என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சோழிங்கநல்லூரில் 2 வழித்தடங்களிலும் 8 மாடி கட்டிடத்தின் வழியாக மெட்ரோ ரெயில்கள் செல்லும்
- ரெயில் நிலைய வடிவமைப்பானது மேலே இருந்து பார்க்கும்போது ஒரு பிளஸ் அடையாளமாக தெரிகிறது.
- 6-வது முதல் 8-வது மாடி வரை மெட்ரோ ரெயில் அலுவலகம், சில்லறை விற்பனை நிலையங்கள் இடம்பெறும்.
சென்னை:
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. இதில் மாதவரம் முதல் சிப்காட் வரை 3-வது வழித்தடத்திலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்லும் வகையில் சோழிங்கநல்லூரில் உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த ரெயில் நிலையம் 2 வழித்தட மெட்ரோ ரெயில்களும் சந்திக்கும் இடமாகவும், ஒரு ரெயிலில் இருந்து இன்னொரு ரெயிலுக்கு மாறும் இடமாகவும் திகழ்கிறது. மேலும் இந்த மெட்ரோ ரெயில் நிலையம் தனித்துவமான வடிவமைப்பை கொண்டதாகவும், பல சுவாரசியமான அம்சங்கள் கொண்டதாகவும் அமைய உள்ளது.
இந்த ரெயில் நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் 8 மாடிகளை கொண்ட கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டிடம் வழியாக மெட்ரோ ரெயில்கள் செல்ல உள்ளன.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
சோழிங்கநல்லூரில் அமைய உள்ள 8 மாடி கட்டிடம் வழியாக மெட்ரோ ரெயில்கள் செல்ல உள்ளன. மாதவரம்- சோழிங்கநல்லூர் இடையேயான ரெயில்கள் மேல் நடைமேடையிலும், மாதவரம் - சிப்காட் இடையேயான மெட்ரோ ரெயில்கள் கீழ் நடைமேடையிலும் செல்லும். இதில் முதல் மட்டத்தில் ஒரு பிளாசா கட்டப்பட உள்ளது. 3-வது மட்டத்தில் மாதவரம் - சிப்காட் ரெயிலுக்கான நடைமேடையும், 4-வது மட்டத்தில் மாதவரம் - சோழிங்கநல்லூர் ரெயிலுக்கான நடைமேடையும் அமைய உள்ளது.
இந்த ரெயில் நிலைய வடிவமைப்பானது மேலே இருந்து பார்க்கும்போது ஒரு பிளஸ் அடையாளமாக தெரிகிறது. இதில் 2 வழித்தடங்களும் குறுக்காக கடப்பது போல் காணப்படுகிறது. பயணிகள் ஒரு வழித்தடத்தில் இருந்து இன்னொரு வழித்தடத்திற்கு மாறக்கூடிய வகையில் வசதி செய்யப்பட்டு உள்ளது.
சாலையில் இருந்து 28.8 மீட்டர் உயரத்தில் 5-வது வழித்தட ரெயிலுக்கான நடைபாதையும், அதற்கு கீழே சாலையில் இருந்து 21.8 மீட்டர் உயரத்தில் 3-வது வழித்தட ரெயிலுக்கான நடைபாதையும் கட்டப்படுகிறது. 8 மாடி கட்டிடத்தில், முதல் தளம் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்படுகிறது. ரெயில் 5-வது மாடி வழியாக செல்லும். 6-வது முதல் 8-வது மாடி வரை மெட்ரோ ரெயில் அலுவலகம், சில்லறை விற்பனை நிலையங்கள் இடம்பெறும்.
சோழிங்கநல்லூருக்கு அருகில் தற்போது கட்டப்பட்டு வரும் துரைப்பாக்கம் ரெயில் நிலையமும், சோழிங்கநல்லூரை போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






