என் மலர்
நீங்கள் தேடியது "சென்ட்ரல் பறக்கும் ரெயில்"
- பறக்கும் ரெயில் திட்டம் முழுமை அடைந்து செயல்பாட்டுக்கு வரும்போது மெட்ரோ ரெயில் திட்டத்துடன் இணைக்க வழிவகை காணப்படும்.
- ஆலந்தூர் மெட்ரோ-பறக்கும் ரெயில் இணைப்பு திட்டம் இந்த ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வந்து விடும்.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை பறக்கும் ரெயில் திட்டத்துடன் இணைக்க பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடியை சந்தித்தும் பேசினார்.
இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு நலன் சார்ந்த திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். இது தொடர்பாக மனுவும் வழங்கினார்.
அதில் உள்ள முக்கிய முன்னுரிமைகளில் சென்னை மெட்ேரா ரெயில் பறக்கும் ரெயில் திட்டம் இணைப்பை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று இந்த திட்டத்தின் பணிகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பறக்கும் ரெயில் திட்டத்தில் வேளச்சேரி-ஆலந்தூர் இடையே 500 மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட பாலம் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் இருப்பதாகவும் பறக்கும் ரெயில் திட்டம் முழுமை அடைந்து செயல்பாட்டுக்கு வரும்போது மெட்ரோ ரெயில் திட்டத்துடன் இணைக்க வழிவகை காணப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆலந்தூர் மெட்ரோ-பறக்கும் ரெயில் இணைப்பு திட்டம் இந்த ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வந்து விடும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் பயணிகள் விரைவு போக்குவரத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர் மட்ட பாதையிலும், திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ் வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.
சென்ட்ரலில் பிரம்மாண்ட மெட்ரோ சுரங்க ரெயில் நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.400 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.
இங்கு சென்ட்ரலில் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள், மூர்மார்க்கெட் புறநகர் ரெயில் பயணிகள், பூங்கா நகர் பறக்கும் ரெயில் பயணிகள், மெட்ரோ ரெயில் பயணிகள் ஆகியோர் எளிதில் செல்லும் வகையில் அதிநவீன இணைப்பு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
45 மீட்டர் நீளம் 11 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படும் இந்த சுரங்கப்பாதை இன்னும் 3 மாதங்களில் பயணிகள் வசதிக்காக திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் பயணிகள் ஒரே நேரத்தில் மெட்ரோ ரெயில் நிலையம், மின்சார ரெயில் நிலையம், பறக்கும் ரெயில் நிலையம், எக்ஸ்பிரஸ் ரெயில் நிலையத்துக்கு எளிதில் செல்ல முடியும்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். மெட்ரோ ரெயில், பறக்கும் ரெயில், மின்சார ரெயில், எக்பிரஸ் ரெயில் நிலையத்துக்கு மக்கள் எளிதில் செல்லும் வகையில் பூமிக்கடியில் பிரம்மாண்ட சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இன்னும் 3 மாதங்களில் பயணிகள் வசதிக்காக இந்த சுரங்கப் பாதை திறந்து வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain






