என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai metro"

    • சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில் மெட்ரோ ரெயில் பழுதாகி நின்றது.
    • சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மெட்ரோ ரெயில் பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி வந்த மெட்ரோ ரெயில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் செய்வதறியாது தவித்தனர்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில் மெட்ரோ ரெயில் பழுதாகி நின்றது. சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் திடீரென பழுதாகி நின்றதால் பயணிகள் பீதியடைந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து அறிந்து வந்த தொழில்நுட்ப நிபுணர்கள் கோளாறை சரி செய்தனர். இதன்பின் மெட்ரோ ரெயில் சேவையானது சீரானது.

    சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மெட்ரோ ரெயில் பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

    • போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • மழைக்காலம் முடிந்ததும் அடுத்தாண்டு ஜனவரி முதல் பணிகளை மேற்கொள்ள மெட்ரோ நிறுவனத்திற்கு அறிவுறுத்தினார்.

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் செயல்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மீனம்பாக்கம் வரையில் ஒரு வழித்தடமும், விம்கோ நகரில் இருந்து மீனம்பாக்கம் வரையில் மற்றொரு வழித்தடமும் செயல்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

    இதனிடையே, மாதவரம்- சோழிங்கநல்லூர் வரையிலும், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், நாளை முதல் மெட்ரோ ரெயில் பணிகளுக்கு தடை விதிப்பதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேயர் பிரியா கூறுகையில், சென்னையில் பண்டிகை கால கூட்ட நெரிசல் மற்றும் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு நாளை முதல் மெட்ரோ பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மழைக்காலம் முடிந்ததும் அடுத்தாண்டு ஜனவரி முதல் பணிகளை மேற்கொள்ள மெட்ரோ நிறுவனத்திற்கு அறிவுறுத்தினார். 

    • ரெயில் நிலைய வடிவமைப்பானது மேலே இருந்து பார்க்கும்போது ஒரு பிளஸ் அடையாளமாக தெரிகிறது.
    • 6-வது முதல் 8-வது மாடி வரை மெட்ரோ ரெயில் அலுவலகம், சில்லறை விற்பனை நிலையங்கள் இடம்பெறும்.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. இதில் மாதவரம் முதல் சிப்காட் வரை 3-வது வழித்தடத்திலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த திட்டத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்லும் வகையில் சோழிங்கநல்லூரில் உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

    இந்த ரெயில் நிலையம் 2 வழித்தட மெட்ரோ ரெயில்களும் சந்திக்கும் இடமாகவும், ஒரு ரெயிலில் இருந்து இன்னொரு ரெயிலுக்கு மாறும் இடமாகவும் திகழ்கிறது. மேலும் இந்த மெட்ரோ ரெயில் நிலையம் தனித்துவமான வடிவமைப்பை கொண்டதாகவும், பல சுவாரசியமான அம்சங்கள் கொண்டதாகவும் அமைய உள்ளது.

    இந்த ரெயில் நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் 8 மாடிகளை கொண்ட கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டிடம் வழியாக மெட்ரோ ரெயில்கள் செல்ல உள்ளன.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    சோழிங்கநல்லூரில் அமைய உள்ள 8 மாடி கட்டிடம் வழியாக மெட்ரோ ரெயில்கள் செல்ல உள்ளன. மாதவரம்- சோழிங்கநல்லூர் இடையேயான ரெயில்கள் மேல் நடைமேடையிலும், மாதவரம் - சிப்காட் இடையேயான மெட்ரோ ரெயில்கள் கீழ் நடைமேடையிலும் செல்லும். இதில் முதல் மட்டத்தில் ஒரு பிளாசா கட்டப்பட உள்ளது. 3-வது மட்டத்தில் மாதவரம் - சிப்காட் ரெயிலுக்கான நடைமேடையும், 4-வது மட்டத்தில் மாதவரம் - சோழிங்கநல்லூர் ரெயிலுக்கான நடைமேடையும் அமைய உள்ளது.

    இந்த ரெயில் நிலைய வடிவமைப்பானது மேலே இருந்து பார்க்கும்போது ஒரு பிளஸ் அடையாளமாக தெரிகிறது. இதில் 2 வழித்தடங்களும் குறுக்காக கடப்பது போல் காணப்படுகிறது. பயணிகள் ஒரு வழித்தடத்தில் இருந்து இன்னொரு வழித்தடத்திற்கு மாறக்கூடிய வகையில் வசதி செய்யப்பட்டு உள்ளது.

    சாலையில் இருந்து 28.8 மீட்டர் உயரத்தில் 5-வது வழித்தட ரெயிலுக்கான நடைபாதையும், அதற்கு கீழே சாலையில் இருந்து 21.8 மீட்டர் உயரத்தில் 3-வது வழித்தட ரெயிலுக்கான நடைபாதையும் கட்டப்படுகிறது. 8 மாடி கட்டிடத்தில், முதல் தளம் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்படுகிறது. ரெயில் 5-வது மாடி வழியாக செல்லும். 6-வது முதல் 8-வது மாடி வரை மெட்ரோ ரெயில் அலுவலகம், சில்லறை விற்பனை நிலையங்கள் இடம்பெறும்.

