என் மலர்
நீங்கள் தேடியது "Metro Train"
- முதல் கட்டமாக 11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்த மின்சார மைக்ரோபஸ் சேவைகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
- பஸ்களை இயக்க உள்ள வழித்தடம், பஸ்கள் இயக்கும் நேரம், சார்ஜிங் இடம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
சென்னை:
சென்னை நகர மக்களின் முக்கிய போக்குவரத்தாக மெட்ரோ ரெயில் சேவை மாறி உள்ளது. மெட்ரோ ரெயில் பயணிகள் வீட்டின் அருகில் இருந்தே எளிதில் மெட்ரோ நிலையங்களை சென்றடைய வசதியாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 220 புதிய மின்சார ஏ.சி.மைக்ரோ பஸ்களை அறிமுகப்படுத்த போவதாக கடந்தமாதம் தெரிவித்து இருந்தது.
இந்த மைக்ரோ பஸ்கள் மினி பஸ்களை விட அளவில் சிறிதாக இருக்கும். சுமார் 5 முதல் 6 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏ.சி.மைக்ரோ பஸ்கள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 5 கி.மீட்டர் சுற்றளவில் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்கள் முக்கிய குடியிருப்பு மற்றும் வணிக மையங்களை மெட்ரோ ரெயில் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் செயல்படும்.
இது தொடர்பாக கடந்த 3-ந்தேதி மெட்ரோ ரெயில், மாநகர போக்குவரத்து கழகம், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பஸ்களை இயக்க உள்ள வழித்தடம், பஸ்கள் இயக்கும் நேரம், சார்ஜிங் இடம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக 11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்த மின்சார மைக்ரோபஸ் சேவைகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி திருமங்கலம், வடபழனி, கோயம்பேடு, கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம், நங்கநல்லூர், பரங்கிமலை, வண்ணாரப்பேட்டை, விம்கோநகர், விமான நிலையம் ஆகிய மெட்ரோ ரெயில்நிலைய பகுதியில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஏற்கனவே இந்த பகுதிகளில் 22 மினிபஸ்கள் இயக்கப்படுகின்றன.அவை 20 நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படுகின்றன. புதிய மைக்ரோபஸ்கள் அறிமுகமானதும் 5 நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படும். இது மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு மட்டுமே இயக்கப்படும். பயணிகள் தங்களது பகுதியில் இருந்து எளிதாக மெட்ரோ நிலையத்தை அடையலாம். மெட்ரோ ரெயில் இயக்கப்படும் நேரத்திற்கு ஏற்ப இந்த பஸ் சேவை திட்டமிடப்படும், மேலும் பயணிகள் மைக்ரோ பஸ்கள் வரும் நேரத்தை கண்காணித்து "சென்னை ஒன்" செயலியில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த மைக்ரோ பஸ் சேவைக்கு பயணிகளிடையே உள்ள வரவேற்பை பொறுத்து மற்ற வழித்தடங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்றார்.
- மதியம் 2.07 மணிக்கு மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தை மருத்துவ குழுவினர் அடைந்தனர்.
- பாதுகாப்பான முறையில் கடந்து மதியம் 2.28 மணிக்கு ஏ.ஜி.டிஎம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையம் வந்தடைந்தது.
சென்னை:
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, சமீபத்தில் மெட்ரோ ரெயில்களில் மாற்று அறுவை சிகிச்சைக்காக மனித உறுப்புகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கும் கேரியேஜ் மற்றும் டிக்கெட் என்ற திருத்த விதிகள்-2023 கொண்டு வரப்பட்டது.
அதன்படி, நேற்று மீனம்பாக்கம் - ஏ.ஜி.டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு இடையே மாற்று அறுவை சிகிச்சைக்காக தானமாக பெறப்பட்ட நுரையீரல் கொண்டு செல்லப்பட்டது. இந்த உடல் உறுப்பு பெங்களூருவில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து மதியம் 2.07 மணிக்கு மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தை மருத்துவ குழுவினர் அடைந்தனர்.
மெட்ரோ ரெயில் ஊழியர்கள் மற்றும் நிலைய பணியாளர்களின் உதவியுடன் அந்த மருத்துவ குழுவினர் 7 மெட்ரோ நிலையங்களை பாதுகாப்பான முறையில் கடந்து மதியம் 2.28 மணிக்கு ஏ.ஜி.டிஎம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து மருத்துவ குழுவினர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கிரீம்ஸ் ரோடு பகுதியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் என்று மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
- 32 மெட்ரோ பங்கேற்ற ஆய்வில் 6,500 வாடிக்கையாளர்களிடம் இருந்து பதில் பெறப்பட்டுள்ளது.
- சென்னை மெட்ரோவுக்கான வாடிக்கையாளர் திருப்தி மதிப்பெண் 5க்கு 4.3 என அறிக்கையில் தகவல்
உலகம் முழுவதும் உள்ள 32 மெட்ரோ நிறுவன வாடிக்கையாளர் ஆய்வறிக்கையில் சென்னை மெட்ரோ முதலிடம் பிடித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "COMET (Community of Metros)" என்பது உலகம் முழுவதும் உள்ள நகர்ப்புற மெட்ரோ இரயில் சேவைகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டு, தரநிலைகளை (benchmarks) நிர்ணயிக்கும் ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் இந்த அமைப்பில் ஒரு புதிய உறுப்பினராகச் சேர்ந்தது. உலகத் தரத்திலான செயல்பாடுகளை அடைவதற்கும், முன்னேற்றங்களை மேற்கொள்வதற்கும் இது முக்கிய கவனம் செலுத்துகிறது. இந்தக் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஆண்டுதோறும் முக்கியச் செயல்பாட்டுக் குறிகாட்டிகள் (Key Performance Indicators) குறித்த தரவுகளைச் சேகரிக்கின்றனர். இதன் மூலம் செயல்பாடுகள் அளவிடப்பட்டு, சர்வதேசத் தரநிலைகளுடன் ஒப்பிடப்படுகின்றன. இந்த ஒப்பீடு, உறுப்பினர்களாக உள்ள மெட்ரோ இரயில் நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், சிறந்த நடைமுறைகளை (best practices)அடையாளம் காணவும் உதவுகிறது. மேலும், முடிவெடுக்கும் செயல்பாட்டிற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும்.
COMET நிறுவனம் ஆகஸ்ட் 2025-இல், ஆன்லைன் வாடிக்கையாளர் கருத்துப் பதிவு இணையதளம் மூலம் நடத்திய வாடிக்கையாளர் திருப்தி கணக்கெடுப்பில் (Customer Satisfaction Survey) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பங்கேற்றது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் இந்தக் கணக்கெடுப்பு பற்றிய விளம்பரம் சுவரொட்டிகள், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் செய்யப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பு, சேவைத் தரம் (Service quality),அணுகல் (accessibility), கிடைக்கும்தன்மை (availability),நம்பகத்தன்மை (reliability), பாதுகாப்பு (security),பயன்படுத்துவதற்கான எளிமை (ease of use) மற்றும் சௌகரியம் (comfort) ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
உலகெங்கிலும் உள்ள 32 மெட்ரோ இரயில் நிறுவனங்கள் பங்கேற்ற இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், அதிக எண்ணிக்கையிலான பங்கேற்புகள் மற்றும் சுமார் 6500 வாடிக்கையாளர்களிடம் இருந்து பதில்களைப் பெற்று, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. சென்னை மெட்ரோ இரயில் சேவைகளுக்கான ஒட்டுமொத்த வாடிக்கையாளர் திருப்தி மதிப்பெண் 5-க்கு 4.3 இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
● பெரும்பாலான சென்னை மெட்ரோ இரயில் பயணிகள் பணி நிமித்தமாக மெட்ரோவைப் பயன்படுத்துகின்றனர்.
● இந்த ஆய்வுக்குப் பதிலளித்தவர்களில் சுமார் 64% பேர் ஆண்கள், 33% பேர் பெண்கள் மற்றும் 3% பேர் மற்றவர்கள் ஆவர்.
● பதிலளித்தவர்களில் பெரும்பாலான பயணிகள் இளம் வயதினர் (30 வயதுக்குட்பட்டவர்கள்).
● பயணிகள், கட்டணம் செலுத்தும் முறைகள், கூடுதல் இட வசதி, மெட்ரோ நிலையங்களுக்கிடையேயான இணைப்பு வசதி (Interchange facility) மற்றும் நிலையங்களை எளிதாக அணுகும் வசதி (Station accessibility)ஆகியவற்றில் மேம்பாடுகளை எதிர்பார்க்கின்றனர்.
