என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train accident"

    • மக்கள் அழுத்தத்தால் தான் கேட்டை கேட் கீப்பர் திறந்தார் என்று ரயில்வே சொல்வது அலட்சியத்தின் உச்சம்.
    • பாஜக அரசு வந்த பிறகு, ரயில்வே பட்ஜெட்டும், ரயில்வே தொடர்பான விவாதமும் ஒழிக்கப்பட்டுவிட்டது.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த விபத்து தொடர்பாக விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "நாடு முழுவதும் ரயில் விபத்துகள் பெரும்பாலும் ரயில்வே துறையின் அலட்சியத்தாலேயே நிகழ்கின்றன. கடலூர் விபத்தும் அப்படியே நடந்துள்ளது. ரயில் வருவதற்கு முன்பே கேட் மூடப்பட வேண்டும் என்னும் போது, ரயில் வரும்போது கேட் எப்படி திறந்திருந்தது?

    Inter Locking System இல்லாத கேட்களில், ஒரு ஸ்டேசனை ரயில் கடந்தவுடன் அடுத்த ஸ்டேசனுக்கு அந்த ஸ்டேசன் மாஸ்டர் தகவல் கொடுக்க வேண்டும் என்னும் போது இந்த விபத்து எப்படி நடந்தது?

    மக்கள் அழுத்தத்தால் தான் கேட்டை கேட் கீப்பர் திறந்தார் என்று ரயில்வே நிர்வாகம் சொல்வது அலட்சியத்தின் உச்சம். கேட் மூடப்படவே இல்லை என்று வேன் ஓட்டுநரும், மாணவரும், மக்களும் சொல்வதை விசாரிக்காமலேயே ரயில்வே நிர்வாகம் ஒரு சார்பு தகவலை சொல்வது அபத்தம்.

    பாஜக அரசு வந்த பிறகு, ரயில்வே பட்ஜெட்டும், ரயில்வே தொடர்பான விவாதமும் ஒழிக்கப்பட்டுவிட்டது. போதிய பணியாளர்கள் நியமனங்கள் இன்றி ரயில்வே துறை தள்ளாடுகிறது. பணி இடங்களில் மொழி தெரியாதவர்களை நியமிப்பதன் மூலம் சிக்கல் அதிகரிக்கிறது. விபத்துகளை தவிர்க்கும் தொழில்நுட்பங்கள் வந்தபிறகும் அவை பயன்படுத்தப்படாத நிலை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    • ரெயில் விபத்துக்கு வேன் ஓட்டுநரே காரணம் என தென்னக ரெயில்வே குற்றம்சாட்டியது.
    • கேட் கீப்பரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் குற்றம்சாட்டி கேட் கீப்பர் மீது தாக்குதலும் நடத்தினர்.

    இதனிடையே, ரெயில் விபத்துக்கு வேன் ஓட்டுநரே காரணம் என தென்னக ரெயில்வே குற்றம்சாட்டியது. கேட்டை மூட கீப்பர் முயன்றபோது, வேன் ஓட்டுநர் வேனை கேட்டை கடக்க அனுமதிக்க கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது. வேன் ஓட்டுநர் கோரியிருந்தாலும் கேட் கீப்பர் வாகனத்தை அனுமதித்திருக்க கூடாது என்று கூறிய தென்னக ரெயில்வே கேட் கீப்பரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து கேட் கீப்பரான வடமாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.

    ரெயில்வே தரப்பில் இருந்து பள்ளி வேன் ஓட்டுநர் மீதும் பெற்றோர் தரப்பில் இருந்து வடமாநிலத்தை சேர்ந்த கேட் கீப்பர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.

    கேட் கீப்பர் மீதும், வேன் டிரைவர் மீதும் குற்றம் சுமத்துவதற்கு முன்பு இந்த விபத்திற்கு ரெயில்வே துறையின் அலட்சியம் காரணம் இல்லையா? என்று கேள்வி எழுகிறது.

    இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம்:

    அதிகப்படியான ரெயில் போக்குவரத்து உள்ள பகுதியில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் பாயன்பாட்டில் உள்ளது. இண்டர் லாக்கிங் முறையில் கேட் திறந்திருந்தால் இரு புறமும் ரயில்களுக்கு சிக்னல் சிவப்பில் இருக்கும். அதை பார்த்ததும் ரெயில் ஓட்டுனர்கள் பார்த்து ரெயிலை நிறுத்தி விடுவார்கள். .

