search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "subway"

    • கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான உயர்மட்ட பாதை வழித்தடத்தில் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
    • பூந்தமல்லி இடையேயான வழித்தடத்தில் உயர்மட்டப் பாதையில் மொத்தம் 811 தூண்கள் அமைக்க வேண்டும். இதுவரை 598 தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

    இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 26.1 கி.மீ. வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்டபாதையாகவும் அமைக்கப்படுகிறது.

    இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களும் அமைக்கப்படுகின்றன. தற்போது, உயர்மட்ட பாதை பணிகள், சுரங்கப் பாதை பணிகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் ஆகியவை முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இந்த வழித்தடத்தில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான உயர்மட்ட பாதை வழித்தடத்தில் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான வழித்தடத்தின் ஒரு பகுதியாக, கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் - பூந்தமல்லி இடையேயான வழித்தடத்தில் உயர்மட்டப் பாதையில் மொத்தம் 811 தூண்கள் அமைக்க வேண்டும். இதுவரை 598 தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள தூண்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    தூண்கள் அமைக்கப்பட்ட இடங்களில் உயர்மட்ட இரும்பு பாலம் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. ஆலப்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, சாலிகிராமம், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, பூந்தமல்லி ஆகிய இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இந்த வழித்தடத்தில் உயர்மட்டப்பாதையில் 18 ரெயில் நிலையங்களில் 13 ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தீவிர மடைந்துள்ளன. மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கான நுழைவு வாயில், வெளியேறும் பகுதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடைய வாய்ப்பு உள்ளது.

    இதையடுத்து பவர் ஹவுஸ்- பூந்தமல்லி இடையே உள்ள பாதையை மக்கள் பயன்பாட்டுக்காக, 2025-ம் ஆண்டில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழித்தடத்தில் அடுத்த ஆண்டு மெட்ரோ ரெயில் ஓடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் இரட்டை அடுக்கு பாதையில் கட்டுமானப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணிக்காக, கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில்நிலையத்தில் இருந்து முதல் சுரங்கம் தோண்டும் எந்திரமான 'பிளமிக்கோ' கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி பணியை தொடங்கியது. இதையடுத்து, 2-வது சுரங்கம் தோண்டும் எந்திரமான 'கழுகு' தனது பணியை கடந்த 18-ந்தேதி தொடங்கியது. இது கலங்கரை விளக்கத்தில் இருந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தொடங்கி, கச்சேரி சாலை, திருமயிலை, பாரதிதாசன் சாலை ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் வழியாக போட்கிளப்பை 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடைய உள்ளது.

    இதற்கிடையில், தி.நகர் பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் நோக்கி 'பிகாக்' என்ற எந்திரம் மூலமாக, சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. தற்போது, இந்த எந்திர பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பூமிக்கடியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • ரெயில்வே கேட் வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
    • ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கான டெண்டர் பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் விம்கோ நகர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல ரெயில்வே கேட் உள்ளது.

    இது திருவொற்றியூர் மேற்கு பகுதி மற்றும் திருவொற்றியூர் நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய இடம் ஆகும். தினந்தோறும் சுமார் 60 முதல் 70 ரெயில்கள் வரை இந்த பாதை வழியாக செல்வதால் பெரும்பாலும் மூடிகிடக்கும். இதனால் இந்த ரெயில்வே கேட் வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து இந்த இடத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரெயில்வே கேட்டின் இருபக்கத்திலும் இருந்த கடைகள் மற்றும் கட்டிடங்கள் அகற்றப்பட்டன. தற்போது ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கான டெண்டர் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதைத்தெடர்ந்து விம்கோ நகர் ரெயில்வே சுரங்கப்பாதை பணிகள் இன்னும் சில வாரங்களில் தொடங்கப்படும் என்று தெரிகிறது. இந்த சுரங்கப்பாதை ரூ.21 கோடி செலவில் 343 மீட்டர் நீளம் 7.5 மீட்டர் அகலத்தில் அமைய உள்ளது. 1½ ஆண்டுகளில் ரெயில்வே சுரங்கப்பாதை பணியை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. விம்கோ நகர் ரெயில்வே சுரங்கப் பாதை பயன்பாட்டுக்கு வரும்போது பல ஆண்டு போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று பொது மக்கள் தெரிவித்து உள்ளனர்.

