search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "North Chennai"

    • தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் 31 தொகுதிகளில் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது.
    • காஞ்சிபுரத்தில் 49.94, திருவள்ளூரில் 49.82, திருநெல்வேலி 48.58, மதுரை 47.38, ஸ்ரீபெரும்புதூர் 45.96 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் வாக்குப்பதிவு 51.41 சதவீதமாக உள்ளது. அதிகபட்சமாக தருமபுரியில் 57.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. விளவங்கோடு இடைத்தேர்தலில் 45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 41.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    இந்த நிலையில், சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாக காணப்படுகிறது. தமிழகத்தின் மற்ற தொகுதிகளை ஒப்பிடுகையில் சென்னை மக்களிடம் வாக்களிக்கும் ஆர்வமில்லை.

    குறைந்த வாக்குப்பதிவு கொண்ட தொகுதிகளாக வட, மத்திய, தென் சென்னை தொகுதிகள் உள்ளன. தென்சென்னையில் 42.10 சதவீதமும், வடசென்னையில் 44.84 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.

    பொது விடுமுறை அளித்தும் சென்னை மக்கள் வாக்களிக்க வராமல் உள்ளனர்.

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் 31 தொகுதிகளில் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் 49.94, திருவள்ளூரில் 49.82, திருநெல்வேலி 48.58, மதுரை 47.38, ஸ்ரீபெரும்புதூர் 45.96 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    • வடசென்னை தொகுதியில், திமுக சார்பில் கலாநிதி வீராசாமியும், அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவும் போட்டியிடுகின்றனர்
    • அமலாக்கத்துறையை பாஜகவின் ஏவல் துறையாக மாற்றிவிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    வட சென்னை தொகுதியில் ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி பாலமுருகன் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

    வடசென்னை தொகுதியில், திமுக சார்பில் கலாநிதி வீராசாமியும், அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவும் போட்டியிடுகின்றனர்.

    கடந்த வருடம் சேலத்தை சேர்ந்த 2 விவசாயிகளை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அந்த விவசாயிகளுக்கு ஆதரவாக ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி பாலமுருகனின் மனைவி பிரவீனா ஆஜரானார். பின்பு இந்த வழக்கு விவகாரம் பெரிதாகிவிட, விவசாயிகள் மீது பதிந்த வழக்கை அமலாக்கத்துறை முடித்து வைத்தது.

    இந்த விவகாரத்தை மேற்கோள்காட்டி ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு பாலமுருகன் கடிதம் எழுதினார். அதில், அமலாக்கத்துறையை பாஜகவின் ஏவல் துறையாக மாற்றிவிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

    அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி, இந்தாண்டு ஜனவரி 22-ம் தேதி மத்திய அரசு அலுவலகங்களுக்கெல்லாம் அரைநாள் விடுமுறை அறிவித்தது மத்திய அரசு. ஆனால், பாலமுருகன் மட்டும் விடுமுறை ஏதும் எடுக்காமல் அன்று முழுவதும் அலுவலகத்தில் பணிபுரிந்தார். எனக்கு விடுமுறை வேண்டாம். என் அலுவலகம் வழக்கம்போல செயல்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் மத்திய வருவாய்த்துறைச் செயலாளருக்கும் அவர் கடிதமும் எழுதினார்.

    இதனையடுத்து அவர், பணி ஓய்வுக்கு இரண்டு நாள்கள் முன்னதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அனைத்து தெருக்களிலும் கூட்டம், கூட்டமாக நாய்கள் சுற்றி வருகின்றன.
    • கொடுங்கையூர் குப்பை கிடங்கு தெருநாய்களுக்கு உணவு அளிக்கும் கூடாரமாக உள்ளது.

    ராயபுரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. நாய்களை பிடித்து மாநகராட்சி ஊழியர்கள் அவற்றிற்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்தாலும் அதன் எண்ணிக்கை குறையவில்லை. அனைத்து தெருக்களிலும் கூட்டம், கூட்டமாக நாய்கள் சுற்றி வருகின்றன.