பயணிகளின் மதிப்புமிக்க கருத்துக்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய, தொடர்ச்சியான மேம்பாடுகளைச் செய்ய சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உறுதியளிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- மழைக்காலம் முடிந்ததும் அடுத்தாண்டு ஜனவரி முதல் பணிகளை மேற்கொள்ள மெட்ரோ நிறுவனத்திற்கு அறிவுறுத்தினார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் செயல்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மீனம்பாக்கம் வரையில் ஒரு வழித்தடமும், விம்கோ நகரில் இருந்து மீனம்பாக்கம் வரையில் மற்றொரு வழித்தடமும் செயல்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
இதனிடையே, மாதவரம்- சோழிங்கநல்லூர் வரையிலும், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நாளை முதல் மெட்ரோ ரெயில் பணிகளுக்கு தடை விதிப்பதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேயர் பிரியா கூறுகையில், சென்னையில் பண்டிகை கால கூட்ட நெரிசல் மற்றும் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு நாளை முதல் மெட்ரோ பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மழைக்காலம் முடிந்ததும் அடுத்தாண்டு ஜனவரி முதல் பணிகளை மேற்கொள்ள மெட்ரோ நிறுவனத்திற்கு அறிவுறுத்தினார்.
- ஒப்பந்தத்தில், கட்டுமானப் பணிகள், நிலையத்தின் வடிவமைப்பு அலங்கார வேலைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து பணிகளும் அடங்கும்.
- நுழைவு/வெளியேறும் இடங்களில், பயணிகள் பயன்படுத்தும் வகையில் கடைகள், வணிக வளாகங்கள் உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ரெயில் நிலையங்களில் 17 நுழைவு/வெளியேறும் கட்டமைப்புகளை உருவாக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், இரண்டாம் கட்டத்தின் வழித்தடம் 3-இல் உள்ள நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், PTC காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம் மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் 17 நுழைவு/வெளியேறும் கட்டமைப்புகளை (Entry/Exit Structures) வடிவமைத்து கட்டுவதற்கான ஒப்பந்தத்தை Bridge and Roof Company (India) Limited நிறுவனத்திற்கு ரூ.250.47 கோடி (ஜிஎஸ்டி உட்பட) மதிப்பில் வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில், கட்டுமானப் பணிகள் (civil works), நிலையத்தின் வடிவமைப்பு அலங்கார வேலைகள் (architectural finishes), மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து பணிகளும் அடங்கும். மேலும், மெட்ரோ ரெயில் நிலையங்களின் பெரும்பாலான நுழைவு/வெளியேறும் இடங்களில், பயணிகள் பயன்படுத்தும் வகையில் கடைகள், வணிக வளாகங்கள் போன்ற போக்குவரத்தை மையப்படுத்திய பிரத்யேக சொத்து மேம்பாட்டு இடங்களை (Transit Oriented Property Development - TOD) உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணச்சீட்டு வருவாயை தவிர்த்து, கூடுதல் வருவாயை (Non-Farebox Revenue) ஈட்ட முடியும்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் இ.ஆ.ப., முன்னிலையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பாக திட்ட இயக்குநர் திரு.தி.அர்ச்சுனன் மற்றும் Bridge and Roof Company (India) நிறுவனத்தின் சார்பாக பொது மேலாளர் திரு.T.ரவி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் திரு.டி.லிவிங்ஸ்டோன் எலியாசர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), டாக்டர். டி. ஜெபசெல்வின் கிளாட்சன் (ஒப்பந்தம் கொள்முதல்), சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரெயில் நிலைய வடிவமைப்பானது மேலே இருந்து பார்க்கும்போது ஒரு பிளஸ் அடையாளமாக தெரிகிறது.
- 6-வது முதல் 8-வது மாடி வரை மெட்ரோ ரெயில் அலுவலகம், சில்லறை விற்பனை நிலையங்கள் இடம்பெறும்.
சென்னை:
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. இதில் மாதவரம் முதல் சிப்காட் வரை 3-வது வழித்தடத்திலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்லும் வகையில் சோழிங்கநல்லூரில் உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த ரெயில் நிலையம் 2 வழித்தட மெட்ரோ ரெயில்களும் சந்திக்கும் இடமாகவும், ஒரு ரெயிலில் இருந்து இன்னொரு ரெயிலுக்கு மாறும் இடமாகவும் திகழ்கிறது. மேலும் இந்த மெட்ரோ ரெயில் நிலையம் தனித்துவமான வடிவமைப்பை கொண்டதாகவும், பல சுவாரசியமான அம்சங்கள் கொண்டதாகவும் அமைய உள்ளது.
