ் நாடு மின்சார வாரியத்தை நஷ்டத்தில் இயக்கும் நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்ததில் இருந்தே தமிழ்நாடு மின்சார வாரியத்தில் என்ன நடந்தது என்பதையும், என்ன நடக்கிறது என்பதையும் அவர் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்பது நன்கு புரிகிறது.

    உதய் திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டதால் கிடைத்த நன்மைகளை நான் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது, 2017 முதல் 2021 வரை சட்ட மன்றத்திலும், பிறகு இன்று வரை பலமுறை ஊடகங்கள் வாயிலாகவும், அறிக்கைள் வாயிலாகவும், பொது மேடையிலும் விளக்கியுள்ளேன். மேலும், நேருக்கு நேர் விவாதத்திற்கு தயாராக இருக்கிறேன் என்றும் தி.மு.க. அரசின் அமைச்சர்களுக்கு சவால் விடுத்துள்ளேன்.

    எங்கள் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பின்படி, தி.மு.க. அரசு மின்கட்டணத்தை மூன்றாம் முறையாக உயர்த்தியதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும், அ.தி.மு.க.வின் சார்பில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம்.

    தி.மு.க. அரசின் நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, விலைவாசி உயர்வுக்கு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடுக்கு என்று பல்வேறு வகைகளில் தமிழக மக்களிடம் தொடர்ந்து எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. மின்கட்டண உயர்வைக் கண்டித்து கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு தமிழகம் முழுவதும் கிடைத்த வரவேற்பைப் பொறுக்க முடியாமல், அமைச்சர் தங்கம் தென்னரசு மின் கட்டண உயர்வுக்கு உதய் திட்டத்தில் நாங்கள் கையெழுத்திட்டதுதான் காரணம் என்று பழைய பல்லவியை பாடியுள்ளார்.

    நான் தி.மு.க. அரசுக்கு மீண்டும், மீண்டும் வலியுறுத்துவது இதுதான். உதய் மின் திட்டத்தினால் ஏற்பட்ட நன்மைகளையும், தமிழக மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதையும், தற்போது மின்கட்டண உயர்வு தேவையில்லை என்பதையும், மின்சாரத் துறை அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு குறிப்பிடும் நாளில், அவருடன் நான் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார். அவர் தயாரா?

    மூன்றாண்டு ஆட்சிக்குப் பிறகும், மூன்று முறை கடுமையான மின்கட்டணத்தை உயர்த்திய பிறகும், தங்களது நிர்வாகத் திறமையின்மை காரணமாக தமிழ் நாடு மின்சார வாரியத்தை லாபகரமாக இயக்க முடியாமல் உள்ளதை மறைக்க, எங்கள் மீது பழிபோடுவதை விட்டு விட்டு, இனியாவது தமிழ் நாடு மின்சார வாரியத்தை லாபகரமாக இயக்குவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காஞ்சிபுரத்தில் மெகஸ் எலக்ட்ரானிக்ஸ் ரூ.2,200 கோடி முதலீட்டில் 2,200 பேர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கக் கூடிய திட்டம்.
    • நமது அரசாங்கமும், தனியாரும் செய்துள்ள கூட்டாட்சி முறையில் உள்ள திட்டம்.

    சென்னை:

    தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் நாட்டில் இருப்பதால் அவரைத் தவிர அனைத்து அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

    அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஏறத்தாழ 44 ஆயிரத்து 125 கோடி ரூபாய் முதலீட்டுக்காக 15 முதலீட்டு திட்டங்களுக்கு இந்த அமைச்சரவை ஒப்புதலை தந்துள்ளது.

    இந்த முதலீட்டு திட்டங்களின் அடிப்படையில் ஏறத்தாழ 24 ஆயிரத்து 700 பேர்களுக்கு புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இப்போது வந்திருக்கக்கூடிய இந்த முதலீடுகளில் குறிப்பாக வாகன உற்பத்தி மின்னணு பொருட்கள் மற்றும் உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கூறுகள் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆகிய தொழில்கள் குறித்த முதலீடுகள் இந்த அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

    குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தூத்துக்குடி மாவட்டத்தில் சன்தாக் நிறுவனத்துக்கு அவர்களின் முதலீடாக 21 ஆயிரத்து 340 கோடி ரூபாய், வேலைவாய்ப்பாக 1,114 பேர்களுக்கு அந்த வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய திட்டம்.

    காஞ்சிபுரத்தில் மெகஸ் எலக்ட்ரானிக்ஸ் ரூ.2,200 கோடி முதலீட்டில் 2,200 பேர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கக் கூடிய திட்டம்.

    ஈரோட்டில் மில்கி மிஸ்ட் உணவு பதப்படுத்தும் தொழிலில் ரூ.1,777 கோடி முதலீட்டில் 2025 பேர்களுக்கு வேலைவாய்ப்பு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லோகன் கீரிம்டெக் முதலீடு 1,597 கோடி ரூபாய். வேலைவாய்ப்பு 715 பேர்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க முதலீடுகளாக அமைந்திருக்கிறது.

    இது தவிர உலகளாவிய திறன் மையங்களுக்கான அவற்றின் விரிவாக்கங்களுக்காக ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.

    யு.பி.எஸ். மற்றும் அஸ்ட்ரா ஜெனிகா இந்த இரண்டு நிறுவனங்கள் அவர்களது மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

    எனவே இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஏறத்தாழ ரூ.44 ஆயிரத்து 125 கோடி அளவிற்கு புதிய முதலீடுகள் 15 புதிய நிறுவனங்களில் வந்திருக்கிறது. ஏறத்தாழ 24 ஆயிரத்து 700 பேருக்கு இது வேலைவாய்ப்பை உருவாக்கும்.

    இது தவிர இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. நமது முதலமைச்சர் வரக்கூடிய 17-ந்தேதி இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சிப்காட் சார்பில் காஞ்சிபுரம் மாவட் டம் ஸ்ரீ பெரும்புதூர் வட்டம் வல்லம் படுகால் பகுதியில் ரூ.706.5 கோடியில் கட்டப்பட்டுள்ள 18 ஆயிரத்து 720 படுக்கைகள் கொண்ட தொழிற்சாலை பணியாளர்கள் தங்குவதற்கான கட்டிடம் பாக்ஸ்கான் நிறுவனத்துக்காக கட்டப்பட்டுள்ளது.

    அந்த கட்டிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் 3 முக்கியமான கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி துறை மூலமாக குறிப்பாக பட்ஜெட்டில் கூட இதுபற்றி அறிவிப்பு வெளியிட்டிருந்தோம்.

    தமிழ்நாடு நீரேற்று புனல்மின் திட்டம். தமிழ்நாடு சிறுபுனல் மின் திட்டங்கள். அதற்கான கொள்கை, தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்புக்கான கொள்கைக்கும் அனுமதி கொடுத்துள்ளோம்.

    பசுமை எரிசக்தியில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கக்கூடிய ஒரு மாநிலமாக இருப்பதை நீங்கள் அறிவீர்கள். வரக்கூடிய 2030-ம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி நிறுவு திறனை நாம் அடைய வேண்டும் என்கிற இலக்கை முதலமைச்சர் நிறுவி இருக்கிறார்கள்.

    இப்போது இருக்கக்கூடிய நிலையற்ற பசுமை எரி சக்தியை நாம் சமப்படுத்தப்பட்ட மின்சாரமாக மாற்றுவதற்கு கட்டமைப்பை உருவாக்கி கிரிடில் அதை கொண்டு வருவதற்காக இந்த 3 கொள்கைகளை நாம் கொடுத்துள்ளோம்.

    இந்த திட்டங்களில் 5 ஆயிரம் கோடி ரூபாய் அள வுக்கு முதலீடுகள் இருப்பதால் தனியார் பங்களிப் போடு செய்வது அவசியமாக இருக்கிறது.

    அரசு மற்றும் அரசு நிறுவனங்கள் இவைகளுக்காக இருக்கக்கூடிய நீர்த்தேக்கங்களில் கூட்டு முயற்சியில் செயல்படுத்தக்கூடிய திட்டம். அதன் வாயிலாக கிடைக்கும் மின்சாரம் 100 சதவீதம் நமது மாநிலத்துக்கே வழங்க வேண்டும் என்கிற ஒரு திட்டம்.

    நமது அரசாங்கமும், தனியாரும் செய்துள்ள கூட்டாட்சி முறையில் உள்ள திட்டம். அது தவிர தனியார் மூலமாக செய்யக்கூடிய முறை என 3 வகையாக பிரித்துக்கொண்டு இந்த கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது.

    இந்த கொள்கைக்கு பல்வேறு சலுகைகளும், கட்டணங்களும் வழங்கி இருக்கிறோம்.

    சிறிய புனல் திட்டமும் கொடுத்துள்ளோம். தூய்மையான மாசற்ற மின்சாரத்தை உருவாக்க இது சரியாக இருக்கும். காற்றாலையை புதுப்பிக்கும் கொள்கை மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்கும் வாய்ப்பும் உண்டாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் நிருபர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அமெரிக்க பயணம் எப்போது? என்று கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், இது குறித்து முதலமைச்சர் அலுவலகம் முறையான வகையில் அறிவிப்பு வெளியிடும் என்றார்.

    • வெம்பக்கோட்டை - விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளைப் பார்வையிட்டேன்.
    • சங்கத் தமிழர்கள் அரிய கற்களால் ஆன அணிகலன்களை உற்பத்தி செய்து அணிந்தது தெரிகின்றது.

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கூடுதலாக 2 குழிகள் தோண்டுவதற்கு அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    அகழாய்வு பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். அப்போது அவர் அகழாய்வு குழிகளை சுற்றி பார்வையிட்டார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை - விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளைப் பார்வையிட்டேன்.

     

    அகழாய்வில், இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், 2000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது சுடுமண்ணாலான சிவப்பு நிற வண்ணம் தீட்டப்பட்ட சிகை அலங்காரத்துடன் கூடிய மனிதனின் தலை கிடைத்துள்ளது.

    "கொடுமணம் பட்ட ...... நன்கலம்" (பதிற்றுப்பத்து 67) சங்கப் புலவர் கபிலரின் வரிகளிலிருந்து, சங்கத் தமிழர்கள் அரிய கற்களால் ஆன அணிகலன்களை உற்பத்தி செய்து அணிந்தது தெரிகின்றது.

    அந்த வகையில், சூதுபவள மணிகள், மாவு கற்களால் செய்யப்பட்ட உருண்டை - நீள்வட்ட வடிவ மணிகள், அரிய வகை செவ்வந்திக் கல் மணிகள் கிடைத்துள்ளன. மேலும், சுடுமண்ணாலான பல வடிவமுடைய ஆட்டக் காய்கள், திமில் உள்ள காளையின் தலை முதல் முன்கால் பகுதி வரை கிடைத்துள்ளது அவர்களின் அணிகலன் வடிவமைப்பு கலை, விளையாட்டு மீதான ஆர்வத்தை பறைசாற்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.

    • எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒன்றிய பாஜக அரசு நமக்கு நிதி ஒதுக்காதது பற்றித் தெரியாதா?.
    • திராவிட மாடல் ஆட்சியின் மீது அவதூறு பரப்புவதையே அவர் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

    "100 நாள் வேலைத் திட்டத்திற்கு நிதியை விடுவிக்க வேண்டும் என பொங்கலுக்கு முன்பே பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், நிதி விடுக்காத பாஜகவை கண்டிக்காமல், தமிழ்நாடு அரசு மீது எடப்பாடி பழனிச்சாமி அவதூறு பரப்பி வருகிறார்" என்று தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "ஒன்றிய பாஜக அரசிற்கு ஒரு பாதிப்பென்றால் ஓடிவந்து குறுக்கே விழுந்து அதை மடைமாற்றம் செய்வதே எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி அவர்களின் கடமை என்பதை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளார்.

    100 நாள் வேலைத் திட்டம் என்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. இந்த நயவஞ்சக செயலை கண்டித்து மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உடனடியாக தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய MGNREGS நிதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திப் பொங்கலுக்கு முன்பே 13.01.2025 அன்று பிரதமருக்குக் கடிதம் எழுதி இருந்தார். இதை ஆதரித்து தமிழ்நாட்டு மக்களுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டிய பழனிசாமி , தனது குரலை அவதூறு பரப்ப மட்டுமே பயன்படுத்தி வருவது கண்டனத்திற்குரியது.

    ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியிருக்க வேண்டுமல்லவா?

    எதற்கெடுத்தாலும் செய்தித்தாளிலே படித்தேன், டிவியைப் பார்த்து தெரிந்து கொண்டேன் எனக் கூறும் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒன்றிய பாஜக அரசு நமக்கு நிதி ஒதுக்காதது பற்றித் தெரியாதா?.

    புயல் வெள்ள நிவாரணம், கல்வி நிதி , 100 நாள் வேலைக்கான நிதி ஆகியவற்றை ஒதுக்காமல் தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைத்துவரும் பாஜக அரசோடு மறைமுகக் கூட்டணி வைத்துக் கொண்டு , ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தையாவது பேச முடியாமல் வாய் மூடி இருப்பது ஏன்?

    தனது இயலாமையை மறைக்கவே மக்களின் நலனில் அக்கறை கொண்டு அனுதினமும் செயல்பட்டுவரும் திராவிட மாடல் ஆட்சியின் மீது அவதூறு பரப்புவதையே அவர் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

    ×