    குறிப்பாக ராயபுரம், கொடுங்கையூர், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட வட சென்னை பகுதிகளில் தெரு நாய்கள் பொதுமக்களை மிரட்டி வருகின்றன. இரவு 7 மணிக்கு மேல் சாலை மற்றும் தெருக்களில் நடந்து செல்பவர்களையும், வாகனங்களில் செல்பவர்களையும் விரட்டி, விரட்டி கடிக்க பாய்கின்றன.

    கொடுங்கையூர் குப்பை கிடங்கு தெருநாய்களுக்கு உணவு அளிக்கும் கூடாரமாக உள்ளது. இதனால் குப்பை கிடங்கை சுற்றி உள்ள இடங்களில் நாய்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து உள்ளன. கொடுங்கையூர், எழில் நகர், ஆர்.ஆர் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், புளியந்தோப்பு, பெரம்பூர், ஜமாலியா நகர், ஹைதர்கார்டன், எஸ்.பி.ஐ. ஆபிசர் காலனி மற்றும் பட்டாளம் பகுதிகளில் நாய்கள் அட்டகாசம் தாங்க முடியாத அளவுக்கு காணப்படுகிறது. இரவு நேரத்தில் செல்பவர்களை குறைந்தது 6 நாய்களுக்கு மேல் கூட்டமாக துரத்துகின்றன. இதனால் இரவு நேரத்தில் வெளியே செல்லவும், பணிமுடிந்து வீட்டிற்கு வரவும் பொது மக்கள் அச்சம் அடையும் நிலை உள்ளது.

    இதேபோல் சூளை, டி.கே.முதலி தெரு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை 10 முதல் 20 நாய்கள் வரை படையெடுத்து வந்து மிரட்டுகின்றன.

    சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ராயபுரம் மண்டலத்தில் 90 சதவீதம் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது தெரிந்தது. வழக்கமாக 4 ஆண்டுக்கு ஒரு முறை தெருநாய்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தவேண்டும். ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் பல்வேறு காரணங்களால் இந்த கணக்கெடுப்பு கடந்த 2022-ம் ஆண்டுக்கு பின்னர் நடத்தப்படவில்லை. ஆனால் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. 2018-ம் ஆண்டு 2100-ஆக இருந்த தெருநாய்களின் எண்ணிக்கை 2023-ம் அண்டு 3900 ஆக உயர்ந்து உள்ளது.


    இதைத்தொடர்ந்து ராயபுரம் மண்டலத்தில் உள்ள தெரு நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதுகுறித்து தண்டையார்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜ் கூறும்போது, மாநகராட்சியில் தற்போது 80 நாய் பிடிப்பவர்களும், 15 கால்நடை டாக்டர்களும் உள்ளனர். மண்டலம் வாரியாக கணக்கெடுப்பு நடத்தி ஆய்வு செய்து உறுதியான தெருநாய்களின் எண்ணிக்கை பற்றி தெரியாமல் எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது.

    எனவே தெருநாய்கள் பற்றி விரைவில கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ராயபுரத்தில் மட்டும் தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடந்து உள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த கணக்கெடுப்பு மற்ற மண்டலங்களில் நடைபெறவில்லை. கொடுங்கையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அங்குள்ள குப்பைக் கிடங்கு தெரு விலங்குகளுக்கு உணவளிக்கும் இடமாக மாறி உள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் தெருக்களில் நடமாடவே அச்சமாக உள்ளது. பெரும்பாலான நாய்கள் தெரு ஓரங்களில் தேங்கி கிடக்கும் கழிவுகளில் உணவு தேடுகின்றன. நாய்களை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றார்.

    இது தொடர்பாக மாநகராட்சி வடக்கு மண்டல அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் பிப்ரவரி 20-ந் தேதி வரை தெருநாய்கள் தொடர்பாக 5 மண்டலங்களில் மொத்தம் 784 புகார்கள் வந்துள்ளன. 924 நாய்கள் பிடிக்கப்பட்டு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்யப்பட்டு உள்ளன. புயல் மற்றும் அதைத் தொடர்ந்து நிவாரணப் பணிகள் காரணமாக தெரு நாய்கள் பற்றிய கணக்கெடுப்பு தாமதமானது. விரைவில் தெருநாய்கள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெறும். பொதுமக்கள் தங்கள் புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். புகார்கள் மீது இரண்டு நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றார்.

    • எந்த பணியை செய்யக்கூறினாலும் வடசென்னை வளர்ச்சி நிதியில் செய்கிறோம் என அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.
    • எந்த திட்டங்களுக்கு எந்த பணம் ஒதுக்கப்படுகிறது என்ற விவரமும் தெரியவில்லை என்றார்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார் கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஜெயராமன் பேசியதாவது:-

    எனது வார்டில் புயலால் 100-க்கும் மேலான மின் கம்பங்கள் சாய்ந்தன. முருகப்பா நகர் குளத்தில் மின் கம்பங்கள் அமைக்கும் பணி இதுவரை நடைபெறவில்லை. இதனால் இருள் சூழ்ந்துள்ளது. மேயருக்கு அதிகாரிகள் தவறான தகவல்களை கொடுக்கிறார்கள்.

    எந்த பணியை செய்யக்கூறினாலும் வடசென்னை வளர்ச்சி நிதியில் செய்கிறோம் என அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.

    எந்த திட்டங்களுக்கு எந்த பணம் ஒதுக்கப்படுகிறது என்ற விவரமும் தெரியவில்லை என்றார்.

    தனியரசு (மண்டல தலைவர்): வட சென்னை வளர்ச்சி நிதி ரூ.1000 கோடி சி.எம்.டி.ஏ. ஒதுக்கியது. அந்த நிதியில் என்ன பணிகள் செய்யப்படுகிறது. அது என்ன திட்டம், எந்தெந்த பணிகளுக்கு அதில் இருந்து நிதி ஒதுக்குகிறீர்கள்.

    மகேஷ்குமார் (துணை மேயர்): 30 தொகுதிகளுக்கு அந்த திட்டத்தில் வேலை செய்வதாக கூறுகிறார்கள். அது என்ன வேலை என்று தெரியவில்லை.

    ராதாகிருஷ்ணன்: மாநில அரசு சார்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. சி.எம்.டி.ஏ. மூலம் வளர்ச்சி நிதி தரப்படுகிறது. இது பல்வேறு துறைகளுக்கு செலவிடப்படும். எந்தெந்த பணிகளுக்கு இந்த பணம் ஒதுக்கப்படும் என்ற தகவலை இன்றைய கூட்டம் முடிந்த பின்னர் நான் உறுப்பினர்களுக்கு தருகிறேன்.

    டில்லிபாபு: (காங்கிரஸ்) கொடுங்கையூரில் குப்பை கிடங்கில் பயோமைனிங் திட்டப்படி குப்பைகள் மறு சுழற்சி செய்யப்பட்டு இடம் மீட்கப்படும் என மன்ற கூட்டத்தில் கடந்த ஆண்டு கூறினீர்கள். ஆனால் இதுரையில் எந்த பணியும் அங்கு நடைபெறவில்லை. அந்த திட்டம் என்ன ஆனது?

    மேலும் இந்து, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு சுடுகாடு அமைத்து தரப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்து சுடுகாடு பணிகள் மட்டும் மெதுவாக நடைபெறுகிறது. மற்ற சுடுகாடு பணிகள் நடைபெறவில்லை.

    மேயர் பிரியா:- வெகு விரைவில் குப்பை கிடங்கு பயோமைனிங் திட்டம் தொடங்கப்படும். 2 வருடத்தில் முடிக்கப்படும்.