இந்த ரெயில் நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் 8 மாடிகளை கொண்ட கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டிடம் வழியாக மெட்ரோ ரெயில்கள் செல்ல உள்ளன.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
சோழிங்கநல்லூரில் அமைய உள்ள 8 மாடி கட்டிடம் வழியாக மெட்ரோ ரெயில்கள் செல்ல உள்ளன. மாதவரம்- சோழிங்கநல்லூர் இடையேயான ரெயில்கள் மேல் நடைமேடையிலும், மாதவரம் - சிப்காட் இடையேயான மெட்ரோ ரெயில்கள் கீழ் நடைமேடையிலும் செல்லும். இதில் முதல் மட்டத்தில் ஒரு பிளாசா கட்டப்பட உள்ளது. 3-வது மட்டத்தில் மாதவரம் - சிப்காட் ரெயிலுக்கான நடைமேடையும், 4-வது மட்டத்தில் மாதவரம் - சோழிங்கநல்லூர் ரெயிலுக்கான நடைமேடையும் அமைய உள்ளது.
இந்த ரெயில் நிலைய வடிவமைப்பானது மேலே இருந்து பார்க்கும்போது ஒரு பிளஸ் அடையாளமாக தெரிகிறது. இதில் 2 வழித்தடங்களும் குறுக்காக கடப்பது போல் காணப்படுகிறது. பயணிகள் ஒரு வழித்தடத்தில் இருந்து இன்னொரு வழித்தடத்திற்கு மாறக்கூடிய வகையில் வசதி செய்யப்பட்டு உள்ளது.
சாலையில் இருந்து 28.8 மீட்டர் உயரத்தில் 5-வது வழித்தட ரெயிலுக்கான நடைபாதையும், அதற்கு கீழே சாலையில் இருந்து 21.8 மீட்டர் உயரத்தில் 3-வது வழித்தட ரெயிலுக்கான நடைபாதையும் கட்டப்படுகிறது. 8 மாடி கட்டிடத்தில், முதல் தளம் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்படுகிறது. ரெயில் 5-வது மாடி வழியாக செல்லும். 6-வது முதல் 8-வது மாடி வரை மெட்ரோ ரெயில் அலுவலகம், சில்லறை விற்பனை நிலையங்கள் இடம்பெறும்.
சோழிங்கநல்லூருக்கு அருகில் தற்போது கட்டப்பட்டு வரும் துரைப்பாக்கம் ரெயில் நிலையமும், சோழிங்கநல்லூரை போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரெயில்கள் உட்பட மொத்தம் 138 ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
- மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில் வரும் 2027 மார்ச் மாதத்தில் இயக்கப்படும்.
சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டம் 116 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் ரூ.63,246 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. மாதவரம் - சிப்காட், பூந்தமல்லி - லைட் ஹவுஸ், மற்றும் மாதவரம் - மணப்பாக்கம் ஆகிய வழித்தடங்களில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் வரும் 2028-ல் முடித்து, மெட்ரோ ரெயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரெயில்கள் உட்பட மொத்தம் 138 ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரெயில்களை நிறுத்தி பராமரிக்க மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இந்நிலையில் பூவிருந்தவல்லி - போரூர் இடையே 6 பெட்டிகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில் வரும் டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது.
மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில் வரும் 2027 மார்ச் மாதத்தில் இயக்கப்படும்.
வரும் 2026 ஜூனில் போரூர் - கோடம்பாக்கம் இடையே, கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே ரெயில் சேவை இயக்கப்படும். மெட்ரோ ரெயில் பாதையின் 2-ம் கட்டப்பணிகள் இறுதி நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இதுவரை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் எடுத்துக்கொண்ட சிறப்பு முயற்சிகளின் மூலம், 74% இழந்த பொருட்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளன.
- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயணத்தை வழங்க உறுதி மேற்கொண்டுள்ளது.