    • திருப்பரங்குன்றத்தில் சுரங்கப்பாதை அமைக்க விரைவில் ஆய்வு நடத்தப்படும்.
    • சிந்தாமணி பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே திறந்தவெளியில் ரெயில்வே தண்டவாளம் இருந்தது. இதனை அந்தப்பகுதி மக்கள் கடந்து சென்று வந்தனர். இதனால் பஸ் நிலையத்தில் இருந்து ஹார்விபட்டிக்கு எளிதாக சென்று வர முடிந்தது. இந்த நிலையில் திறந்தவெளி ரெயில்வே தண்டவாள பகுதியில் அடிக்கடி விபத்து நடந்தது. இதையடுத்து ரெயில்வே நிர்வாகம் ரெயில்வே தண்டவாள பகுதியை மூடியது. இதனால் அந்தப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பாலத்தின் வழியாக செல்லும் நிலை ஏற்பட்டது.

    பொதுமக்களின் நலன் கருதி ஏற்கனவே இருந்தபடி ரெயில் நிலைய தண்டவாள பகுதி திறந்த வெளியாக இருக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

    இது தொடர்பாக திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவும், மத்திய ரெயில்வே மந்திரிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் ரெயில்வே நிர்வாகம் தற்போது பதில் அளித்துள்ளது. அதில் திருப்பரங்குன்றம் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆய்வு பணிகள் விரைவில் மேற்கொள்ள உள்ளதாகவும், அருகில் தென்கால் கண்மாய் இருப்பதால் சுரங்கப்பாதை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசுடன் இணைந்து விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதேபோல் சிந்தாமணி பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுமார் 1 லட்சம் பேர் திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
    • மாற்றுத்திறனாளிகள் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்ல சாய்தளம் அமைக்க வலியுறுத்தியும் அது சம்மந்தமான எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது.

    திருவள்ளூர் ரெயில் நிலையம் வழியாக தினந்தோறும் சென்னையில் இருந்து அரக்கோணம், திருத்தணி மற்றும் காட்பாடி வழியாக திருப்பதி, மும்பை, பெங்களூர் செல்லும் விரைவு ரெயில்களும், மின்சார புறநகர் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் என நாள் ஒன்றுக்கு 350-க்கும் மேற்பட்ட ரெயில்கள் கடந்தும் செல்கின்றன.

    மாவட்டத் தலைநகரான திருவள்ளூரில் இருந்து நாள்தோறும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், வியாபாரிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள் என சுமார் 1 லட்சம் பேர் திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    திருவள்ளூரில் இருந்து சென்னைக்கும், அரக்கோணத்திற்கும் செல்லும் ரெயில்களில் அதிகளவில் பயணிகள் செல்வதால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த ரெயில் நிலையமாக இந்த திருவள்ளூர் ரெயில் நிலையம் உள்ளது.

    திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள 6 நடைமேடைகளில் இரு புறமும் மேம்பாலம் இருந்தும் ஒரு சிலரைத் தவிர ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர் என அனைத்து பொது மக்களும் ரெயில் தண்டவாளத்தை கடந்து தான் செல்கின்றனர். இதனால் அடிக்கடி ரெயில்கள் மோதி விபத்துக்களும் உயிரிழப்பும் ஏற்படுகிறது. மணவாளநகர் பகுதியில் இருந்து பெரிய குப்பம் செல்லும் பொது மக்களும் ரெயில் தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர்.

    இதனை தடுக்கும் வகையில் கடந்த 2019-ல் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை, மற்றும் எஸ்கலேட்டர் தானியங்கி நடை மேடை, முதியவர்கள் படிக்கட்டுகளில் ஏறி இறங்க முடியாததால் அவர்களின் வசதிக்காக லிப்ட் வசதி, ஆகியவை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

    2019 - ல் கொரோனா தொற்று காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் காலதாமதமாக தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. ஆனால் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில் ரெயில் பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கை, மழை நீர் ஒழுகுதல், மின் விளக்கு, ஒலி பெருக்கி வசதி, சி.சி.டிவி கேமரா வசதி, மின்சாரம் தடைபடும் நேரங்களில் பயன் படுத்தக் கூடிய தடை இல்லா மின்சார விளக்கு வசதி, நடைமேடை செல்லும் வழி காட்டி பலகைகள், மின்னணு தகவல் பலகை, டைல்ஸ் பதிக்கப்பட்ட நடந்து செல்லும் பாதை, நீர் வடிகால் அமைப்பு, குப்பை தொட்டிகள் போன்ற ஒரு சில பணிகள் நிறைவடையாததால் மக்கள் பயன்பாட்டிற்குகொண்டு வர தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    ரூ. 6 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த பணியானது 2 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ரெயில் பயணிகளின் அத்தியாவசிய பணிகள் முடிவடையாமல் இருப்பதால் ரெயில் பயணிகள் ஆபத்தான நிலையில் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலையே மேலும் தொடர்கிறது.

    அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்ல சாய்தளம் அமைக்க வலியுறுத்தியும் அது சம்மந்தமான எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது.

    இதனால் சாய்தளம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே பொது மக்கள் பயணிகள் ரெயில் தண்டவா ளத்தை ஆபத்தான முறையில் கடக்கும் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மீதமுள்ள சுரங்கப்பாதைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் முதிய வர்கள் படியில் ஏறி இறங்க முடியாத காரணத்தால் லிப்ட் வசதியும் ஏற்படுத்த வேண்டும் என்றும், எஸ்கலேட்டர் எனப்படும் தானியங்கி நடைமேடையை முதல் பிளாட்பாரத்திலும் அமைக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றி அப்பகுதி மக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
    • சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலை அமைக்கும் பணிக்காக மண் ஏற்றி வந்த லாரிகளை சிறைப்பிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    சென்னை, எண்ணூரில் இருந்து மாமல்லபுரம் வரை 6 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை மீஞ்சூரை அடுத்த வன்னிப்பாக்கம், பொன்னேரி அடுத்த நெடுவரம்பாக்கம், பெரியபாளையம், வெங்கல் கூட்டு ரோடு வழியாக செல்கிறது.

    இந்நிலையில் பொன்னேரி அருகே உள்ள நெடுவரம்பாக்கம் பகுதியில் 6 வழிச்சாலை பணிக்காக கிராமத்தில் உள்ள பிற பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய உள் வட்டச் சாலையில் வாகனங்களும், பொதுமக்களும் வந்து செல்ல முடியாத வகையில் நிரந்தர தடை ஏற்படுத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றி அப்பகுதி மக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

    இதைத்தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் அப்பகு தியில் முதலில் சுரங்கப்பாதை அமைத்து, அதன் பின்னர் 6 வழிச்சாலை பணிகளை தொடங்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் சுரங்கப்பாதை அமைக்காமல் சாலைப்பணி தொடர்ந்து நடந்து வந்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலை அமைக்கும் பணிக்காக மண் ஏற்றி வந்த லாரிகளை சிறைப்பி டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலைப் பணியையும் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார், துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ.ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக கடிதம்மூலம் உறுதிமொழி அளித்தனர். இதன்பின்னர் கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதை வடிந்தபோது ஆசாமி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
    • ஐஎம்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை காரணமாக குருகிராம் மாவட்டத்தில் உள்ள டெல்லி- ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் அமைந்தள்ள சுரங்கப்பாதை ஒன்றில் தேங்கிய மழை நீரில் மூழ்கி போதை ஆசாமி உயிரிழந்துள்ளார்.

    இந்த விவகாரம், நேற்று முன்தினம் மாலை வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதை வடிந்தபோது ஆசாமி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

    உயிரிழந்த நபர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அரிபேந்து எனவும், அவர் மானேசரியில் உள்ள ஐஎம்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

    அரிபேந்து சனிக்கிழமை இரவு முழுவதும் மது அருந்திவிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டை விட்டு வெளியேறியதாக இறந்தவரின் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். குடும்ப உறுப்பினர்களால் புகார் ஏதும் அளிக்காததால் வழக்கப்பதிவு செய்யப்படவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கிரீன்வேஸ் சாலையில் சுரங்கம் தோண்டும் பணிக்காக 4 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
    • அடையாறு ஆற்றின் நீருக்கு அடியில் களிமண் மற்றும் மணலின் கலவை இருப்பதாக சோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. ரூ.61,843 கோடி செலவில் 3 வழித் தடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதற்கான வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

    இதில் மாதவரம்-சிப் காட் இடையேயான வழித்தடத்தில் அடையாறு ஆற்றின் கீழே தண்ணீருக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. கிரீன் வேஸ் சாலையை அடையாறு பகுதியுடன் இணைக்க இந்த சுரங்கம் அமைக்கப்படுகிறது.

    4 மாதங்களுக்கு முன்பு கிரீன்வேஸ் சாலையில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக காவேரி எனப்படும் சுரங்கம் தோண்டும் எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி அடுத்து அடையாறு ஆற்றின் கீழே தண்ணீருக்கு அடியில் சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்த சவாலான பணியில் ஈடுபட நூற்றுக் கணக்கான ஊழியர்கள் தயாராகி வருகிறார்கள்.

    இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

    கிரீன்வேஸ் சாலையில் சுரங்கம் தோண்டும் பணிக்காக 4 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் 2 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் அடையாறு நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபடும்.

    மற்ற 2 எந்திரங்கள் மந்தவெளியை நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும். இதில் காவேரி என்ற எந்திரம் மட்டும் 150 மீட்டர் தூரத்துக்கு அடையாறு ஆற்றின் கீழ் தண்ணீருக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தொடங்கும். இந்த பணிகள் மிகவும் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கிரீன்வேஸ் சாலை மற்றும் அடையாறு மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மொத்த தூரம் ஒரு கிலோ மீட்டர் ஆகும்.

    ஆற்றுபடுகையின் மட்டத்தில் பொதுவாக சிறிய மாறுபாடு இருப்பதாலேயே தண்ணீருக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க கடினமாக இருக்கும். அதற்கு ஏற்ப சுரங்கம் தோண்டும் எந்திரத்தில் அழுத்த அளவுகளில் சிறிது மாற்றம் செய்ய வேண்டும்.

    ஆற்றுப்படுகையின் ஆழம் சுமார் 3 முதல் 5 மீட்டர் ஆகும். அதற்கு கீழே 11 முதல் 13 மீட்டர் வரை துளையிட வேண்டும். இதன் மூலம் ரெயில் மட்டம் 18 மீட்டர் ஆக இருக்கும். அதற்கு ஏற்ப கவனமாக அளவிட்டு சுரங்கம் தோண்ட வேண்டும்.

    அடையாறு ஆற்றின் நீருக்கு அடியில் களிமண் மற்றும் மணலின் கலவை இருப்பதாக சோதனை மூலம் தெரிய வந்துள்ளது. சுரங்கப்பாதை தோண்டும் போது இதில் மாறுபாடு காணப்படலாம் என அதற்கும் தயாராக இருக்க வேண்டும். சுரங்கம் தோண்டும் எந்திரம் இன்னும் சில வாரங்களில் ஆற்றுப்படுகையை அடையும்.

    சவாலான சூழ்நிலைகள் காரணமாக இந்த சுரங்கப் பாதை பணிகளை முடிக்க 5 முதல் 6 மாதங்கள் ஆகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்வதற்கு பெரிதும் அவதிப்பட்டனர்.
    • புதிய சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் மெட்ரோ ரெயில் சார்பில் நடந்தது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் அருகே பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்ல நகரும் படிக்கட்டு வசதியுடன் புதிய சுரங்கப் பாதை விரைவில் திறக்கப்படவுள்ளது.

    சென்னை சென்ட்ரல் மெமோரியல் ஹால் அருகில் வாகன நெரிசல் தினமும் அதிகரித்து வருகிறது. இதன் அருகில் அமைந்து உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் இந்த சிக்னல் பகுதியில் நீண்ட நேரமாக காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டு வந்தது.

    இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்வதற்கு பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் அங்கு பொது மக்கள் சாலையை எளிதில் கடந்து செல்ல வசதியாக நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) புதிய சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் மெட்ரோ ரெயில் சார்பில் நடந்தது.

    இந்த புதிய சுரங்கப் பாதை பணிகள் முழுவதும் நிறைவடைந்து உள்ளன.பொதுமக்கள் சுரங்க நடைபாதையில் எளிதில் செல்ல நகரும்படிக்கட்டு (எஸ்கலேட்டர்) வசதி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய சுரங்கப்பாதை வழியாக பொது மக்கள் சாலையை கடந்து மறுபுறம் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு எளிதில் செல்லலாம். இதற்காக புதிய சுரங்கப் பாதையின் நுழைவு வாயில் அருகே இரு புறமும் 2 'எஸ்கலேட்டர்கள்' மற்றும் கிரானைட் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. சுரங்கப்பாதையின் சுவர்களில் பொதுமக்களை கவரும் வகையில் அழகிய இயற்கை காட்சி ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.