    பரிதி இளம் சுருதி: பேரிடர் காலத்தில் வார்டுகளில் பணிகள் செய்யும் போது ஒரு பகுதி பாதிக்கிறது. அதனால் ஒரு வார்டுக்கு 2 உதவி பொறியாளர்கள் நியமிக்க வேண்டும்.

    சுகன்யா செல்வம் (காங்கிரஸ்): சூளைமேடு பகுதியில் மழைக்கு பிறகு சாலைகள் புதிதாக போடப்பட்டது. அந்த சாலைகளை மின்வாரிய ஊழியர்கள் எந்த அனுமதியும் இல்லாமல் வெட்டி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

    கமிஷனர் ராதாகிருஷ்ணன்: இது தவறான செயல். அனுமதி இல்லாமல் சாலைகளில் கை வைக்கக்கூடாது. இது தொடர்பாக துறை செயலாளர்களிடம் பேசுகிறேன்.

    இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பல போக்குவரத்து முனையங்களின் தரம் மிகவும் விமர்சனத்துக்குரியது
    • பயணிகளுக்கு அனைத்துவிதமான அத்தியாவசிய அடிப்படை வசதிகளும் இங்கு உருவாக்கப்படும்

    சென்னை மாநகர போக்குவரத்து கழகமும் (MTC), சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும் (CMDA) சென்னைவாசிகளுக்கு, குறிப்பாக மாநகர பேருந்து போக்குவரத்தை சார்ந்திருக்கும் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை அளித்திருக்கின்றன.

    சென்னையிலுள்ள பல போக்குவரத்து முனையங்களின் தரம் மிகவும் விமர்சனத்துக்குரியது.

    பாளம் பாளமாக உடைந்திருக்கும் தரை மற்றும் மேற்கூரைகள், பெயர்ந்து வரும் டைல்ஸ்கள், குறைவான வெளிச்சம், மோசமான கழிப்பிட வசதி, கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத மற்றும் இருந்தாலும் செயல்படாத நிலை, பயணிகள் அல்லாத சிலர் சகஜமாக உலா வருவது, பெண்களுக்கு போதிய பாதுகாப்பின்மை உட்பட பல கட்டமைப்பு குறைபாடுகளை நீண்டகாலமாக சகித்து கொண்டுதான் மக்கள் போக்குவரத்து வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த குறைகளை களையும் விதமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 6 பேருந்து முனையங்களை சகலவித வசதிகளுடன் தரமாக மேம்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர இருக்கிறது போக்குவரத்து கழகம்.

    திரு.வி.க. நகர், தண்டையார்பேட்டை, கண்ணதாசன் நகர், முல்லை நகர், பெரியார் நகர் மற்றும் அம்பத்தூர் எஸ்டேட் ஆகிய 6 இடங்களில் செயல்படுத்தப்பட உள்ள இந்த மேம்பாட்டு திட்டம் பிற முனையங்களிலும் எதிர்காலத்தில் கொண்டு வரப்படலாம்.

    தரமான மேற்கூரைகள், சூரிய ஒளி தகடுகள், மிகவும் தூய்மையான கழிப்பிட வசதி, அமர்ந்திருக்கும் வசதியுடன் காத்திருக்கும் அறைகள், சுத்தமான குடிநீர் வசதி, 24 மணி நேர கண்காணிப்பு கேமரா வசதி, அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகள் உட்பட பல்வேறு வசதிகள் இந்த மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அறிவித்துள்ளது.

    திரு.வி.க.நகர் மற்றும் அம்பத்தூர் முனையங்களுக்கான ஒப்பந்த புள்ளிகள் ஏற்கெனவே கோரப்பட்டுள்ளது. இதற்காக வளர்ச்சி குழுமத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டிடக்கலை வடிவமைப்பாளர்கள் தங்கள் வரைபட பணிகளை செய்து முடித்துள்ளனர்.