மெட்ரோவில் பயணத்தின்போது ஏதேனும் பொருட்கள் தவறவிட்டு மீட்கப்பட்டால், அவை தொடர்புடைய நிலையம் மூலமாகவோ அல்லது "இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகம்" (Lost & Found Office) மூலமாகவோ பெற முடியும். அதற்காக சென்ட்ரல் மெட்ரோவில் அலுவலகம் திறக்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பயணிகள் அனைவரும் தங்களின் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்துகிறது. அப்படி ஏதேனும் பொருட்களை தவறவிட்டால், அதற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பொறுப்பேற்காது. எனினும், பயணத்தின்போது ஏதேனும் பொருட்கள் தவறவிட்டு மீட்கப்பட்டால், அவை தொடர்புடைய நிலையம் மூலமாகவோ அல்லது "இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகம்" (Lost & Found Office) மூலமாகவோ பெற முடியும்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குநர் மனோஜ் கோயல், (அமைப்புகள் மற்றும் இயக்கம்), புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமசந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் "இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகத்தை" (Lost & Found Office) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் கோபிநாத் மல்லையா, (இயக்கம் மற்றும் பராமரிப்பு), பொது மேலாளர் திரு.எஸ்.சதீஷ்பிரபு, (இயக்கம் மற்றும் பராமரிப்பு), சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதுவரை, தனித்தனி மெட்ரோ நிலையங்கள் வாயிலாக பயணிகளுக்கு இழந்த பொருட்கள் மீட்டு தரப்பட்டது. இதுவரை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் எடுத்துக்கொண்ட சிறப்பு முயற்சிகளின் மூலம், 74% இழந்த பொருட்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளன. இப்போது இந்த அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளதால், பயணிகள் நேரடியாக சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் உள்ள இந்த அலுவலகத்தை அணுகி தங்களின் இழந்த பொருட்களை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த முயற்சி பயணிகள் வசதியை பெரிதும் மேம்படுத்தி, சிறந்த அணுகல் வசதி மற்றும் தடையற்ற அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இழந்த பொருட்கள் தொடர்பான கேள்விகளுக்கு தொடர்பு கொள்ள:
மின்னஞ்சல்: LFO@cmrl.in
இணையதளம்: https://chennaimetrorail.org/lost-and-found-enquiry
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயணத்தை வழங்க உறுதி மேற்கொண்டுள்ளது.
- சிஎம்ஆர்எல் மொபைல் செயலி, பேடிஎம், போன்பே, சிங்கார சென்னை கார்டு போன்ற முறைகள் மூலம் டிக்கெட்டுகளை பயணிகள் பெறலாம்.
- தகவல் வரும் வரை பயணிகள் கவுண்டரில் டிக்கெட்டுகளை பெறலாம்.
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறுவதில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளது.
சிஎம்ஆர்எல் மொபைல் செயலி, பேடிஎம், போன்பே, சிங்கார சென்னை கார்டு, சிஎம்ஆர்எல் பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளை பெற்று பயணிக்குமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும் தகவல் வரும் வரை பயணிகள் கவுண்டரிலும் டிக்கெட்டுகளை பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
- இரவு 8 மணி முதல் 10 வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரா ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காலை 8 முதல் 11 வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் காலை 8 மணி, காலை 11 மணி முதல் மாலை 5 மணி, இரவு 8 மணி முதல் 10 வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரெயில் சேவை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
- 19 மெட்ரோ ரெயில் நிலையங்கள், 3 மேம்பால சாலைகளுடன் இந்த திட்டம் அமைய இருக்கிறது.
சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விரைவான போக்குவரத்து சேவையை வழங்கும் வகையிலும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. அதன்படி, சென்னையில், 2 இடங்களில் மெட்ரோ ரெயில் சேவை செயல்பட்டு வருகிறது.
இதில், முதலாவது விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரையும், இரண்டாவது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில் சேவை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் சுமார் 118. 9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புற வழிச்சாலை வரை சுமார் 26. 1 கி.மீட்டர் தொலைவுக்கும், இதே போல, மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையில் சுமார் 45. 8 கிலோ மீட்டர் தொலைவுக்கும் மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீட்டர் தொலைவுக்கு மற்றொரு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் வரையிலான இந்த மெட்ரோ வழித்தடம் ரூ.9.928 கோடி மதிப்பீட்டில் 21.7 கி.மீ. தொலைவுக்கு அமைய உள்ளது. 19 மெட்ரோ ரெயில் நிலையங்கள், 3 மேம்பால சாலைகளுடன் இந்த திட்டம் அமைய இருக்கிறது.
இதற்கு மத்திய அரசும் தமிழக அரசும் ஏற்கனவே ஒப்புதல் தெரிவித்து இருந்த நிலையில், அந்த வழித்தடத்தில் நிலம் கையப்படுத்துவதற்கான பணிகளை தொடங்குவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக ரூ.2,442 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
- நமது நாட்டின் 79-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது.
- மெட்ரோ ரெயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும்.
நமது நாட்டின் 79-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மெட்ரோ ரெயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும்.
பீக் ஹவர்சான மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரெயில்கள் ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கும் கிடைக்கும்.
கூட்டம் குறைவான நேரங்களில் மெட்ரோ ரெயில்கள் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு இயக்கப்படும்.
நீட்டிக்கப்பட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் மெட்ரோ ரெயில்கள் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