    சோழிங்கநல்லூருக்கு அருகில் தற்போது கட்டப்பட்டு வரும் துரைப்பாக்கம் ரெயில் நிலையமும், சோழிங்கநல்லூரை போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • புரிந்துணர்வு ஒப்பந்த பணிகள் 3 மாதத்தில் நிறைவு பெற உள்ளது.
    • தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று ரெயில்வே அமைச்சகம் இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.

    சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடன் பறக்கும் ரெயில் சேவையை இணைக்க மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இதையடுத்து புரிந்துணர்வு ஒப்பந்த பணிகள் 3 மாதத்தில் நிறைவு பெற உள்ளது. பறக்கும் ரெயில் திட்டத்தை சென்னை மெட்ரோவுடன் இணைக்கும் பணிகள் நடப்பாண்டுக்குள் முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று ரெயில்வே அமைச்சகம் இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.

    பறக்கும் ரெயில் தண்டவாளங்கள், பாலங்கள், சமிக்ஞை, மின்மயமாக்கல், நிலம், கட்டிடங்கள் போன்றவற்றை தமிழக அரசு பராமரிக்கும்.

    சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி MRTS வழித்தடம் வரை அனைத்தும் சென்னை மெட்ரோ நிர்வாகம் வசம் வரும்.

    • 41 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் CMRL பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது
    • QR பயணச்சீட்டுகள் மற்றும் பிற பயணச்சீட்டு பெறும் முறைகள் வழக்கம்போல் தொடரும்.

    ஆகஸ்ட் 1 முதல் பழைய பயண அட்டையை பயன்படுத்த முடியாது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " மெட்ரோ இரயில் நிலையங்களில் CMRL பயண அட்டை (Travel Card) பயன்பாட்டிலிருந்து தேசியபொது போக்குவரத்து அட்டைக்கு (NCMC Card - சிங்கார சென்னை அட்டை) மாற்றப்படவுள்ளது.

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில்களில் பயணிக்க CMRL பயணஅட்டையுடன் கூடுதலாக 14.04.2023 முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டையை (NCMC Card -சிங்கார சென்னை அட்டை) அறிமுகப்படுத்தியது. 01.08.2025 முதல் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (NCMC) முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது. அதன்படி, 41 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் CMRL பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது. QR பயணச்சீட்டுகள் மற்றும் பிற பயணச்சீட்டு பெறும் முறைகள் வழக்கம்போல் தொடரும்.

    பயணிகள், தங்களது பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளவும். மேலும், பயண அட்டையின் இருப்புத் தொகை குறைந்தபட்ச மதிப்பை (ரூ.50/-க்கும் குறைவாக) அடையும் போது, CMRL பயண அட்டையை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயணச்சீட்டு கவுண்டர்களில் ஒப்படைத்து விட்டு இதற்குப் பதிலாக, பயணிகள் தேசியபொது போக்குவரத்து அட்டையை (NCMC) எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன், பழைய பயண அட்டையின் வைப்புத்தொகை மற்றும் மீதமுள்ள தொகை புதிய தேசிய பொதுபோக்குவரத்து அட்டைக்கு (NCMC) மாற்றி கொண்டு பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம்.

    • பறக்கும் ரெயில் திட்டம் முழுமை அடைந்து செயல்பாட்டுக்கு வரும்போது மெட்ரோ ரெயில் திட்டத்துடன் இணைக்க வழிவகை காணப்படும்.
    • ஆலந்தூர் மெட்ரோ-பறக்கும் ரெயில் இணைப்பு திட்டம் இந்த ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வந்து விடும்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை பறக்கும் ரெயில் திட்டத்துடன் இணைக்க பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

    அண்மையில் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடியை சந்தித்தும் பேசினார்.

    இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு நலன் சார்ந்த திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். இது தொடர்பாக மனுவும் வழங்கினார்.

    அதில் உள்ள முக்கிய முன்னுரிமைகளில் சென்னை மெட்ேரா ரெயில் பறக்கும் ரெயில் திட்டம் இணைப்பை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த சந்திப்புக்கு பிறகு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று இந்த திட்டத்தின் பணிகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பறக்கும் ரெயில் திட்டத்தில் வேளச்சேரி-ஆலந்தூர் இடையே 500 மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட பாலம் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் இருப்பதாகவும் பறக்கும் ரெயில் திட்டம் முழுமை அடைந்து செயல்பாட்டுக்கு வரும்போது மெட்ரோ ரெயில் திட்டத்துடன் இணைக்க வழிவகை காணப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆலந்தூர் மெட்ரோ-பறக்கும் ரெயில் இணைப்பு திட்டம் இந்த ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வந்து விடும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • சிலர் காயமடைந்திருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கிறது.
    • காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகளின் போது, ராமாபுரம் அருகே இணைப்பு பாலம் சரிந்து விழுந்ததில் அவ்வழியே பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்ததாகவும் மேலும் சிலர் காயமடைந்திருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கிறது.

    உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். 

    • ராமாபுரம் டி.எல்.எப் அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்தது.
    • இந்த விபத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.

    இதில் பூந்தமல்லி-போரூர் இடையே ரெயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில், சென்னை போரூர் டி.எல்.எப் - எல் அண்ட் டி அருகே மெட்ரோ ரெயில் பணியின்போது இரண்டு மெட்ரோ தூண்களுக்கு இடையே தண்டவாள டிராக் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

    மெட்ரோ தூண்கள் விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
    • அதிகபட்சமாக 30.04.2025 அன்று 3,49,675 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 87,59,587 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 30.04.2025 அன்று 3,49,675 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    2025, ஏப்ரல் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 6,15,850 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 1,447 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 128 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 39,11,883 பயணிகள் (Online QR 1,45,753; Paper QR 19,12,904; Static QR 2,65,787; Whatsapp - 5,83,351; Paytm 4,09,358; PhonePe – 3,29,949; ONDC – 2,64,781), சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 42,30,279 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.

    மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளது. 

    • நாளை மதியம் சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
    • அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை (ஏப்ரல் 05, 2025 ஆம் தேதி) நடைபெற உள்ள "IPL 2025" கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

    IPL போட்டிகான நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் (both Digital & Physical) தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.

    எந்த மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ ரெயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.

    அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி செல்லும் கடைசி மெட்ரோ ரெயில் 23:27 மணிக்கு புறப்படும். பயணிகள் கடைசி மெட்ரோ ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள், அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்லும் கடைசி இணைப்பு ரெயில் 22:59 மணிக்கும் மற்றும் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்லும் கடைசி இணைப்பு ரெயில் 22:44 மணிக்கும் புறப்படும்.

    புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். IPL 2025 போட்டியை காண செல்பவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    • இந்த சிறப்பு சலுகையை ஒரு சுற்றுப் பயணத்துக்கு பயன்படுத்தலாம்.
    • ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இன்று பிரேசில் லெஜண்ட்ஸ்-இந்திய லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையில் கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது. கால்பந்து போட்டிக்கான பயணச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த பிரத்யேக மெட்ரோ பயணம் வழங்கப்படும்.

    கால்பந்து போட்டிக்கு வருபவர்கள் போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளில் உள்ள தனித்துவமான கியூ ஆர்-கோர்டு குறியீட்டை தானியங்கி நுழைவு எந்திரத்தில் 'ஸ்கேன்' செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகையை ஒரு சுற்றுப் பயணத்துக்கு பயன்படுத்தலாம்.

    ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்க தேசிய அளவிலான ஒப்பந்தப்புள்ளியை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கோரியுள்ளது.
    • ஒரு மணி நேரத்தில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய மிக அதிவேக ரெயில் சேவையை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, 'தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வழியாக கிண்டி வரை 21 கிலோ மீட்டர் தூரத்துக்கும், கலங்கரை விளக்கத்தில் இருந்து தலைமைச் செயலகம் வழியாக சென்னை ஐகோர்ட்டு வரை 6 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத்தில் நீட்டிப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக இந்த வழித்தடத்தின் நீளம் எவ்வளவு? எத்தனை ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்?, இந்த திட்டத்திற்கு ஏற்படும் செலவு? உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்க தேசிய அளவிலான ஒப்பந்தப்புள்ளியை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கோரியுள்ளது.

    அதேபோல், பட்ஜெட் அறிவிப்பின்படி ஒரு மணி நேரத்தில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய மிக அதிவேக ரெயில் சேவையை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து செங்கல்பட்டு வழியாக திண்டிவனத்திற்கு சுமார் 167 கிலோ மீட்டர் தூரத்திற்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரெயில் சேவையை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வழியாக வேலூருக்கு 140 கிலோ மீட்டர் தூரத்திற்கு 160 கிலோமீட்டர் வேகத்திலும், கோயம்புத்தூரில் இருந்து திருப்பூர் ஈரோடு வழியாக சேலத்திற்கு 185 கிலோ மீட்டர் தூரத்திற்கும் விரைவு ரெயில் சேவையை தொடங்குவதற்கான, விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரெயில் நிறுனம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

    இந்த 3 வழித்தடங்களில் விரைவு ரெயில் சேவையை உருவாக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கை பெறப்பட்ட உடன் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அதிகாரிகள் கூறினர்.

    ×