    இந்த புதிய சுரங்க நடை பாதையால் பொதுமக்கள் நீண்ட நேரம் அங்குள்ள சிக்னல் பகுதியில் காத்திருப்பது தவிர்க்கப்பட உள்ளது.

    பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த நவீன சுரங்க நடைபாதையை விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    • மரத்தை உடனடியாக வெட்ட வேண்டிய அவசியம் இல்லை.
    • மரம் இருந்த இடத்தில் சுரங்கப்பாதை பணிகள் முடிந்த பின்னர் நினைவு சின்னம் வைப்போம்.

    தாம்பரம்:

    குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே ராதா நகர் சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது. இந்த சுரங்கப்பாதை ஜி.எஸ்.டி. மெயின் ரோட்டில் இணையும் இடத்தில் 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெரிய அரச மரம் இருந்தது.

    சுரங்கப்பாதை பணிக்காக ஜி.எஸ்.டி. சாலையில் இருந்த அரசமரம் நெடுஞ்சாலைத் துறையினரால் வெட்டி அகற்றப்பட்டது. இதுநாள் வரை பல லட்சம் பேருக்கும் நிழலாக இருந்த அரச மரம் வெட்டப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த மரத்தை வெட்டாமல் பணியை தொடர்ந்து இருக்கலாம் என்றும் தெரிவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் அரச மரம் வெட்டப்பட்டதற்கு சமூகநல ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே அரச மரம் வெட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமை தாயகம் அமைப்பு சார்பில் இன்று காலை மரம் இருந்த இடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த மரத்தை உடனடியாக வெட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, பசுமைத்தாயகம் மாநில துணை பொது செயலாளர் ஐநா கண்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, சுரங்கப்பாதை பணிக்காக அரசமரம் வெட்டி அகற்றப்பட்டது. இதனை வேராடு பிடுங்கி வேறு இடத்தில் நடமுடியாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 10 மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வனத்துறையினர் மூலம் மரக்கன்று நடப்படும். இதுவரை சுரங்கப்பாதை பணிகள் 70 சதவீதம் முடிந்து உள்ளது. ரெயில் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் சுரங்கப்பாதையை இணைக்கும் பணி நடந்து வருகிறது. வருகிற மே மாதத்தில் சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

    இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இப்போது இந்த அரச மரத்தை வெட்ட வேண்டிய அவசியம் இல்லை. எனினும் மரம் இருந்த இடத்தில் சுரங்கப்பாதை பணிகள் முடிந்த பின்னர் நினைவு சின்னம் வைப்போம் என்றனர்.

    • சுரங்க பாதை பேருந்து, லாரி உள்ளிட்ட எந்த கனரக வாகனங்களும் செல்ல முடியாமல் விபத்து நேரும் வகையில் தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடி செல்லும் ெரயிலை மறிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே 132 c சொர்ணக்காடு ெரயில்வே பாதை உபயோகிப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் சொர்ணக்காடு தனியார் திருமண மஹாலில் வளப்பிரமன்காடு ஊராட்சி மன்ற தலைவர் சி.கணேசன் தலைமையில் நடைபெற்றது.

    காரைக்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் அகல ரயில் பாதையில் பேராவூரணி அருகே சொர்ணக்காடு கேட் எண் 132 சி, பல கிராமங்களை இணைக்கும் சாலையாகும். ரயில்வே நிர்வாகம் கேட்டை நீக்கி, ெரயில்வே சுரங்கப்பாதையாக மாற்றம் செய்தனர். ஆனால் இந்த சுரங்க பாதை பேருந்து, லாரி உள்ளிட்ட எந்த கனரக வாகனங்களும் செல்ல முடியாமல் விபத்து நேரும் வகையில் தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இது சம்பந்தமாக பலமுறை ரயில்வே நிர்வாகத்திலும் எடுத்துக் கூறியும் சரியாக கட்டி தருவதாக கூறி இறுதியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. தவறாக வடிவமைத்து தரை கீழ் பாலம் கட்டியுள்ளனர். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுமார் 5 அடி அளவிற்கு மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் இந்த ரயில்வே சுரங்கப்பாதையில் எந்த வாகனமும் செல்ல முடியாத அவல நிலை உள்ளது.