    ஊரக பகுதியான செம்மங்குப்பத்தில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் இல்லை எனக் கூறப்படுகிறது. இண்டர் லாக்கிங் இல்லாததால் கேட் திறக்கப்பட்டபோது சிவப்பு சிக்னல் விளக்கு எரியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தொழில்நுட்பம் இல்லாததே இந்த விபத்திற்கு முக்கிய காரணம் ஏன்னு கூறப்படுகிறது. ஆகவே இண்டர் லாக்கிங் சிஸ்டம் முறையை அந்த இடத்தில பயன்பாட்டிற்கு கொண்டு வராத ரெயில்வே துறைக்கு இந்த விபத்தில் பொறுப்பில்லையா?

    ஸ்டேசன் மாஸ்டர் எங்கே?

    தன் எல்லைக்குட்பட்ட ரெயில்வே கேட் மூடப்பட்டுள்ளதா திறந்துள்ளதா என்பதை ஸ்டேசன் மாஸ்டர் தன் இடத்தில் இருந்தே கண்காணிக்க முடியும். ரெயில் வரும்போது ரெயில்வே கேட் திறந்து இருந்தால் உடனடியாக ரெயில் ஓட்டுநருக்கு தெரிவித்து ரெயிலை நிறுத்த வேண்டும் என்பது விதிமுறை ஆகும். இந்த வேலையை ஸ்டேசன் மாஸ்டர் செய்தாரா? ரெயில்வே கேட் திறந்திருந்த நிலையில், ரெயில் ஓட்டுநருக்கு அவர் தகவல் தெரிவித்தாரா? அவர் மீது ரெயில்வே துறை எடுத்த நடவடிக்கை என்ன?

    தமிழ் தெரியாத கேட் கீப்பர்:

    தமிழ் மொழி தெரியாத வடமாநிலத்தை சேர்ந்தவர்களை ரெயில்வே துறை தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிக அளவில் பணியமர்த்தி வருகிறது. குறிப்பாக கேட் கீப்பர் பணிகளில் அதிக அளவிலான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.

    வடமாநிலத்தை சேர்ந்தவர்களை நியமித்தால் உள்ளூர் மக்களுடன் மொழி பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய பணிகளில் அந்தந்த மாநிலந்தை சேர்ந்த அல்லது அந்த மொழி தெரிந்தவர்களை நியமனம் செய்வது தான் சரியாக இருக்கும். .

    வடமாநிலத்தவருக்கு முன்னுரிமை கொடுக்கும் ரெயில்வே துறையின் நடவடிக்கை இந்த விபத்திற்கு காரணமில்லையா?

    கேட் கீப்பர் மீதும், வேன் டிரைவர் மீதும் பழியை போட்டு தப்பிக்காமல் இத்தகைய உண்மையான குறைபாடுகளை களைந்து எதிர்காலத்தில் இதுபோன்றதொரு விபத்து ஏற்படாமல் தவிர்க்க தேவியான நடவடிக்கைகளை ரெயில்வே துறை எடுக்க வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பும்.

    • பிரச்சாரத்தை மட்டுமே செய்து வருகிறது.
    • பாதுகாப்பின்மை மற்றும் குழப்பத்தின் அடையாளமாக மாறிவிட்டது.

    மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு தனது 11 ஆண்டுகால ஆட்சியில் பொறுப்புணர்வு இல்லாமல் இருப்பதாகவும், பிரச்சாரத்தை மட்டுமே செய்து வருவதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

    மத்திய அரசு நிகழ்காலத்தைப் பற்றி பேசுவதை தவிர்த்துவிட்டு 2047 பற்றிய கனவுகளை விற்று வருகிறது என்று அவர் விமர்சித்தார்.

    மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் நெரிசலான உள்ளூர் ரயிலில் இருந்து விழுந்து நான்கு பயணிகள் இறந்தனர். இதை சுட்டிக்காட்டி, இன்று மோடி ஆட்சி 11 ஆண்டு நிறைவை ராகுல் 'எக்ஸ்' இல் இந்த விமர்சனங்களை முன்வைத்தார்.

    மோடி அரசு 11 ஆண்டுகால  ஆட்சியை கொண்டாடும் வேளையில், மும்பையில் இருந்து வரும் சோகச் செய்திகள் யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன என்று ராகுல் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

    இந்திய ரயில்வே கோடிக்கணக்கான மக்களின் முதுகெலும்பாக இருப்பதாகவும், ஆனால் இன்று அந்த நிறுவனம் பாதுகாப்பின்மை, நெரிசல் மற்றும் குழப்பத்தின் அடையாளமாக மாறிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

    நாடு இன்று கடந்து வரும் கடினமான சூழ்நிலைகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.   

    • தண்டவாளத்தில் வேகமாக வந்த ரெயில் இடிபாடுகள், கான்கிரீட் கற்கள் மீது மோதியது.
    • இந்த விபத்தில் 70 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ரஷியாவின் பெல்கொரோட் பிராந்தியத்தில் உள்ள கிளி மோவ் நகரத்தில் இருந்து தலைநகர் மாஸ்கோவிற்கு பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அந்த ரெயில், பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பில்ஷினோ, வைகோனிச்சி ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது அங்கிருந்த ஒரு பாலம் திடீரென்று இடிந்து விழுந்தது. மேம்பாலத்தின் இடிபாடுகள், கான்கிரீட் கற்கள் தண்டவாளத்தில் விழுந்தன.

    அப்போது தண்டவாளத்தில் வேகமாக வந்த ரெயில் இடிபாடுகள், கான்கிரீட் கற்கள் மீது மோதியது. இதனால் ரெயில் தடம் புரண்டு கவிழ்ந்தது. ரெயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி கவிழ்ந்தது. உடனே மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    கவிழ்ந்த ரெயில் பெட்டி யில் இருந்த பயணிகளை மீட்டனர். ரெயில் கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 7 பேர் பலியானார்கள். 70 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    ரஷியா-உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் இந்த ரெயில் கவிழ்ந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கு சதி செயல் காரணம் என்று ரஷியா தெரிவித்துள்ளது. மேம்பாலம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இச்சம்பவம் நடந்த பகுதி உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் இந்த சம்பவத்தில் உக்ரைன் சதிச் செயல் இருக்கலாம் என்று ரஷிய அதிகாரிகள் சந்தே கத்தை எழுப்பியுள்ளனர்.

    • சென்னை- பெங்களூரு வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை- பெங்களூரு செல்லும் ஹூப்ளி ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு அரக்கோணம் வழியாக சென்ற சரக்கு ரெயில் நார்த் கேபில் என்ற இடத்தில் தடம் புரண்டது.

    சரக்கு ரெயில் தடம் புரண்டதை அடுத்து, சென்னை- பெங்களூரு வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை- திருத்தணி மின்சார ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து, தடம் புரண்ட 3 பெட்டிகளை சரி செய்யும் பணியில் பணியாள்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பயணிகள் கடும் அவதியடைந்து உள்ளனர்.

    இதனால், சென்னை- பெங்களூரு செல்லும் ஹூப்ளி ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    • நான்டெட்-சம்பல்பூர் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் தடம் புரண்டன.
    • விஜயநகரம் ரெயில் நிலைய யார்டில் தடம் புரண்டன.

    ஆந்திர பிரதேச மாநிலம் விஜயநகரம் ரெயில் நிலையம் அருகே நான்டெட்-சம்பல்பூர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன.

    அதிகாரிகளின் கூற்றுப்படி, ரயிலின் பின்புறத்தில் உள்ள சிட்டிங் கம் லக்கேஜ் ரேக் (SLR) க்கு அருகில் அமைந்துள்ள ஜெனரல் சிட்டிங் (GS) பெட்டியின் சக்கரங்கள், இன்று (புதன்கிழமை) காலை 11:56 மணிக்கு ரயில் புறப்படும்போது விஜயநகரம் ரெயில் நிலைய யார்டில் தடம் புரண்டன.

    அதிர்ஷ்டவசமாக, சம்பவம் நடந்தபோது ரெயில் மிகவும் மெதுவான வேகத்தில் நகர்ந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தடம்புரண்ட பெட்டிகள் பிரிக்கப்பட்டு தேவையான பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்ட பிறகு, ரெயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது என்று தெரிவித்தனர்.

    முன்னதாக கடந்த திங்கள்கிழமை இரவு பெங்களூரில் இருந்து புறப்பட்ட பெங்களூரு-காமாக்யா ஏசி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸின் 11 பெட்டிகள் அசாம் மாநிலத்தில் தடம் புரண்டன. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 

    • அதிகாலை 3.30 மணியளவில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
    • அவரது மனைவி, மகன் மற்றும் மகள் விருந்து ஏற்பாடு செய்துவிட்டு அவருக்காக காத்திருந்துள்ளனர்.

    ஜார்கண்டில் சாகேப்கஞ்ச் மாவட்டத்தில் பராக்கா-லால்மதியா எம்.ஜி.ஆர். ரெயில்வே லைனில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில், ரெயில்களின் ஓட்டுநர்கள் 2 பேர் உள்பட 3 பேர் பலியாகினர். மேலும் 5 ரெயில்வே பணியாளர்கள், 4 CISF வீரர்கள் காயமடைந்தனர்.

    தகவலின்படி, ஆலைகளுக்காக தனியாரால் இயக்கப்படும் ரெயில்வே தடத்தில் நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரெயிலானது, பார்ஹத் எம்.டி. ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காலியான மற்றொரு சரக்கு ரெயில் மீது அதிவேகத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

    இரண்டு ரெயில்களுக்கு இடையேயான சிக்னல் தொடர்பு சரிவர பராமரிக்கப்படாததே விபத்திற்கான காரணம் என்று தெரியவந்துள்ளது.

    இந்த விபத்தில் உயிரிழந்த நிலக்கரி ஏற்றிவந்த ரெயிலின் லோகோ பைலட் கங்கேஸ்வர் மால் நேற்றைய தினத்துடன் ஓய்வு பெற இருந்தார். மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத்தை சேர்ந்தவர் கங்கேஸ்வர் மால்.

    நேற்று ஓய்வு பெறுவதற்கு முன் தனது கடைசி பயணத்தின்போதுதான் இந்த துயர சம்பவம் அவருக்கு நேர்ந்திருக்கிறது. நேற்று அந்த பயணம் முடிந்த பின் இரவில் தனது வீட்டில் ஓய்வு பெறுவதை கொண்டாடும் விதமாக விருந்தில் கலந்து கொள்ள இருந்தார்.

    அவரது மனைவி, மகன் மற்றும் மகள் விருந்து ஏற்பாடு செய்துவிட்டு அவருக்காக காத்திருந்துள்ளனர். கடைசியாக தான் சீக்கிரம் வந்து விருந்தில் கலந்துகொள்வேன் என அவர் போனில் கூறியிருக்கிறார்.

    ஆனால் அவர் விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்திதான் அவரது குடும்பத்துக்கு சென்று சேர்ந்திருக்கிறது. இறந்த கங்கேஸ்வர் மால் உடல் அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தங்களின் மொத்த உலகமும் நொறுங்கிவிட்டது என கங்கேஸ்வர் மாலின் மகள் துயரத்துடன் தெரிவிக்கிறார். 

    • ஏசி விரைவு ரெயில் (12251) தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.
    • யாருக்கும் உயிர்ச்சேதம் மற்றும் காயங்கள் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    பெங்களூரில் இருந்து ஒடிசா செல்லும் ஏசி விரைவு ரெயில் (12251) தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.

    பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அசாம் மாநிலம் காமாக்யா செல்லும் காமாக்யா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை  11:45 மணியளவில் ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள சவுத்வாரில் நெர்குந்தி ரெயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தது.

    அப்போது ஏசி பெட்டிகளை மட்டுமே கொண்ட இந்த ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விபத்தைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் ஒடிசா தீயணைப்புப் படை மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒடிசா தீயணைப்பு துறை இயக்குநர் சுதன்சு சாரங்கி தெரிவித்தார்.

    • ரெயில் பெட்டியை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    • ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    சென்னை தாம்பரத்தில் பணிமனைக்கு சென்ற விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

    சென்னை தாம்பரத்தில் யார்டுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் விரைவு ரெயிலின் ஒரு பெட்டி திடீரென தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், ரெயில் பெட்டியை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    • அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களின் நிலையை படிப்படியாக மோசமாக்கி தனது நண்பர்களுக்கு விற்கிறது.
    • அனுமதிக்கப்பட்ட ஜெனரல் டிக்கெட்டுகளை விட 13,000 கூடுதல் டிக்கெட்டுகள் அன்றைய தினம் விற்கப்பட்டன என அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

    நாட்டின் உயிர்நாடியான ரெயில்வே துறை 'வென்டிலேட்டரில்' இருப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ரெயில்வே துறையை தங்களின் நண்பர்களுக்கு தாரைவார்க்க மத்திய அரசு முயற்சிக்கிறதா? என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

    மக்களவையில் ரயில்வே அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. வர்ஷா கெய்க்வாட், 'வந்தே பாரத்' ரெயிலைக் காட்டி ரெயில்வேயின் மோசமான நிலையை மறைக்க முடியாது.

    ரெயில்வே நாட்டின் உயிர்நாடி. இந்த உயிர்நாடி தற்போது ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டரில் உள்ளது. இந்தப் பணியை இந்த அரசு செய்துள்ளது.

    ரெயில்வே நிதி நிலை குறித்து மிகுந்த கவலைப்பட வேண்டிய அவசியம் உள்ளது. அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களின் நிலையை படிப்படியாக மோசமாக்கி, பின்னர் அவற்றை தனது "நண்பர்களுக்கு" விற்று வருகிறது. வரும் நாட்களில் ரெயில்வேயும் நண்பர்களின் கைகளுக்குச் செல்லுமா?. அப்படி ஏதாவது சதி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும் ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விமர்சித்த அவர், மற்ற நேரங்களில் அவர்கள் இன்ஸ்ட்டாகிராம் ரீலிஸ் பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். விபத்து நடக்கும்போது, அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.

    விபத்துகளைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட 'கவாச்' பாதுகாப்பு அமைப்பை, பயணிகளின் பாதுகாப்பை விட, தனது பிம்பப்பத்தை பாதுகாத்துக்கொள்ள அமைச்சர் அதை தவறாகப் பயன்படுத்தி வருகிறார் என்று விமர்சித்தார்.

    முன்னதாக கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி டெல்லி ரெயில் நிலையத்தில் மகா கும்பமேளா செல்ல அதிகளவில் மக்கள் நடைமேடையில் காத்திருந்தபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர்.

    அனுமதிக்கப்பட்ட ஜெனரல் டிக்கெட்டுகளை விட 13,000 கூடுதல் டிக்கெட்டுகள் அன்றைய தினம் விற்கப்பட்டன என ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

     

    • திறந்திருந்த ரெயில்வே கேட் வழியாக கண்டைனர் லாரி கிராசிங்கை கடக்கும்போது அதன் மீது ரெயில் மோதியது.
    • சரக்கு ரெயிலின் முன் புறமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரெயிலும் கண்டைனர் லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் அயோத்தியா - ராய்பரேலி ரெயில்வே கிராஸிங் அருகே இன்று அதிகாலை இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.  

    அதிகாலை 2.30 மணியளவில் அந்த தடத்தில் சரக்கு ரெயிலானது வந்துகொண்டிருந்தது. அப்போது திறந்திருந்த ரெயில்வே கேட் வழியாக கண்டைனர் லாரி கிராசிங்கை கடக்கும்போது அதன் மீது ரெயில் மோதியது.

    இதில் படுகாயமடைந்த  லாரியின் ஓட்டுநர் சோனு சவுத்ரி (28), மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக போலீசார் கூறினார்.

    மேலும் சம்பவத்தின்போது கேட் மேன் அங்கு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் லாரி முற்றிலுமாக சேதமடைந்தது. சரக்கு ரெயிலின் முன் புறமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

    மேலும் ரெயில் பாதை மற்றும் மின்சார கட்டமைப்புகள் சேதமடைந்ததால் அவ்வழியாக ரெயில் இயக்கம் தடைபட்டுள்ளது. ரெயில் பாதையை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் போக்குவரத்து சீரமைக்கப்படும் என்றும் வடக்கு ரெயில்வேவின் லக்னோ பிரிவின் ரயில்வே கோட்ட மேலாளர் சச்சீந்தர் மோகன் சர்மா தெரிவித்தார்.  

    • தாம்பரம்- பெருங்களத்தூர் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்கவர் மீது அவ்வழியாக வந்த விரைவு ரெயில் மோதியது.
    • தகவல் அறிந்து வந்த தாம்பரம் ரெயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தாம்பரம்:

    சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சோனியா (19). தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தார்.

    நேற்று இவர் தோழிகளுடன் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்றார். பின்னர் மாலை வீட்டிற்கு செல்வதற்காக தோழிகளுடன் வண்டலூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த விரைவு ரெயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    அதேபோல் தாம்பரம்- பெருங்களத்தூர் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்கவர் மீது அவ்வழியாக வந்த விரைவு ரெயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து வந்த தாம்பரம் ரெயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×