என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pongal festival"

    • கதிர் அறுவடை செய்து சூரியனுக்கு நன்றி செலுத்த கொண்டாடப்பட்டதே பொங்கல்.
    • இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகின்றது.

    உலக இந்துக்களால் வருட தொடக்கத்தில் கொண்டாடப்படும் பண்டிகையே தைப்பொங்கல் ஆகும். உழவர்களும், உழவுக் காளைகளுமே இந்தத் திருநாளின் நாயகர்கள்.

    கதிர் அறுவடை செய்து சூரியனுக்கு நன்றி செலுத்த கொண்டாடப்பட்டதே பொங்கல். சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர ராசியில் பயணிக்க தொடங்குவதையே தை மாதப் பிறப்பு என்கிறோம். இதையே மற்ற மாநிலத்தவர்கள் மகர சங்கராந்தி என்ற பெயரில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடுகிறார்கள்.

    அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகின்றது. இதன்படி இந்த ஆண்டு தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பது தொடர்பான விளக்கத்தை அறிந்துக்கொள்ளலாம்.

    நாளை மறுநாள் தைப்பொங்கல். சூரிய பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் காலை 6 மணிக்கு சூரியன் உதயமாவதற்கு முன்பு பொங்கல் வைத்து, சூரியபகவானுக்கு படைத்து வழிபடவேண்டும். இதுவே சூரிய பொங்கல் ஆகும். இதற்கு நல்ல நேரம் பார்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

    காலை 6 மணிக்கு மேல் பொங்கல் வைத்து வழிபட நினைப்பவர்கள் பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரத்தை கவனிக்க வேண்டும்.

    அதன்படி, காலை 6 மணிக்கு மேல் பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை 7. 45 மணி முதல் 8. 45 மணி வரை, 10.35 முதல் பகல் 1 மணிவரை.

    நல்ல நேரம் - காலை 10.30 முதல் 11 வரை, பிற்பகல் 1 மணி முதல் 01.30 வரை

    கெளரி நல்ல நேரம் - மாலை 06.30 முதல் 07.30 வரை

    எமகண்டம் - காலை 6 மணி முதல் 7.30 வரை

    ராகு காலம் - பிற்பகல் 01.30 முதல் மாலை 3 வரை

    • தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தவாறு உள்ளனர்.
    • புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மறுநாள் தைப்பொங்கல் சிறப்பு வழிபாடு செய்வதற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்தவாறு உள்ளனர்.

    தென் மாவட்டத்தை சேர்ந்த தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த முருக பக்தர்கள் ஆண்டு தோறும் தைப் பொங்கலுக்கு முன்பு பாதயாத்திரையாக முருகன் படம் வைத்து அலங்காரம் செய்யப்பட்ட வாகனங்கள் முன் ஆடி பாடி வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். அந்த வகையில் தற்போது தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தவாறு உள்ளனர்.

    அவர்கள் இன்று அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    தைப்பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மறுநாள் (15-ந்தேதி) கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது.

    1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    • 17-ஆம் நாள் மதுரை அலங்காநல்லூர் சென்று கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடங்கி வைக்கவுள்ளேன்.
    • 2026 பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக, திராவிடப் பொங்கலாக, நமக்கு வெற்றிப் பொங்கலாகப் பொங்கட்டும்!

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும்!

    கழகத்தினர் பொங்கல் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகளை எழுச்சியோடு நடத்திப் பரிசுகள் வழங்கிடுங்கள்.

    நாளை சென்னை சங்கமம் 2026 கலைவிழாவைச் சென்னையில் தொடங்கி வைக்கிறேன். 17-ஆம் நாள் மதுரை அலங்காநல்லூர் சென்று கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடங்கி வைக்கவுள்ளேன்.

    2026 பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக, திராவிடப் பொங்கலாக, நமக்கு வெற்றிப் பொங்கலாகப் பொங்கட்டும்! என்று கூறியுள்ளார். 



    • அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் தீட்டப்பட்டு சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டதை இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
    • மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளின் முதல் பண்டிகையாக, போகிப் பண்டிகை தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் (உழவர் திருநாள்) என 4 நாட்கள் விமரிசையாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.

    இந்த இனிய பொங்கல் திருநாளில், மக்கள் தங்களது மனமகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, வீட்டினுள்ளும், வாசலிலும் வண்ணக் கோலங்களினால் அலங்கரித்து, கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட விளை பொருட்களை வைத்து, புதுப்பானையில் அரிசியிட்டு, அது பொங்கும் போது 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாகக் குரலெழுப்பி இறைவனுக்குப் படைத்து வழிபடுவதோடு, தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளை அலங்கரித்து, பொங்கல் மற்றும் வாழைப் பழங்கள் உள்ளிட்ட உணவுகளை வழங்கி, தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

    உழவர்கள், தங்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் தீட்டப்பட்டு சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டதை இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

    தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அனைத்து வங்கி ஏ.டி.எம்.களிலும் பணம் தட்டுப்பாடு ஏற்படாமல் தினமும் நிரப்புவதற்கு வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மின்னணு பணபரிவர்த்தனை இருந்தாலும் ரொக்கமாக செலவிட கையில் பணம் தேவைப்படுகிறது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. மறுநாள் 16-ந்தேதி மாட்டுப்பொங்கல், 17-ந்தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.

    பொங்கலையொட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    வங்கிகள் 4 நாட்கள் செயல்படாது என்று அறிவித்துள்ளது. 15-ந்தேதி பொங்கல் முதல் 18-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும் தனியார் வங்கிகளும் செயல்படாது.

    வங்கிகள் 4 நாட்கள் மூடப்படுவதால் சேவைகள் கடுமையாக பாதிக்கக்கூடும். பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை பல ஆயிரம் கோடி நடைபெறாமல் முடங்கும். நாளை (புதன்கிழமை) மட்டுமே வங்கி செயல்படும் என்பதால் வர்த்தக பிரமுகர்கள், தொழில் நிறுவனங்கள் தங்களுடைய வங்கி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயாராகி வருகின்றனர்.

    பண்டிகை கால பணத் தேவையை சமாளிக்க ஏ.டி.எம். மையங்களில் முழு கொள்ளளவில் பணம் இருப்பு வைக்கப்பட்டாலும் அது விரைவாக காலியாகி விடுகிறது. எனவே அனைத்து வங்கி ஏ.டி.எம்.களிலும் பணம் தட்டுப்பாடு ஏற்படாமல் தினமும் நிரப்புவதற்கு வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மின்னணு பணபரிவர்த்தனை இருந்தாலும் ரொக்கமாக செலவிட கையில் பணம் தேவைப்படுகிறது. எனவே அனைத்து ஏடிஎம்-களும் பணம் இல்லாமல் காலியாக கிடக்காமல் அவற்றை கண்காணித்து பொதுமக்களின் தேவைக்கேற்ப பணத்தை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அனைத்து வங்கிகளும் தொடர்ந்து மூடப்படுவதால் பொதுமக்களுக்கு பெரும் சிரமங்கள் ஏற்படும். அவற்றை சமாளிக்க ஏ.டி.எம்.கள் மூலம் உதவி செய்ய வேண்டும். பணத்தை நிரப்பக்கூடிய தனியார் நிறுவனங்கள் இந்த பணியை முறையாக செய்ய வங்கி மேலாளர்கள் நாளை முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

    • பொங்கல் திருநாள் என்பது தமிழர்கள் அனைவருக்குமான திருவிழா.
    • தை முதல் நாளில், தமிழர்களின் இல்லங்கள்தோறும் மகிழ்ச்சி பொங்கட்டும்.

    சென்னை:

    பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து மடல்.

    தை முதல்நாள் தமிழர் வாழ்வில் சிறப்புமிக்க நாள். இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கிடும் பொங்கல் விழா தொடங்குகிற நன்னாள். உழைப்பைப் போற்றுகின்ற திருநாள். தமிழ்ப் பண்பாட்டை உலகம் அறிந்திடும் வகையில் மகிழ்ச்சியான கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் பாரம்பரியமிக்க விளையாட்டுப் போட்டிகளுமாகக் கொண்டாடப்படுகிற நாள். அந்த மகிழ்ச்சி இந்த ஆண்டில், இன்னும் கூடுதலாக இருப்பதை தமிழ்நாடு முழுவதும் காண முடிகிறது.

    கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் இயற்கையும் அரசு நிர்வாகமும் பருவம் தவறாமல் பணி செய்ததன் விளைவாக, விளைநிலங்கள் செழித்து, உழவர்களுடைய உழைப்பின் விளைச்சலையும், அதற்குரிய பலன்களையும் அதிகமாக்கியிருப்பதால் அவர்களின் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதும், விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் துணையாகவும் அரணாகவும் நின்றது உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசு.

    பொங்கல் திருநாள் என்பது தமிழர்கள் அனைவருக்குமான திருவிழா. அதில் சாதி பேதம் கிடையாது. மத வேறுபாடுகள் கிடையாது. ஏழை - பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு கிடையாது. பெண் - ஆண் என்ற பாகுபாடு கிடையாது. எல்லாருக்குமான திருநாள் பொங்கல். எல்லாருக்குமான அரசு, திராவிட மாடல்.

    ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா இரண்டாவது பேரலையின் கடுமையான தாக்கம், அதனைத் தொடர்ந்து நிரந்தரக் கொரோனா போல தாக்கிக் கொண்டே இருக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் தமிழ்நாட்டின் மீதான வஞ்சகம், அவ்வப்போது எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்கள் என எல்லாவற்றையும் கடந்து, தமிழ்நாடு இன்று பல்வேறு இலக்குகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. அதை ஒன்றிய அரசின் துறைகள் வெளியிடும் புள்ளிவிவரங்களும் தரவரிசைகளுமே உறுதிப்படுத்துகின்றன.

    ஐந்து ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் சென்று சேர்ந்து, அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பதுடன், ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியையும் உறுதி செய்துள்ளது. நிரந்தரத் தடைகளை ஏற்படுத்த முயலும் சக்திகளைக் கடந்து, நிரந்தர மகிழ்ச்சியை மக்களுக்குத் தருவதுதான் திராவிட மாடல் அரசின் உன்னத நோக்கமாகும்.

    திராவிட மாடல் அரசின் திட்டங்களை நாம் பட்டியலிட்டுச் சொல்வதைவிட, அதனால் பயனடைந்து வரும் மக்களும், இத்தகைய திட்டங்களால் தமிழ்நாடு கண்டுள்ள வளர்ச்சியை உணர்ந்துள்ள பல்வேறு துறைகளின் பிரமுகர்களும் தங்களின் உள்ளத்திலிருந்து பேசுவதை, 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு', 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்', 'உலகம் உங்கள் கையில்' உள்ளிட்ட நிகழ்வுகளில் கண்டோம். இதுதான் திராவிட மாடல் அரசு கட்டி எழுப்பியுள்ள இன்றைய தமிழ்நாடு. எனினும், இது போதாது என்பதே உங்களில் ஒருவனான என்னுடைய எண்ணம். இன்னும் பல உயர்வுகளை நாம் அடைந்திட வேண்டும். அதற்கேற்ப நம் அரசு உழைத்திடும். உழைக்கின்ற மக்களின் உணர்வுகளை மதித்திடும்.

    1 கோடியே 30 இலட்சம் குடும்பத் தலைவியருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வாயிலாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வரும் திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டில் உள்ள ஏறத்தாழ 2 கோடியே 23 இலட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கு மூவாயிரம் ரூபாய் ரொக்கத்துடனான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கியுள்ளது. தமிழர் திருநாளில், தமிழர்களின் வீடுகள்தோறும் மகிழ்ச்சி பொங்குகிற வகையில் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள இந்தப் பொங்கல் தொகுப்பைப் பெற்றுச் செல்லும் தாய்மார்களின் மலர்ந்த முகமும் அவர்களின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் நல்வாழ்த்துகளும்தான் திராவிட மாடல் ஆட்சிக்கான நற்சான்று.

    தமிழ்நாட்டின் பத்தாண்டுகால இருளை விரட்டி, விடியலைக் கொண்டு வந்த திராவிட மாடல் ஆட்சி அமைவதற்கு ஓயாது பாடுபட்டவர்கள் நம் உடன்பிறப்புகள். அந்த உடன்பிறப்புகளின் மனதிலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்பதால்தான் கழகத்தின் மாவட்ட – ஒன்றிய – நகர – பகுதி -பேரூர் கிளைகள் சார்பில் மாநிலம் முழுவதும் பொங்கல் விழாக்கள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கழகத்தினர் நடத்துகின்ற பொங்கல் விழாக்கள் பற்றிய செய்தி ஒவ்வொன்றையும் நான் ஆர்வத்துடன் கவனித்து வருகிறேன்.

    கழகத்தினருடன் பொதுமக்களும் இந்தப் பொங்கல் விழாக்களில் பங்கேற்று, திராவிடப் பொங்கலைக் கொண்டாடி வருவதைக் கண்டு உள்ளத்தில் மகிழ்ச்சி ததும்புகிறது. பொங்கல் விழாவையொட்டித் தலைமைக் கழகம் அறிவித்தவாறு, கழகத்தினர் சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை, தொடர்ந்து நடத்தி வருவதுடன், கோலப் போட்டிகளும் மிகப் பிரம்மாண்டமான முறையிலே நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    கோலப்போட்டிகளில் பங்கேற்கும் மகளிர் வண்ணக் வண்ணக் கோலங்களை வரைந்து, சமத்துவம் பொங்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும், திராவிட மாடல் அரசு தொடரட்டும் என்ற வாசகங்களை எழுதுவதும், கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், அதிலும் மகளிர் நலன் காக்கும் திட்டங்களையே வண்ணக் கோலங்களாக வரைந்து, பார்வையாளர்களின் கண்களை ஈர்த்து, நெஞ்சில் பதிய வைப்பதும் அருமையான நிகழ்வுகளாகத் தொடர்கின்றன.

    உங்களில் ஒருவனான என்னுடைய கொளத்தூர் தொகுதியிலும் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்டத்தில் துணை முதலமைச்சர் தம்பி உதயநிதி பங்கேற்ற பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் கழக நிர்வாகிகள் நடத்துகிற ஒவ்வொரு பொங்கல் விழாவும் தமிழ் மணத்துடனும் தமிழர் பண்பாட்டுத் திறத்துடனும் கொண்டாடப்படுகின்றன.

    கழகம் நடத்துகின்ற பொங்கல் விழாக்களில் வழங்கப்படும் அன்பான பரிசுகள், அனைத்து நிர்வாகிகளுக்கும், செயல் வீரர்களுக்கும், அல்லும் பகலும் அயராது பணியாற்றும் உடன்பிறப்புகளின் கைகளுக்கும் சென்று சேர வேண்டும் என்பதை உங்களில் ஒருவனாக உரிமையுடன் தெரிவித்திடக் கடமைப்பட்டுள்ளேன்.

    தமிழரின் தனிப்பெரும் திருவிழாவாக பொங்கலைக் கொண்டாடும் பண்பாட்டு மரபை மீட்டெடுத்ததில் திராவிட இயக்கத் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோருக்கு முதன்மையான பங்கு உண்டு. மாநகரம் தொடங்கி சிறு கிராமம் வரை தமிழர்களின் மரபை உணர்த்திடும் வகையிலான கலை - இலக்கிய நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் ஆகியவற்றை நடத்துவதை திராவிட அரசியல் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் முக்கால் நூற்றாண்டு காலமாகக் கடைப்பிடித்து வருகிறது.

    தமிழ் இனத்தின் பண்பாட்டுப் பெருமைகளில் ஒன்றான, ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் நிகழ்வைப் பார்ப்பதற்கு உங்களில் ஒருவனான நான், உங்களால் தமிழ்நாட்டு முதலமைச்சரான நான் ஜனவரி 17-ஆம் நாள் அதாவது, தை மாதம் 3-ஆம் நாள் மதுரை அலங்காநல்லூருக்கு நேரில் செல்கிறேன். அந்த அலங்காநல்லூரில் உலகத்தரத்திலான ஏறுதழுவுதல் அரங்கத்தை நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் அவரது நூற்றாண்டு நினைவாக அமைத்துத் திறந்ததும் நமது திராவிட மாடல் அரசுதான்.

    தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட தமிழர் பண்பாட்டு நிகழ்வான சென்னை சங்கமம் நிகழ்வை, இந்த ஆண்டும் பொங்கல் விழாவின்போது கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் தங்கை கனிமொழி கருணாநிதி எம்.பி. முன்னின்று நடத்துகிறார். தமிழர்களின் கலைத்திறனைக் காட்டும் பாரம்பரியக் கலைகள் அரங்கேறும் சென்னை சங்கமம் நிகழ்வையும் உங்களில் ஒருவனான நான் ஜனவரி 14 அன்று தொடங்கி வைக்க இருக்கிறேன். சென்னை மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் சென்னை சங்கமம் 2026 கலைவிழாக்களில் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, நம் மண்ணின் மரபார்ந்த நாட்டுப்புறக் கலைவடிவங்களையும் கலைஞர்களையும் ஆதரித்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

    தை முதல் நாளில், தமிழர்களின் இல்லங்கள்தோறும் மகிழ்ச்சி பொங்கட்டும். அந்த மகிழ்ச்சி நம் அனைவருக்கும் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் வழங்கட்டும். சூரியனைப் போற்றும் பொங்கல் நன்னாள், உடன்பிறப்புகளின் உழைப்பினால் கழகத்திற்கு வெற்றிப் பொங்கலாக அமையட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! என கூறியுள்ளார். 

    • தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18, 2026ந் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தது.
    • தொகுதி வாரியாக பரிசீலிக்கும் போது பல குளறுபடிகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக கருதுகிறோம்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணிகளுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - CPIM வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டு பணிகளை செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18, 2026ந் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தது.

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டியும், தொடர் விடுமுறையின் காரணமாகவும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதால் இப்பணியை ஜனவரி 28, 2026ந் தேதி வரை நீட்டிப்பு செய்திடவும்.

    2026 ஜனவரி 24, 25, தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்திடவும், எஸ்.ஐ.ஆர். பணியில் பெயர் நீக்கப் பட்டியலில் உள்ள குளறுபடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஆறுமுக நயினார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்களை இன்று (12.01.2026) நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

    இக்கோரிக்கையினை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைப்பதாக அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். (கடிதமும், ஆய்வுக்குழு குறிப்பும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)

    இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சி / ஊடகங்களில் செய்தி வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.

    வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் ஆகியவற்றிற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18, 2026ந் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. பிப்ரவரி 17. 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிப்பு செய்திருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டியும். தொடர் விடுமுறையின் காரணமாகவும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். எனவே. ஜனவரி 10ந் தேதியிலிருந்து 18ந் தேதி வரை இப்பணிகள் மேற்கொள்வதற்கும். பொதுமக்கள் இந்த நடவடிக்கையில் கலந்து கொள்வதற்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் பல லட்சம் வாக்காளர்கள் விடுபடும் அபாயம் உள்ளது.

    வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம், இணைப்பு, ஆட்சேபணைகள் மீது முடிவெடுப்பது ஆகியவற்றிற்கு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கால அவகாசத்தை குறைந்தபட்சம் 10 நாட்கள் நீட்டித்து 2026 ஜனவரி 28-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதனைப் பயன்படுத்தி 2026 ஜனவரி 24,25 தேதிகளில் சிறப்பு முகாம் நடத்திட கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியில் வெளியிடப்பட்டிருந்த வரைவு வாக்காளர் பட்டியலுக்கும். 2025 ஜனவரியில் வெளியிடப்பட்டிருந்த இறுதி வாக்காளர் பட்டியலுக்கும் இடையில் ஒப்பீடு செய்யும் போது நீக்கப்பட்டவர்கள், இணைக்கப்பட்டவர்கள் ஆகிய எண்ணிக்கையும் சேர்த்து பாகம் வாரியாக / தொகுதி வாரியாக பரிசீலிக்கும் போது பல குளறுபடிகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக கருதுகிறோம்.

    அதுகுறித்த எங்களுடைய கணிணி ஆய்வுக்குழு நடந்திய உண்மை காணும் அறிக்கையில் வந்துள்ள விபரங்களை ஒரு குறிப்பாக இத்துடன் இணைத்துள்ளோம். இதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16,17, 18, 19 ஆகிய 4 நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    அந்த வகையில், பொங்கல் பண்டிகைக்காக கடந்த 9-ந்தேதி முதல் நேற்று இயக்கப்பட்ட 8,270 பேருந்துகளில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 496 பேர் தங்களது சொந்து ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இதுவரை 2,38,535 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர்.

    அதேபோல், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16,17, 18, 19 ஆகிய 4 நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

    • கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு கிரிஸ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை டெல்லி மேலிடம் நியமித்துள்ளது.
    • இப்போது சென்ஷார் போர்டையும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுத்து உள்ளது. இதைத்தான் காங்கிரஸ் கண்டிக்கிறது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் இந்த முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கூட்டணி விவகாரங்கள் தொடர்பாக கட்சி மேலிடம், முடிவெடுக்கட்டும். பொது வெளியில் எதையும் பேச வேண்டாம் என்று ஒரு தரப்பு பேசி வருகிறது.

    காங்கிரசுக்குள் இப்படி 2 பிரிவாக செயல்பட்டு வரும் நிலையில், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 'ஜனநாயகன் பொங்கல்' என்ற பெயரில் காங்கிரசில் ஒரு பிரிவினர் இன்று மாலை கோயம்பேட்டில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளார்கள்.

    இந்த நிகழ்ச்சிக்கு இந்த கோரிக்கையை விரும்பும் நிர்வாகிகளும், தொண்டர்களும் வர வேண்டும் என்று அழைப்பும் விடுக்கப்பட்டு உள்ளது. இது காங்கிரசுக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தனியாக இவ்வாறு நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாகவும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமா? என்பது குறித்தும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறும்போது, கோயம்பேட்டில் இன்று நடக்கும் நிகழ்ச்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதில் கூட்டணி விவகாரங்கள் பற்றி பேசினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொதுவாக தொண்டர்களின் கருத்துக்கள், கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் பொதுவெளியில் பேசுவது கூட்டணிக்குத்தான் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு கிரிஸ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை டெல்லி மேலிடம் நியமித்துள்ளது.

    இந்த குழுவினர் தி.மு.க.வுடன் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஏற்கனவே சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இப்போது சென்ஷார் போர்டையும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுத்து உள்ளது. இதைத்தான் காங்கிரஸ் கண்டிக்கிறது.

    கடலூர் மாநாட்டில் விஜயபிரபாகரன், விஜய்க்கு ஒரு ஆலோசனை சொல்வதாக சொல்லி காங்கிரஸ் பற்றி பேசியுள்ளார். காங்கிரஸ் ஒருபோதும் கொல்லை புறமாக செயல்படாது. இதைப்புரிந்து கொள்ளக்கூடியவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றார்.

    பேட்டியின் போது முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், ராம் மோகன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., திருவொற்றியூர் சுகுமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
    • தேர்தல் களத்தில் ஆற்ற வேண்டிய பணிகளில் 50 சதவீத பணிகள் மீதம் இருக்கிறது.

    கொளத்தூர்:

    சென்னை கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:-

    * தமிழர் திருநாளான பொங்கலை எழுச்சியுடன் கொண்டாடி வருகிறோம்.

    * கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது எனர்ஜி வருகிறது.

    * தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

    * தேர்தல் களத்தில் ஆற்ற வேண்டிய பணிகளில் 50 சதவீத பணிகள் மீதம் இருக்கிறது.

    * தி.மு.க.வினரை போல் யாரும் வேலை செய்ய முடியாது என பா.ஜ.க.வினரே புகழ்கின்றனர்.

    * 200 தொகுதிகளையும் தாண்டி தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

    * தேர்தலில் 200 தொகுதிகளையும் தாண்டி வெற்று பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். 

    • விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    • விழாவில் பங்கேற்ற பெண்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் "திராவிட பொங்கல் விழா" கொண்டாட வேண்டும் என்று தி.மு.க. நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

    அதன்படி தி.மு.க. சார்பில் மாவட்டம் தோறும் "திராவிட பொங்கல் விழா" கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் இன்று காலை "திராவிட பொங்கல் விழா" மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்பதற்காக அவர்கள் இன்று காலை வருகை தந்தனர்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அங்கு திரண்டிருந்த பெண்கள் நினைவு பரிசு கொடுத்து வரவேற்றனர். பொங்கல் விழா நடைபெறும் இடம் கரும்பு மற்றும் வாழைத் தோரணங்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    மிகப்பெரிய பொங்கல் பானை அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது. அங்கு பசு மற்றும் கன்று ஆகியவையும் நின்று கொண்டு இருந்தது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகிய இருவரும் பசுவுக்கும், கன்றுக்கும் வாழைப்பழம் ஊட்டினார்கள். பின்னர் அங்கு பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் இருவரும் பொங்கல் வைத்தனர். பொங்கல் வைத்து முடித்ததும் அங்கிருந்தவர்களுக்கு பொங்கல் வழங்கினார்கள்.

    அதன் பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    மேலும் விழாவில் பங்கேற்ற பெண்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. மொத்தம் 8,456 பேருக்கு பொங்கல் பொருட்கள், புத்தாடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

    விழாவில் பங்கேற்ற பெண்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பெண்கள் அனைவருமே ஒரே மாதிரியான புடவை அணிந்து இருந்தனர்.

    இந்த விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16,17, 18, 19 ஆகிய 4 நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூா்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் நிர்வாக இயக்குனர் தசரதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    அதன்படி சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை , மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் (நடைமேடை எண்-7), அரியலூர் , ஜெயங்கொண்டம் (நடைமேடை எண்-8) திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் (நடைமேடை எண்-5) ஆகிய ஊர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 450 கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேபோல் 10-ந்தேதி 450 கூடுதல் பஸ்களும், 11-ந்தேதி 100 கூடுதல் பஸ்கள், 12-ந்தேதி 750 கூடுதல் பஸ்கள், 13-ந்தேதி 850 கூடுதல் பஸ்கள், 14-ந்தேதி 800 கூடுதல் பஸ்களும் இயக்கப்படும்.

    மேலும், திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய ஊர்களுக்கும், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) 250 கூடுதல் பஸ்களும், 10-ந்தேதி 250 கூடுதல் பஸ்களும் 11-ந்தேதி 150 கூடுதல் பஸ்கள், 12-ந்தேதி 250 கூடுதல் பஸ்கள், 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் 575 கூடுதல் பஸ்களும் இயக்கப்படும்.

    அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16,17, 18, 19 ஆகிய 4 நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை ஒழுங்குப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுள்ளது. 

    ×