என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே கேட்"

    • ரெயில் மிக வேகமாக நெருங்கி வருவதைக் கண்ட அவர், பைக்கை விட்டுவிட்டு ஓடித் தப்பிக்க முயன்றார்.
    • நாட்டில் நடந்த 2,483 ரெயில்வே கிராசிங் விபத்துகளில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1,025 விபத்துகளும், அதில் 1,007 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

    உத்தரப் பிரதேசத்தில் மூடியிருந்த ரெயில்வே கேட்டைக் கடக்க முயன்ற நபர் ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று (அக். 13) கிரேட்டர் நொய்டாவில் தாத்ரி பகுதியைச் சேர்ந்த துஷார் என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் ரெயில்வே கிராசிங்கிற்கு வந்துள்ளார்.

    ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தும், அவர் சற்றும் யோசிக்காமல் அதன் அடியில் புகுந்து தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார்.

    அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தது. இதனால் அவரும் கீழே விழுந்தார்.

    அப்போது வேகமாக ரெயில் வந்துகொண்டிருந்த நிலையில் அருகில் வருவதற்குள் தனது பைக்கை தூக்க முயற்சித்துள்ளார்.

    ரெயில் மிக வேகமாக நெருங்கி வருவதைக் கண்ட அவர், பைக்கை விட்டுவிட்டு ஓடித் தப்பிக்க முயன்றார். ஆனால், அதற்குள் நேரம் கடந்துவிட்டது.

    வேகமாக வந்த ரயில் அவரை பலமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கையின்படி, 2023-ல் நாட்டில் நடந்த 2,483 ரெயில்வே கிராசிங் விபத்துகளில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1,025 விபத்துகளும், அதில் 1,007 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இது நாட்டிலேயே அதிகபட்ச எண்ணிக்கையாகும்.  

    • ஆள் இல்லாத ரெயில்வே கேட் வழியாக 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அருகில் உள்ள நகரங்களுக்கு அத்தியாவசிய பணிகளுக்கு சென்று வருகின்றனர்.
    • ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை மூடி மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இலங்கியனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகில் விருத்தாச்சலத்தில் இருந்து சேலம் செல்லும் ரெயில் பாதை உள்ளது. இந்நிலையில் இலங்கியனூர் அருகே உள்ள ஆள் இல்லாத ரெயில்வே கேட் வழியாக 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அருகில் உள்ள நகரங்களுக்கு அத்தியாவசிய பணிகளுக்கு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் அந்த பகுதியில் கேட் கீப்பர் இல்லாததால் ரெயில் வரும் நேரங்களில் மக்கள் அச்சத்துடன் சென்று வருவதாகவும், இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த ரெயில்வே கிராசிங்கில் கேட் கீப்பர் அமைத்து தர வேண்டும் அல்லது ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை மூடி மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேப்பூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் ரெயில்வே அதிகாரிகளும் வந்து பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • வாகன ஓட்டிகள் அவதி
    • 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வெள்ள மடம் அருகே உள்ள குலசேகரன்புதூர் பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட் சில சமயம் பழுதாகி திறக்கமுடியாத நிலை ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சரக்கு ரெயில் ஒன்று சென்றது. இதற்காக குலசேக ரன்புதூர் ரெயில்வே கேட் மூடப்பட்டன. ரெயில் சென்றதும் ஊழியர் ரெயில்வே கேட்டை திறக்க முயற்சித்தார்.

    ஆனால் கேட் பழுதாகி திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஊழியர், எவ்வளவு முயற்சித்தும் ரெயில்வே கேட்டை திறக்க முடியவில்லை. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைந்தார்கள்.

    பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். நீண்ட நேரமாகியும் கேட் திறக்கப் படாததால், மாணவர்கள் சிலர் வாகனங்களில் இருந்து இறங்கி பள்ளி, கல்லூரிக்கு நடந்தே சென்றார்கள். வாகன ஓட்டிகள் பலரும் மாற்று பாதை வழியாக சென்றனர். இதற்கிடையே ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள், ரெயில்வே கேட் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.பின்னர் ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து பொது மக்கள் கூறுகையில் இந்த பகுதியில் உள்ள ரயில்வே கேட் பழுதாவது அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் ஏராளமான பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே இந்த ரயில்வே கேட் பகுதியில் சுரங்க பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ரெயில்வே கேட் மூடப்படும்போது கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
    • காவல் துறை சார்பில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதி யில் பாளை குலவணிகர்புரம் பகுதி போக்குவரத்து நிறைந்ததாக காணப்படுகிறது.

    அணிவகுக்கும் வாகனங்கள்

    இதன் வழியாக செல்லும் ரெயில்வே பாதை வழியாக நெல்லை- திருச்செந்தூர் ரெயில்கள் சென்று வருகிறது. தினமும் ஒவ்வொரு முறை ரெயில் செல்லும் போதும் இங்குள்ள ரெயில்வே கேட் மூடப்படும். அப்போது வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    ரெயில்வே கேட் முதல் பாளை பஸ் நிலையம் வரையிலும், மறுபுறம் புதிய பஸ் நிலையம் வரையிலும், அதே போல் பாளை மத்திய சிறை யில் இருந்து எதிர்புறம் செல்லும் சாலையிலும் வாகனங்கள் நிற்பதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வரு கிறது.

    இதைத்தொடர்ந்து குலவணிகர்புரத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதற்கான நட வடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் நெல்லை மாநகர காவல் துறை சார்பில் போக்கு வரத்து நெருக்கடியை குறைக்க அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பாளை மத்திய சிறையில் இருந்து மேலப்பாளையம் செல்ல சாலை உள்ளது. ரெயில்வேகேட் மூடி திறக்கப்படும் போது வலது புறம் வாகனங்கள் செல்வ தால் கடும் போக்குவரத்து ஏற்பட்டு வந்தது.

    இதனை தவிர்க்க ரெயில்வே கேட்டில் இருந்து வலது புறம் செல்லும் சாலையில் பிளாஸ்டிக் தடுப்புகளை கொண்டு போலீசார் அடைத்துள்ள னர். இதனால் பாளை பஸ் நிலையத்தில் இருந்து இந்த சாலைக்கு செல்லும் வாகனங்கள் சிறை கைதிகள் பல்க் வரை சென்று பின்பு அங்கிருந்து திரும்பி மேலப்பாளையம் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

    • கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க அந்த பகுதியில் இருந்த ரெயில்வே கேட் மூடப்பட்டது.
    • திருவொற்றியூர் மண்டல அலுவலர் சங்கரன், மற்றும் நகர நிலவரி திட்ட தனி தாசில்தார் துளசி ராம்ராஜ் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், அண்ணாமலை நகர் பகுதியில். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க அந்த பகுதியில் இருந்த ரெயில்வே கேட் மூடப்பட்டது. ஆனால் பணிகள் நடைபெறவில்லை. ஆனாலும் கடந்த ஒரு ஆண்டாக ரெயில்வே கேட் மூடி உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நடைபெறாத பணிக்காக மூடி இருக்கும் ரெயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தியும், சுரங்கப்பாதை அமைப்பதற்காக அகற்றப்பட்ட 17 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தியும் 7-வது வார்டு கவுன்சிலர் டாக்டர் கே. கார்த்திக் தலைமையில் 20 கிராம நிர்வாகிகள் ஊர்வலமாக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சென்றனர். இதில் பா.ஜ.க. மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், திருவொற்றியூர் மண்டல அலுவலர் சங்கரன், மற்றும் நகர நிலவரி திட்ட தனி தாசில்தார் துளசி ராம்ராஜ் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

    • தொடர்ந்து அடுத்தடுத்து ரெயில்கள் வந்ததால் நீண்ட நேரம் கேட் மூடி இருந்தது.
    • ரெயில்வே கேட்டின் இருபக்கம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ரெயில் நிலையம் அருகே மேம்பால பணி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மீஞ்சூரில் இருந்து காட்டூர், தந்தை மஞ்சி, உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட்டை பயன்படுத்தி வருகிறார்கள்.

    ரெயில்கள் வரும்போது கேட் மூடப்படும் நேரத்தில் வாகன ஓட்டிகள் கடும் நெரிசலில் சிக்கி தவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று இரவு 8 மணிஅளவில் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்ததை தொடர்ந்து ரெயில்வே கேட் மூடப்பட்டது. மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து ரெயில்கள் வந்ததால் நீண்ட நேரம் கேட் மூடி இருந்தது. இதனால் ரெயில்வே கேட்டின் இருபக்கம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிறிது நேரத்தில் ரெயில்வே கேட் திறந்தாலும் இருபக்கமும் இருந்த வாகனங்கள் கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்தனர்.

    இதற்கிடையே வாகனங்கள் அனைத்தும் ரெயில்வே கேட்டை கடந்து செல்வதற்கு முன்பே சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் மின்சார ரெயில் வந்தது. ஆனால் கடும் வாகன நெரிசல் காரணமாக ரெயில்வே கேட்டை மூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ரெயிலுக்கு சிக்னல் வழங்கப்படவில்லை.

    இதைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரெயில் நந்தியம் பாக்கத்திலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைநோக்கி சென்ற மின்சார ரெயில் மீஞ்சூர் ரெயில் நிலையத்திலும் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    சுமார் ½மணிநேரத்துக்கும் மேலாக மின்சார ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் ரெயில்சேவை பாதிக்கப்பட்டது.

    பின்னர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து இருபக்கமும் நின்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி ஒவ்வொன்றாக கடந்து செல்ல செய்தனர். இதன் பின்னரே ரெயில்வே கேட்டை ஊழியர்களால் மூட முடிந்தது. இதைத்தொ டர்ந்து இரவு 8.45 மணியளவில் ரெயில் சேவை சீரானது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, ரெயில்வே மேம்பால பணி மந்தமாக நடந்து வருகிறது. இதனை விரைந்து முடித்தால்தான் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். வரும் நாட்களில் பள்ளிகள் திறந்ததும் மேலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் என்றனர்.

    • தற்காலிக கேட்டை விரைந்து திறக்க வலியுறுத்தல்
    • சுரங்கப்பாதை அமைக்க ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    நாகர்கோவில் : 

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் அருகே ஊட்டுவாழ்மடம் கருப்புக்கோட்டை இலுப்பையடி போன்ற கிராமங்கள் உள்ளது.

    இந்த கிராமங்களில் உள்ளவர்கள் ஊட்டுவாழ்மடம் அருகே உள்ள ரெயில்வே கேட்டை கடந்துதான் நாகர்கோவிலுக்கு வர வேண்டும். ரெயில் நிலையம் அருகே இருப்பதால் அடிக்கடி இந்த ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பெரும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    எனவே அந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சுரங்கப்பாதை அமைக்க ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான டெண்டர் பிறப்பிக்கப்பட்டு சுரங்கப்பாதை பணிக்காக 4 மாதம் ரெயில்வே கேட் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் 4 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    எனவே ரெயில்வே கேட் மூடுவதற்கு முன்பாக தற்காலிக ரெயில்வே கேட் அமைத்து தங்களுக்கு செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தற்காலிக ரெயில்வே கேட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    தற்காலிக கேட்டை அமைப்பதற்கான பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் பணி மற்றும் தற்காலிக கேட்டுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ெரயில்வே கேட் இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    தற்காலிக கேட்டுக்கான பணிகள் மேற்கொள்ள வேண்டிய இருப்பதால் ெரயில்வே கேட் போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இன்று காலை 9.45 மணிக்கு ெரயில்வே கேட் மூடப்பட்டது. ெரயில்வே கேட் மூடப்பட்டதையடுத்து ஊட்டுவாழ்மடம், கருப்பு கோட்டை, இலுப்பையடி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நாகர்கோவிலுக்கு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். அவர்கள் கோதை கிராமம் ஒழுகினசேரி வழியாக சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டது.

    ரெயில்வே கேட் மூடப்பட்டதை தொடர்ந்து தற்காலிக கேட்டுக்கான சிக்னல் உள்பட அனைத்து வேலைகளும் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், தற்பொழுது ெரயில்வே கேட் மூடப்பட்டுள்ளதால் நாகர்கோவிலுக்கு அவசர தேவைக்காக நாங்கள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தற்காலிகமாக அமைக்கப்பட்டு வரும் ெரயில்வே கேட்டை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ரெயில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
    • இது தொடர்பான நோட்டீஸ் அந்த பகுதியில் ஒட்டப்ப ட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இருந்து சேலம், சென்னை செல்லும் ெரயில்கள் வெண்டி பாளையம் ரெயில்வே கேட் கடந்து செல்ல வேண்டும். மேலும் இந்த வழியாகத்தான் வெண்டி பாளையத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு தினமும் பலமுறை லாரிகள் சென்று வருகின்றன.

    இது தவிர வெண்டி பாளையம், கோண வா ய்க்கால் உள்ளிட்ட பகுதிக ளில் உள்ள நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் இந்த ரெயில்வே கேட்டை கடந்து தான் மாநகர் பகுதிக்குள் வர வேண்டும்.

    எனவே இந்த பகுதி முக்கியமான போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த வழித்தடத்தில் ரெயில் தண்டவாளம் பராமரிப்பு, ஜல்லி கொட்டுதல், சிக்னல் சரிபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதற்கு வசதியாக வெண்டி பாளையம் ரெயில்வே கேட் இன்று முதல் வருகின்ற 29-ந் தேதி வரை 15 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதனால் வெண்டி பாளையம் மற்றும் நாமக்கல் மாவட்டம் செல்லும் இருச க்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் மோளகவுண்டன்பாளையம், சோலார், நீல்கிரீஸ் வழியாக திருப்பி விட ப்பட்டுள்ளது.

    இது தொடர்பான நோட்டீஸ் அந்த பகுதியில் ஒட்டப்ப ட்டுள்ளது. 

    • பிச்சைக்கண்ணு நண்பருடன் வந்து கேட் கீப்பர் அறைக்கு தீ வைக்க முயற்சி செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    • போலீசார் சாதுர்யமாக செயல்பட்டு பிச்சைக் கண்ணுவை கைது செய்தனர்.

    களக்காடு:

    நெல்லை-நாகர்கோவில் ரெயில்வே வழித்தடத்தில் நாங்குநேரி அருகே நெடுங்குளத்தில் ரெயில்வே கேட் உள்ளது.

    இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் கேட் கீப்பர் விஷ்ணு பணியில் இருக்கும் போது அங்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, திடீர் என கேட் கீப்பர் அறைக்குள் புகுந்து, 2 தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடி, அறைக்கும் பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தனர்.

    இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே மூன்றடைப்பு போலீஸ் நிலையத்திற்கு இளைஞர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு தீ வைக்க முயற்சி செய்தது நான் தான், வழக்கு போட்டாச்சா? என்று துணிச்சலுடன் கேட்டுள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ந்த போலீசார் அவர் யார் என்று விசாரித்ததில் அவர் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்த பிச்சைக்கண்ணு (25) என்பதும், அவர் கடந்த 19-ந் தேதி இரவில் ஒரு பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் நெடுங்குளம் ரெயில்வே கேட் வழியாக வந்ததும் தெரிய வந்தது.

    அப்போது ரெயில் வந்ததால் கேட் மூடப்பட்டதும், பிச்சைக்கண்னு கேட்டை திறக்க கோரி ரகளையில் ஈடுபட்டதும், எனினும் ரெயில் சென்ற பிறகே கேட் திறக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பிச்சைக்கண்ணு நண்பருடன் வந்து கேட் கீப்பர் அறைக்கு தீ வைக்க முயற்சி செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    மேலும் பிச்சைக்கண்ணு நேற்று மூலைக்கரைப்பட்டி அருகே விரளபெருந்செல்வி கிராமத்தை சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுபற்றி வழக்கு பதிவு செய்த மூலைக்கரைப்பட்டி போலீசார் கருங்குளத்தில் தலைமறைவாக இருந்த, பிச்சைக்கண்னுவை சுற்றி வளைத்து பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது அவர் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி நடராஜனை தாக்கினார். எனினும் போலீசார் சாதுர்யமாக செயல்பட்டு பிச்சைக் கண்ணுவை கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை, ஏற்படுத்தி உள்ளது.

    • ரெயில்வேகேட் கிராசிங்கில் ஊழியராக ஆனந்த் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
    • ரெயில்வே கேட்டை திறக்க மறந்து தூங்கிவிட்டது அவருக்கு தெரிந்தது.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கத்தில் இருந்து வெங்கடேசபுரம் வழியாக பெருங்கருணை, கயப்பாக்கம், புத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது.

    இந்த ரெயில்வேகேட் கிராசிங்கில் ஊழியராக ஆனந்த் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் அவ்வழியே ரெயில்கள் வரும்போது ரெயில்வேகேட்டை பூட்டி விட்டு பின்னர் ரெயில் கடந்து சென்ற பின்னர் திறப்பது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை 6.45 மணிக்கு சென்னை நோக்கி சென்ற ரெயிலுக்காக ஊழியர் ஆனந்த் ரெயில்வே கேட்டை மூடினார். பின்னர் அவர் அங்குள்ள ஓய்வு அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டி தூங்கி விட்டார்.

    ரெயில் கடந்து சென்ற பின்னரும் ரெயில்வே கேட் திறக்கப்படாததால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காலை 7 மணியை தாண்டியும் ரெயில்வே கேட் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் அங்குள்ள ரெயில்வே கேட் கீப்பர் அறைக்கு சென்று பார்த்த போது ஊழியர் ஆனந்த் குறட்டை விட்டு தூங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கதவை தட்டி ஆனந்தை தூக்கத்தில் இருந்து எழச்செய்தனர். இதன் பின்னரே ரெயில்வே கேட்டை திறக்க மறந்து தூங்கிவிட்டது அவருக்கு தெரிந்தது. பதறியடித்தபடி அவர் ரெயில்வே கேட்டை திறந்து விட்டார்.

    எனினும் கடும்கோபத்தில் இருந்த வாகன ஓட்டிகள் ஊழியர் ஆனந்த்திடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில் கடந்த பின்னரும் ஊழியர் ஆனந்த் சுமார் 20 நிமிடம் ரெயில்வே கேட்டை திறக்காமல் இருந்திருப்பது தெரியவந்து உள்ளது. ரெயில் வரும் நேரத்தில் அவர், ரெயில்வே கேட்டை மூடாமல் இருந்து இருந்தால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் அணைமேடு ரெயில்வே கேட் மினி வாகனம் மோதி உடைந்தது.
    • இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     சேலம்:

    சேலத்தில் இருந்து அம்மாபேட்டை, அயோத்தியாபட்டணம் வழியாக அரூர், பேளூர், ஆத்துார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலுார், பாண்டிச்சேரி, திருப்பதி, திருப்பத்துார் செல்லும் வாகனங்கள் அனைத்தும் அணைமேடு ரெயில்வே கேட் வழியாகத்தான் செல்ல வேண்டும் .

    காலை மாலை என இரு வேளைகளிலும் தனியார் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் கல்லூரி களில் படிக்கும் மாணவ, மாணவிகள், பள்ளி மாணவ, மாணவிகள், அவர்கள் செல்லும் ஆட்டோக்கள் என எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் ரெயில்வே கேட் பகுதியாக அணைமேடு ரெயில்வே கேட் இருந்துவருகிறது.

    சேலம் - விருதாச்சலம் நெடுஞ்சாலை பிரிவில் இந்த இடம் அமைந்துள்ளது. ரெயில் செல்லும் ஒவ்வொரு சமயத்திலும், கேட் அடைக்கப்படும்போது இப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இந்த ரெயில்வே கிராசிங் பகுதியில் குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு, மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வாடிக்கையாக இருக்கிறது.

    இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த பகுதியில் பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை ரெயில்வே கேட்டில் மினி வாகனம் மோதியது. இதனால் கேட் சேதமானது.

    இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து கேட்டை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். கேட் உடைந்ததால் அந்த வழியாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • பொது மக்கள் வசதிக்காக தற்காலிக ரெயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது.
    • ராமேசுவரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த ரெயில் பணகுடி அருகே நிறுத்தப்பட்டிருந்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தையொட்டி உள்ள ஊட்டுவாழ்மடம் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதனை முன்னிட்டு ஏற்கனவே இருந்த ரெயில்வே கேட் மூடப்பட்டது. பொது மக்கள் வசதிக்காக தற்காலிக ரெயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சுரங்கப்பாதை ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து சுரங்கப்பாதை அமைய உள்ள இடத்தில் உள்ள 4 தண்டவாளங்களின் கீழ் கர்டர் என்று சொல்லப்படும் பாலம் அமைத்து தண்டவாளத்தை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே 2 தண்டவாளங்களில் கர்டர் பாலம் அமைக்கப்பட்ட நிலையில் மற்ற 2 தண்டவாளங்களில் கர்டர் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் தற்காலிக ரெயில்வே கேட்டும் மூடப்பட்டு நேற்று முதல் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது.

    இன்று காலையிலும் பணி நடந்தது. ராட்சத கிரேன் மூலமாக தண்டவாளங்கள் அகற்றப்பட்டு கர்டர் பாலம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியை நாளைக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கர்டர் பாலம் அமைக்கப்பட்டு ரெயில்வே தண்டவாளம் அமைத்து விட்டால் ரெயில் போக்கு வரத்தில் எந்த ஒரு பாதிப்பும் இன்றி சுரங்கப்பாதை பணியை மேற்கொள்ள முடியும்.

    தற்போது கர்டர் பாலத்திற்காக தண்டவாளங்களை சீரமைக்கும் பணி நடைபெறுவதையடுத்து அந்த வழியாக ரெயில் போக்குவரத்து சில மணி நேரம் தடைபட்டது. இதனால் நாகர்கோவிலுக்கு வரவேண்டிய அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அந்த ரெயில்கள் அனைத்தும் தாமதமாக வந்து சேர்ந்தது.

    சென்னை, பெங்களூர், கோவை, ராமேசுவரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ரெயில்கள் வள்ளியூர், பணகுடி, ஆரல்வாய்மொழி ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.

    சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வரும். இந்த ரெயில் இன்று காலையில் வழக்கமான நேரத்திற்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே கேபின் பகுதிக்கு வந்தது.

    ஆனால் சுரங்கப்பாதை பணி காரணமாக அந்த ரெயில் சுமார் 2 மணி நேரம் அங்கேயே நிறுத்தப்பட்டது. 2 மணி நேரத்திற்கு மேலாக ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்ததால் பயணிகள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். தொடர்ந்து 7.15 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. பின்னர் இங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரிக்கு 7.45 மணிக்கு சென்றடைந்தது.

    இதேபோல் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 4.50 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயிலும் வள்ளியூரில் 2 மணி நேரத்திற்கு மேல் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு 6.30 மணிக்கு வந்து சேர்ந்தது.

    பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் 7.30 மணிக்கு வந்து சேரும். இன்று 45 நிமிடம் தாமதமாக வந்து சேர்ந்தது. ராமேசுவரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் ரெயில் அதிகாலையில் 3.30 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயில் 4¾ மணி நேரம் தாமதமாக காலை 8.15 மணிக்கு வந்து சேர்ந்தது.

    சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு காலை 7.10 மணிக்கு வந்து சேர வேண்டிய சிறப்பு ரெயில் 8.50 மணிக்கு வந்து சேர்ந்தது. நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 6.15 மணிக்கு வழக்கமாக புறப்பட்டு செல்லும். இன்று 1 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக 7.35 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    ரெயில்கள் அனைத்தும் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணி கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர். ராமேசுவரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த ரெயில் பணகுடி அருகே நிறுத்தப்பட்டிருந்தது.

    ×