    முதல் கட்டமாக இந்த இரு முனையங்களும் 2024-ல் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

    வட சென்னையின் வளர்ச்சிக்கான பல திட்டங்களில் ஒன்றாக இந்த பேருந்து முனையங்களை சீர்படுத்துதலும் அடங்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

    • குற்ற சம்பவ தொகுப்புகளை அடிப்படையாக கொண்டு ‘ஜி.ஐ.எஸ்’ எனப்படும் புவியியல் தகவல் அமைப்பு வரைபட திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
    • ரூ.6.5 கோடி மதிப்பு கொண்ட இந்த புவியியல் தகவல் அமைப்பு வரைப்பட திட்டத்தை போலீஸ் கமிஷன் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

    சென்னையில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக குற்றம் நடைபெறும் இடங்களை உடனே தெரிந்து கொண்டு அங்கு விரைந்து செல்லும் வகையிலும், குற்றங்கள் நடக்காதவாறு தடுக்கும் வகையிலும் குற்ற சம்பவ தொகுப்புகளை அடிப்படையாக கொண்டு 'ஜி.ஐ.எஸ்' எனப்படும் புவியியல் தகவல் அமைப்பு வரைபட திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இத்திட்டத்துக்காக கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளில் சென்னையில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, ஆள்கடத்தல் ஆகிய குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் துல்லியமாக சேகரித்து தொகுக்கப்பட்டு உள்ளன.

    இவை எந்த வகை குற்றங்கள், எந்த இடத்தில், எந்த தினத்தில், எந்த நேரத்தில் நடைபெற்றது என்பது உள்பட அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டு வரைபடமாக்கப்பட்டு உள்ளது.

    102 போலீஸ் நிலையங்களில் இருந்தும் 385 போலீசார் குற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கும் இடங்களை கண்டறிந்து தகவல்களை சேகரிக்க கிட்டத்தட்ட 6 மாதங்கள் செலவிட்டனர். இந்த வரை படம் ஒவ்வொரு நாளும் நிகழ்நேர அடிப்படையில் புதுப்பிக்கப்படுகிறது.

    சென்னை நகரம் முழுவதும் உள்ள 67 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்களின் அமைவிடம் பள்ளிகள், கல்லூரிகள், பெண்கள் விடுதிகள், மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள், வழிபாட்டுத் தலங்கள், வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள், விபத்து பகுதிகள் போன்றவையும் புவியியல் தகவல் அமைப்பு வரைபடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்த வரைபடத்தில் ஒரு வழக்கு மட்டும் பதிவாகியுள்ள பகுதிகளை குறிக்க மஞ்சள் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 3-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகும் இடங்களில் ஆரஞ்சு புள்ளி உள்ளது. அதிக குற்றங்கள் நடைபெறும் பகுதி சிவப்பு நிறமாக உள்ளது.

    பாலியல் தொல்லை, கற்பழிப்பு, போக்சோ போன்ற குற்றங்களுக்கு வெவ்வேறு குறியீடுகள் ஒதுக்கப்படுகிறது.

    இந்த வரைப்படத்தின் படி கடந்த 7 ஆண்டுகளில் வடசென்னை பகுதிகளில் கொலை, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை, கற்பழிப்பு குற்றங்கள் அதிகம் நிகழ்ந்து உள்ளன. குடிசைப்பகுதிகள் மற்றும் ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நடந்துள்ளன.

    தென்சென்னை, மேற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திருட்டு சம்ப வங்கள் அதிகம் நடந்து உள்ளன. சென்னை நகரம் முழுவதும் பரவலாக வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன.

    இந்த வரைப்பட திட்டத்தின் மூலம் குற்றங்கள் ஒரு இடத்தில் நடைபெற்றால் அருகில் உள்ள ரோந்து போலீசாரை உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல வைக்க முடியும். மேலும் குற்றவாளி தப்பிச் சென்றால் அவர் எந்த வழியாக தப்பிச் சென்றார், அவரது உருவம் எந்த கேமராவில் துல்லியமாக பதிவாகி இருக்கும் என்பது போன்ற விவரங்களையும் புவியியல் தகவல் அமைப்பு வரைபடம் மூலம் தெளிவாக உடனடியாக கண்டறிய முடியும்.

    இதன் மூலம் ஒரு குற்றத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்க முடியும். குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய முடியும். குற்ற சம்பவங்களை உடனடியாக தடுக்கும் நடவடிக்கைகளில் 5 ஆயிரம் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட போலீஸ் ரோந்து வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளது. சிறப்பு மொபைல் செயலியுடன் 2000 ரோந்து போலீசாரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இந்த வரைபட திட்டத்தில் உள்ள தானியங்கி வாகன இருப்பிட அமைப்பானது குற்றம் நடைபெறும் இடத்தின் அருகில் உள்ள ரோந்து வாகனத்தை அனுப்புவதற்கு பயன்படுத்தப்படும். இதனால் போலீசாருக்கு நேரம் மிச்சமாவதுடன் விரைவாக சம்பவ இடத்தை அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும்.

    ரூ.6.5 கோடி மதிப்பு கொண்ட இந்த புவியியல் தகவல் அமைப்பு வரைப்பட திட்டத்தை போலீஸ் கமிஷன் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில்,

    "சென்னை நகரில் நடக்கும் குற்றங்களின் முறைகள் மற்றும் அதன் போக்கை ஆய்வு செய்ய இது எங்களுக்கு உதவியாக இருக்கும். சென்னை நகரில் நடக்கும் பாலியல் குற்றங்கள், கற்பழிப்பு, போக்சோ குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ குற்றங்கள் அதிக மாக இருந்தால் குற்றங்களை தடுக்க அந்த பகுதிகளுக்கு போலீசார் அதிக ரோந்து வாகனங்களை ஒதுக்கலாம். அந்த பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் அல்லது அனைத்து பெண் போலீ சாரையும் போலீசார் நியமிக்கலாம்" என்றார்.

    வடசென்னை மற்றும் வல்லூர் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திபட்டு புதுநகரில் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரண்டு நிலைகளில் செயல்படும் ஐந்து அலகுகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் வீதம் 1200 மெகாவாட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் முதல் நிலை முதல்அலகில் உள்ள கொதிகலன்குழாயில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து அந்த அலகில் 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இதே போல் இரண்டாவது நிலை முதல் அலகிலும் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின்சாரம் நிறுத்தபட்டுள்ளது.

    மொத்தம் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் குழாய் பழுதை சரிசெய்யும் பணியில் ஊழியர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வல்லூரில் உள்ள தேசிய அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் வீதம் மொத்தம் 1500 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வந்தது. இன்று காலை முதல் அலகில் உள்ள கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதால் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

    வண்ணாரப்பேட்டைக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்படுவதால் வடசென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையுமா? என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. #MetroTrain
    சென்னை:

    வடசென்னையில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகம். தற்போது வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரெயில் வந்திருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறையுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

    மெட்ரோ ரெயில் பயணிகள் கூறியதாவது:-

    ஜெயந்தி (திருமங்கலம்):-

    சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தின் 2-வது அடுக்கு தரை தளத்தில் இருந்து சுமார் 100 அடி ஆழத்தில் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டு உள்ள ரெயில் நிலையத்தில் இருந்து பயணத்தை தொடங்கும் போது திகில் அனுபவமாக உள்ளது. அதேபோன்று சென்டிரல் ரெயில் நிலையம்- அரசினர் தோட்டம் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கூவம் ஆற்றுக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் ரெயில் கடந்து செல்லும் போது பயணிகளுக்கு திகில் அனுபவத்தை ஏற்படுத்துகிறது. பாமர மக்களும் பயணம் செய்யும் வகையில் கட்டணத்தை சற்று குறைப்பது குறித்து ஆலோசிக்கலாம்.