    சொர்ணக்காடு ரயில்வே சுரங்கப்பாதை தவறாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் கட்டப்பட்டுள்ளது. ரயில்வே பாதையை பயன்படுத்தும் சொர்ணக்காடு, வலப்பிரமன்காடு, மாத்தூர் ராமசாமிபுரம் ஊராட்சிகளை சேர்ந்த பாலகிருஷ்ணாபுரம், பனஞ்சேரி ஆகிய ஊர்கள் சார்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்வது எனவும், எதிர்வரும் டிசம்பர் 9ஆம் தேதி காலை 9 மணி அளவில் அனைத்து ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்களை திரட்டி மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடி செல்லும் ரயிலை மறிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என போராட்டக் குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சொர்ண க்காடு விஜயபாஸ்கரன், மணக்காடு விஜயகுமார், மாத்தூர் ராமசாமிபுரம் பழனி முருகன், ஒன்றிய கவுன்சிலர் ரஜினி ராஜா மற்றும் 100க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பூசாரி தோட்டத்தில் சுரங்கபாலம் அமைப்பதற்காக இடத்தில் பணி நடைபெறாமல் இருந்தது.
    • சுரங்கபாதை அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் மண் நிரப்பும் பணி நடைபெற்றதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன் பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை அகல ரெயில் பாதை அமைக்கும் பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. முன்னதாக பூசாரி தோட்டத்தில் சுரங்கபாலம் அமைப்பதற்காக அந்த இடத்தில் பணி நடைபெறாமல் இருந்தது. தற்போது இங்கு சுரங்கபாதை அமைக்க முடியாது என ரெயில்வே நிர்வாகம் மறுத்த விட்டது. இந்நிலையில் இப்பகுதி மக்கள் முன்பு இருந்த ரெயில்வே கேட் வழியை பயன்படுத்தி பள்ளிக்கு செல்லுதல், பிணம் கொண்டு செல்லுதல் மற்றும் அன்றாட பணிகளுக்கு பயன்படுத்தினர். தற்போது சுரங்கபாதை அமைக்காமல் ெரயில்வே பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுரங்கபாதை அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் மண் நிரப்பும் பணி நடைபெற்றது. இதனை அப்போது பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

    இது தொடர்பாக வேதா ரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின், துணை போலீஸ் சூப்பி ரண்டு முருகவேல் ஆகியோர் அப்பகுதி மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு மாவட்ட கலெக்டரின் பரிந்துரைக்கு அனுப்பி மாநில நிதியில் இருந்து சுரங்கபாதை கட்ட முயற்சி எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு உறுதி அளித்ததால் மறியல் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    அமெரிக்காவில் இந்திய பெண் மீது தாக்குதல் நடந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நியூயார்க்கை சேர்ந்த நபரை கைது செய்தனர். #NewYork #IndianOrgin #SubwayAttack
    நியூயார்க்:

    அமெரிக்காவில் வசித்து வருபவர் அவ்னீத் கவுர் (வயது 20). இந்தியப் பெண்ணான இவர், தனது தோழியுடன் சமீபத்தில் நியூயார்க் மேன்ஹாட்டனில் சுரங்க ரெயிலில் பயணம் செய்தார்.

    அப்போது அவ்னீத் கவுருடன், அந்த ரெயிலில் பயணம் செய்த நியூயார்க்கை சேர்ந்த அல்லாஷீத் அல்லா (54) என்பவர் வாய் தகராறில் ஈடுபட்டார்.

    அவ்னீத் கவுரும், அவரது தோழியும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என கிண்டல் செய்தார்.

    இந்த நிலையில் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அவ்னீத் கவுரும், அவரது தோழியும் இறங்கி நடந்து சென்றுகொண்டிருந்தனர். அல்லாஷீத் அல்லா அவர்களைப் பின்தொடர்ந்தார். அவர் திடீரென அவ்னீத் கவுரின் பின் தலையில் அடித்தார். அவரது நெஞ்சிலும் குத்தினார்.

    இதில் அவ்னீத் கவுர் கீழே சுருண்டு விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக அங்குள்ள குயின்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது தொடர்பாக அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அல்லாஷீத் அல்லாவை கைது செய்தனர். அவர் அவ்னீத் கவுர் மீது வெறுப்புணர்வு தாக்குதல் நடத்தியதாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளதாக அரசு வக்கீல் ரிச்சர்டு பிரவுன் கூறினார்.

    இந்த சம்பவம், நியூயார்க் இந்திய வம்சாவளி மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.  #NewYork #IndianOrgin #SubwayAttack 
    ×