    சாந்தி(சென்னை):-

    வடசென்னையில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகம். தற்போது வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரெயில் வந்திருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறையுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. குறிப்பாக வடசென்னை பகுதிகளில் உள்ள வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், தண்டையார்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படுவது ஒரு பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.

    சுமதி(வண்ணாரப்பேட்டை):-

    வடசென்னையில் உள்ள மின்சார ரெயில் நிலையங்களில் எத்தனை வசதிகள் செய்து தரப்பட்டாலும், சமூக விரோதிகளின் கூடாரமாகத்தான் பெரும்பாலான ரெயில் நிலையங்கள் காட்சி அளிக்கின்றன. எனவே சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் பெண்கள் பயமின்றி பயணம் செய்ய கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்து தர வேண்டும்.

    ஜோஸ்பின்(வியாசர்பாடி):-

    வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பது முன்னோர் வாக்கு, ஆனால் சென்னையை பொறுத்தவரையில் தெற்கு வாழ்கிறது, வடக்கு தேய்கிறது என்ற அளவில் தான் இருக்கிறது. குறிப்பாக வடசென்னையில் அடிப்படை வசதிகள், போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    தற்போது வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரெயில் ஓடியதை வரவேற்கிறோம். இனிமையான பயணமாக இருந்தது. நேரம் மிச்சம் மற்றும் மாசு இல்லாத பயணமாக இருந்தது. #MetroTrain

    வடசென்னையில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு அரசு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #Panneerselvam
    சென்னை:

    சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பின் கீழ் பி.கே.சேகர்பாபு (தி.மு.க.) எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    வடசென்னை கல்யாணபுரத்தில் அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. இங்கு வீடு இல்லாத அனைத்து ஏழைகளுக்கும் வீடுகள் கிடைக்கும் வகையில் 3500 குடியிருப்புகளை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சாலையோரம் வசிக்கும் ஏழை-எளியவர்கள் அனைவருக்கும் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-

    சென்னை யானை கவுனி பாலம் மற்றும் வால்டாக்ஸ் சாலை சந்திக்கும் இடத்தில் உள்ள கல்யாணபுரம் திட்டப்பகுதியில் 260 அடுக்குமாடி குடியிருப்புகள் தரை மற்றும் மூன்றடுக்கு மாடி அமைப்பில் 8 கட்டட தொகுதிகளில் 1976-ம் ஆண்டு கட்டப்பட்டன. இக்குடியிருப்பில் உள்ள வீட்டின் பரப்பு 326 சதுர அடி. திட்டப்பகுதி அமைந்துள்ள சாலையின் அகலம் 18மீ மற்றும் எய்தப்பட்ட தரை பரப்பு குறியீடு எப்.எஸ்.ஐ. அளவு 1.44 ஆகும்.

    இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட காரணத்தால் அவை தற்போது வசிக்க ஏற்ற வகையில் இல்லை என்பதை குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் தொழில்நுட்ப குழு பார்வையிட்டு அதனை இடித்துவிட்டு புதியதாக அவ்விடத்தில் குடியிருப்புகள் கட்ட சமீபத்தில் பரிந்துரைத்துள்ளது.

    இதன் அடிப்படையில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் இங்கு 360 அடுக்குமாடி குடியிருப்புகள் இரண்டு கட்டட தொகுதிகளாக கட்ட திட்டமிடப்பட்டது. முதல் தொகுதியில் ஒரு தளத்தில் 12 குடியிருப்புகளும், இரண்டாவது தொகுதியில் ஒரு தளத்தில் 6 குடியிருப்புகளும் கட்டப்படும். ஒவ்வொரு கட்டட தொகுதியும் ஸ்டில்ட் மற்றும் 10 மாடிகளுடன் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    இதில் ஒரு வீட்டின் பரப்பு 400 சதுர அடி ஆக இருக்கும். இத்திட்டப்பகுதியில் 10 சதவிகிதம் பூங்கா மற்றும் திறந்தவெளி மேம்பாட்டிற்கும் மற்றும் 7 சதவிகிதம் இடம் இதர பொது வசதிகளான நியாய விலைக்கடை, பாலர் பள்ளிகள் மற்றும் கடைகளுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்ட உத்தேசித்துள்ள 360 குடியிருப்புகளில் அங்கு தற்போது வசித்து வரும் 260 குடும்பங்களை மீண்டும் குடியிருப்பு ஒதுக்கீடு செய்த பின் கூடுதலாக உள்ள 100 குடியிருப்புகளை அப்பகுதியில் குடிசைப்பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தின் மேம்பாட்டு வளர்ச்சி விதியின்படி இத்திட்டப்பகுதியில் பன்னடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகபட்சம் 60மீ உயரத்துடன் எஸ்.+19 மாடிகள் கட்ட அனுமதிக்கலாம். திட்டத்தின் துவக்க கட்டத்தில் ஒரு குடியிருப்பு ரூ.13.32 லட்சம் செலவில் 396 அடுக்குமாடி குடியிருப்புகள் இரண்டு தொகுதிகளாக எஸ்+15 மாடிகளுடன் 400 சதுர அடி பரப்பளவில் குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. பின்னர் ஒரு குடியிருப்பு ரூ.13.47 லட்சம் செலவில் 364 அடுக்குமாடி குடியிருப்புகள் இரண்டு தொகுதிகளாக எஸ்+14 மேம்பாட்டில் கட்ட மாற்றம் செய்யப்பட்டது.

    எனினும் சட்டமன்ற உறுப்பினர் பி.கே.சேகர்பாபுவின் கோரிக்கையை ஏற்று அதிக மாடி தளங்களை குறைத்து, 14ல் இருந்து தற்போது 10 மாடிகளாக, 360 அடுக்குமாடி குடியிருப்புகள் நான்கு தொகுதிகளாக கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 1 வீட்டின் கட்டுமான தொகை ரூ.13.70 லட்சமாகும்.

    இத்திட்டப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பக்கிங்காம் கால்வாய் பகுதியில் வறிய நிலையில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது கட்ட திட்டமிட்டுள்ள 360 அடுக்குமாடி குடியிருப்புகளில் கால்வாய் கரையில் குடிசைகளில் வாழ்ந்து வரும் 100 குடும்பங்களை கூடுதலாக குடியமர்த்த எதுவாக அமையும்.

    மேலும், இத்திட்டம் எஸ்+8 மேம்பாட்டில் திருத்தியமைக்கப்பட்டால் 72 குடும்பங்களை குடியமர்த்துவது குறைந்துவிடும். மேலும், 1 வீட்டின் கட்டுமான செலவு ரூ.13.70 லட்சத்தில் இருந்து ரூ.14.30 லட்சமாக உயர்ந்துவிடும். இது மட்டுமின்றி வடசென்னை பகுதியானது மிகவும் மக்கட்தொகை நெருக்கமாக உள்ள பகுதியானதால் இப்பகுதி குடிசைவாழ் மக்களை மறுகுடியமர்வு செய்ய நிலங்கள் கிடைப்பது அரிதாக உள்ளது.

    எனவே, குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் வசம் இருக்கும் நிலப்பகுதியில் அதிகப்படியான குடியிருப்புகள் கட்டுவதால் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடிசைப்பகுதி வாழ் மக்களை கூடுமானவரை அதிக எண்ணிக்கையில் மறுகுடியமர்வு செய்யலாம் என தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #Panneerselvam


    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது. #ThermalPowerStation

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் சென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு இரண்டு நிலைகளில் மொத்தம் 830 மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

    முதல் நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 630 கொண்ட மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாம் நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட்டும், மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இரண்டாம் நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து அந்த அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

    இரண்டு நிலைகளில் மொத்தம் 1230 மெகாவாட் மின்உற்பத்தி மட்டும் நடை பெறுகிறது. மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட பகுதியை ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×